கிழவர் வானத்தைப் பார்த்தார். கரிய இருளே கண்ணுக்கு தெரிந்தது.... “இப்பவே கிளம்பினாத் தான் சரியா இருக்கும்...!” கிழவர் எழுந்தார். பொத்தலாய் கிடந்த பாயைச் சுருட்டி - தாழ்வாரத்தில் சொருகி பத்திரப்படுத்தினார். தலையணை போல இருந்த, ஒரு அழுக்கடைந்த துணி மூட்டையை திண்ணையின் ஓரத்தில் நகர்த்தி வைத்தார். இரவெல்லாம் வாய் வலிக்க குரைத்து - ஓய்ந்து போன நிலையில் - நாய்கள் தெருவில் வட்டமாய் பள்ளம் பறித்து படுத்து கிடந்தன. தெரு முனையில் சைக்கிள் ஒன்று ‘தடதடத்து’ வந்தது. 

“அட! பால்காரன் கூட வந்துட்டானே...!?” கிழவர் கோணலாய் கிடந்த கம்பு ஒன்றை கையில் எடுத்து கொண்டு எழ முயன்றார். கால்களோ அவரது கட்டுக்குள் இல்லை. இப்படியும் அப்படியுமாய் உடலை அசைத்து - தசைகளை நீவிவிட்டு... நரம்புகளை உருவி.... சிரமப்பட்டு எழுந்து நின்றார் கிழவர். பாதங்களை சரியாய் ஊன்ற முடியவில்லை. முதுகு ஒரு பக்கமாக சாய்ந்து இழுத்தது. பாதங்கள் நேராய் இல்லாமல் வடக்கும் தெற்குமாய் நிலை மாறிக் கிடந்தது. 

கிழவர் கம்பை, கையில் கெட்டியாய் பிடித்தபடி தெருவில் இறங்கினார். ஆங்காங்கே - உழவு மாடுகளை அதட்டி ஓட்டிச் செல்லுகிற சத்தம். “காலங்கடந்து மழை பெய்யுது! அவனவன் சீக்கிரம் உழுது முடிக்கணும்னு நடு ஜாமத்துக்கே ஏர பூட்டிக்கிறான் உம்..! என்ன செய்யறது..? கிழவர் தனது உடல் வலியையும் மறந்து வாழ்க்கையின் விதிகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். ஊர்க் கோடி வந்தது. அதன் வலது புறத்தே சிறிய குளம். அதன் மையப் பகுதியில் மட்டும் கொஞ்சமாய் தண்ணீர் இருக்க, குளக்கரையை சுற்றிலும் ஆலமரங்களும், அரச மரங்களும் அடர்ந்து நின்று, குளத்தை ஒரு கூரை போல மூடி இருந்தது. 

விடியற்காலை பொழுதுக்கே உரித்தான ரம்மியமான காற்றும் ஒரே லயத்தில் காற்றில் சலசலக்கும் இலைகளும், எங்கோ இருந்து கொண்டு, இனங்காண முடியாத விதத்தில் “இராக ஆலாபனை” செய்யும் தவளைகளும்...! யாருக்கும் உவகை ஊட்டும் அல்லவா...! ஆனால் கிழவருக்கு...? இந்தக் கால சூழலில் ஏதோ மரபு மறுதலிக்கப்படுவதை உணர்ந்தார். “ஆடி முடிஞ்சி, ஆவணி ஆகப் போவுது! இன்னும் இந்த மேல் காத்து மாறலீயே...! இப்படியே இருந்தா முப் போகத்திலே ஒரு போகமாவுது விளையுமான்னு சந்தேகந் தான்...!” கிழவரது நெற்றியில் அனுபவங்கள் பளிச்சிட்டன. அவரது முகத்தில் - ஒரு சரித்திரத்தில் பக்கங்களை போல் ஒன்றுக்கு பலவாய் சதை சுருக்கங்கள். 

