ஆன்சா ஏணியின் மீதேறி, ஊசிப்போன சோள ரொட்டித்துண்டுகளை காய்வதற்காக கூரை மேல் பரத்தி வைத்தாள். அவளுடைய கணவன் நாமா மங்க், அந்தக் கிராமத்தின் "எஸ்காராக' (இரவுக் காவலாளியாக) இருக்கிறான். இந்த அவனது பணிக்காக கிராமத்தாரால் மீந்து போன உணவு அவனுக்குக் கொடுக்கப்படும். உண்மையில், மீந்து போன உணவு (பெரும்பாலும் சோள ரொட்டித் துண்டுகளாகவே இது இருக்கும்) அவனுக்கு "கொடுக்கப்படும்' என்று சொல்லிவிட முடியாது. வீடு வீடாகப் போய் குடியானவர்களிடம் சோள ரொட்டியைப் பிச்சையெடுக்க அவன் அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்றே சொல்ல வேண்டும்.

நாமா மங்க் ஒரு திருப்தியுள்ள மனிதனாயிருந்தான். அவனுக்குத் தேவையான அளவுக்கும், சில நேரங்களில் தேவைக்கு அதிகமாகவும் கூட சோள ரொட்டி கிடைத்து விடும். அவனது மனைவி அவற்றை வெயிலில் காய்வதற்காகப் பரத்தி வைப்பாள். அது நன்றாகக் காய வேண்டும். இல்லாவிட்டால், ஊசிப்போய் நாற்றமெடுக்கத் தொடங்கிவிடும். பூசணம் பிடித்து விடும்; காய்ந்த சோள ரொட்டிகளை உணவு கிடைக்காத அக்கம் பக்கத்தாருக்கு ஆன்சா கொடுப்பாள். தேவைப்படுபவர்களுக்கு நாமா மங்க் அவற்றைக் காசுக்கு விற்கக் கூட செய்வான். பட்டினி கிடக்கும் தங்கள் குழந்தைகளுக்குச் சாப்பாடு கொடுக்க சிரமப்படும் மங்க் வீடுகள் நிறைய இருக்கின்றன அங்கே. நாமா மங்க் "அதிர்ஷ்டக்காரன்.' அவனது குடும்பத்துக்குத் தேவையான உணவு அவனுக்குக் கிடைத்தது. மற்றவர்களுக்கும் கொடுக்கக்கூடிய இடத்தில் அவன் இருந்தான். சோள ரொட்டித் துண்டுகள் வெயிலில் காய்வதற்காக வைக்கப்பட்டிருக்கும்போது, அவற்றைத் திருடுவதற்காக காகங்கள் கூடிவிடும். பறவைகளுக்கும் கூட உணவு வேண்டும்தான் இல்லையா? நாமாவின் மகன் சிவா காவல் காக்க நிறுத்தப்படுவான். ஒரு கம்பை வீசி காகங்களை விரட்டி, அவன் பொக்கிஷம் பறி போய்விடாமல் பாதுகாப்பான். சாயந்தரம், ஆன்சா எல்லா ரொட்டிகளையும் சேகரித்து குடிசைக்கு எடுத்துக் கொண்டு போவாள்.

நாமா தனது கழுத்தைச் சுற்றி ஒரு துளசி மாலையை அணிந்திருப்பான். அவன் விதோபாவின் தீவிர பக்தனாயிருந்தான். அதில் ஏமாற்று எல்லாம் கிடையாது அவனிடம். அவன் சாமிக்கு மிகவும் பயப்படுபவனாக இருந்தான். தனது எல்லா செயல்களிலும் எளிமையும், நேர்மையும் கொண்டவனாகவும் இருந்தான். அடுத்தவர்களின் விஷயங்களில் அவன் தலையிடுவதே இல்லை. தனது எல்லா வேலைகளிலும்அர்ப்பணிப்போடும், மனசாட்சியின்படியும் அவன் நடந்து கொள்வான். இரவு முழுவதும் கிராமத்தின் தெருக்களிலும், சந்துகளிலும், சலிக்கச் சலிக்க நடந்து, ஊர்க்காரர்கள் தூங்கும்போது களவாணிப்பயல்கள் தங்கள் களவாணித்தனத்தை அரங்கேற்றி விடாமல் காவல் காப்பதுதான் அவன் வேலை. இதற்கென்று அவனுக்குச் சம்பளம் எதுவும் கிடையாது. சாயங்கால நேரங்களில் வீடு வீடாகப் போய் சோள ரொட்டியை பிச்சையெடுப்பான். சில நேரங்களில் அவனது மகனும் கூட வருவான்.இதுதான் அவனது ஒரே வெகுமதி, நஷ்டஈடு அல்லது சம்பளம் என்று நீங்கள் என்ன வார்த்தையில் சொல்ல விரும்புகிறீர்களோ, அப்படியே சொல்லிக் கொள்ளலாம்.

