கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சதுக்கபூதம்
- பிரிவு: தொழில்நுட்பம்
மான்சாண்டோ நிறுவனம் ரவுண்ட் அப் என்ற களைகொல்லி மருந்தை பல காலமாக விற்பனை செய்கிறது. இந்த களைகொல்லி மிகவும் சக்தி வாய்ந்தது. பெரும்பாலான களைகளை இந்த களைகொல்லி அழித்துவிடும். முக்கியமாக பல புல் வகைகளை அழிப்பதால் விவசாயிகளிடமும் பிரபலமானது. ரேசன் கடைகளில் பெரிய கேன்களில் பிடித்து மண்ணெண்ணெயை விற்பனை செய்வது போல் இந்த களைகொல்லியை விற்பனை செய்யும் காலம் எல்லாம் இருந்தது. சில களைகளுக்கு எதிர்ப்பு தன்மை வந்து விட்டதாகவும், சில உடல் நல தீங்குகள் ஏற்படும் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன. இருந்தாலும் தற்போது உபயோகத்தில் உள்ள களைகொல்லிகளில் மிக பிரபலமானவற்றில் ஒன்று இது என்றால் அது மிகையாகாது.
இந்த களைகொல்லியை அடித்தால், வளர்ந்த நிலையில் உள்ள களை செடியுடன் பயிரையும் அழித்துவிடும் தன்மையுள்ளது. எனவே பயிரை விளைவிக்கும் முன் தண்ணீர் விட்டு களையை வளர செய்து இந்த களைகொல்லியை அடித்து களைகளை அழிக்க முடியும். ஆனால் வளர்ந்த நிலையில் உள்ள பயிர் இருக்கும்போது அதனுடன் வளர்ந்த களையை அழிக்க இதைப் பயன்படுத்த முடியாது. இதற்காக மாண்சான்டோ நிறுவனம் புதிய வகை ஜீன் மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அறிமுகப்படுத்தியது. அந்த விதைகள் ரவுண்ட் அப் களைகொல்லிகளை தாங்கி வளரும் தன்மை கொண்டது. எனவே பயிர் வளரும் போதும் இந்த களைகொல்லியை தெளித்தால் பயிர் உயிரோடு இருக்கும்; ஆனால் பயிரின் ஊடே வளரும் களை அழிந்து விடும்.
இதனால் உலகளவில் விவசாயிகளிடம் இந்த தொழில்நுட்பம் பிரபலமடைந்து இருந்தது. மான்சான்டோ மற்றுமல்லாது பிற விதை நிறுவனங்களும் தங்களது விதைகளில் ரவுண்ட் அப் எதிர்ப்பு ஜீனை இணைத்து விற்பனை செய்தார்கள். இதனால் மான்சான்டோவைப் பொருத்த வரையில் பிற விதை நிறுவனங்களிடமிருந்த ராயல்டியாக இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பணமும், இதனால் ரவுண்ட் அப் களைகொல்லியின் விற்பனை ஏற்றமும் கிடைத்தது. பிற விதை நிறுவனங்கள் அதிக விளைச்சலைத் தரும் தங்களது விதைகளை உபயோகபடுத்தும்போது களை கட்டுபாட்டுக்கான எளிய வழியாக கூறி தனது நிறுவன விதைகளை விற்றன. விவசாயிகளைப் பொருத்தவரை விளைச்சளும் களை கட்டுபாட்டிற்கான ஒரு தீர்வாகவும் இது இருந்தது.