“குறுக்கால போனாத் தான் சுருக்கா போய்ச் சேர முடியும்.....! உம்... நான் நடக்கிற நடை ஆமையைவிட கேடா இருக்குது! எப்பத்தான் போயி...” கிழவர் தென்கிழக்காக நீண்டு செல்லும் ஒரு வரப்பில் நடந்தார். பக்கத்து கால்வாயில் தண்ணீர் சிற்றோடையாய் ஓடிக் கொண்டிருந்தது. “உம் இந்தக் கால்வாய்... வரப்பு... காடு... கழனி.. மடுக்கரை, ஏரின்னு எந்த ஒரு இடத்திலும் இந்த காலுபடாத இடமே இல்லே...! ஆனா இப்போ...” கையில் இருந்த கம்பை வரப்பில் உறுதியாய் ஊன்றி கிழவர் சற்றே குனிந்து தன் கால் முட்டுக்களை தடவி விட்டுக் கொண்டார். “ஒரு மாசமா... ரெண்டு மாசமா ஆறெழு வருசமா” இடறி விழுந்தார். இறக்கைகளை கட்டி தரையில் வீசிய ஒரு பறவையைப் போல், கிழவர் குப்புற கிடந்தார். உடல் உறுப்புகள் துவண்டு தொய்ந்த நிலையில், மீண்டும் செயலுக்கு வர தாமதித்தது. 

பாவி பசங்க. பெருசா அகலமா இருந்த வரப்புங் களையெல்லாம், அவனவன் சளைக்காம வெட்டிக்கிறான். ஆசை முத்திடிச்சி அதான் காலம் சித்திக்கல...” கிழவர் கம்பை தேடி எடுத்தார். கால் முட்டுக்களில் ‘ஜிவ்’ வென்ற வலி. இடக்கையில் மணிக்கட்டுக்கு கீழ் உப்பிப் போய், விரல்கள் செங்குத்தாய் - இரும்பு கம்பியைப் போல நெகிழ்ச்சியில்லாமல் நீட்டிக் கொண்டிருந்தன. “அரிவாள எடுத்தா, அத கை மாத்தறதுக்குள்ள ஒண்டியாளா அரைக் காணி - கால் காணின்னு அறுத்து சாய்க்கிற கையி... இன்னக்கி நீட்டவும் முடியாம - மடக்கவும் முடியாம எப்படி மாறிப் போயிடுச்சி...” கிழவர் உப்பி போன கைகளை உற்றுப்பார்த்தார். 

“ஒரு காலத்தில் இந்த ஊரே சொல்லும், முனுசாமியா... அவன மாதிரி உடம்பு யாருக்கு வணங்கும்....! அவனப்பார்த்த காடும் பயப்படும், மேடும் பயப்படும்னு சொல்லுவாங்க இன்னக்கி நெலமை தவறி போச்சு... ஒருத்தனும் எறெடுத்து பார்க்க மாட்டேங்குறான்...! உம்! காலந்தான் மாறிப் போச்சு. என் நெலமையை பார்த்து, அந்த வாத்யாருதான் இப்படி திண்ணையில் கெடந்து கஷ்டப்படறியே கவர்மெண்டு ஆஸ்பத்ரிக்கு போய்ப்பாரு எல்லாம் சரியாப் போவுன்னாரு” கிழவர் விடிவதற்குள் அய்ந்து கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கிற அந்த அரசு பொது சுகாதார மனைக்கு விரைந்து போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு கால்களை எட்டிப் போட்டார். 