நாமாவின் முழுப்பெயர் நாம்தியோ என்பதுதான். ஒருத்தரும் அவனை நாம்தியோ என்று கூப்பிட மாட்டார்கள். நாமா என்றுதான் கூப்பிடுவார்கள். போயும் போயும் அவன் மங்க் சாதிக்காரன் தானே. மங்குகள் தீண்டத்தகாதவர்களிலும் மிகக் கீழானவர்களாக இருக்கிறார்கள். உயர் சாதியினருக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையில் மட்டும் தீண்டாமை இருக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் இடையேயும் ஒரு கறாரான சாதிய ஒழுங்கு இருக்கிறது.

இந்து சாதி அமைப்பின் கடைசிக் கழிவாக மங்குகளே இருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் நாலு அல்லது அஞ்சு மங்கு குடும்பங்கள் இருந்தால், அவர்களது குடிசைகள் எல்லாம் சேர்ந்து "மங்குச் சேரி' என்று அழைக்கப்படும். மகர்கள் மங்குகளைக் கீழாகப் பார்த்தார்கள். மகர்களின் சேரி, மங்குகளின் சேரி என இரண்டு சேரிகளுமே ஊருக்கு வெளியில்தான் அமைந்திருக்கின்றன என்றாலும், மகர்களின் சேரிக்கும் மங்குகளின் சேரியோடு ஒரு சம்பந்தமும் இல்லை.

மாலையில், எஸ்காரின் கம்புடனும், உணவு இரப்பதற்கான ஒரு பாத்திரத்துடனும் நாமா வெளிக்கிளம்புவான். அவனது இளைய மகன் சிவாவும் கூட வருவதற்காக அடம்பிடித்து அழுவான். அப்பனுடன் அவனும் சேர்ந்து கொள்வான். “எப்படியிருந்தாலும், அவனும் அவங்கப்பனின் தொழிலைப் படிச்சுக்கத்தானே வேணும்'' என்று நாமா உரக்கவே சொல்லிக் கொள்வான். அப்போதெல்லாம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று கொண்டு, “எஸ்காரின் சோள ரொட்டியைக் கொண்டு வாங்க'' என்று குரல் கொடுப்பான்.

அந்த வீட்டின் நாய் குரைக்கத் தொடங்கும். கம்பால் தரையை ஓங்கி அடிப்பான் நாமா. தன் மேல் பாய்ந்து விடாமல் நாயை இப்படித்தான் அவன் தடுத்து நிறுத்துவான். பிறகு அந்த வீட்டுக்கார பொம்பளை வீட்டிலிருந்து வெளியே வருவாள். மீந்து போன சோள ரொட்டியில் ஒன்றோ அல்லது இரண்டோ அல்லது பாதியோ அவளுடன் வரும். அதை நாமாவின் பாத்திரத்திலோ அல்லது அவன் இரண்டு கைகளில் விரித்துப் பிடித்திருக்கும் துண்டிலோ தூக்கிப் போடுவாள். நாமாவையோ அல்லது அவனது உடைமைகளையோ தொட்டுவிடுவது மிகுந்த கவனத்துடன் தவிர்க்கப்படும். அவன் தீண்டத்தகாதவன் இல்லையா? சில நேரங்களில்சோள ரொட்டி கவனமின்றி போடப்பட்டு, தனது இலக்கைத் தவறவிட்டு கீழே தரையில் விழுந்து விடும். நாமா அதைச் சத்தம் காட்டாமல் எடுத்துப் போட்டுக் கொள்வான், பிறகு எஸ்காரின் சோள ரொட்டியை கேட்பதற்காக அடுத்த வீட்டுக்கு நகர்வான்.

