கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- கா.மீனாட்சி சுந்தரம்
- பிரிவு: புவி அறிவியல்
குழந்தை எவ்வாறான தோற்றமுடையதாயிருக்கும் என்பது இதன் உடல் உயிர்மங்களில் (body Cells) உள்ள 46 இணைமரபுக் கீற்றுகளைப் (genes) பொறுத்தது. இந்த இணை மரபுக் கீற்றுகளில் பாதியைத் தாயிடமிருந்தும் மற்ற பாதியைத் தந்தையிடமிருந்தும் பெறுகிறது. இவற்றுள் சில இணை மரபுக் கீற்றுகளே குழந்தையின் கண் நிறத்தை நிச்சயப்படுத்துகின்றன.
எல்லாக் கண்களும் நீல உயிர்மங்களை உடை யன. ஆனால் சில மக்கள் வேறு நிறங் களுடைய உயிர்மங்களை உடையவராய் இருப்பதால் அவர் களுடைய கண்கள் பச்சை, சாம்பல், பழுப்பு, செம்மை கலந்த பழுப்பு (hazel) ஆகிய நிறங்களை யுடையனவாய் இருக்கின்றன. குழந்தைகள் எல்லோரும் நீலக்கண்களையே உடையவர்கள். ஏனென்றால் பிற உயிர்மங்கள் ஏதாவது இருக்கு மானால் அந்த உயிர்மங்கள் குழந்தைகள் இரண்டு வயது ஆகும் வரை அவை வளர்ச்சி அடைவ தில்லை. சில சமயங்களில் சிலர், ஒரு பகுதி நீலமாகவும் மற்ற பகுதி பழுப்பு அல்லது பச்சை யாகவும். கண்கள் கொண்டிருப்பர். இதற்குக் காரணம் அவர்களுடைய பாதிக்கண் வழக்கமான நீல நிறங்கொண்டாயும் மற்ற பாதி பிற நிறம் கொண்டதாயும் இருப்பதே ஆம்.
இரண்டு நீலக் கண்களுடையோர்க்கு நீலக்கண்கள் கொண்ட குழந்தைகள் பிறப்பர். ஏனெனில் நீல உயிர்ம இணைமரபுக் கீற்றுகளே (blue cell-genes) அங்குக் கடத்தப்படுகின்றன. ஆனால் பெற்றோருள் ஒருவர் பழுப்பு நிறமும் மற்றவர் நீலமும் உடையவரானால் நீலமும் பழுப்பும் கலந்த மரபுரிமை கடந்தாலும் குழந்தையின் கண்கள் நீலநிறங்களை ஆதிக்கம் செலுத்தக் கூடிய அளவு பழுப்பு நிறங்கள் இருந்தாலே இரு நிறங்கொண்ட கண்களை இக்குழந்தைகள் உடையதாய் அமையும். இரண்டு பழுப்பு நிறக்கண்கள் கொண்ட பெற்றோர்களாயினும் போதுமான அளவு பழுப்பு நிறங்கொண்ட இணை மரபுக் கீற்றுகள் கடத்தப்படவில்லையானால் பழுப்பு நிறக்கண்கள் கொண்ட குழந்தைகள் பிறவா. போதுமான பழுப்பு நிற இணை மரபுக் கீற்றுகள் கடத்தப்பட்டாலே பழுப்பு நிறக் கண்கள் கொண்ட குழந்தைகள் பிறக்கும்.
- விவரங்கள்
- சி.சண்முகம்
- பிரிவு: புவி அறிவியல்
எந்த வகை மின்னணுக்களாக இருந்தாலும் அலைகளுக்கிடையில் எதிர்ப்பு விசை உண்டு. காரணம் அனைத்தும் ஒரே வகையான எதிர் மின்னூட்டம் கொண்டவையாதலால் ஒன்றை யொன்று எதிர்க்கும். இந்த எதிர்ப்பு விசையின் விளைவை அறிவியலறிஞர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். பொதுவாக, இரண்டு தனி மின்னணுக்களுக்கிடையில் உள்ள எதிர்ப்பு அதிக பட்சம் இருக்கும். ஒரு தனி மின்னணுக்களுக்கும், ஒரு பிணைக்கப்பட்ட இணை மின்னணுக்களுக்கு மிடையே உள்ள எதிர்ப்பு முன்னதைவிடச் சற்றுக் குறைவாக இருக்கும். இரண்டுமே பிணைக்கப்பட்ட இணை மின்னணுக்களாக இருந்தாலும் இன்னும் குறைவாக ஈர்ப்பு விசை இருக்கும்.
