கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: புவி அறிவியல்
உலகின் பழங்கால அறிவியல் மையம்!
பழங்கால கிரேக்கம் தான் இன்றைய எகிப்து. கிரேக்கம் நைல் நதியின் கொடை என வரலாற்றாளர்களால் வருணிக்கப்படுகிறது. அந்த எகிப்து, ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ளது. உலகில் மனித நாகரிகம் உருவாகி வளர்ந்த ஆற்றுச் சமவெளிகளில் ஒன்றுதான் இந்த நைல் நதியின் நாகரிக களமான எகிப்து. இங்கே சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வரலாற்றுப் பதிவுகள் கிடைத்துள்ளன. கிரேக்கத்தின் பெரிய நகரும், எகிப்தின் இரண்டாவது பெரிய நகரும் அலேக்சாண்டிரியாதான். இதனை மகா அலெக்சாண்டர் என்ற பேரரசர் கி.மு.337ல் (2,400 ஆண்டுகளுக்கு முன்) நிறுவினார். மத்தியதரைக்கடல் ஓரத்தில் அழகாக அமர்ந்துள்ள அலெக்சாண்டிரியாவின் கடற்கரை 32 கி.மீ நீளமுள்ளது. அன்றைய உலகின் பெரிய நூலகமான அலெக்சாண்டிரியாவும், அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகமும் இங்குதான் இருந்தன.
அலெக்சாண்டிரியா நூலகம்
அலெக்சாண்டிரியா நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான பாப்பிரஸ் சுருள்களும், ஆட்டுத் தோலில் எழுதப்பட்ட வரலாற்று ஆவணப் பதிவுகள் சுமார், 400,000-700,000 எழுத்துச் சுருள்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில், மாணவர்கள் படிக்க, விவாதிக்க, எழுத, ஆராய்ச்சி செய்ய என சுமார் 5,000 அறைகள் இருந்தன. இந்த நூலகத்தில் மூன்றாவது நூலகராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர்தான் எரடோஸ்தனிஸ் என்ற கிரேக்க விஞ்ஞானி. இந்த அலெக்சாண்டிரியா நூலகம் பண்பாடு மற்றும் அறிவின் கிரீடம் ஆகத் திகழ்ந்தது. இங்கே அறிவுஜீவிகள் சுமார் 700 ஆண்டுக்காலம் அதனை ஆட்சி புரிந்தனர். ஆனால் இந்த அலெக்சாண்டிரியா சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனது.
கிரேக்கத்தின் விஞ்ஞானி எரடோஸ்தனிஸ்!
பழங்காலத்தில் கிரேக்கம்தான் அறிவியல் உலகில் கொடி கட்டிப் பறந்தது. அங்குதான் உலகின் தலைசிறந்த தத்துவஞானிகளும், அறிஞர்களும் வாழ்ந்தனர். கணிதத்தின் விற்பன்னர்களே, வானவியல் மற்றும் புவியியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். கி.மு. 276 -194களில் வாழ்ந்த எரடோஸ்தனிஸ், சைராகுயூசின் (Syracuse) ஆர்கிமிடீசுக்கு நெருங்கிய நண்பர். ஆனால் எரடோஸ் வசித்தது அலெக்சாண்டிரியா நகரில்தான். இவர் சைரீனில் (Cyrene) பிறந்தார். இப்போது வட ஆப்பிரிக்க லிபியாவில் உள்ள ஷஹட்(Shahhat) தான் அன்றைய சைரீன். கிரேக்க அறிஞர் எரடோஸ் பல்துறை வித்தகர். இவரே கிரேக்கத்தின் மிகப் பெரிய கணித மேதை, அற்புதமான கவிஞர், சிறந்த விளையாட்டு வீரர், முக்கியமான வரலாற்றியலாளர் மற்றும் புவியியல் கண்டுபிடிப்பாளரும் கூட!
நூலகரும் வானவியலாளரும் பல்துறை வித்தகரும் .!
எரடோஸ்தனிஸின் பன்முகத்தன்மையால் இவர், பஞ்சாவதானி (Pentathalus) என்று பாராட்டப்பட்டவர். இவரை தத்துவத்தில் இரண்டாவது பிளேட்டோ என்றும், வானவியல் கணிப்பில் தாலஸூக்குப் பிறகு வந்த மிகச் சிறந்த வித்தகர் என்றும் பேசப்பட்டவர். இவருக்கு பீட்டா (Beta) என்ற பட்டப் பெயரும் உண்டு. புவியியல்(Geography) என்ற வார்த்தையை உருவாக்கியவர் இவரே. ஜியோகிரபி என்றால் பூமியைப் பற்றி எழுதப்பட்ட என்று பொருளாகும். உலகில் முதன் முதலில் பூமியின் விட்டத்தையும், சுற்றளவைவும் சரியாக அளந்தவர் எரடோஸ்தனிஸ்தான். அது மட்டுமல்ல பூமியின் அட்சரேகை, தீர்க்கரேகை என்ற முறையைக் கண்டுபிடித்தவரும் எரடோஸ்தனிஸ்தான். புவியியலின் ஒழுங்குமுறை விதிகளை நிர்ணயித்தவரும் இவரே..! ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அலெக்சாண்டிரியா நூலகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
சூரிய ஒளியும் நிழலும்= பூமியின் சுற்றளவு!
எரடோஸ்தனிஸ் கி.மு.276ம் ஆண்டு வட ஆப்பிரிக்காவின் சைரீன் எனற தற்போதைய லிபியாவில் பிறந்தார். அலெக்சாண்டிரியாவில் இலக்கணமும், ஏதென்ஸில் தத்துவமும் பயின்றார். கி.மு 236ல் மூன்றாம் தாலமி எரடோஸ்தனிஸை அலெக்சாண்டிரியா நூலகத்தின் நூலகராக நியமித்தார். அங்கே இவர் கணிதத்திலும், அறிவியலிலும் ஏராளமான முக்கியமான கண்டுபிடிப்புகளைத் தந்தார். சூரியனின் வெப்பமும், அதன் ஒளியால் ஏற்படும் விளைவுகளும் உண்டு என்பதை நாம் அறிவோம். ஒளியின் மூலம் நிழல் உண்டாவதும் நமக்குத் தெரியும். ஆனால் நிழல் வழியாக ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு நிகழ்த்தி உலகை அசர வைத்தது எரடோஸ்தனிஸ் மட்டுமே..! பூமியின் மேல், சூரிய ஒளியால் உருவாகும் நிழலை வைத்து பூமியின் அனைத்து பரிமாணங்களையும் கண்டறிந்தார்.
வானியல் உற்று நோக்கல் போலவே, புவிக்கோளின் பல்வேறு தகவல்களைக் கணக்கிட்டு, பல அறிவியல் விஷயங்களை அறிந்தது இவரது மகத்தான சாதனையாகும். பூமி தன் அச்சில் சாய்வாக சுற்றுகிறது என்ற உண்மையை முதலில் கண்டறிந்தவரும் எரடோஸ்தனிஸ்தான். அது மட்டுமல்ல, புவியின் சுற்றளவையும், சாய்மானத்தையும் துல்லியமாகச் சொன்னவரும் இவரே. அத்துடன் நம் புவிக்கோளில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை உருவாகும் லீப் தினத்தையும் கண்டறிந்தார். தனக்குக் கிடைத்த தகவல்களிலிருந்து, உலகின் வரைபடத்தையும் உருவாக்கினார். இதெல்லாம் எரடோஸ்தனிஸின் தலையாய சாதனையாகும். அதனால்தான் இவரை உலகின் நில அளவீட்டாளர்/கணக்காளார்/கணக்காயர் (Surveyor of the world) என்றும், புவியியல் தந்தை (Father of Geography) என்றும், அறிவியல் காலப்பட்டியலின் தந்தை (Father of Scientific Chronology) என்றும் பெருமையுடன் அழைக்கிறார்கள்.
ஏன் சில நாட்களில் நிழல் சாய்வாக..?
சூரியக் கதிர்கள் விளைவால் ஒரு பொருளின் நிழல் பூமி மேல் விழுவதை எரடோஸ்தனிஸ் தொடர்ந்து கவனித்தார். வருடத்தின் ஒரு சில நாட்களில்/நாளில் சூரியக் கதிர் பகலில் உச்சி வேளையில், தலைக்கு மேலே இருப்பதையும், அதனால் ஒரு பொருளின் நிழல் அதன் அடிப்பகுதி/காலடியில் மட்டும் விழுவதையும் கவனித்தார். ஆனால் எல்லா நாட்களும் ஒரு பொருளின் நிழல் அவ்வாறு அதன் அடியில் மட்டுமே நேராக சரியாக விழுவதில்லை. அந்த நிழல் கொஞ்சம் வடக்கு/தெற்கே சாய்வாக இருக்கிறது.
சூரியனின் கதிர்களால் ஏற்படும் நிழல் என்பது, பூமி சுற்றுவதாலும், அது தன் அச்சில் 23.5 பாகை சாய்வாக உள்ளதாலும் உண்டாகிறது. எரடோஸ்தனிஸ் தினம் இடம் மாறும் நிழலைப் பார்த்தது மட்டுமின்றி, அதற்கான காரணமும் தேட ஆரம்பித்தார். எரடோஸ்தனிஸ் சூரியக் கதிர்கள் ஒரு பொருளின் மேல் படுவதால் ஏற்படும் நிழல் தினமும் ஒரே இடத்தில் ஒரே சாய்மானத்தில் இருப்பதில்லை. அந்த நிழலின் சாய்மானத்தையும், தினமும் சூரிய உதயம் என்பது 6 மாதம் வடக்கிலிருந்து தெற்காகவும், அடுத்த 6 மாதம் தெற்கிலிருந்து வடக்காகவும் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை துல்லியமாக கவனித்தார். அதன் விளைவாக உருவானதுதான் பூமியின் சுற்றளவு எவ்வளவு என்ற வினாவும், அதற்கான விடை தேடுதலும். இதனை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத காரியம். அதுவும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே பூமியின் சுற்றளவை ஆதிகாலத்தில், எந்த அறிவியல் ஆதாரமும் தெளிவாக அறிய முடியாத 2,000 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் கண்டுபிடிக்கிறார் என்றால், அது எத்தனை வியப்புக்குரிய விஷயம்..! பூமியின் சுற்றளவைக் கண்டறிய, எகிப்தை விட்டு நகராமல், சூரியனால் ஒரு பொருள் மேல் ஏற்படும் நிழலின் சாய்மானத்தை வைத்தே, பூமியின் சுற்றளவை ஒருவர் கண்டறிகிறார் என்றால் அவர் படு கில்லாடிதானே..!
பூமியின் கோள வடிவமும், சுற்றளவும்..!
அன்று கோடைகாலத்தின் மிக நீண்ட பகல் தினம் (summer solstice). அப்போது சூரியன் வானில் தலைக்கு மேலே சரியாக பவனி வந்து, வெய்யிலை நம் மேல் கொட்டுகிறது. அன்றைய எகிப்தின் ஸ்வேனெட் (Swenet/Syene) நகரில், இன்று நாம் சொல்லும் கடக ரேகை என்பது அப்போது கிடையாது. ஏனெனில் அந்த அட்ச ரேகையை அன்று யாரும் வரையவில்லை. ஆனால் சூரியன் அப்போது கடக ரேகையின் மேல் இருந்தது. அதுவும் சரியாக சூரியன் தலைக்கு மேல் கொளுத்திக் கொண்டிருந்தது. அப்போது யாராவது குனிந்து ஒரு ஆழமான கிணற்றில் எட்டிப் பார்த்தால், அது அப்போது சூரியனின் பிரதிபலிப்பை மறைத்துவிடும், இந்தத் தகவலை யாரோ தெரிவித்திருந்தனர்.. ஆனால் அவரும்கூட இந்த உண்மையை ஒரு சோதனை மூலம் நிரூபிக்க முயற்சி செய்தார். அவரது சொந்த ஊரான சைநீனுக்குச் சென்றார். அலெக்சாண்டிரியாவில் சூரியனின் சாய்மானம் என்பது, அந்த வட்டத்தில் 50ல் ஒரு பங்கு என தீர்மானித்தார். இது ஒரு வட்டத்தில் 7.12 பாகை என்பதை எரடோஸ் தெரிவித்தார். அதே சமயம், பூமி ஒரு கோளவடிவம் என்று கிரேக்கர்கள் புரிந்து கொண்டனர். அதே கருத்தைத்தான் எரடோஸ்தனிஸும் கொண்டிருந்தார்.
அலெக்சாண்டிரியா சைனுக்கு (Syene) வடக்கே இருக்கிறது. எனவே, மெரிடியன் வளைவு (meridian arc) எனபது எவ்வளவு தூரம் எனபதை தூரத்துடன் இணைத்து கணக்கிட்டால், அந்த தூரம் என்பதுதான் புவியின் சுற்றளவு அறிய சரியான அளவுகோலாக அன்று எரஸ்டோஸ்தனிசுக்குப் பயன்பட்டது. ஏனெனில் சூரியனின் கதிர்கள் பூமி மீது இணை கோடுகளாகவே விழுகின்றன. அதன் சாய்மானம் அந்த இடத்தில் 50ல் ஒரு பங்கு என்றும், அதுதான் 1/50=7.2/360 பாகை என்ற கணக்கை படு துல்லியமாகப் போட்டார். அலெக்சாண்டிரியாவுக்கும், சைனீனுக்கும் இடையில் உள்ள தொலைவு என்ன என்று தெரிந்தால் இதற்கு விடை கண்டுபிடித்து விடலாம்.