பொழுது விடிந்து விட்டிருந்தது. ஆனால் போய்ச் சேர வேண்டிய இடமோ எங்கோ இருந்தது. பரந்து கிடந்த வயல்வெளி பரப்பில் - வரப்பினூடாக கிழவர் நடந்து கொண்டேயிருந்தார். அய்ந்தாறு முறை ஆங்காங்கே உட்கார்ந்து எழுந்து வந்தாலும் கால்களில் பொறுக்க முடியாத வலி... மரண அவஸ்தை. உடல் உறுப்புகளில் சீரான இயக்கம் இல்லாமல் அவருக்கே அந்நியமாய் இருந்தது. வலது காலை தூக்க நினைத்தால் இடதுகால் எழுந்தது. கைகளை வீசிப்போட முடியவில்லை. இற்று விழுந்து விடுமோ என்ற நிலையில் இடக்கை நொளநொளத்து கிடந்தது. கிழவர் ஒரு எறும்பைப் போல் ஊர்ந்து கொண்டிருந்தார். 

“ஏம்மா....! உன்னத்தான்....! புள்ளத்தாச்சி பொம்பள பொழுது விடிஞ்சதும் - விடியாததுமா வந்து நிக்கறேன். நீ தொஸ்க்குன முன்ன பொயி நின்னுக்கினியே....!” வயிறு பெரிதாகி, உடலோடு ஒட்டாமல் ஒரு ‘தீவு’ போல் தனித்திருந்த கர்ப்பிணி ஒருத்தி, எல்லோர் காதிலும் விழும்படியாக சத்தமிட்டாள். 

“ஆங்....! மந்திரி மவ இவ....! யாரும் முன்னால போவக் கூடாதோ....!” வட்டம் - மாவட்டம் இவற்றின் செயலாளரின் மனைவியோ, என்னவோ சட்டம் பேசியபடியே முன்னால் போய் நின்று கொண்டாள் கையில் கட்டு போட்ட ஒருத்தி... கர்ப்பிணிகள் - காயம்பட்டவர்கள்.. நோயுள்ளவர்கள் என கூட்டம் முண்டியடித்து சீனப் பெருஞ்சிவர் போல நீண்டிருந்தது. 

கிழவர் ஆண்கள் வரிசையில் கடைசியாய் வந்து நின்றார். சிறியதும் - பெரியதுமாய், மருத்துவமனை இரண்டு தொகுதிகளாய் இருந்தது. எதிர்ப்புறத்தில் ஒன்று நிரந்தரமாய் பூட்டிக் கிடக்க சுற்றிலும் முட்புதர்கள். வேலி எதுவும் இல்லாததால் ஆடு, மாடுகள் ஆஸ்பத்திரி பரப்புக்குள் அணி வகுத்தன. டாக்டரிடம் அவற்றுக்கும் என்ன தேவையோ... சூரியன் தோளுக்கு சரிவாகத் தெரிந்தான். “யோவ்! தலப்பா...! ஒரமா நிக்காமா எரும மாதிரி வாசல அடைச்சிட்டு நிக்கறியே..., போய்யா.. அந்த பக்கம்....!” சீருடை அணிந்த ஊழியர் ஒருவர் தான் அதிகாரம் படைத்தவர் என்பதை ஏக அமர்க்களத்தோடு அறிவித்தபடி வந்தார். கண்களில் ஏதோ புழு பூச்சிகளை பார்ப்பது போல அப்படியொரு “பார்வை.....” 

“ஏழு மணி எட்டு மணி வாக்கில டாக்டரு வருவாருண்ணாங்க இவ்வளவு நேரமா யாரையும் காணலியே...” பக்கத்தில் இருந்த நடுத்தர மனிதர் முணு முணுத்துக் கொண்டார். பின் ஏதோ முணு முணுத்தவராய் கிழவர் பக்கம் திரும்பினார்... “அய்யாவுக்கு உடம்புக்கு என்ன..?”  

கிழவர் சில விநாடிகள் தாமதித்தார். பின் கேட்டவரை ஏறிட்டு பார்த்தபடி. “என்னவோப்பா.. சாவு வராம நோவா கெடக்கிறேன். 