ஒரு எடுத்துக்காட்டோடு பார்த்தால் இத் தத்துவம் எளிதில் விளங்கிவிடும். அம்மோனியா மூலக்கூறில் 3 N-H இணைக்கப்பட்ட இணை மின்னணுக்களும், ஒரு தனி இணை மின்னணுக் களும் உள்ளன. அவைகளுக்கிடையில், ஒன்றுக் கொன்று, ஒன்றையொன்று பாதிக் காத வகையில் இணக்கமான சூழ்நிலை நிலவ வேண்டுமானால் படத்தில் காட்டியபடி தங்களை அவை அமைத்துக் கொண்டால்தான் அம்மோனியா மூலக்கூறு எந்த ஆபத்துக்கும் உட்படாமல் நிலையாக இருக்க முடியும். பிணைக்கப்பட்ட இணை மின்னணுக்களும் ஒரு பிரமிட் போன்ற அமைப்பில் தங்களை இருத்திக் கொண்டும், பிணைப்பில், ஈடுபடாத தனி இணை மின்னணுக்கள் இரண்டும் மேற்புறம் நீட்டிக் கொண்டிருப்பது போல் வைத்துக் கொள்ளும்போது மூலக்கூறு முழுவதற்குமே சிரமம் எதுவுமில்லாமல் நிலைப்படுத்திக் கொள்ள முடிகிறது.
ஒரு நுட்பம் இங்கே கவனிக்கப்பட வேண்டியுள்ளது. ஒரு மூலக்கூறுக்கு, அதற்கென்று ஒரு தனிப்பட்ட வடிவமும், அமைப்பும் இருக்கிறது. அந்த வடிவமும், அமைப்பும் அம்மூலக்கூறுக்கு எப்படி அமைகிறது? யார் இந்த மூலக்கூறு இந்த வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்? ஆம்! ‘கிட்டப்போனால் முட்டப்பகை’ என்ற பழமொழியின் கருத்துதான் இதைத் தீர்மானிக்கிறது.
மூன்று இணை பிணைப்பு மின்னணுக்களும், ஒரு தனி இணை மின்னணுக்களுமாக உள்ள ஓர் அமைப்புக்கு ஒன்றுக்கொன்று பாதிப்பில்லாமல் ஒன்றையொன்று ஒத்துக்கொண்டு போகவேண்டுமானால் பிரமிட் போன்ற அமைப்புடன் மேற்புறம் நீட்டிக்கொண்டிருக்கும் நாற்பக்க அமைப்புத்தான் (Tedrahedran) அதற்குத் தீர்வாக அமைய முடியும். வேறு எந்த வடிவத்தில் அந்நான்கும் தங்களை அமைத்துக்கொண்டாலும் ஒன்றுக்கொன்று எதிர்ப்பு வலுத்து இறுதியில் மூலக்கூறு நிலைப்புத் தன்மை குன்றி உடைந்து போகும்.
ஆக, மூலக்கூறுக்கு என்ன வடிவம் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதே அதில் உள்ள பிணைப்பு இணை மின்னணுக்களும், தனி இணை மின்னணுக்களும்தான் என்பது தெளிவா கிறது. அவை செயல்படும் விதத்தின் உள்ளார்ந்த கோட்பாட்டை நோக்கும்போது ‘கிட்டப் போனால் முட்டப் பகை’ பழமொழியின் கருத்துக் கிணங்க குறிப்பிட்ட தூரங்களிலும், குறிப்பிட்ட கோணங்களிலும் தங்களை நிலை நிறுத்திக் கொள் கின்றன.