அலெக்சாண்டிரியாவுக்கும், சைனீனுக்கும் இடையில் உள்ள தொலைவு அறிய சைனீனிலிருந்து அலெக்சாண்டிரியாவுக்கு சில வீரர்களை ஒட்டகத்தின் மீது ஏற்றி அனுப்பினார். இரு ஊர்களுக்கும் இடையிலுள்ள தூரத்தை அறிந்து கொள்ள அவர் எடுத்த ஒட்டக முயற்சிகள் மிகவும் சுவையானவை. அதனால்தான் அன்றைய எரடோஸ்தனிஸின் கணிப்பிலிருந்து பூமியின் சுற்றளவு கொஞ்சமும் தப்பவில்லை. அன்றைய எகிப்திய அலகான ஸ்டேடியன் (stadion) என் ற அலகில்தான் பூமியின் சுற்றளவைக் கணக்கிட்டார். அந்த அலகுப்படி, எரடோஸ்தனிஸ் கணக்கிட்ட புவியின் சுற்றளவு 250,000 ஸ்டேடியா (46,250 கி.மீ.). ஆனால் நிலநடுக்கோட்டில் பூமியின் சுற்றளவு 40,075 கி.மீ. ஸ்டேடியன் அலகில் உள்ள மாறுதகளைக் கணக்கில் கொண்டு, அன்றைக்கு அவர் கண்டுபிடித்த புவியின் சுற்றளவு 39, 690 கி.மீ.என்பதும் தெரிய வந்தது. அதாவது இன்றைய புவியின் சுற்றளவில் சுமார் 2% மட்டும் வித்தியாசம் இருந்தது. இதனை நாம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.
புவி மீது சோதனைகள்..!
எரடோஸ்தனிஸ் பூமியின் சுற்றளவு கண்டுபிடிக்கும் முயற்சி, ஒரே ஒரு சோதனையுடன் நிறைவு பெற்று விடவில்லை. அவரே. வேறு வேறு இடங்களுக்கு ஒட்டகத்தின் மேல் ஆட்களை அமரவைத்து அனுப்பி, அவைகளுக்கு இடையே உள்ள தூரம், சூரியக்கதிரின் சாய்மானம் போன்றவற்றைக்கொண்டு அந்த பகுதியிலும் புவியின் சுற்றளவு என்ன என்பது தெரிந்து கொண்டு, ஏற்கனவே கண்டுபிடித்திருந்த சுற்றளவுடன், மற்ற விடைகள் ஒத்துப் போனதால், முன்பு அலேக்சான்டிரிய-சைநினுக்கு இடையில் கண்டறிந்த பூமியின் சுற்றளவு சரியானதே என்ற முடிவுக்கு வந்தார். பூமியின் சுற்றளவை திரிகோணமிதி கணக்கியல் மூலமே கண்டறிந்தார். பூமியின் விட்டத்தையும் கூட, சுற்றளவு மூலம் கணக்கிட்டுத் தெரிவித்தார்.
புவியியலின் முதல் பதிவும் புத்தகமும்!
அந்த கால கட்டத்தில் எரடோஸ்தனிஸ் எழுதிய புவிவியல் புத்தகம் 3 பெரிய தொகுதிகளாக வெளிவந்தன. நீண்ட காலத்துக்கு அதுவே, புவியியலின் அசைக்க முடியாத ஆதாரமாக இருந்தது. எரடோஸ்தனிஸின் கண்டுபிடிப்பான பூமி சுற்றளவின் அளவு அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே ஒப்புக்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டது. அதாவது அடுத்த நூறாண்டுக்காலமும் எந்தவித அறிவியல் கண்டுபிடிப்புகளும் பூமியின் சுற்றளவு பற்றி நடக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அவருக்குப் பின் 150 ஆண்டுகள் கழித்து வந்த பாசிடோனியஸ் (Posidonius) பூமியின் சுற்றளவை அளக்க எரடோஸ்தனிஸின் செய்முறையையே பயன்படுத்தினார். இரு வேறு இடங்களின் மூலம் சுற்றளவு கணக்கைக் கணக்கிட்டு, முன்பு கணக்கிட்ட 252,000 என்ற ஸ்டேடிய எண்ணிக்கையே வந்தது.
எரடோதனிஸின் மற்ற கண்டுபிடிப்புகள்..!
எரடோஸ்தனிஸ் பூமியின் சுற்றளவு, விட்டம் கண்டுபிடித்ததுடன் அவரது கண்டுபிடிப்பின் தாகம் தணிந்துவிடவில்லை. அவரது கண்டுபிடிப்புகள் வானவியலிலுக்கும் கூட பெருமை சேர்க்கிறது. பூமியிலிருந்து சந்திரனும், சூரியனும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர் எரடோஸ்தனிஸ்தான். ஆனால் அவை பூமியின் சுற்றளவு போல் அவ்வளவு துல்லியமாக இல்லை. சூரியக் கதிரின் சாய்மானம், நிழலின் சாய்மானம் இவற்றை வைத்து பூமி சுழலும்போது 23.5 பாகை சாய்மானத்தில் சுழலுகிறது என்பதையும் கூட துல்லியமாகத் தீர்மானித்தார். மேலும் எரடோஸ்தனிஸ் அலெக்சாண்டிரியா நூலகத்தின் பொறுப்பாளாராகவும் இருந்தார். அதனாலும் மக்கள் எரடோஸ்தனிஸ் சொல்வதை ரொம்பவும் நம்பினார்கள். எக்கச்சக்கமான எரடோஸ்தனிஸின் வேலைகள், கண்டுபிடிப்புகள்.அனைத்தும் அலெக்சாண்டிரியா நூலகம் அழிந்த போது அழிந்துவிட்டன. அவரைப் பற்றி மற்ற நூலாசிரியர்கள் எழுதிய தகவல்களை வைத்தே இவையனைத்தும் எழுதப்பட்டுள்ளன.
ஹெர்மஸ் கவிதையும்..லீப் வருடமும்..!
எரடோஸ்தனிஸ்தான் முதன் முதல் பூமியின் உருவத்தை உத்தேசமாகக் கணித்து, அதன் வரைபடத்தை வரைந்து தந்தார். அதன் காலக் கணிப்பையும் பரிணாமக் காலத்தையும் கணக்கிட்டவர் இவர்தான். எரடோஸ்தனிஸுக்கு சரித்திரத்தின் மீது மீளாக் காதல் உண்டு. அதனால்தான் அவற்றை சுவைபட எழுதினார். வானில் வலம் வரும் விண்மீன் படலங்களுக்கும், கிரேக்க புராணங்களுடன் உறவு உண்டாக்கி, அவற்றிற்கிடையே உள்ள இணைப்பை அழகாக சித்தரித்தார். எரடோஸ்தனிஸ் இரவு வானின் விண்மீன்களைப் பட்டியலிட்டார். அன்றைக்கு அவற்றின் எண்ணிக்கை 675 உள்ளது என்றும் தெரிவித்தார். எரடோஸ்தனிஸ் ஹெர்ம்ஸ் Hermes, Erigone and Anterinys or Hesiod (apparently alternative titles)) என்ற அழகிய கவிதை ஒன்றைப் புனைந்தார். அதில் வானவியலின் அடித்தளம் பற்றி அழகாக, கோர்வையாக வடித்திருக்கிறார். அத்துடன், ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒரு முறை லீப் (Leap) வருடம் வருகிறது என்று பாட்டாக படித்தவரும் இவரே. அது மட்டுமின்றி அந்த சமயத்தில் நடைபெற்ற அரசியல் தகவல்களையும் , முக்கிய நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளார்.
அலெக்சாண்டிரியா நூலகம் & எரடோஸ்தனிஸின் எழுத்துக்கள் அழிவு!
எரடோஸ்தனிஸ் கணிதத்தில் விற்பன்னர். தனது 30 ஆவது வயதில், மூன்றாம் தாலமியால் மீண்டும் அலெக்சாண்டிரியாவுக்கு அழைக்கப்பட்டார். அதுவும் தாலமியின் மகனுக்கு கல்வி புகட்ட வந்த எரடோஸ்தனிசை தாலமி III அலெக்சாண்டிரியா நூலகத்தின் முதன்மை நூலகராக நியமித்தார். அந்த நூலகத்தில் எரடோஸ்தனிஸ் நிலவியலின் அறிவியல் முழுவதையும் பாப்பிரஸ் மற்றும் ஆட்டுத்தோலில் பதிவு செய்து வைத்திருந்தார். பின்னர் அலெக்சாண்டிரியா நூலகம் அழிக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான பாப்பிரஸ் பட்டைச் சுருள்களும், ஆட்டுத்தோல் சுருள் பதிவுகளும் அப்படியே அழிக்கப்பட்டன.
தனது காலத்தில் அரிஸ்ட்டாட்டில் மனித இனத்தை கிரேக்கர்கள் மற்றும் காட்டுமிராண்டிகள் என்று கூறு போட்டதையும் எதிர்த்தவர் எரடோஸ்தனிஸ்.
எரடோஸ்தனிஸின் எண்ணியல்..!
அந்தக்காலத்தின் எண்ணியல் (Number Theory), வடிவியல் (Geometry) மற்றும் எண் கணிதம் (Arithmetic) ஆகியவற்றில் சிறந்து விளங்கினார் எரடோஸ்தனிஸ். இதில் முதன்மை எண்களைக் (Prime Numbers) கண்டுபிடிக்கும் முறையை அறிமுகப் படுத்தியவர் எரடோஸ்தனிஸ்தான். அதனால்தான் அவைகளை நாம் எரடோஸ்தனிஸின் சல்லடை (‘Sieve of Eratosthenes’) என்றே அழைக்கிறோம். இதுவும் கூட நிகோமாக்கஸ் (writings of Nicomachus) என்ற அறிஞரின் எழுத்துக்கள் மூலமே தெரிய வந்துள்ளன.
எளிதான அல்காரிதம்!
சல்லடை/சீவ் என்ற சதுர வடிவ கணித சூத்திரம். படம் பார்க்க. இது ஒரு எளிதான அல்காரிதம் (simple algorithm). இது முதன்மை எண்கள் ஒரு குறிப்பிட்ட எண்கள் வரை செயல்பட முடிகிறது. மேலும் ஒரு கோடி வரை துல்லியமாய் அறிய முடிகிறது (The Sieve is a simple algorithm which works to identify all of the prime numbers up to a certain integer and is very accurate up to about 10 மில்லியன். Eratosthenes later erected a column at Alexandria with an epigram inscribed on it relating to his own mechanical solution to the cube problem.) இது 2, 3, 5, 7 போன்றவற்றின் இரட்டிப்பு பதின்மரை (Multiples) விட்டுவிட்டு செயல்படுகிறது. மீதமுள்ள எண்கள் முதன்மை எண்களாகும். இந்த எண் சல்லடை/சீவ் 18 ம் நூற்றாண்டின் லியோன்ஹார்ட் யூலர் (Leonhard Euler) வந்து தன் கருத்துக்களை சொல்லும் வரை நீடித்தது. அதுவே கணிதத் துறையை ஆட்சியும் செய்தது..
வடிவியலின் தந்தை எரடோஸ்தனிஸ்..!
எரடோஸ்தனிஸின் இன்னொரு முக்கிய புத்தகமும் அழிந்து போனது. அதன் பெயர் வழிகளிலே (On means ) -கணித வழிகள் என்பதாகும். இதுதான் வடிவியலின் இன்றியமையாத புத்தகங்களில் ஒன்றாகும். இதனைக் குறிப்பிட்டு, அதன் தகவல்களையும் தந்தவர் பாபஸ் ( Pappus) என்பவர். (another lost book written by Eratosthenes was On means. It is mentioned by Pappus as one of the great books of geometry.)
பூமி-சூரியன் தொலைவினைக் கண்டுபித்த எரடோஸ்..!
திரிகோணமிதியின் சூத்திரம் மற்றும் அப்போது கிடைத்த தகவல்களைக் கொண்டே பூமி-சூரியன் தொலைவினைக் கண்டறிந்தார். அப்போது இன்னொரு முக்கிய விஷயமும் அவருக்குக் கிடைத்தது. சூரியன் வெகு தொலைவில் உள்ளதால்தான் அதன் கதிர்கள் பூமியில் இணைகோடுகளாக (Parallel) வருகின்றன என்பதையும் அனுமானம் செய்தார். அது மட்டுமல்ல பூமி-சூரியனுக்கு இடையில் உள்ள தூரம் 149 மில்லியன் கி.மீ என்றும் தெரிவித்தார். இப்போது அறியப்படும் புவி-சூரிய தொலைவு 149 .5 மில்லியன் கி.மீ தான். அதாவது 1% மட்டுமே வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசம் ஒரு விஷயமே அல்ல. ஆனால் பூமியின் சாய்மானத்தை மிகத் துல்லியமாக 23.5 பாகை என்று கணக்கிட்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் என அவர் குறிப்பிட்ட 144,000 கி.மீ என்பது மட்டும் தவறாகி விட்டது. இது தற்போதைய தூரத்தை விட மூன்று மடங்கு அதிகம்.
பீட்டா எரடோஸ்தனிஸ்..!
எரடோஸ்தனிஸ் பல்துறை வித்தகராக இருந்தாலும் கூட எந்தத் துறையிலும் அவர் முதன்மையாய் இல்லாததால் அவரை இரண்டாம் நிலைக் குறியீடான பீட்டாவை வைத்து பீட்டா என்றே அழைக்கின்றனர். பீட்டா என்று குறியீட்டுப்பெயரில் இவரைக் கூறியவர் சுதா லெக்சிகான் (Suda Lexicon) மற்றும் அவரது சம காலத்தவருமே. ஆனால் முதன்மை அறிஞர்களை விட எரடோஸ்தனிஸ் மிக மிக முக்கியாமானவர். அவரது கண்டுபிடிப்புகளும், சூத்திரங்களும், கொள்கைகளும் இன்றும் மக்களால் பின்பற்றப்படுகின்றன.