இதப்பாரு... ‘தலக்காணி மாதிரி கையுங் காலும் வீங்கிப் போயி..” கிழவர் முடிக்கு முன். “நிக்கவே முடியாம அவஸ்தை பட்றீங்களே! கூட யாரும் வரலியா..?” எதிரில் இருந்தவர் தான் கேட்டார். 

“ஊம் .... பொண்ணு புருஷன் வூட்டுக்கு போயிட்டா... புள்ள வந்தவ பேச்சை கேட்டுகிட்டு ஒடிட்டான். பொண் டாட்டி, மகராசியா எப்பவோ போயி சேர்ந்துட்டா...” சீப்பு பற்களைப் போல் நூல் சிதறி கிடக்கும் துண்டில் கிழவர் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டார். 

“ஒதுங்கி நில்லுங்கப்பா..! டாக்டரு வர்றாரு...!” 

யாரோ ஒருவர் உரக்க கூவினார். 

சலசலப்பு நின்றது. எல்லோரது பார்வையும் டாக்டர் மீதே பதிந்தது. 

அசிங்கமானதும் - அருவருப்பானதும் ஆன ஏதோ ஒன்று தன் மீது ஒட்ட வருவது போலவும் - தாம் அதிலிருந்து விலகி நடப்பது போலவும் - டாக்டர் ரொம்பவும் எச்சரிக்கையுடன், தப்பி தவறியும், யார் மீதும் பட்டு விடாதபடி வரிசையிலிருந்து விலகி சென்றார். பின் வாசலில் தொங்கிய திரையை அலட்சியமாய் ஒதுக்கி தள்ளி உள் நுழைந்தார். 

“இன்னா பெரியவரே! இப்படி உக்காந்துட்டா... பின்னால இருக்கிறவங்க போக வேணாமா...” கிழவருக்கு பின்னாலிருந்தவர் எரிச்சலுற்றார். 

“ஆறு மைலு நடந்து வந்தேன்பா... நிக்க முடியல.. இங்க வேற வந்து மணிக்கணக்கா நிக்கறேன்.. அதான்...” கிழவர் வலக்கையில் கொம்பை இறுக்கி பிடித்துக் கொண்டார். கூட்டம் முன்னேற - இவரும் உட்கார்ந்தபடியே முன்னே நகர்ந்தார். கறை போட்ட சில வேட்டிகள் ஜரூராக உள்ளே நுழைந்து வெற்றிக் களிப்போடு வெளியே வந்தன. வரிசையிலிருந்தோர் - ஒவ்வொருவரும் உள்ளத்துக்குள் குமைந்தாலும், உதட்டிலிருந்து வார்த்தை எதுவும் வந்து விடாதபடி கவனமாய் இருந்தார்கள். 

சுற்று வட்டாரத்திலிருக்கும் பத்து பனிரெண்டு கிராமங்களுக்கு இந்த மருத்துவமனை ஒன்றுதான். தினமும் நூற்றுக் கணக்காய் வரும் நோயாளிகளுக்கு ஒரேயொரு டாக்டர். பெயருக்கு இரண்டு நர்ஸ், எப்போதும் அவர்களில் ஒருத்தி மெட்டர்னிட்டி, மெடிகல் லீவ் என்று மாறி மாறி இருப்பாள். துணைக்கு ஒரு பியூன். டாக்டர் பக்கத்து நகரத்திலிருந்து வர வேண்டும். அவருக்கு அலுவல நேரம் - அட்டன்டென்ஸ், அது - இது என்று எதுவுமே கிடையாது...! சர்வீஸ்....? அப்படி ஒன்று ஏதாவது இருக்கிறதா என்ன.....? 

“கொஞ்சம் கஞ்சி தண்ணியாவது ஊத்திக்கிட்டு வந்திருக்கலாம்... இப்படி தலையை சுத்துதே...!” கிழவர் முன்பு எதிரில் நின்றிருந்தவரை பார்த்தார். அவர் எப்பொழுதோ டாக்டரது அறைக்கு அருகில் சென்றிருந்தார். “அடேடே!... எதிரில் இருக்கிறது எதுவுமே தெரியாம கண்ணு இப்படி மங்குதே...!” 