‘தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு’ என்ற பழமொழியின் கருத்தும் இதிலேயே அடங்கியிருப் பதை நாம் எளிதில் உணரலாம். இதே போன்று ஒவ்வொரு மூலக்கூறும் நடந்துகொள்வதால் குறிப்பிட்ட தூரங்களும், குறிப்பிட்ட கோணங் களும் தானாகவே ஏற்பட்டு, அதன் மூலம் அம் மூலக்கூறு என்ன வடிவத்தில் இருக்கவேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது.
ஆறறிவுடைய மனிதன் சிந்தித்துச் செயல் படுவது போல, ஆனால், அதைக் காட்டிலும் ஒருபடி மேலேயே சென்று செயலாற்றிக் கொண் டிருக்கும் மூலக்கூறுகளை நினைக்கும் போது, வியப்படையாமல் இருக்க முடியவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும் போது வேதியியல் வெறும் அறிவியல் பாடம் மட்டுமல்ல, மனிதன் எப்படி தங்களுக்குள் இணக்கமாக வாழவேண் டும் என்பன போன்ற உயரிய தத்துவங்களை மறைமுகமாகப் போதிக்கும் அறிவுக் களஞ்சியம் அல்லவா அது!
வேதியியலில் ஒரு பிரிவு கனிம வேதியியல். அதில் ஒரு உள்பிரிவு உலோகங்களை அவற்றின் தாதுப்பொருள்களிலிருந்து பிரித்தெடுப்பதைப் பற்றி விளக்கும் பகுதியாகும். இதற்காகக் கடைப் பிடிக்கப்படும் முறைகளைக் கவனிக்கும் போது அவற்றில் அடங்கியுள்ள தத்துவம் நமக்கு சமைய லறையில் பழகிப்போன முறைகளாகவே அமைந் துள்ளதைக் காணமுடிகிறது.
தங்கம் போன்ற ஒரு சில உலோகத்தைத் தவிர மற்ற அனைத்தும் புவிக்கடியில் கூட்டுப் பொருள்களாகத்தான் கிடைக்கின்றன. அவற்றைத் தாதுப்பொருள்கள் என்று அழைக்கின் றனர். அவற்றிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கப் பல முறைகளைக் கையாளுகிறார்கள். தாதுப்பொருள்களுடன் தேவையற்ற தும்பு, தூசு, மணல், களிமண் போன்ற பொருள்கள் இருக்கக் கூடும். எனவே, தேவையற்ற பொருள்களிலிருந்து நமக்குத் தேவையான தாதுப் பொருள்களை மட்டும் பிரித்தெடுக்கும் முறைகளை, தாதுப் பொருள்களைத் தூய்மைப்படுத்தும் அல்லது ஒருமைப்படுத்தும் முறைகள் என்றழைக்கின் றனர். அவற்றுள் முதலாவதாக ‘நீரினால் கழுவு தல்’ அல்லது ‘ஈர்ப்பு விசையினால் பிரித்தல்’ என்ற முறையைப் பார்ப்போம்.
இம்முறையில் பொடியாக்கப்பட்ட தாதுப் பொருளைச் சற்றுச் சாய்வாக உள்ள ஒரு கிடை மட்டமான மேடை மீது பரப்பி வைத்து வலிமை யான நீரோட்டத்தை அதன் மீது பாய்ச்சுவார்கள். மிகவும் இலேசான மணல் மற்றும் இதர மண் சம்பந்தமான பொருள்கள் அனைத்தும் வலிமை யான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடும். கனமான தாதுப் பொருள்கள் அடியில் தங்கிவிடும். இதுதான் நீரினால் கழுவுதல் அல்லது ஈர்ப்பு விசையினால் பிரித்தல் என்றழைக்கப்படும் முறையாகும்.