கிராமம் முழுக்க வரும்போது, யாரிடமிருந்தாவது அவனுக்கு புகையிலைத் தூள் கொஞ்சம் அல்லது ஒரு பீடி இவற்றில் ஒன்று கிடைத்துவிடும். இப்படியே நாட்டாமையின் வீட்டை நாமா அடைவான். தன் கைகளைப் பணிவாகக் குவித்துக் கொண்டு “எசமான் கும்புடுறேன் எசமான்'' என்று இறைஞ்சுவான். தவறாமல், நாட்டாமை ஒரு கெட்ட வார்த்தையுடன் அவனை எதிர்கொள்வார். எப்போதும் அவனுக்குத் திட்டு காத்திருக்கும்.

நாமா நீ ஊர காவக் காக்கற லட்சணம் இதுதானா? நேத்து ராத்திரி கூட குஜ்ஜார் தெருவில என்னமோ அசம்பாவிதம் நடக்க இருந்திச்சாமே! சாக்கிரத சொல்லிப்புட்டேன். ஆமா, ராத்திரி உம் பொஞ்சாதி தம்பக்கத்திலிருந்து எந்திரிச்சு போக உன்ன விடுறாளா இல்லையா?

நாட்டாமையின் தமாசுக்கு சிரித்து குழைவான் நாமா. வலிந்து வரவழைக்கப்பட்ட அவனது சிரிப்பு கடந்த எழுபது தலைமுறைகளாக இருந்து வரும் அச்சத்தையும் அடிமைத்தனத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கும். பிறகு நாட்டாமையின் பொண்டாட்டி பாதி சோள ரொட்டி ஒன்றைத் தருவாள். இவன் கேட்பான்:

கொஞ்சம் கொழம்பு குடுங்க நாச்சியா!''

ஒனக்கு தெனமும் கொழம்பு குடுக்கணுமா?'' பொய்க் கோபத்துடன் அவள் சலித்துக் கொள்வாள். பிறகு மிச்சமிருக்கிற குழம்பைத் தருவாள். அந்த வீட்டையும் வீட்டாரையும் வாயார வாழ்த்தி வணங்கி இவன் விடைபெறுவான்.

ஊர்த்தெருவிலிருந்து நாமா வாங்கி வந்த மிச்சமீதிகள் எல்லாவற்றையும் ஆன்சா ஆசையுடன் வாங்கிக் கொள்வாள். அந்த நிறைவில் சின்னவன் சிவாவைஆதுரத்துடன் முத்தமிடுவான்.

எல்லாத் தெருவயும் சந்துகளையும் ஞாபகம் வச்சிக்கோ, நாளப்பின்ன நீ தனியா போகணும் என்ன?'' என அவனுடைய அப்பன் பிரியத்துடன் அவன் முதுகில் தட்டிக் கொண்டு சொல்வான்.

அவர்கள் கொண்டு வந்ததில் நல்லதாகத் தோன்றும் சோள ரொட்டிகளை அப்போதைய இரவு உணவுக்காகத் தனியே எடுத்து வைப்பாள். நாமா கை, கால்களைக் கழுவிய பிறகு விதோபாவின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே சாப்பிடுவதற்காக உட்காருவான்.