எரடோசின் விமரிசனமும் பிளாட்டோவும்..!
எரடோஸ்தனிஸ் எழுதிய கணித விமர்சனம் மிகவும் முக்கியமானது. அதுவே, பிளாட்டோவின் தத்துவத்திற்கு அடித்தளம் என்றும் சொல்லப்படுகிறது. எரடோஸ்தனிஸின் எழுத்தில் எண்கணிதம் (arithmetic) மற்றும் வடிவியல் (geometry) போன்றவற்றிற்கு கணித அடிப்படை விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஏராளமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும், அதில் (கணிதத்தில்) இசையையும் இணைத்தே கூறியுள்ளார் எரடோஸ்தனிஸ். இவற்றை எல்லாம் நாம் ஸ்மியார்னா(Smyrna)வில் வாழ்ந்த தியோனின் பதிவுகள் மூலமே அறிகிறோம்.
கிரேக்க கணிதத்தில் வட்டத்தின் பரப்பு (squaring a circle), கனசதுரத்தின் இரட்டிப்பு (doubling a cube) மற்றும் ஒரு கோணத்தின் முப்பிரிவு (trisecting an angle) போன்ற மூன்று முக்கிய பிரச்சினைகள் இருந்தன. அதில் ஒன்றான கன சதுரத்தின் இரட்டிப்பு என்பதற்கான பிரச்சனையை எரடோஸ்தனிஸ் தீர்த்து வைத்தார் என்று தியோன்(Theon of Smyrna -Theon) மற்றும் ஈடோசியஸ்(Eutocius) தெரிவித்துள்ளனர்.
எரடோசின் முதுமையும் முடிவும்..!
எரடோஸ்தனிசுக்கு முதுமை எட்டியதும் பல வகைகளில் சங்கடப்பட்டார். முக்கியமாக 80 வயதாகும்போது அவருக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது. அதனால் மிகவும் மனம் நொந்த எரடோஸ்தனிஸ் கண்பார்வை போன பின் மனிதனுக்கு மதிப்பு மரியாதை இல்லை என்றும், அதனால் விரைவில் இறப்பது உசிதம் என்று எண்ணி பல நாட்கள் உண்ணா நோன்பிருந்து பின்னரே உயிர் நீத்தார். இதுதான் இவரது வாழ்வில் வேதனையான ஒரு நிகழ்வாகும். எரடோஸ்தனிசின் உயிர் இந்தப் புவியிலிருந்து பிரிந்த வருடம் கி.மு.192. தன் 84 வது வயதில் இந்த உலகைத் துறந்தார்.
எரடோஸ்தனிசுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சந்திரனில் உள்ள ஒரு பள்ளத்திற்கு எரடோஸ்தனிஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- பேரா.சோ.மோகனா (
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: புவி அறிவியல்
நம் பூமிப் பந்தை ஒரு வாயுப்போர்வை அலுங்காமல் குலுங்காமல் அப்படியே அலாக்காக, அற்புதமாக மூடி வைத்திருக்கிறது. அதுதான் வளிமண்டலம். வளிமண்டலம் என்பது பல்வேறு வாயுக்களின் கலவையே. இந்த வாயு மண்டலக் கலவையை, நம் புவியின் ஈர்ப்பு சக்திதான் வளிமண்டலம் எங்கும் விரிந்து பரந்து, பறந்து, பறந்து ஓடிப்போகாமல் இழுத்து பத்திரமாய் வைத்திருக்கிறது. இந்த வளிமண்டலம் இல்லாவிட்டால், இந்த உலகில் உயிரினங்களே வாழ முடியாது. நம் பூமி வெப்பத்தில் பொரிந்து போகாமல் பாதுகாப்பாக இருப்பதும் இந்த வளிமண்டலத்தால்தான். நமது தாயகமான சூரியனிடமிருந்து வரும் புறஊதாககதிர்களை வளிமண்டலம் உட்கிரகிக்கிறது; இதனால் வெப்பத்தை தன்னிடம் தக்க வைத்து, புவியின் மேற்பரப்பை மிதமாய், உயிரினங்கள் வாழும் தன்மையதாய் சூடாக்குகிறது. இதன் மூலம் வெப்ப நிலை உயர்வையும் இது கட்டுப்படுத்துகிறது. பகல் இரவு வெப்பநிலையும் சீராக்கப்படுகிறது.
வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களில் அதிகம் இருப்பது நைட்டிரஜன், ஆக்சிஜன், ஆர்கான் மற்றும் கரியுமில வாயு ஆகியவையே. மற்றவைகள் மிகக் குறைவாகவே உள்ளன. நைட்டிரஜன் 78 .4 %, ஆக்சிஜன் 20 .946 %; ஆர்கான் மற்றும் 0.934 %; கரியுமில வாயு 0..039 % இருக்கிறது. மற்ற வாயுக்கள் மிக மிகக் குறைந்த அளவே உள்ளன. நியான் 0.001818 %., ஹீலியம் 0.000524 %; மீத்தேன் .0000179 %; கிரிப்டான் 0.000114 %; ஹைடிரஜன் 0.000055 %; நைட்ரஸ் ஆக்சைடு 0.00003 %;. கார்பன் மோனோ ஆக்ஸைடு 0.00001 %; சினோன் 0.000009 %; ஓசோன் 0.000007 % 0.௦ to 0.07 ppmv (0 to 7x10 -6 %); நைட்டிரஜன் ஆக்சைடு 0.000002 %; ஐயோடின் 0.000001 %; மிகக் குறைந்த அளவு அம்மோனியா மற்றும் நீராவி..குறைவாகவே உள்ளது.
ஓசோன் அடுக்கு என்பது வளிமண்டலத்தின் அடுக்குகோளத்தைச் (Stratosphere) சுற்றி போர்த்தப்பட்டுள்ள ஒரு போர்வையாகும். இது பூமிலிருந்து சுமார் 15 கி.மீ உயரத்திலிருந்து, 15-30 கி.மீ தூரம் வரை (சுமார் 20 கி.மீ கனத்தில்) பரவி இருக்கிறது. இந்த ௨௦ கி.மீ உயரம் பரவி உள்ள ஓசோனை அப்படியே அமுக்கி அடைத்தால் அதன் கனம் சுமார் 3 மீ.மீ அளவுதான் இருக்கும். ஆனால் இதன் கனம்என்பது பருவ நிலைக்கு ஏற்பவும், பூமியின் மேற்பரப்பில் துருவ மற்றும் நிலநடுக்கூட்டிலும் அளவு வேறுபடுகிறது. இந்த ஓசோன் தான் சூரியனிடமிருந்து வரும், உயிரிகளுக்கு கேடு விளைவிக்கும் புறஊதாக்கதிர்களை சுமார் 97%-99% வடிகட்டி விடுகிறது. எனவே நாம் அதன் தாக்குதலிருந்து தப்பித்து நிம்மதியாய் இருக்கிறோம்.
பொதுவாக பூமியிலிருந்து மேலே செல்லச் செல்ல, காற்றின் அழுத்தமும், அடர்வும் குறைந்து கொண்டே வரும். ஆனால் வெப்பம் அப்படி இல்லை. பல இடங்களில் பல உயரத்தில் வெப்ப மாறுபாடு ஏராளமாக உள்ளது. பூமியின் வளிமண்டலம் வரிசையாக 5 அடுக்குகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. பூமிக்கு அருகில் இருக்கும் அடுக்கு கனமாகவும், அதிக உயரத்தில் இருக்கும் அடுக்கு மிக மெலிதாகவும் இருக்கிறது. மேலே உள்ள அடுக்கு மட்டும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வான்வெளியுடன் இரண்டறக் கலந்துவிடுகிறது. பூமியின் முதல் அடுக்கான அடிவளி மண்டலம் (Troposphere) தரைக்கு மேலே, சுமார் 19 கி.மீ உயரம் வரை பரவி உள்ளது. ஆனால் இது துருவத்தில் இதன் கனம் 9 கி.மீ ஆகவும், நில நடுக்கோட்டுப் பகுதியில் 17-19 கி.மீ உயரம் உள்ளதாகவும் உள்ளது. இந்த பகுதியில்தான் நமது சீதோஷ்ணநிலை மாறுபாடுகள் காணப்படுகின்றன. பூமியின் தரையை ஒட்டிய பகுதிகள் வெப்பமாகவும், உயரே செல்ல, செல்ல வெப்பம் குறைவாகவும் உள்ளது.
இதற்கு அடுத்த இரண்டாவது அடுக்கு மீவளி/அடுக்கு மண்டலம்(Stratosphere). இதற்கும் அடிவளி மண்டலத்திற்கும் இடையில் ட்ரோபோபாஸ்/ சேணிடை/சிற்றிடை அடுக்கு உள்ளது(Trophopause). இது ட்ரோபாபாஸிலிருந்து சுமார் 51 கி.மீ உயரம் வரை நீண்டிருக்கிறது. பெரும்பாலான விமானங்கள் பறப்பது இந்த பகுதியில்தான். ஆனால் இங்கே.. உயரே செல்லச் செல்ல வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகும். ஏனெனில், இதன் அடிப்பகுதியில் உள்ள ஓசோன் அடுக்கு வெப்பத்தை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது. ட்ரோபோபாஸின் அருகில் வெப்பம் -60 டிகிரியாக இருக்கும். ஆனால் மீவளி மண்டலத்தின் மேல் பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதற்கு மேலே, மீவளி பாஸ்(Stratopause) உள்ளது. இது மூன்றாம் அடுக்கான இடை/நடு மண்டலம் (Mesosphere) 51 -55 கி.மீ வரை பரவி கிடக்கிறது. இங்கே காற்றின் அழுத்தம் கடல் மட்டத்திலிருந்து 1 /1000 மடங்காகும். இங்கேதான் விண்கற்களும், பாறைத் துண்டுகளும் எரிகின்றன.
அடுத்த 4 வது அடுக்கு வெப்பமண்டலம்(Thermosphere). இங்கே வெப்பம் 1,000 டிகிரி வரை இருக்கும். இது 100 -650 கி.மீ உய்ரம் வரை பரவி இருக்கிறது. வானின் அரோரா ஒளி உருவாவதும், விண்வெளி ஓடங்கள் பறப்பதும் இப்பகுதியில்தான். சர்வதேச விண்வெளி நிலையங்கள் இங்கேதான், 320 -380 கி.மீ உயரத்தில் இருக்கின்றன. 5வது அடுக்கான வெளிமண்டலம் (Exosphere) உள்ளது. இது 650 -10,000,௦௦௦ கி.மீ வரை இருக்கிறது. இதுதான் பூமியின் வளி மண்டலத்தின் கடைசிப்பகுதி. இதற்குப் பின் இப்பகுதி வான்வெளியுடன் இரண்டறக்கலந்து விடுகிறது. இங்கே ஹீலியமும், ஹைடிரஜனும் காணப்படுகிறது. ஆனால் இப்பகுதி மிக மிக மெலிதாக உள்ளது.
ஓசோன் (Ozone) என்பது மூன்று ஆக்சிஜன் அணுக்களின் இணைப்பு. இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்தது நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயு. இது நிலையானது. ஆனால் ஓசோன் வாயுவின் இணைப்பு நிலையற்றது. உலகம் உருவானபோது ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் தாவரங்கள் உருவான பின்புதான் உருவானது. அப்போது 1,500,000,௦௦௦000 ஆண்டுகளுக்கு முன் இருந்த உயிரிகள் ஆக்சிஜனின்றி, ஹைடிரஜனை வெளியேற்றி உயிர் வாழ்ந்தன. உலகம் முழுவதும் குளோரோபில் உள்ள சயனோ பாக்டீரியா என்ற ஆல்கா (240 கோடி ஆண்டுகளுக்கு முன்)பரவலாகி, ஒளிச் சேர்க்கையின் உபரிப்பொருளாக ஆக்சிஜனை வெளிவிட்டது. அதனால் வளிமண்டலத்தின் ஆக்சிஜன் அளவும் பெருகியது. ஒரு கால கட்டத்தில் புவியில் தாவரங்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. சயனோ பாக்டீரியா ஆக்சிஜன் வாயுவை உருவாக்கவில்லை என்றால், மீவளி மண்டலத்தின் ஓசோன் அடுக்கு உண்டாகியே இருக்காது.
ஓசோன் வாயு இருபக்கமும் பதப்படுத்தப்பட்ட கூரான கத்திக்கு இணையானது. ஓசோன் பூமிக்கு அருகில் இருக்கும்போது, அதனை நாம் சுவாசித்தால் நமக்கு தீங்கு விளைவிக்கும். அரித்துவிடும். ஆனால் இது மீவளி மண்டலத்தின் அடிப்பகுதியில் அடர்வாக இருக்கும்போது, இது சூரியனிடமிருந்து வரும் உயிரிகளுக்கு கெடுதல் செய்யும் புறஊதாக் கதிர்களை வடிகட்டி விடுகிறது. வளிமண்டலத்தில் ஓசோன் இல்லை என்றால் புறஊதாக்கதிர்களிடம் இருந்து நம்மைக் காக்க ஓர் சிறப்பு உடையை/காப்புக் கவசத்தை நாம் அணிய வேண்டியிருக்கும். ஏனெனில் புறஊதாக் கதிர்கள் நம்மைத் தாக்கி தோல் புற்று நோயையும், கண் நோய்களையும் உண்டாக்கி, நம்மை சிதைத்து விடும்.