“சக்தியற்ற உடலும் - நோயுற்ற உறுப்புகளும் - நடந்து வந்த களைப்பும், கஞ்சி காணாத வயிறும்... கிழவரை ஏறக்குறைய மயக்கமுற வைத்தன. 

“யோவ்! ஆணி அடிச்ச மாதிரி கவனத்தை புடிச்சிகிட்டு அங்கியே நிக்கறியே...! உள்ள போய்யா... காலியாடுச்சி” பியூன் மீண்டும் தனது அதிகாரத்தை நிலை நாட்டினார். கிழவர் தன் நிலைக்கு வந்தார். உள்ளத்தில் ஒரு “தெம்பு” கம்பளி புழுவைப் போல் சிலுப்பிக் கொண்டு வந்து அமர்ந்தது டாக்டரது அறைக்குள் நுழைந்தார். 

“டொக்....” 

கிழவரது கையில் இருந்த கம்பு பட்டு மேசையின் மேல் இருந்த மருந்து டப்பா ஒன்று கீழே விழுந்தது. “யோவ் அறிவு இருக்க வேணா...? இப்படியா கண்ணு மண்ணு தெரியாம உள்ள நுழையறது” பருத்து கனத்திருந்த நர்ஸ் ஒருத்தி அனலாய் எரிந்தாள்.  

“இந்த பெஞ்சு மேல உட்காருய்யா...” டாக்டர் ஒருமையில் தான் விளித்தார். கிழவர் தடுமாறியபடி உட்கார்ந்தார். 

“என்னய்யா உடம்புக்கு.....?” டாக்டர் எரிச்சலும் வெறுப்பும் இரண்டறக் கேட்டார். அவர் கேட்ட விதத்திலேயே ஏதோ ஒரு “ஒவ்வாமை” தெரிந்தது. 

“சாமி...! நீங்க நல்லா இருக்கணும் சாமி, மவராசனா இருக்கணும். ஒண்ணும் முடியல சாமி... கையி, காலு, எல்லாம் இப்படி வீங்கி... லொக்.. லெக்...” கிழவர் வார்த்தை வராமலே இருமலினால் இடறினார். 

‘ச்சே’! டாக்டர் முகத்தை திருப்பிக் கொண்டு அங்கலாய்த்தார். 

“உசிரை வாங்கறதுக்குனே வருதுங்களே அசிக்க பிடிச்சதுங்க!” 

“ஆமா! சாமி உடம்பு பூரா நோவு. கையி, காலு, வராம நிக்க முடியல... நடக்க முடியல... படுத்த படுக்கையா...” கிழவர் தயங்கி தயங்கி பேசினார். 

“சரிதான்யா அப்புறம்...” 

தாம் சொன்னதை டாக்டர் புரிந்து கொள்ளவில்லையோ என்ற நினைப்பில் கிழவர் தன் இடக்கையை தூக்கி காட்ட நினைத்தார். வழக்கம் போலவே இடக்கையை இயக்க முடியவில்லை. பின் சிரமப்பட்டு வலக்கையால் இடக்கையை தூக்கி நிறுத்தினார். டாக்டரது முகத்து முன் கிழவரது இடக்கை வீங்கி பருத்து நொதநொதத்து, பல நாள் கழுவி இல்லாத தோளில் அடையடையாய் தேல் உரிந்து, எண்ணெய் போன்று வடியும் ஒருவகை சீழ் போன்ற திரவத்துடன்.... 