ஒரு கண் உறக்கத்திற்குப் பிறகு நாமாவை ஆன்சாஎழுப்புவாள் “எந்திரி' நேரமாச்சு''

நாமா உடனடியாக எழும்பி விடுவான். தண்ணீரால் முகத்தை கழுவிய பிறகு, கத்தியையும், கைவிளக்கையும் எடுத்துக் கொண்டு தனது பணியை மேற்கொள்ளக் கிளம்பி விடுவான். ஊர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும். ஆன்சா தனது மகனை பக்கம் இழுத்துப் போட்டுக் கொண்டு தூங்கிவிடுவாள். விதோபாவின் பெயரை உச்சரித்துக் கொண்டு, ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரை "உஷார்' சத்தம் எழுப்பிக் கொண்டு தெருக்களிலும் சந்துகளிலும் நடப்பான். பதிலுக்கு நாய்கள் குரைக்கும். பெரும்பாலான பெண்கள் திகிலடித்துப் போகுமளவுக்கு, நாமாவின் எச்சரிக்கைச் சத்தங்கள் பயமூட்டுவனவாக இருக்கும். பகல் வேளையில்பசுவைப் போல் சாதுவாகத் தெரிந்த நாமா, இரவில் பயங்கரமான ஓர் ஆவியைப் போல மாறி விட்டிருப்பான். அவன் தனது இரவு ரோந்தில் இருக்கும் போது, அவனை அணுகும் துணிச்சல் எவனுக்கும் இருக்காது. ஊரின் எஸ்காராக இருப்பதால் ஊரில் நடக்கும் திருட்டுக்கும் கொள்ளைக்கும் அவனே பொறுப்பாளி. ஒரு மாதத்துக்கு முன்பு கூட மார்வாடியின் வீட்டில் ஒரு திருட்டு நடந்தது. திருடனை வெற்றிகரமாக நாமா பிடித்து விட்டான். குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு பேரை நாமா பெற்றுவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். கைதேர்ந்த திருடர்கள் முன்னெச்சரிக்கையாக அவன் இருக்கும் பக்கம் அண்டுவதே இல்லை.

சாயங்காலங்களில் நாமா அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பான். அப்போதெல்லாம் சிவா சத்தம் போட்டு அவனை எழுப்பி விடாமல் ஜாக்கிரதையாக ஆன்சா பார்த்துக் கொள்வாள். தனது தந்தையின் பலத்த குறட்டையைக் கேட்டு பரபரப்பாகி விடுவான் சிவா. நாமா குறட்டை விடும் ஒவ்வொரு முறையும் அம்மாவிடம் கேட்பான். அப்பா ஏன் குறட்டை விடுகிறார்? எனக்கு எப்போது குறட்டை வரும்? அவன் கேள்விகளுக்குப் பதில் சொல்லி ஆன்சாவால் மாளாது. தனது இயலாமையை நினைத்து அவளுக்கு அழுகையே வந்து விடும்.

ஒரு நாள் நாமா சாயங்காலத்தில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். ஆன்சா பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தாள். அப்போது நாட்டாமை வீட்டின் வேலைக்கார மகர் வந்து, நாமாவை நாட்டாமைக்காரன்

கூப்பிடுவதாகச் சொன்னான். நாமா தூக்கத்திலிருந்து பதறியடித்துக் கொண்டு எழுந்து, முகத்தைக் கழுவிக் கொண்டு நாட்டாமை வீட்டைப் பார்த்துக் கிளம்பினான்.

அங்கே நான்கைந்து பேர் கூடியிருந்தார்கள். குஜ்ஜாரின் வீட்டில் நேற்று எவனோ கதவை உடைத்துப் புகுந்து திருடிக் கொண்டு போய் விட்டான். நாமா தன் வேலையில் மிகவும் அலட்சியமாய் இருக்கிறான் என்று எல்லாரும் குற்றஞ்சாட்டிக் கூச்சலிட்டார்கள். நாட்டாமை நாமாவை குத்த வைத்து உட்கார வைத்து, சரம் சரமான கேள்விகளால் அவனைத் துளைத்தெடுத்தான். வழக்கம் போலவே ஒரு கெட்டவார்த்தையில் தொடங்கி காட்டுக்கத்தல் போட்டான்.