வளிமண்டலத்திலுள்ள ஓசோன் அடுக்கில் 90 % இயற்கையானது. நமக்கு நன்மை விளைவிப்பதுதும் கூட. ஆனால் மீதியுள்ள 10% கெடுதி விளைவிக்கும் ஓசோன். இது சிற்றுந்து, பேருந்து மூலம் வெளியாகும் புகையிலிருந்து உருவாவதாகும். ஒளிவேதியியல் இயந்திர இயக்கத்தின் (photo chemistry mechanics mechanism) மூலம் ஓசோன் அடுக்கு உருவாகும் வித்தையை பிரிட்டிஷ் இயற்பியலாளர் சிட்னி சாப்மீன் 1930களில் கண்டுபிடித்தார். மீவளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் வாயுவிலுள்ள ஆக்சிஜன் அணுக்களில் புறஊதாக்கதிர்கள் தாக்கி, தனித் தனி ஆக்சிஜன் அணுக்களாக உடைக்கிறது. உடைக்க முடியாத ஆக்சிஜன் வாயுவுடன் ஒற்றை ஆக்சிஜன் அணு இணைந்து, அங்கு மூன்று ஆக்சிஜன் அணுக்கள் உள்ள ஓசோனாக உருவாகிறது. புறஊதாக்கதிர் மீண்டும் மீண்டும் ஓசோனைத் தாக்கி இதனை, ஆக்சிஜன் வாயுவாகவும், ஆக்சிஜன் அணுக்களாகவும் மாற்றி விடுகிறது. பின்னர் இவை நிறைய சேர்ந்த பின் இதுவே ஓசோன் அடுக்காகிறது. இது ஒரு தொடர் வினையாக நிகழ்ந்து, ஓசோன்-ஆக்சிஜன் சுழற்சி(Ozone-oxygen cycle) நடக்கிறது.
ஓசோன் சுவிஸ் வேதியலாளர் கிறிஸ்டியன் பிரட்ரிச் ச்கொன்பெயின் என்பவர்தான் ஓசோன் இருப்பதைக் கண்டுபிடித்தார். காற்றிலுள்ள 10,௦௦௦000 மூலக்கூறுகளுக்கு 10 அல்லது அதற்கும் குறைவான ஓசோன் மூலக்கூறுகள் எனற அளவிலேயே உள்ளன. 1980களில் ஓசோன் அடுக்கில் உலகின் வடபகுதியான அண்டார்டிக்காவில், வசந்தகாலத்தில் (Spring season) ஒரு ஓட்டை இருந்தது கண்டறியப்பட்டது. ஓட்டை என்றால் ஓசோனில் யாரும் ஊசியை எடுத்து குத்தி ஓட்டை போடவில்லை. ஓசோனில் ஏற்பட்ட இந்த ஓட்டையானது மனிதர்களாலும், மனித செயல்பாடுகளால் வெளிப்படும் குளோரோபுளூரோ கார்பன்களாலும் (Chloroflurocarbons) தான் ஓசோன் அடுக்கில் ஓட்டை உண்டாகி இருக்கிறது என்று அறிவியல் அறிஞர்களால் அறியப்பட்டுள்ளது. பொதுவாக ஓசோன் அடுக்கு, கட்டுறா அயனிகளால் தான் பாதிக்கப்படுகிறது. நைட்டிரிக் ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, ஹைடிராக்சைல், குளோரின் மற்றும் புரோமின் போன்றவைதான் இந்த உடைப்புப் பணியைச் செய்கின்றன.
அண்டார்டிக்கில் உள்ள ஓசோன் ஓட்டையை 1985ல் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளாலான ஜோசப் பார்மான், பிரியன் கார்டினர் மற்றும் ஜோனாதன் ஷான்க்ளின் போன்றோர் அண்டார்க்டிக் பகுதி கணக்கெடுப்பின்போது கண்டறிந்தனர். அந்த பகுதியிலுள்ள ஓசோன் அடுக்கில் ஓசோனின் அளவு குறைந்திருந்ததே, அதன் கனம் மெலிதானதாய் இருந்ததே ஓசோனில் ஓட்டை என்று சொல்லப்படுகிறது. ஓசோனின் ஓட்டை என்பது பத்தாண்டுகளுக்கு 4% என்ற அளவில் சீராகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வர வர ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓட்டையின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த ஆண்டு வசந்தத்தின்போது ஓசோன் ஓட்டையின் அளவு ஆகஸ்ட் 2011ல் 40 % இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மனிதனால் வெளியிடப்படும் ஓசோன் பாதிப்பு பொருள்கள், சக்தி மிக்க பசுமையகப் பொருட்களாக (potent greenhouse gases) செயல்படுகின்றன. அவற்றில் சில பொருள்கள் கரியுமில வாயுவைவிட 1,400 மடங்கு வீரியம் மிக்கவை. எனவே இவையும் சீதோஷ்ண நிலை மாற்றத்திற்கும், வெப்ப மயமாதலுக்கும் மிகவும் துணை போகின்றன.
உலக ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஓசோன் அடுக்கின் முக்கியத்துவத்தை எண்ணி, அதனைப் பாதுகாக்க ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தனர். அதுதான் செப்டம்பர் 16. அதனை உலக ஓசோன் தினமாக அறிவித்துள்ளனர். 1987ல் உலகின் 24 நாடுகள் மாண்ட்ரியலில் ஒன்றிணைந்து இனிமேலுக்காவது ஓசோனை பாதுகாக்க வேண்டும் என்ற முடிவெடுத்து அனைத்து நாடுகளும் கையெழுத்து போட்டன. இந்த தினம் என்பது மாண்ட்ரியல் புரோட்டோகாலில், ஓசோன் அடுக்கில் ஓசோன் அளவு குறைவது தொடர்பாய் 1987 ல் கையெழுத்திட்ட தினம்தான்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1994 லிலிருந்து செப்டம்பர் 16 ஐ உலக ஓசோன் தினமாக அறிவித்து அனுசரிக்க அழைப்பு விடுத்தது. அனைத்து நாடுகளும் ஓசோன் பாதுகாப்புக்காக ஒன்றிணைய வேண்டும் என்பதே இதன் குறிக்கோள். ஓசோன் படலம் என்பது பூமியின் சூரிய தடுப்புத் திரைதான் ..! இதனைப் பாதுகாத்தால் தான், உயிர்களின் நீடித்த வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும். இதற்காக, மூன்று Pக்களை முன் வைக்கின்றனர்.
1. Planet : புவிக்கோள்.. பெரும்பாலான தாவரங்கள் புறஊதாக்கதிர் களிடமிருந்து இயற்கையிலேயே தங்களைப் பாதுகாக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. ஆனால் எப்போதும் அல்ல. எந்த பாதுகாப்பு கவசம் இல்லாத கடல், ஏரிகளில் புற ஊதாக்கதிர்கள் ஊடுருவிச் சென்று, குறைந்த ஆழத்தில் வாழும் மீன்கள் மற்றும் மிதவை உயிரிகளைப் பாதிக்கின்றன.
2. People மக்கள்: அளவுக்கு அதிகமாக வெய்யிலில் இருப்பதனால், சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் சூரிய எரிப்பு காயம் உண்டாக்குகிறது; கண் பார்வையை பாதிக்கிறது. சூரிய ஒளியில் இருப்பது நீண்ட காலம் தொடர்ந்தால், தோல் புற்று நோய் வருகிறது. மேலும் புற ஊதாக்கதிர் தற்காப்புத் திறனுக்கும் தடை போடுகிறதாம்.
3. Prosperity வளங்கள்: ஓசோன் அடுக்கின் கணம் குறைவதால், மக்களுக்கும் புவிக்கும் பாதிப்பு உண்டு பண்ணும்போது, அதன் தொடர் நடவடிக்கையாக ஏராளமான பொருளாதார இழப்பும் அதன் சங்கிலித் தொடர் நிகழ்வுகளும் உண்டாகின்றன.
மக்களுக்கு ஓசோன் படலத்தை பாதுகாக்கும் உணர்வை உண்டுபண்ண வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
1. உலகில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் ஓசோனை பாதிக்கும் பொருட்களை தவிர்பதையும், ஓசோன் பாதுகாப்பு நடக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
2. ஓசோனைப்பாதுகாக்க எளிய நடைமுறைகளைக் கைக்கொண்டால் போதுமானது.
3. இது தொடர்பான விழிப்புணர்வையும், தாக்கத்தையும் மக்கள் மனதில் உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம்.
4. சூழல் தொடர்பான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
5. சூழல் நட்பற்ற பொருட்களைத் தவிக்க வேண்டும்.
6. எத்தனை நீண்ட பயணமும் கூட, முதல் அடி வைப்பதில்தான் துவங்குகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, நாம் செய்யும் சின்ன, சின்ன விஷயங்கள் கூட, சூழலைப் பாதுகாப்பதாகவும், ஓசோனைக் காப்பதாகவும் இருக்க வேண்டும்.
7. காற்றுக் குமிழிகளை உடைக்கும் தெளிப்பான்களை (Sprayers ) தவிர்க்கவேண்டும்.
8. குளோரோ புளூரோ கார்பன்(CFC) வெளியேற்றும் குளிர்சாதனப்பெட்டியின் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும்.
9. ஹாலோஜென் வாயு உள்ள தீயணைப்பானுக்குப் பதிலாக வேறு பொருள் உள்ளதைப் பயன்படுத்த வேண்டும்.
10. சபிக் காபுரையிட்ட பொருட்களை தவிர்க்க வேண்டும்.
11. குளிர் சாதன அறையை நன்றாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் அதன் மூலம் வெளிவிடும் நிறைய CFC வளிமண்டலத்திற்குள் நுழையும்.
12. சிற்றுந்தின் உறைபனிப் பெட்டியையும், குளிர் சாதனத்தையும் சரியாகப் பராமார்க்க வேண்டும். அவை சரியாக இயங்காவிட்டாலும் CFC வெளியேறி ஓசோன் படலத்தை தாக்கும்.
13. புதிதாக குளிர் சாதனப் பெட்டி வாங்குவோர், CFC இல்லாத பெட்டியாகப் பார்த்து வாங்கவேண்டும்.
14. புரோமோமீதேன்(bromomethane ) உள்ள பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது.
15. காற்று மாசுபாடு பொருள்களையும் தவிர்க்கவும்.
16. சிற்றுந்து, கம்ப்பிரஷர்(compressors) மற்றும் குளிர் சாதனப் பெட்டி பயன்படுத்துவதைக் குறைக்கவும்.
17. இதற்கு மாற்றாக பேருந்து, மிதிவண்டி மற்றும் நடைப் பயணத்தை மேற்கொள்ளவும்.
18. ஆற்றல் குறைவாக உள்ள மின் பல்புகளைப் பயன்படுத்தவும். இதனால் மாசுபாடு குறையும்.
19. ஓசோன் அடுக்கின் ஓட்டையைக் குறைப்பது/ நிறுத்துவது என்பது, அதனைப் பாதிக்கும் பொருட்களைத தவிர்ப்பது மட்டும்தான், ஓசோன் படலம் பாதுகாப்புப் பணி மற்றும் உதவி செய்ய முடியும்.
20. மாணவர்கள், தன்னார்வலர்கள், சூழலியலாளர்கள், சமூக விழிப்புணர்வு கொண்டவர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் என உலகத்தின் மீதும், உயிரினங்கள் மீதும், சூழல் மீதும் அக்கறை கொண்ட அனைவரும் இதனை கடைப்பிடிக்க வேண்டும்: இதனை மக்களிடம் பரப்ப வேண்டும்.
- பேரா.சோ.மோகனா (
- விவரங்கள்
- இரா.சிவசந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
வன்னிப்பிரதேச குடித்தொகை வளர்ச்சியும் குடித்தொகைப் பண்புகளும். 1871 - 1981
இலங்கையின் வன்னிப்பிரதேசம் 7859.3 சதுரக் கிலோமீற்றர் (2924 சதுரமைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடும் தீவுகளும் தவிர்ந்த வடமாகாணப்பகுதியே வன்னிப் பிரதேசமென வழங்கப்படும். இதற்குத் தெற்கேயும் கிழக்கேயும் உள்ள சில பகுதிகள் வன்னிப் பிரதேசத்தினுள் அடங்குவனவெனக் கொள்ளப்படுகின்ற போதிலும் இக்கட்டுரை மேற்படி பிரதேசத்தையே வன்னிப் பிரதேசமெனக் கொள்கிறது. இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 11 வீதத்தையும் வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 87.2 வீதத்தையும் கொண்டுள்ளது. மன்னார் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், என்பன இதனுள் அடங்கும். இவை நிர்வாக வசதிக்காக பதினைந்து உதவி அரசாங்கஅதிபர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மன்னாரில் நான்கும், முல்லைத்தீவில் நான்கும், வவுனியாவில் நான்கும், கிளிநொச்சியில் மூன்றுமாக அமைந்துள்ளது.