இனியும் டாக்டரால் பொறுத்து கொண்டிருக்க முடியவில்லை. “ச்சே! ஒரே நியுசென்ஸா இருக்கே! என்றபடி டாக்டர் நர்ஸை பார்த்தார். பின் பெரியவரைப் பார்த்தார். சட்டென்று குனிந்து தன் முன் இருந்த துண்டு தாளில் கிறுக்கினார். “பெரியவரே? இந்த நோய்க்கு மருந்து மாத்திரை எதுவும் இப்ப ஸ்டாக் இல்ல. அதானல மருந்து மாத்திரையெல்லாம் இந்த சீட்ல எழுதி தர்ரேன். போய் கடையில வாங்கிக்க...” 

“அய்யய்யா அய்யா...! நான் எ....ப்படி... கடையில போயி...யி” 

கிழவரை முடிக்க விடவில்லை டாக்டர். “டயமாவது! எந்திரிப்பா... நெக்ஸட்...!” 

டாக்டர் அவசரத்தோடு வாசலை பார்த்தார். வெளி யிலிருந்து ஒருவர் உள்ளே வர... கிழவர் விருப்பம் இல்லாமல் எழுந்து கொண்டார். தெளிவில்லாத சப்தங்களோடு, உதடுகள் ஏதேதோ கெஞ்ச, கைகள் அவரை நோக்கியே நிராதரவாய் நடுங்க, “நர்ஸ் ஏன் மரமாட்டம் நிக்கறே... இந்த கிழவரைக் கொண்டு போ...” டாக்டர் கட்டளையிட நர்ஸ் தோளை உலுக்கி கொண்டு வந்தாள். கிழவர் இனியும் இருக்க முடியாது. தடுமாறியபடியே அறையை விட்டு வெளியேறினார். வெளியில் - வரிசையில் நின்றிருந்தோரை பார்த்தபடியே ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்தார். 

“கையிலிருந்த காகிதத்தை முகத்தருகே வைத்துப் பார்த்தார் எழுத்தே தெரியாமல் அது வெள்ளையாய் தெரிந்தது. “எதோ...! கவ.....ர்.... மெண்டு... ஆஸ்...பத்...ரி, மருந்....து மாத்...தி...ரைன்னு சொன்னாங்களே” கிழவருக்கு வாய் குழறியது. “இதுக்கு போயி ... நா.. ன...எவ்வ...ளவு கஷ்டப்...” கிழவர் தன் கண் முன் இருந்த காகிதத்தை இன்னொரு முறையும் தீர்க்கமாய் பார்த்தார். சக்தி குன்றி, உணர்ச்சியே மறந்து போயிருந்த அவரது நரம்புகளினூடாகவும் ஒரு மின்னல். 

ஒரு ஆவேசம் வந்தவரைப் போல், கிழவர் தன் வலக்கையில் இருந்த கம்பை தன் உடல் மேல் சாய்த்து வைத்து கொண்டு - தன் கையில் இருந்த காகிதத்தை ஏதோ ஒரு கொடிய மிருகத்தின் கழுத்தை அழுத்தி மிதித்து நெரித்துக் கொல்வது போல் - சுக்கல் சுக்கலாய் கிழித்து, தன் சக்தி அனைத்தையும் திரட்டி - தூர எறிந்தார். கிழவரது முகத்தில் - அதுவரை தன்னிடமிருந்த தீயது ஒன்றை விட்டு அகன்றது போன்ற திருப்தி. தன் மேல் ஒட்டிக் கொண்டிருந்த “அசிங்கத்தை” துடைத்து கழுவி விட்டது போன்ற பாவம். கிழவர் ஒளியிழந்து வற்றிப் போன தனது கண்களை சுருக்கி பாதையை பார்த்தார். 

வயல் - வரப்பு... ஓங்கி உயர்ந்த பனை மரங்கள், எங்கோ ஒரு கோடியில் இருக்கும் தம்மூர் என்று எதுவுமே தெரியாமல், அனைத்துமே மஞ்சள் பூத்த மாதிரி மங்கலாய் தெரிந்தது. கிழவர் கம்பை காலுக்கு முன் வைத்தார். 

ஆனால்....அவர் போய்ச் சேர வேண்டிய இடமோ எங்கோ இருந்தது.