உலகை அதிர வைத்த ஆராய்ச்சி
அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் உற்பத்தியாகும் சோளத்தில் பெரும் பகுதி இந்த தொழில்நுட்பத்தில் வளர்ந்ததே. இந்த வகை சோளம் மற்றும் சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை சில வருடங்களாக மக்கள் உண்டு வருகின்றனர். 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் The Journal of Food and Chemical Toxicology என்ற ஆராய்ச்சிப் பத்திரிக்கையில் பிரான்சைச் சேர்ந்த செராலினி என்ற அறிஞரது ஆராய்ச்சிக் கட்டுரை அறிவியல் உலகத்தை அதிர வைத்தது. அவரது ஆராய்ச்சியின் படி ரவுண்ட் அப் ஜீன் மாற்றம் செய்யப்பட்ட சோளம் எலிகளுக்கு பல்வேறு சுகாதார கேட்டினை ஏற்படுத்துவதுடன் கேன்சர் கூட ஏற்படுத்தும் தன்மையுடையது. இது 2007ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் Department of Environmental Health and Toxicology செய்த ஆராய்ச்சிக்கும் 2012ம் ஆண்டு University of Nottingham செய்த ஆராய்ச்சியின் முடிவுக்கும் எதிர்மறையாக இருந்தது.
இந்த ஆராய்ச்சி பற்றி கூறிய செரிலினி, ஜீன் மாற்றம் செய்யப்பட்ட சோளத்தை ஒரு வருடத்துக்கு மேலாக எலியை சாப்பிட வைத்தால் தான் இந்தத் தீங்கு ஏற்படும் என்றும் பெரும்பாலான ஆராய்ச்சிகள் குறைந்த கால அளவிலேயே செய்து முடிக்கப்படுவதாகவும், அதனால் இந்த தீய விளைவை கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறினார்.
இந்த ஆராய்ச்சி முடிவு உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரான்சு அதிபர் ஐரோப்பிய அளவிலான தடையை NK603 என்ற சோள வகைக்கு ஏற்படுத்த வேண்டும் என்றார். ரஸ்யா இந்த வகைப் பயிரை இறக்குமதி செய்யத் தடை விதித்தது. கென்யா மரபணு மாற்றப் பயிர்களுக்கு தடை விதித்தது. பொதுவாக ஐரோப்பிய நிறுவனங்கள் அதிக அளவில் பூச்சு மருந்து வேதிப் பொருட்களையும், அமெரிக்க நிறுவனங்கள் மரபணு மாற்ற விதைகளையும் உற்பத்தி செய்வதால் ஐரோப்பிய நாடுகளிடம் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிர்ப்பு இருப்பதாக பெரும்பாலானோரால் நம்பப்படுகிறது. இந்த ஆராய்ச்சி முடிவு ஐரோப்பாவில் மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிரான எதிர்ப்பை அதிகப்படுத்தியது.
ஆராய்ச்சி முடிவை திரும்ப பெற்ற பத்திரிக்கை
கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை The Journal of Food and Chemical Toxicology திரும்பப் பெற்றுக் கொண்டது அனைவருக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட எலிகளுக்கு கேன்சர் பெரும் தன்மை அதிகமாக இயல்பிலேயே இருப்பதாகவும், இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட உணவை உட்கொண்டதால் தான் கேன்சர் ஏற்பட்டது என்று மதிப்பிட சரியான புள்ளியியல் கோட்பாடுகளை பயன்படுத்தவில்லை என்றும் காரணம் கூறியது. அதே போல் ஆராய்ச்சியாளர் எவ்வாறு மரபணு மாற்றப் பயிர் கேன்சரை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிப் பூர்வமாக விளக்கவில்லை என்றும் கூறியது. இந்த ஆராய்ச்சிக் கட்டுரையைத் திரும்பப் பெற்றதனால் மரபணு மாற்றப் பயிருக்கு எதிரான உடல்நல கேட்டினை ஏற்படுத்தும் ஆராய்ச்சி முடிவுகள் மிகப் பெரிய ஆராய்ச்சிப் புத்தகங்களில் இல்லாமல் போனது.
இந்த ஆராய்ச்சிக்கு ஆதரவாக பல ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும், மரபணு மாற்றப் பயிருக்கு எதிரானவர்களும் உள்ளனர். இந்த ஆராய்ச்சி வெளிவந்த ஆறு மாதம் கழித்து, அந்த ஆராய்ச்சிப் பத்திரிக்கை Associate Editor for Biotechnology என்ற பதவியை ஏற்படுத்தி அந்தப் பதவிக்கு மான்சான்டோவின் முன்னாள் பணியாளரான Richard E. Goodman என்பவரை நியமித்தது அனைவரிடமும் ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தியது.