நான் நேத்தே குஜ்ஜாரின் வீட்டு மேலே ஒரு கண்வச்சுக்கன்னு ஓங்கிட்ட சொல்லலியா? ஊர் மூச்சூடும் சோத்துக்காகப் பிச்சையெடுக்கத் தெரியுது. வேலய ஒழுங்கா செய்யத் தெரியலயா? என்ன மயிருஎஸ்காருடா நீ? இன்னைக்கு வரைக்கும் ஒரு களவாணிப் பய இந்த ஊருக்குள்ள நொழய துணிஞ்சதில்ல. கள்ளனை நீதான் அனுப்பிவச்சிருப்பே! அவங்கூட நீ கூட்டு சேர்ந்துருப்பே? அதுனால தான் குஜ்ஜார் வீட்டுப் பக்கம் போகாம இருந்திருக்கே. ஒரு வாரத்துக்குள்ள திருட்டுப் போன பொருள் எங் காலடியில கெடக்கணும் சொல்லிப்புட்டேன். இதல்லாம் நா சகிச்சுக்க மாட்டேன். ஊரோட எஸ்கார் மங்க் நீ தான். நீ தான் பொறுப்பு''

நாமா மங்கிற்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லாம் குழப்பமாக இருந்தது. நாட்டாமை சொன்ன எல்லாவற்றுக்கும் "சரிங்க எசமான்' என்றே சொல்ல வேண்டியிருந்தது. எதை அவனால் மறுக்க முடியும்? திருடனை எப்படிப் பிடிப்பது? யார் மேல் குற்றஞ்சுமத்த முடியும்? ஊரின் ஒவ்வொரு பகுதியையும் நாமா போய்ப்பார்த்தான். மகர் சேரிக்கும் மங்க் சேரிக்கும் கூட போனான். ஊரின் எல்லையைத் தாண்டி பக்கத்து ஊர்களுக்கும் கூட போனான். அவன் இல்லாத நேரங்களில் ஆன்சா எஸ்கராக அவனது வேலையைப் பார்த்துக் கொள்வாள். சிவாவையும் தன்னோடு துணைக்குக் கூட்டிப் போவாள். ஒவ்வொரு இரவிலும் நாமா இரண்டு அல்லது மூன்று கிராமங்களுக்குப் போவான். போய்த் திரும்பிய பிறகு, அவனே நேரடியாக ரோந்தைத் தொடர்வான். ஒரு வாரமாகத் தொடர்ந்து இவ்வாறான மென்னியைப் பிடிக்கும் வேலையால் நாமா களைத்து சக்தியற்றவனாகி விட்டான்.

ஒரு வாரம் போய் விட்டது. நாட்டாமையிடம் அவனைக் கூட்டிப் போவதற்காக சத்வா மகர், நாமாவின் குடிசைக்கு வந்தான். திருடு போனது குறித்து நாமாவால் துப்பு எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் அவனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.

நாட்டாமையின் வீட்டு முன் பத்து பனிரெண்டு பேர் கொண்ட ஒரு கூட்டம் கூடியிருந்தது. அவன் தலை அங்கே தென்பட்டவுடனே நாட்டாமை கத்தவும், திட்டவும் தொடங்கி விட்டான்.

"கள்ளன நீ கண்டு புடிச்சிட்டியா?' நாட்டாமை வெடித்தான். "என்ன நடந்தது சொல்லு' நாமா குத்த வைத்து உட்கார்ந்து கொண்டு தலையை கவிழ்த்துக் கொண்டான்.

நான்கைந்து சண்டியர்கள் நாமாவைப்பிடித்துத் தரதரவென இழுத்து, மாட்டுத் தொழுவத்துக்குக் கொண்டு போனார்கள். முதல் அடி சத்வா மகரிடமிருந்தே விழுந்தது. அதைத் தொடர்ந்து சரமாரியாய் அடிகளும் உதைகளும் விழுந்தன. நாமா வலியால் ஒரு விலங்கைப் போலஅலறினான். சண்டியர்களில் சிலரிடம் சைக்கிள் செயின்கள் இருந்தன. சிலரிடம் கம்புகள் இருந்தன. சிலர் செருப்பைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டிருந்தனர். இந்த ஆயுதங்கள் அத்தனையும் நாமாவின் மேல் ஈவிரக்கமின்றிப் பிரயோகிக்கப்பட்டன. “அய்யோ! எசமான்! எசமான்' என்றே நாமாவிடம் இருந்து ஓலம் வெளிப்பட்டது.

