இக்கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்பாக ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வெள்ளை நிறக் கதிரானது  ஊதா, கருநீலம்,  நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு என ஏழு வகையான கதிர்களை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு கதிருக்கும் வெவ்வேறு  அலைநீளமும் (wavelength)  அதிர்வெண்ணும் (frequency) உண்டு.  (இதெல்லாம் நீங்கள் சின்ன வயதில் படித்தது தான்!).  சூரியக்கதிர்கள்  அண்டத்தில்  நேர்க் கோட்டில் பயணிக்கும்.  அப்படிப் பயணிக்கும் போது ஒரு மூலக்கூற்றையோ (molecule) தூசியையோ (dust) எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு அல்லவா? அத்தூசியின் தன்மையைப் பொறுத்து கதிர்களின் செயல்பாடு மாறுபடுகிறது.

சூரியக்கதிர்கள் நம் காற்று மண்டிலத்தின் தூசித்துகள்கள் (Dust particles) மீது மோதும் பொழுது அவை பெரும்பாலும் அப்படியே எதிரொளிக்கப்படுகின்றன. எதிரொளிக்கப்பட்ட கதிர்கள் வெள்ளை நிறத்திலேயே தோற்றமளிக்கும். இதற்குக் காரணம் தூசித் துகள்கள் கதிர்களை உட்கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகின்றன.  எனவே கதிர்கள் அப்படியே எதிரொளிக்கப்படுகின்றன.

ஆனால் காற்று மூலக்கூறுகள் (Gas molecules) மீது மோதும் பொழுது, இதற்கு நேர்மாறாகக் காற்று மூலக்கூறுகள்  அதில் பெரும்பான்மையான கதிர்களை உட்கொள்கின்றன. இதில் அதிக அலைநீளம் கொண்ட கதிர்கள்(சிவப்பு) தப்பிப் போய் விடுகின்றன. ஆனால் குறைவான அலைநீளம் கொண்ட கதிர்களை(நீலம்) காற்று மூலக்கூறுகள் விடாமல் உட்கொள்கின்றன.  இவ்வாறு உட்கொள்ளப்பட்ட நீல நிறம் கதிர் வீச்சடைந்து பல திசைகளில் சிதறடிக்கப்படுகிறது. இதனால் தான் நமக்கு வானம் நீல நிறத்தில் தோற்றமளிக்கின்றது.

- அருண்மொழிவருமன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It