குடித்தொகை வளர்ச்சி 1871 முதல் 1981 வரை
இலங்கையின் முதலாவது ஒழுங்கமைக்கப்பட்ட நாடு முழுவதற்குமான குடித்தொகைக் கணிப்பு 1871-இல் இடம்பெற்றது. இதன்பின் 1881, 1891, 1901, 1911, 1921, 1931, 1946, 1953, 1963, 1971, 1981 ஆகிய ஆண்டுகளில் குடித்தொகைக் கணிப்புகள் இடம்பெற்றன. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறவேண்டிய இக்கணிப்புகள் 1941இல் தடைப்பட்டமைக்கு இரண்டாம் உலக மகாயுத்த நெருக்கடி காரணமாக அமைந்தது. எனினும் இக்கணிப்பீடு 1946இல் இடம்பெற்றது. 1951இல் இடம்பெறவேண்டிய கணிப்பு 1953இல் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1963இல் அடுத்த கணிப்பு இடம்பெற்றது. இதன்பின் இலங்கை தமது வழக்கமான கணிப்பாண்டிற்கு 1971இல் திரும்பியுள்ளது. 1991, 2001 இல் இடம்பெற வேண்டிய குடித்தொகைக் கணிப்பு வன்னிப் பிரதேசத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெறவில்லை. 2011 ஆம் ஆண்டு தேசியக் குடித்தொகைக் கணிப்பீட்டுடன் கணிப்பிடுவதற்கான ஆரம்பப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வன்னிப் பிரதேசக் குடித்தொகை 1981 முதல் மூன்று தசாப்தங்களாக யுத்த சூழ்நிலையால் உள்ளுர் குடிநகர்வுகள், வெளியூர் குடிநகர்வுகள், வெளிநாட்டு குடிப்பெயர்வுகள் என இடம்பெற்று வந்துள்ளன. இவை எவையும் கால ரீதியான முறையான கணிப்பீடுகளுக்குள் வரவில்லை. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற வன்னியின் இறுதி யுத்தத்தின் போது வன்னியின் மொத்தக் குடித்தொகையும் அகதிகளாக வெளியேறி வவுனியா முகாம்களில் முடக்கப்பட்ட நிலை தோன்றிற்று. உலக வரலாற்றில் குறுங்காலப்பகுதியில் குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து முழுமையாக குடித்தொகை வெளியேற்றப்பட்ட நிகழ்வு இங்கேயே இடம்பெற்றுள்ளதெனலாம். அம் மக்கள் இப்பொழுது தான் மீளவும் குடியேறி வருகின்றனர். மீள் குடியேற்றம் முற்றுப்பெறவில்லை. 2011 பெறப்படவுள்ள உத்தியோகபூர்வ குடித்தொகை கணிப்பீட்டின் ஊடாகவே இவைபற்றி முறையாக ஆராயமுடியும். அதுவரை 1981 ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட குடித்தொகைக் கணிப்பீடுகளையே உத்தியோக ரீதியாக பயன்படுத்தப்பட வேண்டுமாகையால் அவ் ஆண்டுவரையான தரவுகள் ஊடாகவே இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
வன்னிப் பிரதேசத்திற்குரிய குடித்தொகை விபரங்களை 1871 தொடக்கம் 1981 வரை இலங்கைக் குடித்தொகைக் கணிப்பு அறிக்கைகளிலிருந்து பெற முடிகின்றது. தரவுகளின்படி வன்னிப்பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகை 1891 இ 46,774 ஆக இருந்து 1971இல் 2,24,735 ஆக அதிகரித்துள்ளதைக் காணலாம். இது 300 வீத அதிகரிப்பாகும். இதே காலப்பகுதியில் இலங்கையின் மொத்தக்குடித்தொகை 323 வீதமாக வளர்ச்சி கண்டது. வன்னிப் பிரதேசத்தை பாகுபடுத்தி நோக்கும்போது 1891இல் யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியில் 6916ஆக இருந்த குடித்தொகை 1981 இல் 77200 ஆக அதிகரித்துள்ளது. இது 648 வீத அதிகரிப்பாகும். இதே காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தின் அதிகரிப்பு 570 வீதமாகவும் மன்னார் மாவட்டத்தின் அதிகரிப்பு 203 வீதமாகவும் அமைந்துள்ளது.
குடித்தொகை மாற்றங்கள்
வன்னிப் பிரதேசத்தின் குடித்தொகை சில காலங்களில் குறைவாகவும் இன்றும் சில காலங்களில் அதிகமாகவும் வளர்ச்சி கண்டது. பொதுவாக 1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் குடித்தொகை வளர்ச்சி குறைவாகவே இருந்தது. வன்னிப்பிரதேசத்தின் வருடச்சராசரி வளர்ச்சி வீதம் 1931 ஆம் ஆண்டுவரை 0.5 வீதத்திற்கு மேலாக அதிகரிக்கவில்லை. 1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் சில குடிமதிப்பீட்டாண்டிடைக் காலங்களில் வன்னிப் பிரதேசம் முழுவதும் குடித்தொகை இழப்பு ஏற்பட்டது. மன்னார் மாவட்டத்தில் இவ் இழப்பு அதிகளவு ஏற்பட்டுள்ளது. 1881 - 1901 இடையிலும் 1911 – 1921 இடையிலும் குடித்தொகை இழப்புகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற குடித்தொகை இழப்புகளுக்கும், குடித்தொகையின் மெதுவான அதிகரிப்பிற்கும் மலேரியா, கலரா போன்ற தொற்று நோய்கள் இப்பகுதிகளில் அக்காலங்களில் பரவியமையே காரணமாகும். அக்காலங்களில் மருத்துவ, விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றக்குறைவினால் சிசு மரண வீதம், பிரசவத்தாய்மார் மரணவீதம் என்பன அதிகமாக காணப்பட்டன. மேலும் அன்றைய மக்கள், கல்வியறிவுக் குறைவின் காரணமாகச் சுகாதாரமற்ற வாழ்வு வாழ்ந்தனர். ஆரோக்கிய வாழ்வை வழங்கக்கூடிய சுகாதார நிறுவனங்களும் குறைவாகவே காணப்பட்டன. இக்காரணங்களால் 1946 இன் முன்பு இறப்புவீதம் அதிகமாக இருந்தது. எடுத்துக்காட்டாக 1906-1923 வரை தேசிய இறப்புவீதம் 1000 பேருக்கு 30 – 38 என்றவாறு உயர்ந்து காணப்பட்டது. 1946இல் இது 20 ஆகவும் 1947 இல்14 ஆகவும் வீழ்ச்சிகண்டது. 1946 இல் சிசு மரண வீதம் 1000 பிறப்புக்கு 141 ஆக இருந்தது. 1947 இல் 82 ஆக வீழ்ந்தது. பிரசவத்தாய்மார் மரணம் 1946 இல் 1000 பேருக்கு 16 ஆக இருந்தது. 1950 இல் 6 ஆக வீழ்ச்சி கண்டது. எனவே 1946 ஆம் ஆண்டு குடித்தொகை வளர்ச்சிப் போக்கில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
வன்னிப் பிரதேசக் குடித்தொகை 1946 – 1953 குடிமதிப்பிட்டாண்டிடைக் காலத்திலே 48.7 வீதமாக அதிகரித்துள்ளது. இது 7.0 வருடச் சராசரி வளர்ச்சி வீதமாகும். இவ்இடைக்காலத்திலே தேசிய வருடச்சராசரிக் குடித்தொகை வளர்ச்சி வீதம் 3.1 ஆக மாத்திரமே காணப்பட்டது. 1946 – 1953 இடைப்பட்ட கால குடித்தொகை வளர்ச்சியானது வன்னிப் பிரதேசம் முழுவதும் சடுதியானதோர் அதிகரிப்பபைக் காட்டுகின்றது. யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியில் 78.3 வீத அதிகரிப்பும், வவுனியா மாவட்டத்தில் 51 வீதமான வளர்ச்சியும் மன்னார் மாவட்டத்தில் 39 வீத வளர்ச்சியும் 1946 – 1953 குடிமதிப்பீட்டாண்டைக் காலத்தே ஏற்பட்டது. 1931 1946 குடிமதிப்பீட்டாண்டைக் கால வளர்ச்சி ஓரளவு அதிகமாக காணப்படுவதற்கு பத்தாண்டுக்கொருமுறை எடுக்கப்படவேண்டிய குடிமதிப்பு இக்காலத்தே பதினைந்து வருட இடைவெளியில் எடுக்கப்பட்டதே காரணமாகும்.
1946 இன் பின்னர் ஏற்பட்ட சடுதியான குடியதிகரிப்புக்கு பிறப்பு வீதம் நிலையாக இருக்க இறப்புவீதத்திலேற்பட்ட வீழ்ச்சியே காரணமாகும். இவ் இறப்பு வீத வீழ்ச்சிக்கு 1946 இல் மலேரியா நோய்த்தடைக்காக நாடு முழுமைக்கும் டி.டி.ரி மருந்து தெளிக்கும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதே உடனடிக் காரணமாகும். இதனைத் தவிர நாட்டின் சுகாதார சேவையில் ஏற்பட்ட துரித அபிவிருத்தியும் காரணமாக அமைந்தது. இக்காலத்திலே கிராமங்கள் தோறும் சுகாhதாரவசதிகள் அதிகரிக்கப்பட்டன. சுற்றுப்புறச் சூழ்நிலைகளைச் சுத்தமாக வைத்திருக்கச் செய்வதில் அரசு கவனம் செலுத்தியது. பாடசாலைப் பிள்ளைகளுக்கு இலவச பால், மதிய உணவு விநயோகம் என்பன குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க துணைபுரிந்தன.
பொதுவாக இலங்கை மக்களது ஆரோக்கியம் பேணப்பட்டதற்கு உணவு மானிய முறை இக்காலத்திலே அறிமுகப்படுத்தப்பட்டமையும் முக்கிய காரணமாகும். இம் முறையினால் மக்கள் அரிசியையும் ஏனைய உணவுப்பொருட்களையும் மலிவாகப் பெறமுடிந்தது. இதனால் மக்களது உணவில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கவே ஆயுட்காலம் அதிகரித்ததோடு ஆரோக்கியமான வாழ்வால் இறப்பு வீதத்திலும் அதிகளவு வீழ்ச்சி ஏற்பட்டது. இக் காலத்திலே இலவசக்கல்விமுறை அறிமுகத்தால் கல்வியறிவு வளர்ந்தமையும், தொற்றுநோய்த்தடை மருந்துகள் பழக்கத்திற்கு வந்தமையும் இறப்புவீத வீழ்ச்சிக்குரிய மேலும் சில காரணங்களாகும். வன்னிப் பிரதேசம் குடித்தொகை 1946 இன் பின்னர் வேகமாக அதிகரித்தமைக்கு இயற்கை அதிகரிப்பு மாத்திரம் காரணமன்று, பெருமளவு இடம்பெற்ற குடிநகர்வும் முக்கிய காரணமாக அமைகின்றது. இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து 1950 ஆம் 1960 ஆம் ஆண்டுகளில் வன்னிப் பிரதேசத்தில் பழைய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்து திட்டமிட்ட குடியேற்றங்கள் பெருமளவு ஏற்படுத்தப்பட்டன.
யாழ்ப்பாணக் குடாநாடு அதனைச் சேர்ந்த தீவுகள் என்பவற்றிலிருந்தும் ஏனைய அண்மைய பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து குடியேற்றத்திட்டங்களில் குடியேறினர். இதனாலும் குடித்தொகை அதிகரிப்பு ஏற்பட்டது. 1953-1963 குடிமதிப்பீட்டாண்டிடைக் காலத்திலே வன்னிப்பிரதேசக் குடித்தொகையின் வளர்ச்சி 72.4 வீதமாக அதிகரித்திமைக்கு இதுவே முக்கிய காரணமாகும். யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியிலும், வவுனியா மாவட்டத்திலும் அதிகளவு குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்பட்டமையால் இப்பகுதிகளின் குடிவளர்ச்சி 1953-1963 குடிமதிப்பீட்டாண்டிடைக் காலத்திலே முறையே 117.1 வீதமாகவும் 95.4 வீதமாகவும் காணப்படுகின்றது. 1963-1971 இடைப்பட்ட காலத்திலே குடியதிகரிப்பில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகின்றது. குடும்பக்கட்டுப்பாட்டுத்திட்டத்தால் இயற்கை அதிகரிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இக்காலத்திலே அதிகளவு குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படாமையும் இதற்கான காரணங்களெனலாம். எனினும் இவ் இடைக்காலத்திலே தேசிய குடித்தொகையின் வருடச் சராசரி வளர்ச்சி வீதம் 2.2 ஆகக் காணப்பட, வன்னிப் பிரதேசத்தின் குடித்தொகையின் வருடச்சராசரி வளர்ச்சி 4.7 ஆகக் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
குடியடர்த்தியும் பரம்பலும்
வன்னிப் பிரதேசத்தின் 1971 ஆம் ஆண்டுக்குரிய சராசரிக்குடியடர்த்தி சதுரமைலுக்கு 77 பேராகும். இலங்கையின் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியான 508 பேருடன் யாழ்ப்பாணக்குடாநாட்டின் குடியடர்த்தியான 1513 பேருடனும் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். வன்னிப்பிரதேசத்தின் பெருமளவு பரப்பில் காடுகள் பரந்திருப்பதே இதற்குரிய முக்கிய காரணமாகும்.
குடித்தொகைத் தரவுகளின்படி 1891 முதல் 1946 வரையான ஜம்பத்தைந்தாண்டு காலத்தில் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியில் 6 பேரே அதிகரித்திருந்தனர். 1946 முதல் 1971 வரையான இருபத்தைந்து ஆண்டு காலத்தில் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியில் 55 பேர் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு இயற்கையான குடியதிகரிப்பும், குடிநகர்வால் ஏற்பட்ட குடி அதிகரிப்பும் இவ் இடைக்காலத்தில் அதிகரித்தமையே காரணமாகும். 1946 இன் பின் வன்னிப் பிரதேசக்குடியடர்த்தி வேகமாக அதிகரித்துவரும் போக்கை காட்டுகின்றது. எனினும் 1971 இல் வன்னிப்பிரதேசத்தின் குடியடர்த்தி யாழ்ப்பாணக் குடாநாட்டுக் குடியடர்த்தியை விட இருபதுமடங்கு குறைவாகவும் உள்ளது. இது 1963 இல் முறையே இருபத்தைந்து மடங்கு குறைவாகவும் எட்டு மடங்கு குறைவாகவும் காணப்பட்டது.