இந்த முறையைக் கூர்ந்து கவனிக்கும் போது இதில் அடங்கியுள்ள தத்துவமும், அது கையாளப்படும் விதமும் நமக்கு ஒன்றும் புதிய தல்ல என்று தெரிகிறது. கடையில் வாங்கி வந்த அரிசியில் நிறைய உமி மற்றும் சிறு சிறு கற்கள் இருப்பதுண்டு. எனவே, அதை அப்படியே சமைய லுக்குப் பயன்படுத்த முடியாது.
அந்த அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சற்று நேரம் ஊற வைத்து பின் வலதுகை விரல்களை ஒன்று சேர்த்து குவித்து வைத்து பாத்திரத்தில் உள்ள நீருக்குள் சற்றே மூலமாக முழுகியிருக்கு மாறு வைத்துக்கொண்டு இடது கையினால் அந்த பாத்திரத்தை முன்னும் பின்னும் மாற்றி மாற்றி அசைக்கையில் பாத்திரத்தில் உள்ள அரிசி மற்றும் நீர் சேர்ந்த கலவையிலிருந்து அரிசி மட்டும் சிறிது சிறிதாக வலது கையில் ஏறி உட்கார்ந்து கொள்ள, கை நிரம்பியதும் அதை எடுத்து வேறொரு பாத்திரத்தில் போட்டுவிட்டு மீண்டும் மேற்கூறிய முறைப்படியே தொடருவார்கள். நம் வீடுகளில் ‘அரிசி களைதல்’ என்ற பெயரால் நம் தாய்மார்களால் தொன்று தொட்டு கடைப் பிடிக்கப்பட்டு வரும் இம்முறைக்கும் உலோகவியல் தொழிற்சாலைகளில் கடைபிடிக் கப்படும் முறைக்கும் தத்துவவாரியாகப் பார்த்தால் ஒரு வித்தியாசமும் இல்லை.
(அறிவியல் ஒளி டிசம்பர் 2011 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- கா.மீனாட்சி சுந்தரம்
- பிரிவு: புவி அறிவியல்
அன்டோன் வொன் லியுவென்ஹோக் (Anton Von Leeuwen hock), (1623-1723) என்ற டச்சு அறிவியலார் நுண்நோக்காடியால் (microscope) பல சோதனைகள் செய்து கூர்நோக்கியில் நுண்ணுயிரிகளையும் பிற நுண்மங்களையும் (microbes) முதன் முதலாகக் கண்டறிந்தார். அறிவியலை அவர் முறையாகக் கற்றவரல்லர். ஆம்ஸ்டர்டாமில் துணி வாணிகத் தொழிலில் முதலில் ஓர் எழுத்தராகப் பணியாற்றினார். பிறகு தன் சொந்த ஊரான டெல்வ்ட் (Delft) டில் சொந்தமாக வாணிகம் புரிந்தார். அங்கே தன் பெரும்பாலான நேரத்தைப் பூதக்கண்ணாடி கொண்டு சோதனைகள் செய்வதிலும் கழித்தார். அப்போது நானூறு வளைக் கண்ணாடிகளுக்கு (lens) மேல் தேய்த்து ஒரு லென்ஸ் கொண்ட உயர்ந்த நுண்ணோக்காடிகள் உற்பத்தி செய்தார்.
அவர் கண்டுபிடித்த நுண்ணோக்காடி மூலமாக 'நுண் விலங்குகளின்' (tiny animals)) புதிய உலகம் கண்டார். மணல் மணிகளின் நிறை குவியலைப் போன்ற நுண்ணுயிர்த் தொகுதிகளை நூற்றுக்கணக்கில் கணக்கிட்டு மதிப்பிட்டார். "நான் நாள் தோறும் உப்பைக் (Salt) கொண்டு வாய்த்தூய்மை செய்கிறேன். இருப்பினும் நெதர்லண்டில் வாழும் மக்கள் தொகையை விட மிகுதியான உயிர்வாழ் விலங்குகளை நான் என் வாயில் சுமக்கிறேன். அது எப்படி முடியும்" என அவர் கேட்டு எழுதியுள்ளார். இலண்டனிலுள்ள ராயல் சொசைட்டிக்கு (Royal Society in London)1673 ஆண்டு முதல் அவர் தன் நுண்ணோக்காடியின் கூர் நோக்கியில் தொடர்ந்து கண்ட முடிவுகளை அனுப்பத் தொடங்கினார்.