நாட்டாமை எழுந்து வந்து சாத்தான் மனித வடிவில் வந்தது போன்று கத்தினான்.

யார் திருடினது சொல்லு! சொல்லி, மேக் கொண்டு அடி படாம ஒன்ன காப்பாத்திக்க! "சொல்லு மரியாதையா சொல்லு! அடிங்கடா அவன! அடிச்சிக் கொல்லுங்க''

தடியர்கள் திரும்பவும் அவன் மேல் விழுந்தார்கள். நாட்டாமையிடம் தங்களது கீழ்ப்படிதலையும், விசுவாசத்தையும் காட்டுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இல்லாவிட்டால், நாமாவின் தலைவிதியை அவர்களும் சேர்ந்து அனுபவிக்க வேண்டியதிருக்கும்.

சத்வா மகர் நாமாவை அவனது குடிசைக்குத் தூக்கிக் கொண்டு வந்த போது நள்ளிரவு ஆகிவிட்டது. அடிபட்டதால் அவனது உடம்பு அங்கங்கே வீங்கிப் புடைத்திருந்தது. அவனது வாயிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தலையிலும் நிறைய ரத்தக் காயங்கள். கைகளிலும், கால்களிலும் சதை பிய்ந்த காயங்களில் ரத்தம் உறைந்து போயிருந்தது. அவன் பரிதாபகரமாக ஒப்பாரி வைத்தான். தன் கணவன் எவ்வாறு இப்படி நொறுங்கிப் போனான் என ஆன்சாவால் நம்ப முடியவில்லை. அவன் மீது விழுந்து அழுதாள். அக்கம் பக்கத்து குடிசைகளிலிருந்து நான்கைந்து பெண்கள் வந்தார்கள். வந்தவர்கள் நாமாவின் கோலத்தைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள்.

நடு ஜாமத்தில்நாமா விழித்துக் கொண்டான். மிகுந்த சிரமப்பட்டுத் தள்ளாடியபடியே எழுந்து நின்றான். நொண்டியபடியே புறப்பட்டுப்போக முயன்றான். ஆன்சா அவனை வழிமறித்துத் தடுக்க முயன்றாள். கண்ணீருடன் அவன் சொன்னான்.

ஆன்சாஎன்னைப் போக விடும்மா'' இல்லாட்டா, நாளைக்கும் இதே மாதிரி அடிப்பானுக மயிரானுக. எங்கே போயி நான் திருடனக் கொண்டு வருவேன்? யாரோட பேர நான் சொல்றது? யாரு பேரச் சொன்னாலும் அவனுக்கும் இதே கெதிதான். இந்த ஊர் என்ன ரொம்ப கேவலப்படுத்திருச்சி. தோப்பு வரைக்கும் போயிட்டு உடனே வந்துர்றேன்மா''

நாமா இருட்டில் இறங்கி மறைந்தான். நாய்களின் இடைவிடாத குரைப்பு காற்றைக் கிழித்தது. மரங்களிலிருந்து ஆந்தைகள் ஊளையிட்டன. இது மிகவும் கெட்ட சகுனம் என்று ஆன்சா கலவரமடைந்தாள். அப்போதுதான் யாரோ குதிரை மேல் சவாரி செய்து வருவதை அவள் கவனித்தாள். அது நாட்டாமைக்காரன். அவன் இரைந்தான்:

நாமா எங்கே? ஊர்க்காவலுக்கு எவன் போவான்?'' பயந்து போன ஆன்சா பதிலளித்தாள். “அவுரு தோப்பு வரைக்கும் போய்ருக்காரு''

கொள்ளையடிச்சத பங்கு போடவா''

இல்லங்க சாமி! இன்னொரு தடவ தேடலாம்னு போய்ருக்காரு''

அவம் போயிட்டா காவக்காக்குறது யாரு? ஊர்க்காரங்க குடுக்கற சோத்துலதான் நீங்க பொழக்கிறீங்க. சோத்துக்காக வந்து பிச்ச எடுக்க மட்டும் ஒனக்கு நல்லா தெரியும் அப்படித்தானே''