வன்னிப்பிரதேசத்தின் புவியியல் ரீதியான குடிப்பரம்பல், பொதுவாக தொட்டம் தொட்டமாகக் குடிச்செறிவு அமைந்திருப்பதையே காட்டுகின்றது. இவை பெரும்பாலும் குளங்களை அண்டிய குடியிருப்புகளாகவே அமைந்துள்ளன. மன்னார் தீவு, கட்டுக்கரை குளத்தையண்டிய பகுதிகள், வவுனியா நகரம், கிளிநொச்சி குடியேற்றத்திட்டப்பகுதிகள், முள்ளியவளைப்பகுதி, முல்லைத்தீவு நகரம், என்பனவே குறிப்பிடத்தக்ககுடிச்செறிவு கொண்ட பகுதிகளாகும். குடிச்செறிவு குறைந்த பகுதிகள் குளங்களற்ற பகுதிகளாகவும், காடுகள் அடர்ந்த பகுதிகளாகவும், பெருமளவு பயன்படுத்தப்படாத நிலத்தையடக்கிய பகுதிகளாகவும் காணப்படுகின்றன.
1981ஆம் ஆண்டு குடித்தொகைப் பண்புகள்
1981 ஆம் ஆண்டுக் குடித்தொகை கணிப்பீட்டின்படி இங்கு ஆய்வுக்குட்பட்ட வன்னிப் பிரதேசக் குடித்தொகை 2,78,800 ஆகும். இது இலங்கையின் மொத்தக் குடித்தொகையின் 1.8 வீதமாகவும், வடமாகாணக்குடித்தொகையின் 25.7 வீதமாகவும் உள்ளது வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் யாழ்ப்பாணக்குடாநாடு 12.8 வீதத்தை உள்ளடக்கியுள்ள போதிலும் இங்கேயே அதிகளவு குடித்தொகை காணப்படுகின்றது. இதற்கு மாறாக வன்னிப் பிரதேசம் வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 87.2 வீதத்தை கொண்டிருந்த போதிலும் இங்கு குறைவான குடித்தொகையே உள்ளது. 1981 இல் வடமாகாணக்குடித்தொகையில் 74 வீதத்தினர் குடாநாட்டிலும் 26 வீதத்தினர் வன்னிப்பிரதேசத்திலும் காணப்பட்டனர். 1963 ஆம் ஆண்டுக் குடித்தொகை மதிப்பீட்டின் போது இத்தொகை முறையே 77 வீதமாகவும் 23 வீதமாகவும் காணப்பட்டது. 1901 முதல் 1953 வரை இடம்பெற்ற குடித்தொகை மதிப்புகளின் தரவுகளின்படிசராசரியாக 86 வீதத்தினர் குடாநாட்டிலும் 14 வீதத்தினர் வன்னிப் பிரதேசத்திலும் காணப்பட்டனர்.
கிராம, நகரக் குடித்தொகை
வன்னிப் பிரதேசத்தின் 1981 ஆம் ஆண்டுக்குரிய நகரக்குடித்தொகை 39427 ஆகவும், கிராமக் குடித்தொகை (பெருந்தோட்டம் உட்பட) 185308 ஆகவும் உள்ளது. இது முறையே 17.5 விதமும் 82.5 வீதமுமாகும். இலங்கையின் நகரக்குடித்தொகை வீதமான 22.4 உடன் ஒப்பிடுகையில் இது குறைவாகவே உள்ளது. இலங்கையில் மாநகரசபை, பட்டிகசபை, நகரசபை, என நகரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந் நிர்வாகப் பிரிவின் எவ்லைக்குள் வாழ்பவர்கள் நகரவாசிகளெனக் கணிக்கப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தில் 89 கிராமசேவகர் பிரிவுக்குட்படும் கிராமங்களும் நான்கு நகரங்களும் உள்ளன. இவற்றுள் வவுனியா நகரசபை அந்தஸ்தையும் ஏனைய மூன்றும் பட்டின சபை அந்தஸ்தையும் பெற்றுள்ளன. நான்கு நகரங்களுள் மன்னார், முல்லைத்தீவு என்பன கரையோரமாகவும் வவுனியா, கிளிநொச்சி என்பன நடுவேயும் அமைந்துள்ளன. வன்னிப் பிரதேசத்தின் மொத்த நகரக் குடித்தொகையில் 52 வீதத்தை வவுனியா மாவட்டம் அடக்கியுள்ளது. வவுனியா பட்டினம் தனியாக 40 வீத நகரக்குடித்தொகையில் மன்னார் மாவட்டம் 28 வீதத்தையும் யாழ்ப்பாண மாவட்டம் வன்னிப்பகுதி 20 வீதத்தையும் அடக்கியுள்ளது.
குடித்தொகை கூட்டு (1981)
குடித்தொகைக் கட்டினுள் அடங்கும் வயதமைப்பு, ஆண் பெண் விகிதம், இனப்பிரிவு, மதப்பிரிவு, வேலைப்பகுப்பு என்பன பற்றிய ஆய்வுகள் சமூக, பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றன.
வயதமைப்பு
வன்னிப் பிரதேசக் குடித்தொகையில் வயதமைப்பை நோக்கும் போது இளம்வயதுப் பிரிவினர் அதிகமாகக் காணப்படுவதை முக்கிய அம்சமாகக் கொள்ளலாம். 1981 ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பின்படி இங்கு 42.5 வீதத்தினர் 14 வயதிற்குட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். 52.7 வீதத்தினர் தொழில் புரியக்கூடிய 15 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டோராவர். மகப்பேற்று வளம்மிக்க 15 – 44 வயதுப் பிரிவினர் 43 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். 60 வயதிற்கு மேற்பட்டோர் 4.8 வீதத்தினராக உள்ளனர். 15 வயதிற்கு குறைந்தவர்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் சார்ந்திருப்போர் தொகையில் அடங்குவர். தொழில்புரியும் ஒவ்வொரு 100 பேரில் இங்கு 90 பேர் தங்கி வாழ்கின்றார்கள். நாடு முழுவதற்குமான தரவின்படி 100 பேரில் தங்கிவாழ்வோர் 84 பேராகும். தங்கிவாழும் இப்பிரிவினர் பெருமளவு செலவினங்களை ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர். இலங்கையிலும் ஏனைய வளர்முக நாடுகளிலும் குடித்தொகையில் 40-50 வீதத்தினர் 15 வயதிற்குக் குறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ் வயதுப் பிரிவினர் 20 33 வீதத்தினராகவே உள்ளனர்.
இலங்கையிலன் குடித்தொகையில் இளம்வயதுப் பிரிவினர் அதிகம் காணப்படுவதினால் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, கல்வி, சுகாதார வசதிகள் என்பவற்றிற்காக அரசுக்குப் பெருமளவு செலவினம் ஏற்படுகின்றது. இது இலங்கை எதிர்நோக்கும் பாரிய பொருளாதார பிரச்சனைகளுக்கு முக்கியத்துவமானதொரு காரணமாகவும் அமைகிறது. 1981 ஆம் ஆண்டு இலங்கையின் குடித்தொகையில் 39.3 வீதத்தினர் 15 வயதிற்குட்பட்டவர்களாக காணப்பட்டனர். பொதுவாக வன்னிப் பிரதேசக் குடித்தொகையிலும் இவ் வீதம் தேசிய வீதத்திலும் சற்று அதிகமாக காணப்படுகின்றது.
ஆண், பெண் விகிதம்
குடித்தொகையில் ஆண்,பெண் பாகுபாடு பற்றிய ஆய்வும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டமிடலுக்கு இவ்விபரங்கள் அவசியம் வேண்டப்படுகின்றன. ஆண், பெண் வயதமைப்பும், விகிதாசாரமும் குடித்தொகை வளர்ச்சிக்கான காரணத்தைத் தேடுவோர்க்கு முக்கியமானதாகும்.
வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில்(1981) 1,23,594 ஆண்களும் 1,01,141 பெண்களும் காணப்படுகின்றனர். இதிலிருந்து 22,453 ஆண்கள் பெண்களைவிடக் கூடதலாக இங்கு உள்ளதை அவதானிக்கலாம். ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 122 ஆண்கள் என்ற விகிதத்தில் பால் விகிதம் இங்கு அமைந்துள்ளது. இலங்கைக்குரிய அவ் விகிதம் 100 பெண்களுக்கு 106 ஆண்கள் என்றவாறு அமைகின்றது. எனவே தேசிய விகிதத்திலும் இங்கு அதிகமாக காணப்படுகின்றது.
குடித்தொகைத் தரவின்படி யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியிலேயே ஆண், பெண் விகிதம் ஆண் சார்பாக அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தை வவுனியா மாவட்டம் வகிக்கின்றது. இப்பகுதிகளில் அண்மைக்காலங்களில் அதிகளவு விவசாயக் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டமையால் அதிகளவு ஆண்கள் குடிநகர்ந்து வந்தமையே இதற்கு முக்கிய காரணமெனலாம். காடுகளால் சூழப்பட்ட குடியேற்றத்திட்டப்பகுதிகளில் பாதுகாப்பு உறுதியிருப்பதாலும், கல்வி வசதி, சுகாதாரவசதி, போக்குவரத்துவசதி என்பன குறைவாக இருப்பதாலும் குடும்பத்தலைவன் தனது மனைவி பிள்ளைகளை பிறந்த ஊரில் விட்டு வருவதையே விரும்புகின்றான். இதுவே குடியேற்றத்திட்டப் பகுதிகளில் ஆண்கள் குடித்தெகை அதிகமாக இருப்பதற்குரிய முக்கிய காரணமாகும்.
குடியேற்றத்திட்டத்திற்கு மாத்திரமன்றி வர்த்தகம், போக்குவரத்துப் போன்ற தொழிற்றுறைக்காகவும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளுக்காகவும் ஆண்கள் குடிநகர்வு இங்கு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதனைச் சேர்ந்த தீவுப்பகுதிகளிலுமிருந்தே அதிகளவு குடிநகர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1981 ஆம் ஆண்டுக் குடித்தொகை மதிப்பு அறிக்கை தரும் பிறந்த இடம் பற்றிய தரவுகளிலிருந்து வவுனியா மாவட்ட குடித்தொகையில் 58 வீதத்தினரும் மன்னார் மாவட்டக் குடித்தெகையில் 71 வீதத்தினரும் அம் மாவட்டங்களுக்கு வெளியே பிறந்தவர்களாகவே உள்ளனர். எனவே வன்னிப் பிரதேசக் குடித்தொகை வளர்ச்சியில் குடிநகர்வு முக்கிய இடத்தை வகிக்கின்றது. குடித்தொகை ஆண் சார்பாக இருப்பதற்கு குடிநகர்வு மாத்திரம் காரணமன்று. பிறப்பில் ஆண்களின் பிறப்பு அதிகமாக இருப்பதும், இறப்பு விகிதத்தில் பெண்களின் பங்கு அதிகமாக இருப்பதும் மேலதிக காரணங்களெனத் தேசிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இனம்
இலங்கை பல இன மக்கள் வாழும் நாடென்பதை வன்னிப்பிரதேசத்திலும் பிரதிபலிக்கின்றது. எனினும் இங்கு சில இனத்தவர்களே செறிந்து வாழ்கின்றனர். இலங்கையில் வாழ்கின்ற ஒவ்வொரு இனத்திற்கும் வித்தியாசமான வரலாற்று, சமூக மதப் பின்னனிகள் உண்டு. 1911 ஆம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பீட்டிலிருந்தே தற்பொழுது குறிக்கப்படும் இனப்பிரிவுகளின் அடிப்படையில் தரவுகள் பெறப்பட்டு வருகின்றன. மொழி, மத புவியியற் பின்னணிகள் இனப்பாகுபாட்டில் முக்கியத்துவம் வகிக்கின்றது.
வன்னிப் பிரதேசம் அதிகளவில் தமிழர் வாழும் பகுதியாகும். தமிழர்களுக்கு வன்னி நிலத்துடன் ஒன்றிய நீண்ட வரலாற்றுப் பின்னணி உள்ளதால் இப்பிரதேசம் தமிழரது பாரம்பரியத் தாயகத்தின் ஒரு பகுதியெனக் கொள்ளப்படுபகின்றது. வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் 62.2 வீதமானவர்கள் இலங்கைத்தமிழர்களாவர். இவ் வீதம் யாழ்ப்பாண மாவட்ட வன்னிப் பகுதியில் 79.8 ஆகவும் வவுனியா மாவட்டத்தில் 51 ஆகவும் உள்ளது. வன்னிப் பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் இந்தியத் தமிழர் 16.1 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். மலையகப்பெருந்தோட்டங்களுக்குக் கூலித்தொழிலாளர்களாகப் பிரித்தானியரால் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களின் வழித்தோன்றல்களே இவர்களாகும்.
இன்று பெருந்தோட்டத்தில் நிலவும் வேலையில்லாப் பிரச்சனை இனப்பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் வன்னிப்பிரதேசத்திற்குக் குடிநகர்ந்து வந்து விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இவர்கள் வாழ்கின்றனர். இண்மைக்காலங்களில் இவ்வாறு குடிநகர்ந்து வருவோர் தொகை அதிகரித்துள்ளது. இலங்கை, இந்தியச் சோனகர் வன்னிப் பிரதேச மொத்தக்குடித்தொகையில் 12.5 வீதத்தினராவர். இவர்கள் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரிலும், அண்மைய பல கிராமங்களிலும் செறிந்து வாழ்கின்றனர். மன்னார் மாவட்ட மொத்தக் குடித்தொகையில் இவர்களின் பங்கு 26.8 வீதமாகும். மன்னார் வர்த்தகத்துறைமுகமாக விளங்கிய காரணத்தால் இவர்களது குடியிருப்புகள் இங்கு அதிகம் ஏற்பட்டன.