லியுவென்ஹோக் சிறு வடிவங்கள் கொண்ட விலங்குகளின் வாழ்க்கையைக் குறிப்பாக ஆய்வு செய்தார். அந்துப்பூச்சி (Weevils), தெள்ளுப்பூச்சி (fleas), பேன் (lice) ஆகியவை தாமாகவே உற்பத்தியானவை அல்ல என்றும் குப்பையில் உற்பத்தியாகுபவை அல்ல என்றும் கண்டறிந்து இதுவரை எண்ணிவந்த இதற்கு எதிரான கருத்துகள் பிழையானவை என்றும் அவரால் காட்ட முடிந்தது. எறும்புகளை (ants) ஆய்ந்து அவற்றின் முட்டைகள் என இதுவரை நினைக்கப்பட்டு வந்ததை கிரைஸலிசஸ் (Chrysalises) என அழைக்கப்படும் முழுமையான பூச்சிகள் அவை என நிறுவினார். ஒரு காலத்தில் நினைத்தது போலச் சிப்பிகள் (mussels) மணலில் உருவானவை யல்ல என்றும் விலங்குமீன் அல்லது மலங்கு (eels) பனித்துளியால் (dew) ஆக்கப்படுவதில்லை என்றும் செய்முறை விளக்கம் காட்டி அந்நினைப்புகளைப் பொய்யாக்கினார்.
இருப்பினும் அவருடைய பணிகள் மருத்துவச் சிந்தனையில் உடனடிப் பயனை விளைவிக்கவில்லை. பல ஆண்டுகள் மக்கள் நுண்ணுயிர்கள் தாமாகவே உற்பத்தியாகின்றன என்றே நினைத்து வந்தனர். அறிவியலாளர்கள் கூட நீண்டகாலம் சிறு நுண்ணுயிரினம் தம்முள் இனப்பெருக்கம் செய்து கொள்பவை என்பதை ஏற்கத் தயங்கி வந்ததுண்டு.
(உடலும் மருந்தும் நூலிலிருந்து)
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: புவி அறிவியல்
கார்-எஞ்சின் எப்படி வேலை செய்கின்றது என்பதை அறியாமல், நாம் கார் ஓட்ட கற்றுக் கொள்ள முடியும். அது போலவே, எப்படி நம்-மூளை கற்கின்றது... சிந்திக்கின்றது என்பதை அறியாமல் நாம் கற்றுக் கொள்கின்றோம்... சிந்திக்கின்றோம். மூளை என்பது ஒரு கற்றுக் கொள்ளும் எந்திரம். சிறுவயது முதல், அது படிப்படியாக சிறுகச்சிறுக கற்றுக் கொள்கின்றது. இவ்வாறே நாம் கேட்க, பார்க்க, பேச. நடக்க, ஓட, சிந்திக்க, பகுத்து-அறிய என பலவற்றை கற்றுக் கொள்கின்றோம். நாம் எப்படி கற்றுக் கொள்கின்றோம் என்பதை இரு முக்கிய காரணிகள் நிர்ணயிக்கின்றன. நம் ஜீன்கள், நாம் வளர்ந்த/வாழும் சூழல். இதில் இரு முக்கிய சூழல்கள் உள்ளன: சிறுவயதில் நெருங்கிய பந்தங்கள், பிற்பாடு நாம் வாழும் சமூகம். சிறுவயதில் பதிந்து போனவை பசுமரத்தில் அடித்த ஆணி போன்றது தான்; பிறகு மாற்றுவது எளிதல்ல.
மூளை எப்படி கற்று கொள்கின்றது?