வளர்ந்து வரும் மக்கள் தொகையும், குறைந்து வரும் விவசாயத் தொழிலாளர்களும், குறைந்து வரும் விவசாய நிலப்பரப்பும் நவீன வேளாண் தொழில்நுட்பத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன. மேலை நாடுகளில் சென்ற நூற்றண்டுகளில் இருந்தது போல் அடிமை முறை கொண்ட மலிவான தொழிலாளர்களோ, இந்தியாவில் இருந்தது போல் வர்ணாஸ்ரம முறைப்படி சொந்த மக்களையே அடிமையாக வைத்து மலிவான கூலித் தொழிலாளர்களாக உபயோகப்படுத்தி அதிக தொழிலாளர்களைக் கொண்ட விவசாயத்தை செய்வது தற்போது வாய்ப்பில்லை. அதே போல் குறைந்த நிலப் பரப்பில் தொழில்நுட்பம் கொண்டு உற்பத்தித் திறனை அதிகப்படுத்தினால் தான் அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். மேலை நாடுகளில் இருப்பது போல் இயற்கை விவசாயத்தில் இரு மடங்கு விலையில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டும் கொடுத்தால் கூட கோடிகணக்கான ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு உற்பத்தியை தொழில் நுட்பம் மூலம் உற்பத்தி செய்யத்தான் வேண்டும்.
ஆனால் இது போன்ற சுகாதார ஆபத்து இருக்குமா அல்லது இல்லையா என்பது போன்ற ஆராய்ச்சிகளை ஒரு சில வருடங்கள் பல்வேறு நாடுகளில் கூட்டாக யாருடைய குறுக்கீடும் இல்லாமல் நடு நிலைமையுடன் செய்வது அவசியம். அப்போது தான் மக்களும் பயமின்றி இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவர். நடு நிலைமையிலான பல்வேறு ஆராய்ச்சிகளால் இந்த தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டால் இந்த ஆராய்ச்சியின் பயன் அனைத்து பயிர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் சென்றடையும். அதே சமயம் மிகப் பெரிய சுகாதார ஆபத்து இருக்குமானால் ஆரம்பத்திலேயே அதற்கு ஒரு மாற்று முறை நோக்கி ஆராய்ச்சியை கவனம் செலுத்தலாம்.
1940களில் பூச்சுக்கொல்லியாக அறிமுகப்படுத்தப்பட்ட DDT, இயற்கை மற்றும் மனித சுகாதாரத்துக்கு ஏற்படுத்தும் சீர்கேட்டைப் பற்றி ராச்சல் கார்ல்சன் என்ற அறிஞர் 1962ல் மவுன வசந்தம் என்ற புத்தகம் மூலம் வெளிப்படுத்தினார். அவருக்கு எதிராகவும் பெரும் அவதூறுகள் வெளியிடப்பட்டன. 1972ல் அவரது கருத்தில் உண்மை இருப்பதை அறிந்து DDT விவசாய உபயோகத்துக்கு தடை செய்யப்பட்டது. அதே நிலை தற்போதைய மரபணு மாற்ற ஆராய்ச்சிக்கும் வந்துவிடக் கூடாது.
- சதுக்கபூதம் (
- விவரங்கள்
- ராஜு சரவணன்
- பிரிவு: தொழில்நுட்பம்
வெப்பத்தை மூலமாகக் கொண்டு மின்சாரத்தை உருவாக்கும் பல செலுத்தங்களில் (Process) வெப்பம் பலவகைகளிலும் விரயமாகிறது. இந்த விரயங்களை மீண்டும் மின்சாரமாக மாற்றும் ஒரு புதிய நுட்பத்தை (Technology) ஆஸ்திரேலியவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மின்நிலையங்கள் மற்றும் வாகன புகைக் கழிவுகளில் வெளியேறும் வெப்பத்தில் இருந்து நேரிடையாக மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறுகின்றனர்.