வன்னிப் பிரதேச இனம், வன்னிப்பிரதேசக் குடித்தொகையில் தமிழ் பேசும் மக்கள் 90.9 வீதத்தினராவர். இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர், இலங்கைச்சோனகர், இந்தியச்சோனகர், ஆகியோர் தமிழ் மொழி பேசும் மக்களாகும்.வவுனியா தெற்கு சிங்கள உ.அ.அ பிரிவைத்தவிர ஏனைய பகுதிகளில் தமிழ்மொழி பேசும் மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தில் சிங்கள மொழி பேசும் மக்கள் மொத்தக் குடித்தொகையில் 9 வீதத்தினராகும். வவுனியா மாவட்டத்தில் மொத்தக்குடித்தொகையில் இவர்களது பங்கு 16.3 வீதமாகவுள்ளது. மன்னார் மாவட்டத்தின் குடித்தொகையில் 4.6 வீதத்தினர் சிங்கள மக்களாவர். மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம், மடுறோட் ஆகிய பகுதிகளில் இவர்களது பரம்பல் காணப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தில் மாமடுவ, மடுக்கந்தை. ஈரப்பெரியகுளம், உலுக்குளம், ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் சிங்கள மக்கள் செறிவாக வாழும் பகுதிகளாகும். 1963 ஆம் ஆண்டுக் குடித்தொகை கணிப்பீட்டை ஒப்பிட்டு நோக்கும் போது வன்னிப் பிரதேசத்தில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தின் மொத்தக் குடித்தொகையில் சிங்களமக்களின் வீதம் அதிகரித்துள்ளதைக் காணலாம்.
மதம்
வன்னிப் பிரதேசம் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பழரதேசமாக இருப்பதால் தமிழரது முக்கிய மதமான இந்துமதத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் இந்துக்கள் 58.2 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். யாழ்ப்பாண மாவட்ட வன்னிப் பகுதியில் இந்துக்கள் 87.4 வீதத்தினராகவும், வவுனியா மாவட்டத்தில் 65.4 வீதத்தினராகவும் உள்ளனர். தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளுள் மன்னார் மாவட்டத்திலேயே இந்துமதத்தினர் குறைவாகக் (30 வீதம்) காணப்படுகின்றனர். மன்னார் சர்வதேச வர்த்தகத்துறையாக விளங்கியதும், போர்த்துக்கேயரது கெல்வாக்கின்கீழ் இது நீண்ட காலமாக இருந்து வந்ததும் இங்கு முஸ்லீம், றோமன்கத்தோலிக்க மதங்கள் அதிகளவு பரவ ஏதுவாயிற்று.
மன்னார் மாவட்டத்தின் மொத்தக்குடித்தொகையில் 37.8 வீதத்தினர் றோமன்கத்தோலிக்கர்களாகக் காணப்படுவதற்கு போர்த்துக்கேயரது செல்வாக்கே காரணமாகும். இவர்கள் மன்னார் தீவுப்பகுதி, முசலிப்பகுதிகளில் பெரும்பான்மையினராக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தில் மொத்தக் குடித்தொகையில் றோமன்கத்தோலிக்கரும், ஏனைய கிறீஸ்தவர்களும் 20.6 வீதத்தினராக உள்ளனர். வவுனியாவின் மொத்தக் குடித்தொகையில் 12 வீதத்தினராகவுள்ள றோமன்கத்தோலிக்கர்கள் மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாக மீன்பிடிக் குடியிருப்புகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் பெரும்பான்மையினராக உள்ளனர்.
இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் இந்திய, இலங்கைச்சோனகர்களும் மலாயர்களும் முஸ்லீம்களென அழைக்கப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் இவர்கள் 13.2 வீதத்தினராவர். முஸ்லீம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் ஒன்றாக மன்னார் மாவட்டமும் கொள்ளப்படுகின்றது. ஒரு மதப்பிரிவினர் தனிப்பெரும்பான்மையினராக இல்லாதமை முக்கி பண்பாகும்.
சிங்களம் பேசும் மக்களிற் பெரும்பான்மையானோர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களாவர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் பௌத்த மதத்தைச் சேர்ந்தோர் 7.9 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தில் வவுனியா மாவட்டமே அதிகளவு (14.8 வீதம்)பௌத்தர்களைக் கொண்டுள்ளது. வவுனியா தெற்கு சிங்கள உ.அ.அ பிரிவே பௌத்த மதத்தினரை அதிகளவிற் கொண்ட பகுதியாகும். வன்னிப்பிரதேசத்தின் நகரப்பகுதிகளில் இவர்கள் ஓரளவு செறிந்துள்ளனர். ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே பரந்து காணப்படுகின்றனர்.
வேலைவாய்ப்பு
வன்னிப் பிரதேச மொத்தக் குடித்தொகையில் 32.1 விதத்தினரே தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தொழில்வாய்ப்பு பெற்றவர்களில் ஆண்களின் பங்கு 93.3 வீதமாகவும் பெண்களின் பங்கு 6.7 வீதமாகவும் காணப்படுகின்றது. தொழில் வாய்ப்புப் பெற்றவர்களில் 65 வீதத்தினர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டவர்களாகவும் 35 வீதத்தினர் விவசாயமல்லாத பிற துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இப்பிரதேசத்தின் முக்கிய தொழிற்றுறை விவசாயமாக இருந்த பொழுதிலும் மொத்தக்குடித்தொகையில் 20.2 வீதத்தினரே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டிருப்போரில் ஆண்களின் பங்கு 94 வீதமாக உள்ளது. ஆண் உழைப்பாளர்களில் தங்கிவாழ்வோர் தொகை அதிகமாக இருப்பதை இவை உணர்த்துகின்றன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், ஆகியோர் உழைப்பவர்களில் தங்கிவாழ்வோராகக் காணப்படுகின்றனர். இப்பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் 45 வீதத்தினராகக் காணப்படும் பெண்கள் வீட்டு வேலைகளுடனும் பகுதி நேர வேலைகளுடனும் திருப்தியடைவதால் குறைந்தளவே தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மொத்தப் பெண் குடித்தொகையில் 4.6 வீதத்தினரே தொழில்வாய்ப்பை பெற்றவர்களாவர். இதில் 57.3 வீதத்தினர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருக்க 42.7 வீதமானோர் விவசாயமல்லாத தொழில்களில் அமர்ந்துள்ளனர்.
முடிவுரை
வன்னிப் பிரதேசக் குடித்தொகைக் கணிப்புகள் உத்தியோக பூர்வமாக 1981 இன் பின்னர் இடம்பெறவில்லை. வன்னியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய யுத்த சூழ்நிலைகளே இதற்கான காரணமாகும். இலங்கை அரசு இப் பிரதேசத்தில் தனது நிர்வாகக் கட்டுப்பாடுகளை இழந்திருந்தது. மக்களிற்கான வாழ்வாதார விடயங்களைக் கவனிப்பதற்கான சில கணிப்பீடுகள் இடம்பெற்றன. எடுத்துக்காட்டாக உணவு விநியோகம், மருத்துவ சேவை போன்றவற்றை மேற்கொள்ள சில கணிப்பீடுகளை செய்து வந்துள்ளது. தேசிய மட்டத்தில் 1991, 2001 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட குடித்தொகைக் கணிப்பீடு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவில்லை. 1981 ஆம் ஆண்டு குடித்தொகைக் கணிப்புகளில் இருந்தே வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான உத்தேச மதிப்பீடுகள் பெறப்பட்டு நிர்வாகத் தேவைக்காககப் பயன்படுத்தப்பட்டு வந்தன.
வன்னி யுத்தத்தின் இறுதிக் காலகட்டமான 2009 மே மாதம் வன்னி மக்கள் யாவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதிக்கு ஒதுக்கப்பட்டனர். 2009 மே 18 இன் பின் இவர்கள் அனைவரும் வவுனியா இடைத்தங்கல் முகாம்களின் இடம்பெயர்ந்த அகதிகளாக தங்கவைக்கப்பட்டனர். அகதி முகாம்களில் எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி அங்கு 3,17,000 மக்கள் பதிவு செய்யப்பட்டனர்.
வன்னியின் உக்கிர யுத்தம் நடந்த காலமாகிய 2009 மார்ச், ஏப்ரல் மாதங்களில் இங்கு 4,20,000 மக்கள் காணப்பட்டதாக கிளிநொச்சி முல்லைத்தீவு அரசஅதிபர்களும், ஜ.நா நிறுவனத்தின் அறிக்கைகளும் குறிப்பிட்டதோடு இக் கணிப்பீடுகளையே மக்களுக்கான நிவாரணக் கொடுப்பனவுக்கும் பயன்படுத்தினர்.
வன்னி யுத்தம் முடிவடைந்து இரு வருடங்களாகியும் மீள் குடியேற்றம் முறையாக இடம்பெறவில்லை. பெருந்தொகையான மக்களது வீடுகள், பயன்தரு மரங்கள் போன்ற வாழ்வாதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில் மீள் குடியேற்றம் மெதுவாகவே இடம்பெற்று வருகின்றது. மீள் குடியேற்றம் முறையாக இடம்பெற்று முற்றுப் பெற்ற பின்னரே 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய குடித்தொகைக் கணிப்பீடுகள் இடம்பெற வேண்டும். இக் கணிப்பீடுகளில் இருந்தே வன்னிக் குடித்தொகையில் 1981 ஆம் ஆண்டின் பின் 30 வருட காலம் நிகழ்ந்த பாரிய மாற்றங்கள், குறிப்பாக குடிமனை அழிவுகள், குடிநகர்வுகள் போன்ற அம்சங்கள் தெரியவரும்.
- விவரங்கள்
- பேரா.வி.முருகன்
- பிரிவு: புவி அறிவியல்
இன்று தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளி மாணவர்களின் கனவும் ஒன்றுதான். எப்படியாயினும் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பட்டம் ஒன்று வாங்குவதுதான். எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், கணினி, சிவில், மெக்கானிகல் என்று பலவிதமான பொறியியல் பாடங்கள் உள்ளன. இப்போது உலக அளவில் ஒரு புதிய பொறியியல் உருவாகிக் கொண்டுள்ளது. இதற்குப் பெயர் புவிப்பொறியியல். ஆங்கிலத்தில் ஜியோ என்ஜினீயரிங் என்று சொல்கிறார்கள். இது இன்னமும் பாடத்திட்டமாக வரும் அளவிற்கு வளர்ச்சி பெறவில்லை.
புவிப்பொறியியல் என்றால் என்ன? பொறியியல் என்றாலே இயற்கையிலேயே பல மாற்றங்களை உருவாக்கி நமக்கு சாதகமாக இயற்கையைப் பயன்படுத்தும் திறன் என்றுதான் பொருள். உதாரணமாக, ஆற்றில் ஓடிக்கொண்டிருக்கும் நீரை ஓடவிடாமல் தடுத்து தேக்கி வைப்பது, அப்படி தேக்கிய நீரைக் கொண்டு நமக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வது. அப்படிப் பார்த்தால், புவிப்பொறியியலில் என்ன செய்யப் போகிறார்கள்? இயற்கையின் எந்தப் பகுதியை எப்படி மாற்றப் போகிறார்கள்? அதனால் நாம் அடையப்போகும் பயன் என்ன? புவிப்பொறியியல் உலகின் வானிலையே மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு மாற்றியமைத்து, நமது தேவைக்கேற்ப புதிய வானிலையை உருவாக்குவது. இது எதற்காக? மனிதர்களால் கட்டுப்பாடற்ற முறையில் தொடர்ந்து வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவால் பூமியின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே போகிறது. அவ்வாறு பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பது மனித குலம் உட்பட அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ முடியாத ஒரு சூழ்நிலையை அடிப்படையாக உருவாக்கிக் கொண்டுள்ளது.