மூளை என்பது நரம்பு-செல்கள் (Neurons) பிணையப்பட்ட வலை (Neural Network). நாம் கற்கும்போது, புதிய நரம்பு-செல்-இணைப்புகளை உருவாக்கியோ அல்லது இணைப்புகளின் பலத்தை கூட்டியோ/குறைத்தோ நம் மூளை கற்றுக் கொள்கின்றது. இவ்வாறு புலன்கள் மூலமாக செல்லும் உலக விசயங்களை கொண்டு, மூளை மாதிரிகளை (Models) உருவாக்குகின்றது. இதில் ஒரு மாதிரியின் பலம் அல்லது நம்பிக்கை அதன் நிகழ்தகவை பொருத்தது. நாம் கற்று கொள்ளும்போது, அந்த மாதிரியின் நம்பிக்கை-நிகழ்தகவு அதிகரிக்கவோ, குறையவோ செய்யும்.
இந்த மாதிரிகளைக் கொண்டே, நாம் வாழ்க்கையை/உலகைப் புரிந்து/கணித்து வாழ்கின்றோம். புலன்கள் மூலமாக மூளைக்கு செல்லும் எந்த விடயங்களும் உலகைப் பற்றிய முழுமை அல்ல. அந்த முழுமையற்ற விடயங்களிலிருந்து மூளை ஒரு மாதிரியை (அறிவியல் தியரி போல்) உருவாக்கி, உலகை... வாழ்க்கையைப் புரிந்து... கணிப்பதையே அறிவு என்கின்றோம். அனைத்துமே முழுமையற்று இருப்பதால், அனைத்துமே நம்பிக்கை தான்; நம்பிக்கையின் நிகழ்தகவு வேறாக இருக்கலாம்; 100% நிச்சயம் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரின் மூடநம்பிக்கையும், அவரின் மூளையின்படி நம்பிக்கையே. ஆக, நம் நம்பிக்கை தற்சார்புடையது (Subjective). எனவே தான், பாரபட்சமற்ற வெளிசார்புடைய (Objective) ஆராய்ச்சி (அறிவியல்) தேவைப்படு கின்றது. அதைத் தான், கலிலியோ உட்பட பல அறிஞர்கள் நமக்கு காட்டினர். ஆனால், அதை எப்படி எல்லோருக்கும் நம்ப/புரிய வைப்பது?
எந்த ஒன்றும், பரிணாம வளர்ச்சி அடைய சில முக்கிய அம்சங்கள் உண்டு: (1) அதை சேமிக்க இடம் (Storage); (2) அதை நகல்கள் எடுத்தல் (Genes) இருக்கும்/சேமித்த இடம் DNA; அதன் நகல் எடுத்தலை இனப்பெருக்கம் என்றும் அதன் பிழைகளை மரபு-பிழைகள் என்கின்றோம். பரிணாம வளர்ச்சிக்கு நல்லது கெட்டதெல்லாம் தெரியாது; சூழலுக்கு ஏற்ப தக்கவைகள் பிழைத்து வளர்ச்சி அடையும். பரிணாம வளர்ச்சிக்கு மற்றொரு உதாரணம் மெம்கள் (Memes). மெம் என்பது ஒரு யோசனையைக் (Idea) குறிக்கும். கடவுள், மதம், அறிவியல், ஜாதகம், கலாச்சாரம், ஜாதி... இவை எல்லாம் மெம்கள் தான். இவை இருக்கும்/சேமித்த இடம் மூளை. இவை ஒரு மூளையிலிருந்து மற்றொன்றிக்கு காலகாலமாக மொழி, கலாச்சாரம் மூலம் பரவுகின்றது அல்லது நகல் எடுக்கப்படுகின்றது.