மோனஷ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சியாளர்கள் அயனி திரவத்தைச் (Ionic Liquid) சார்ந்த கரிய உமிழ்வற்ற (Carbon Emissions) அதிசக்தி வெளிப்பாடு கொண்ட மின்சாரம் தயாரிக்கும் வெப்பசெல் (Thermo Cell)ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது சுமார் 212 முதல் 392 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் இயங்கக்கூடியது.
ஒரு பொருளின் ஒரு பகுதியை குளுமையான பரப்பிலும் மற்றொரு பகுதியை சூடான பரப்பிலும் வைக்கும் போது அந்தப் பொருளில் சூடான பகுதியில் இருந்து குளுமையான பகுதியை நோக்கி மின் நகர்வு ஏற்படும். இதைச் செய்யும் சாதனம் தான் வெப்பசெல் (ThermoCell) என்று அழைக்கப்படுகிறது.
மின்நிலையங்களில் தரங்கெட்ட(Low Grade) நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் போது அதிலிருந்து கழிவாக வெளியேறும் 266 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொண்ட புகையில் இந்த புதுவித முறையைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும் என்று மோனஷ் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மின்நிலையங்களில் புகையுடன் சேர்ந்து வெளியேறும் வெப்பத்தை வெப்பசெல்லின் (ThermoCell)ஒரு பகுதியிலும், காற்று மற்றொரு பகுதியிலும் படும்படி வைக்கும் போது மின்சாரம் சேமிக்கப்படுகிறது/உருவாக்கபடுகிறது.
"பொதுவாக வெப்பசெல்களில் வெப்பத்தை கட்டுப்படுத்த நீரை மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால் நாங்கள் உருவாக்கிய வெப்பசெல்களில் நீருக்குப் பதில் மின்பகுபொருள் கொண்ட திரவப் பொதியை (Liquid packed with electrolytes) பயன்படுத்துகிறோம். அது அதிக கொதிநிலையை தாங்கக் கூடியது" என்று மோனஷ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சூடான எந்தவொரு பொருளில் இருந்தும் மின்சாரத்தை உண்டாக்குவது இந்த வெப்பசெல்கள் (ThermoCell). சூடான இடம் என்றால் கார்களின் எஞ்சின்கள், சூரிய வெப்பம், மின்நிலையங்கள் என சொல்லலாம். ஏன் மனிதனின் உடல் சூட்டில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம் (கூகுளின் அறிவியல் சந்தையில் இதைப் பற்றிய செய்தி உண்டு)
வெப்பசெல்கள் சாதாரண மின்சார தயாரிப்பு செலுத்தங்களைக் (Process) காட்டிலும் விலை மலிவானது. மேலும் மோனஷ் ஆராய்ச்சியாளர்கள் இதன் மின்சார வெளிப்பாட்டை (Output)அதிகரிக்க அதற்குரிய மேம்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
இதுவரை அணுக்கரு ஆற்றல் பற்றியும், அந்த ஆற்றல் பிற ஆற்றல்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டது என்பது பற்றியும், அணுக்கருப் பிளவின்போது அளவு கடந்த வெப்பம் மட்டுமல்ல, அபாயகரமான கதிர் வீச்சும் எவ்வாறு ஏற்படுகிறது, அது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் வரை எவ்வாறு நீடிக்கிறது என்பது பற்றியும் பார்த்தோம்.
தற்போது இதுகுறித்து முடிவான சில கருத்துகளுக்கு வருவது பற்றி யோசிப்போம்.
அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்கும் பயன்படுத்தலாம், அழிவு வேலைகளுக்கும் பயன்படுத்தலாம். இதில் அணுவை அழிவு வேலைகளுக்குப் பயன்படுத்துவதை எதிர்ப்போம். ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்துவதை ஆதரிப்போம் என்று சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
அதாவது ஒரு கத்தி இருக்கிறது. அந்தக் கத்தியைக் கொண்டு ஒரு பழத்தை வெட்டலாம். நறுக்கலாம். துண்டு போடலாம். அதேபோல அந்தக் கத்தியைக் கொண்டு ஒரு மனிதனின் கழுத்தையும் வெட்டலாம், அவனைக் குத்தலாம், கொலை செய்யலாம். இல்லையா...?
அதேபோலத்தான் அணுசக்தியும். அதை ஆக்க வேலைகளுக்கும் பயன்படுத்தலாம். அழிவு வேலைகளுக்கும் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.
அதாவது இவர்கள் கூற்றுப்படி, கத்தி என்பது எப்போதும் கத்தியாகவேதான் இருக்கிறது என்றாலும் அந்த ஒரே கத்திதான் இரண்டுவித வேலைகளையும் செய்கிறது. இதில் பழம் நறுக்குவது ஆக்க வேலை, கழுத்தை அறுப்பது அழிவு வேலை.
எனவே, அணுசக்தியைப் பயன்படுத்தி அணுகுண்டு தயாரித்து இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானில் 1945 ஆகஸ்டு 6இல் ஹிரோஷிமாவிலும், 9இல் நாகசாகியிலும் போட்டார்கள் அல்லவா? அதேபோல அணுகுண்டு தயாரித்து வைத்துக் கொண்டு எந்த நாட்டின் மீது வீசலாம்? யார் தலையில் போடலாம்? என்று நினைத்துக் கொண்டிருப்பது அழிவு வேலை.
இப்படியெல்லாம் அல்லாமல், அதாவது அணு சக்தியைப் பயன்படுத்தி இம்மாதிரி அழிவு வேலைகளிலெல்லாம் ஈடுபடாமல், இந்தச் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது, அதைக் கொண்டு யந்திரங்களை இயக்குவது, வாழ்க்கைப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்துவது இது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் ஆக்க வேலை.
ஆகவே, அணுசக்தியை இம்மாதிரி ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம், பயன்படுத்த வேண்டும். இதில் எந்தவிதத் தவறும் இல்லை, ஆபத்தும் இல்லை என்று சொல்கிறார்கள் இவர்கள்.
சரி. இவர்கள் சொல்கிற கத்தி உதாரணம் மாதிரியே அணுசக்தி விஷயமும் இருந்துவிடுமானால், அதாவது கத்தி மாதிரியே அணுசக்தியும் அதைக் கைக்கொண்டுள்ள மனிதன் எதைச் செய்ய விரும்புகிறானே அதை மட்டும் செய்து, அவன் விருப்பத்துக்குட்பட்டு இயங்குமானால், இவர்கள் சொல்லுகிற கருத்தை நாமும் ஏற்றுக் கொள்ளலாம்.
இதில் யாருக்கும் எந்தவித விவாதத்துக்கும் இடமிருக்கப் போவதில்லை. ஆனால் கத்தி விஷயம் மாதிரியேவா இருக்கிறது இந்த அணுசக்தி விஷயம்?
அப்படிச் சொல்ல முடியாது. காரணம், பழம் நறுக்கும் போதும், கொலை செய்யும் போதும் கத்தி கத்தியாகவேதான் இருக்கிறது. கத்தியின் பண்பில் எவ்வித மாற்றமுமில்லை. ஆனால் அதைப் பயன்படுத்தும் நபரின் விருப்பு வெறுப்பு நோக்கம் மட்டுமே மாறுபடுகிறது. எனவே இந்த விருப்பு வெறுப்பு நோக்கங்களுக்கேற்ப கத்தியின் செயல்பாட்டுத் தனம் மாறுபடுகிறது. எனவே கத்தியின் பயனும் விளைவும்தான் மாறுபடுகின்றதேயொழிய, கத்தியில் , அதன் பண்பில் எந்தவித வேறுபாடுமில்லாமல், கத்தி கத்தியாகவேதான் இருந்து செயல்படுகிறது. என்றாலும், இங்கே ஒரு முக்கிய விஷயம் கத்தி அதைப் பயன்படுத்தும் நபரின் குறிக்கோளுக்கிணங்க அவனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அவன் விருப்பப்படி செயல்படுகிற ஒரு பொருளாகவே இருக்கிறது என்பது விசேஷமாய்க் கவனிக்கத்தக்கது.