பூமியின் இந்த வெப்பமடைதலை எப்படியேனும் குறைக்க வேண்டும். அதுவும் குறிப்பாக, கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கு பதிலாக வெப்பநிலை உயர்வை மட்டும் எப்படி குறைப்பது என்பதுதான் நோக்கம், சூரியனில் இருந்து பூமிக்கு வந்தடையும் ஒளியை எப்படி குறைப்பது அல்லது மனிதர்களால் கட்டுப்பாடில்லாமல் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடை வளிமண்டலத்தில் தங்கவிடாமல் எப்படி எடுப்பது. இந்த வழிக்கான முயற்சிதான் புவிப்பொறியியல் என்பது,தொழிற்புரட்சி ஏற்பட்ட காலங்களில் இருந்து நமது பூமியில் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இது இயற்கையாக நடைபெறும் நிகழ்வு அல்ல. இதற்கு முக்கிய காரணம் வரம்பு முறையின்றி அதிகளவில் பெட்ரோலிய எரிபொருள்களை மனிதர்கள் எரிப்பதுதான் தொழிற்சாலைகள் இயங்க எரிபொருள்கள் தேவை, வாகனங்களுக்கும் பெட்ரோலிய எரிபொருட்கள் தேவை. மின்சாரம் உற்பத்தி செய்ய அவை தேவை. இப்படி நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். சொல்லப்போனால் ஒரு நாட்டின் வளர்ச்சியே பெட்ரோலியப் பொருள்களை நம்பித்தான் உள்ளது. பெட்ரோலிய எரி பொருள்களை எரிக்கும் போது, கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. இப்படி வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடு தான் இன்று நமக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்களால் வெளியிடப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகளின் பெரும் பகுதி பூமியின் வளி மண்டலத்திலேயே தங்கிவிட்டன. தொழிற்புரட்சி தொடங்கிய காலத்திற்கு முன் வளிமண்டலத்தில் இருந்த கார்பனின் அளவு 180 பி.பி.எம், (இந்த எண் என்னவென்று புரியாவிட்டால் பரவாயில்லை, பிபிஎம் என்பது PRTS PAR MILLION என்பது. அதாவது வளிமண்டலத்தில் உள்ள அனைத்து வாயுக்களையும் எடுத்துக் கொண்டு அதை 10 லட்சம்பங்குகளாய் பிரித்தால் அதில் 180 பங்கு கார்பன் என்பது இந்த எண்ணில் பொருள், இன்று இந்த வாயுவின் அளவு 380 பிபிஎம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இன்னமும் தொடர்ந்து அதிகரிக்கும் 300 பிபிஎம் க்கு மேலிருந்தால் பூமியின் இன்றிடுக்கு சுற்றுபுறச் சூழல்கள் பெரிதும் மாறிவிடும் நிலை ஏற்படும். கடந்த 65,000 ஆண்டுகளாக பூமியின் வளிமண்டலத்தில் இந்த அளவிற்கு கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகளின் அளவு எப்போதும் இருந்ததில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. பூமியின் வெப்பநிலை இதனால் அதிகரித்துக் கொண்டுள்ளது. தொடர்ந்து பூமியின் வெப்பநிலை ஏறிக்கொண்டே போனால் பூமியின் உயிரினங்கள் வாழ்வதே கேள்விக்குறியாகிவிடும்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுவதை குறைப்பதுதான் தீர்வு. ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. தீர்வு என்னவென்று தெரிந்தபிறகு அதைச் செய்வதில் என்னச் சிக்கல்? இரண்டு வழிகளில் கார்பன் வாயு வெளியிடப்படுவதைக் குறைக்கலாம். முதல்வழி தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இரண்டாவது வழி புதிய தொழில் நுட்பத்தை உபயோகித்து வெளியிடப்படும் கார்பனின் அளவை குறைக்க வேண்டும்.
முதல் வழியைப் பின்பற்றினால் ஒரு நாட்டின் வளர்ச்சியே குறைந்து விடும். இரண்டாவது வழி அதிகமாக செலவாகும் வழி யார் இந்த செலவை ஏற்றுக்கொள்வது? தொழில்வளர்ச்சியின் பயன்களை நுகர்வோர் என்ற முறையில் பொதுமக்கள் மீது ஏற்றிவிட்டால் பொதுமக்களின் கோபத்தையும், அதிருப்தியையும் ஒரு அரசு சம்பாதிக்க நேரிடும். மாறாக தொழிற்சாலைகளின் உரிமையாளர்களான பன்னாட்டு முதலாளிகள் இந்த செலவை ஏற்றுக்கொண்டால் அவர்களின் லாபம் பெருமளவு குறைந்துவிடும். இந்த இரண்டிற்கும் வளர்ந்த நாடுகள் ஓப்புக் கொள்ளவில்லை.
கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை அதிகமாக வெளியிடும் நாடுகள் வளர்ந்த நாடுகள்தான். குறிப்பாக உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் உள்ள அமெரிக்கா தான் சுமார் உலகின் 25 சதவீத கார்பன் வாயுவை வெளியிடுகிறது. சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் பலமுறை கூடியும் இதற்கு ஒரு நல்ல செயல்திட்டத்தை எட்ட முடியவில்லை. காரணம் பொருளாதாரச் சிக்கல்தான்.
தொழிற்புரட்சி தொடங்கிய காலத்திற்கு முன்பிறந்த அளவிற்கு கார்பன் டை ஆக்ஸைடு குறைய வேண்டுமானால் வருடத்திற்கு 1 டிரில்லியன் டாலர்கள் (சுமார் 50 லட்சம் கோடி ரூபாய்கள்) செலவழிக்க வேண்டும். இந்த அளவிற்கு செலவு செய்யாமல் மிகக் குறைந்த அளவு செலவிலேயே பூமிவெப்பமடைவதை நிறுத்த முடியுமா? அப்படி ஒரு வழி இருப்பதாக வளர்ந்த நாடுகளில் சிலர் நம்புகின்றனர். அந்த வழிதான் இந்த புவிப்பொறியியல் அல்லது ஜியோ என்ஜினீயரிங்.
கார்பன் டை ஆக்ஸைடு கட்டுப்பாடற்ற முறையில் வெளியிடப்படுவதால் பூமியின் வெப்பநிலை உயர்கிறது. பூமியின் வெப்பநிலை உயரக்கூடாது அவ்வளவு தானே, கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுவதை கட்டுப்படுத்துவது என்ற முயற்சியை விட்டு சமாளிப்பது என்று பாருங்கள். அதற்கு என்ன வழி உள்ளது? இரண்டு வழிகள் நம்பப்படுகின்றன. ஒன்று பூமியை வந்தடையும் சூரிய ஒளியைக் குறைப்பது, மற்றொரு வழி வெளியிடப்பட்ட கார்பனை வளிமண்டலத்தில் தங்கவிடாமல் எடுத்து விடுவது. இந்த வழிகளை செய்துவிட்டால், கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளிப்படும் அளவை நாம் கட்டுப்படுத்த தேவையில்லை.
இதற்கு பல வழிகள் சொல்லப்படுகின்றன. சூரியனில் இருந்து பூமியை வந்தடையும் ஒளியில் 2 சதவீதம் குறைத்து விட்டால் போதும், பூமியின் வெப்பநிலையை பழைய நிலைக்கே கொண்டு வந்துவிடலாம். இதற்காக பிரம்மாண்டமான மேகங்களை உருவாக்கலாம். 300 கப்பல்களைக் கொண்டு தொடர்ந்து மாபெரும் புரொப்பெல்லர்களின் உதவியுடன் கடல் நிலத் துகள்களை வானில் தெளிப்பது. அவை வளிமண்டலத்திற்கு சென்று பெரும்மேகங்களாக மாறிவிடும், பூமிக்கு ஒரு மாபெரும் குடையாக மாறிவிடும். மற்றொரு வழியில் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள துப்பாக்கிகள் (ஹோஸ் பைப்புகள்) மிக உயர்ந்த இடங்களில் நிறுவுவது. ஒவ்வொரு துப்பாக்கி மூலமும் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 8 லட்சம் சிறிய தகடுகளை வானில் செலுத்துவது. இதுசுமார் 10 வருடங்களுக்கு தினமும் 24 மணிநேரம் செய்வது. இந்தத் தகடுகள் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் மிதக்கும் இவையும் குடைபோல் சூரிய ஒளியை தடுத்து நிறுத்திவிடும். மற்றொரு வழி வானில் பெரும் அளவில் விமானங்களின் துணைகொண்டு கந்தகத்துகள்களை தூவுவது. இந்த கந்தகத் துகள்கள், பூமியை வந்தடையும் ஒளியை விண்ணுக்கே திருப்பி அனுப்பிவிடும். மாலை நேரத்தில் வானம் ரத்த சிவப்பாக இருக்கும். பகல் வேலையும் நீலநிற வானத்திற்குப் பதிலாக நல்ல வெண்மையான மேகமாக இருக்கும். இவையெல்லாம் சூரிய ஒளியை தடுப்பதற்கான வழிகள்.
மனிதர்களால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் தங்கவிடாமல் எடுப்பது எப்படி? இதற்கும் பல வழிகள் கூறப்படுகின்றன. கடலில் பிளாங்டன் என்ற ஒருவகை உயிரினம் உள்ளது. அவை கார்பன் டை ஆக்ஸைடை அதிகளவில் உண்ணக்கூடியவை. அவை வளர்வதற்கு இரும்புச்சக்தி தேவை. எனவே கடலில் பெரிய அளவில் இரும்புத் துகள்களைத் தூவுவது.
இந்த வழிகள் நடைமுறையில் சாத்தியமா? இப்படி செய்வது சரியா? பெரும்பாலான அறிவியல் வல்லுநர்கள் இந்த முறைகளை ஏற்றுக் கொள்வதில்லை. வானிலை, தட்ப வெப்பநிலை இவைபற்றிய நிறைய விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. இந்த நிலையில் புவிப்பொறியியலில் செயல்படும் முறைகளை அமல்படுத்தினால் அவை என்ன விளைவுகள் உண்டாக்கும் என்று தெரியாது. ஆகவே இந்த முயற்சிகளை கைவிட வேண்டும், என்றுதான் பெரும்பாலான அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இதுபோன்ற வழிகளை சிந்திப்பதற்குக் காரணம் என்ன? ஒன்று மிகக் குறைந்த செலவு. மற்றொன்று இந்த வழிகளை செயல்படுத்த அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பும் தேவையில்லை. ஒவ்வொரு நாடும் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப செயல்பட முடியும். அரசே தேவையில்லை, தனியார் நிறுவனங்களே இச்செயல்களை செய்ய முடியும் என்று நம்புகின்றனர். இதில்தான் வேறொரு ஆபத்து உள்ளது.
ஒரு காலக்கட்டம் வரை, புவி வெப்பமடைதலை தவிர்ப்பதற்கு கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியிடுவதைக் குறைப்பதுதான், ஒரே வழி என்று கருதப்பட்டது. அதற்கு மாறாக சூரிய ஒளியைக் கட்டுப்படுத்துவதோ அல்லது வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடை வளிமண்டலத்தில் இருந்து எடுப்பது என்ற சிந்தனைகளே தவறு என்று கருதப்பட்டது. வானிலையை தங்கள் விருப்பத்திற்கு மாற்றலாம் என்ற கருத்தே அருவருப்பாகப் பார்க்கப்பட்டது. ஆனால் சமீப காலத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிலும், ஐரோப்பியாலும் அறிவியல் வல்லுனர்களின் மதிப்பை பெருமளவில் பெற்றுள்ள அறிவியல் அமைப்புகளே, சற்று இந்தக் கருத்துகளுக்கு ஆதரவாக வருகின்றன. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி செய்யும் அரசு நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கின்றன. பல தனியார் நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியில் ஆதரவும் காட்டுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், பன்னாட்டு முதலாளிகளின் சார்பாக புவிவெப்பமடைதல் என்பதே உண்மையில்லை, என்று வாதிட்டவர்கள்.
உதாரணமாக அமெரிக்க எண்டர்பிரைசஸ் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் ஒன்றுள்ளது. புவிவெப்பமடைதலைப் பற்றியும், அதனால் ஏற்படும் வானிலை மாற்றங்களைப் பற்றியும் சர்வதேச அமைப்பு வெளியிடும் அறிக்கையை எதிர்த்து எழுதப்படும் ஒவ்வொரு ஆராய்ச்சிக், கட்டுரைக்கும் 10,000 டாலர்கள் தரப்படும் என்று கூறிய நிறுவனம் இது. இந்த நிறுவனம் புவிப்பொறியியலில் பெரும் ஆர்வம் காட்டுகிறது. ஆக இந்தப் புவி பொறியியலுக்கு பெருகிவரும் ஆதரவு வேறு கோணத்தில் இருந்து வருகிறது. புவிப் பொறியியல் இருந்து வரும் அனைத்து தீர்வுகளும் ஒரு தனியார் நிறுவனமே செய்யக்கூடியவை. நிச்சயமாக சில நாடுகள் மட்டுமே செய்யக்கூடியவை அதாவது, உலக வானிலையைக் கட்டுப்படுத்துவது என்பது கைக்குள் வந்துவிடும் சொல்லப்போனால் அணுகுண்டுகளைப் போல் வானிலையும், மேலைநாடுகளுக்கு ஒரு ஆயுதமாக மாறும் நிலை உண்டு.
***
கட்டுரையாளர் சென்னை விவேகானந்தா கல்லூரி, இயற்பியல் துறை பேராசிரியர்
(இளைஞர் முழக்கம் ஜூன் 2011 இதழில் வெளியானது)
- வளங்களின் வரையறை, வகைப்பாடு, வள அபிவிருத்தி என்பதன் பொருள் மற்றும் தமிழர் நிலத்தின் வளங்களும் பயன்பாடும்.
- சூழல்பேண் புதுப்பொருளாதார ஒழுங்கும் இயற்கை வேளாண்மையும்.
- இலங்கையின் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் - விவசாயத் தொழிற்றுறைக்கான விரிவாக்கம்
- இலங்கைத் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் - விவசாய அபிவிருத்தியும் நீர்வளப் பயன்பாடும்
- இலங்கையின் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் மாற்றுச் சக்தி வளங்கள்
- வானம் ஏன் நீல நிறத்தில் தோற்றமளிக்கின்றது?
- மார்கழி மாதம் ஓசோன் ரகசியம் - உங்களுக்குத் தெரியுமா?
- நிலாவினால் பூமியில் நிலநடுக்கம்
- 'கடி' மன்னன் மனிதனே
- பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
- சூறாவளி எப்படி உருவாகிறது?
- நிறம் காண திணறும் மூளை
- ஏறு பூட்டாமல் சோறு சாப்பிடலாம்
- வெறுங்கால் ஓட்டம்.....வேகமான ஓட்டம்
- மனிதன் தோன்றியது எப்படி?
- ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?
- இனிக்கும் ஒயினில் கசக்கும் மூலிகை
- சுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து
- சமையலும் இரசாயன மாற்றமும்
- வாயில் வாழும் பாக்டீரியாக்கள்