ஜீன்களைப் போலவே செத்துப்போன மெம்கள் கோடான கோடி. செத்துப்போன கடவுள்களும் கோடான கோடி. இன்று பிழைத்திருக்கும் அனைத்து மெம்களும் ஏதாவது ஒரு வகையில் சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்தவைகளே! அந்த சூழலில், பல மூடநம்பிக்கைகளுக்கு நம் உணர்ச்சிகள் (உணர்ச்சிகள் ஜீன்களின் பரிணாம வளர்ச்சி) முக்கிய காரணிகளாக இருக்கின்றன. மனிதனின் ஆரம்ப கட்டத்தில், அறியாமையும் பய-உணர்ச்சியும் பல மூடநம்பிக்கைகளுக்கு முக்கிய காரணிகளாக இருந்திருக்கலாம். மெம்கள் வளர்ச்சி அடைய தேர்ந்த மொழி மற்றும் கலாச்சாரம் தேவை என்பதாலே, அதைக் கொண்ட மனிதனிடத்தில் மூடநம்பிக்கைகளும், அறிவியல் வளர்ச்சிகளும் காணமுடிகின்றது; மற்ற விலங்குகளில் அவற்றை காண முடிவதில்லை.
பகுத்தறிவு என்பது (Critical Thinking), ஒவ்வொரு விடயத்தையும் சீர்தூக்கி வெளிசார்புடன் (Objective) கற்று, அதற்கு ஏற்ப நம்பிக்கை-நிகழ்தகவுகளை அமைப்பது. ஆனால், அந்த அறிவும் நாம் வளர்ந்த/வாழும் சூழல்களைப் பொருத்தது. முறையான பகுத்தறிவு இல்லாத போது, மூளை எளிதாக ஏமாந்து நம்பிக்கை-நிகழ்தகவுகளை வெளிசார்பு-அறிவுக்கு (Objective-Knowledge) எதிராக அமைப்பதை மூடநம்பிக்கை எனலாம். ஆனால், பகுத்தறிவு என்பது நம் மூளையின் அறிவு-பகுதியைப் மட்டுமே ஏற்பதல்ல, நம் உணர்ச்சி-பகுதியையும் ஏற்பது தான்! மானிட உணர்ச்சி களுக்கு வடிகாலாகவும், சமூதாய வளர்ச்சிக்காகவும் சில விடயங்களை கடைபிடிப்பதும் பகுத்தறிவு தான்! இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதும், நினைவு சின்னங்கள் எழுப்புவதும், பாடுவதும், கொண்டாடுவதும் பகுத்தறிவு தான். பகுத்தறிவு என்பது, நாம் எதை செய்தாலும் அதை புரிந்து கொண்டு செய்கின்றோமா அல்லது குருட்டுத்தனமாக செய்கின்றோமா என்பதில் தான் உள்ளது!
- எரடோஸ்தனிஸ்... உலகின் முதல் புவியியலாளர்
- ஓசோன் மண்டலப் பாதுகாப்பு - அவசியமும் வழிமுறைகளும்
- வன்னிப்பிரதேச குடித்தொகை வளர்ச்சியும் குடித்தொகைப் பண்புகளும். 1871 - 1981
- வானிலையும் ஒரு ஆயுதமாகும் அபாயம்
- வளங்களின் வரையறை, வகைப்பாடு, வள அபிவிருத்தி என்பதன் பொருள் மற்றும் தமிழர் நிலத்தின் வளங்களும் பயன்பாடும்.
- சூழல்பேண் புதுப்பொருளாதார ஒழுங்கும் இயற்கை வேளாண்மையும்.
- இலங்கையின் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் - விவசாயத் தொழிற்றுறைக்கான விரிவாக்கம்
- இலங்கைத் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் - விவசாய அபிவிருத்தியும் நீர்வளப் பயன்பாடும்
- இலங்கையின் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் மாற்றுச் சக்தி வளங்கள்
- வானம் ஏன் நீல நிறத்தில் தோற்றமளிக்கின்றது?
- மார்கழி மாதம் ஓசோன் ரகசியம் - உங்களுக்குத் தெரியுமா?
- நிலாவினால் பூமியில் நிலநடுக்கம்
- 'கடி' மன்னன் மனிதனே
- பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
- சூறாவளி எப்படி உருவாகிறது?
- நிறம் காண திணறும் மூளை
- ஏறு பூட்டாமல் சோறு சாப்பிடலாம்
- வெறுங்கால் ஓட்டம்.....வேகமான ஓட்டம்
- மனிதன் தோன்றியது எப்படி?
- ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?