ஆன்சா மூச்சடைத்துப் போய் அவமானத்தில் கூனிக்குறுகி நின்று கொண்டிருந்தாள். பாவப்பட்ட மங்க் சாதிக்காரப் பெண்ணான அவளால் எப்படிப் பதில் பேச முடியும்? நாட்டாமையின் பக்கத்தில் சாத்வா மகர் கையில் கம்பைத் தயாராய் வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

ஊருல அசம்பாவிதமா ஏதாவது நடந்துச்சு ஒங்கப்பம் மவள! அப்புறம் என்ன விட மோசமான எவனையும் நீ பாத்துருக்க மாட்ட, ஞாபகம் வச்சுக்க. நாமாவுக்குப் பதிலா யாராவது ஊர்க்காவலுக்குப் போயித்தான் ஆவணும். போ! இன்னைக்கு அவம் வேலைய நீ பாரு போ!''

இறுதி உத்தரவைக் கொடுத்து விட்டு நாட்டாமை குதிரையில் கிளம்பி விட்டான். சாத்வா மகர் பின்னாலேயே ஓட்டம் பிடித்தான். ஆன்சா கத்தியையும், கைவிளக்கையும் கையில் எடுத்தாள். தூங்கிக் கொண்டிருந்த சிவாவை எழுப்பிக் கொண்டு, ஊரை நோக்கி நடந்தாள்.

தனது முழு பலத்தையும் திரட்டி அவள் எழுப்பிய ஆவேசக் குரல், ஒரு யுத்த முழக்கத்தைப் போலவே இருந்தது. அந்த கூக்குரல் தெருக்கள் முழுவதும், சந்துகள் முழுவதும் பரவி எதிரொலித்தது. நாட்டாமையின் வீட்டு முன்னால் நின்று கதவுகளை ஊடுருவிச் செல்லக்கூடிய ஒரு யுத்த முழக்கத்தை எழுப்பினாள். ஊர்த் தெருவின் மேல் கை விளக்கிலிருந்து ஒளியைப் பாய்ச்சி அதை ஒளியில் முழுவதும் நனையுமளவுக்குக் குளிப்பாட்டினாள். தனது கணவனிடமிருந்து துணிவையும், மன உறுதியையும் பெற்றுக் கொண்டது போலவே தோற்றமளித்தாள் அப்போது.

விடிந்ததும் தான் அவள் வீட்டுக்குத் திரும்பினாள்.வந்ததுமே படுத்து விட்டாள். அவ்வளவு களைப்பாக இருந்தது அவளுக்கு. ஒரு கவளம் நாத்தமெடுத்தமிஞ்சிப் போன சோள ரொட்டிக்காக அவர்கள் ஊர் முழுவதையும் காவல் காக்க வேண்டியிருக்கிறது. என்ன கொடுமை இது? சிவா உடனே தூங்கிவிட்டான். அப்போது தான் பக்கத்து வீட்டுக்காரியான சோனா அழுதுகொண்டே வந்தாள். ஆன்சாவின் மேல் விழுந்து புரண்டு அடக்கமாட்டாதவளாகக் கதறினாள்: நாமா மங்க் தூக்கு மாட்டிக் கொண்டு செத்துப் போனான்.

எஸ்காரின் தடியைக் கேட்டு லாவ்கா வந்தான். நாமாவின் இடத்தில் அவன் தான் எஸ்காராக நியமிக்கப்பட்டிருக்கிறான். லாவ்காவிடம் தடியை ஒப்படைக்கும் போது ஆன்சாவால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எஸ்காரின் தடி வீட்டை விட்டுப் போவதற்காக சிவாவுக்கும் அழுகை வந்தது.

லாவ்கா மங்கின் மனைவி மைனா எஸ்காரின் தடியைப் பயபக்தியுடன் தனது குடிசைக்குள் கொண்டு போய் அதற்குப் பூஜை செய்தாள்.

தமிழில் : ம. மதிவண்ணன்

Pin It