ஆனால், கத்தியின் செயல்பாடு அதைப் பயன்படுத்தும் நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்து அவன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, அவனது குறிக்கோளை மட்டுமே நிறைவேற்றப் பயன்படுவது போல... அணுசக்தியின் செயல்பாடும், அதை உருவாக்கும் அல்லது வெளிப்படுத்தும் நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்து அவனது கட்டுப்பாட்டுக்குள் அடங்கி, அவனது குறிக்கோள்களை மட்டுமே நிறைவேற்றும் வகையில் இயங்க முடியுமா என்றால்... முடியாது என்பதே நமது பதில்.
இன்னும் தெளிவாகச் சொல்வதானால் கத்தியைக் கொண்டு பழம் நறுக்கும்போது, அது பழத்தை மட்டுமே நறுக்குகிறதே தவிர, அது தானாகவே போய் யார் கழுத்தையும் அறுப்பதில்லை. அதாவது பழம் நறுக்க விரும்பும் மனிதனின் கட்டுப்பாட்டை மீறி, அவனது விருப்பத்துக்கு மாறாக வேறு எந்தப் புற விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.
ஆனால், அணுசக்தியை ஆக்க வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது தவறு அல்ல என்று அதை வெளிப்படுத்தும் போது, அந்த அணுசக்தி, அதைப் பயன்படுத்த விரும்பும் மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி, அவனது குறிக் கோளை மட்டுமே நிறைவேற்றக் கூடியதாக, அதாவது குறிப் பிட்ட அந்த ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுவதாக வெளிப்படுவதில்லை. அது வேறு எந்த அழிவு வேலை களையும் செய்யாததாகவும் இருப்பதில்லை.
அல்லது, அப்படிப்பட்ட அழிவு வேலைகளைச் செய்வதற் கான வேறு எந்தவித பொருளையுமே அது உற்பத்தி செய்யாமல் இருப்பதில்லை. அப்படி எந்தவித பொருளையும் உற்பத்தி செய்யாத அளவுக்கு அந்த அணுசக்தியைக் கட்டுப்படுத்தியோ, அல்லது அப்படியே அது எதாவது உற்பத்தி செய்தாலும் அந்தச் சக்தி வேறு எந்த அழிவு வேலைகளையும் செய்துவிட முடியாமல் தடுத்து நிறுத்தி, வெறும் ஆக்கப் பணிகளுக்கு மட்டுமே பயன்படக் கூடிய வகையில் அதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவோ முடிவதில்லை. அதாவது அப்படிப்பட்ட ஒரு கட்டுப்பாடான, வரையறுக்கப்பட்ட எல்லைக் கோட்டுக்குள் அதைக் கையாள முடிவதில்லை.
அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்து கிறோம் என்று சொல்லி, அணு மின்சாரம் தயாரிக்க, அணு உலை அதாவது அணுசக்தி நிலையம் நிறுவிய நாடுகளெல்லாம் தம் நிலையங்களில் தொடர்ந்து பல்வேறு அபாயகரமான விபத்து களைச் சந்தித்து வந்துள்ளன. இது பிற விபத்துகளைப் போலச் சாதாரணமானதாகக் கருதத் தக்கதல்ல. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் நின்று நிலைத்து மனிதனைச் சிறுகச் சிறுகக் கொல்லும் விபத்து இது. இந்தியா உள்ளிட்டுப் பல்வேறு நாடுகளில் நடந்துள்ள இப்படிப்பட்ட விபத்துகள் குறித்து ஏற்கெனவே பார்த்தோம். இவற்றுள் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விபத்துக்கள் இரண்டு.
ஒன்று அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள “மூன்று மைல் தீவு” என்னுமிடத்தில் 1979ஆம் ஆண்டில் நடைபெற்ற விபத்து. மற்றொன்று சோவியத் ஒன்றியத்தின் செர்னோபில் என்னுமிடத்தில் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கோர விபத்து என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.
உலகில் இதற்கு முன் எத்தனையோ அணு உலை விபத்துகள் நேர்ந்திருந்தாலும் அணுசக்தியின் ஆபத்து குறித்து உலகம் முழுவதற்கும் புரியவைத்த பெருமை இந்த இரண்டாவது விபத்திற்கே சாரும் என்பதையும் நாம் அறிவோம்
இந்நிலையில் இந்த அணு உலைகள் அணு மின்சாரம் தேவைதானா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
எனில், இவையனைத்தும் அணுக்கருப் பிளவின் மூலம் பெறப்படும் ஆற்றல் மற்றும் அது சார்ந்த தொழில் நுட்பம் பற்றியவை மட்டுமே. ஆனால், இதற்கு அப்பால் அணுக்கருப் பிணைவு மூலம் பெறப்படும் ஆற்றலும் ஒரு வகை உள்ளது. எனவே, அது பற்றியும் நாம் தெரிந்திருக்க வேண்டுவது முக்கியம்.
அணுக்கருப் பிணைப்பு
அணுக்கரு ஆற்றல் என்பது இரு வகைத் தொழில் நுட்பத்தின் வழி பெறப்படுகிறது. ஒன்று, அணுக்கருவைப் பிளந்து அதன் வழி பெறப்படும் ஆற்றல். இது NUCLEAR Fission எனப்படுகிறது. மற்றொன்று, இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அணுக் கருக்களைச் சேர்த்து அதாவது பிணைத்து அதன்வழி பெறப்படும் ஆற்றல். இது NUCLEAR குரளiடிn எனப்படுகிறது. இதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியதன் நோக்கம், அணுவியல் அறிவியலாளர்களில் சிலர் அணுக்கரு ஆற்றலில் அணுக்கருப் பிளப்பின் மூலம் பெறப்படும் ஆற்றல் மட்டும்தான் ஆபத்தானதே தவிர, அணுக்கருப் பிணைப்பின் மூலம் பெறப்படும் ஆற்றலால் ஆபத்து ஏதும் இல்லை என்கின்றனர். ஆகவே அது பற்றியும் சிறிது பார்ப்போம்.
அணுக்கருப் பிணைப்பு ஆற்றல் என்பது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அணுக்கருக்களை ஒன்றாகச் சேர்ப்பதன் மூலம் பெறப்படும் ஆற்றல் என்று குறிப்பிட்டோமில்லையா. இதில் அணுக்கருப் பிளப்பிற்கும், அணுக்கருப் பிணைப்பிற்கும் தொழில் நுட்ப ரீதியில் உள்ள வேறுபாடு என்ன, எந்த இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அணுக்கருக்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் இது நிகழ்த்தப்படுகிறது, அதிலிருந்து எவ்வாறு ஆற்றல் பெறப்படுகிறது என்பது மிகவும் முக்கியம்.
இதில் முதலாவதாக நாம் தெரிந்து கொள்ளவேண்டியது. அணுக்கருப் பிளப்பிற்கு அணு நிறை அதிகம் உள்ள தனிமங்களின், அதாவது யுரேனியம், புளூட்டோனியம் அணுக் கருக்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றால், அணுக்கருப் பிணைப்பிற்கு அணு நிறை எண் குறைவாக உள்ள ஹைட்ரஜன், ஹீலியம் ஆகியவற்றின் அணுக்கருக்களைப் பயன்படுத்துகிறார்கள்.
இப்படிப்பட்ட அணுப்பிணைப்பிற்கு இதுவரை நான்கு வகையான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதைப் புரிந்துகொள்ள ஏற்கெனவே ஐசோடோப்புகள் பற்றிப் படித்ததை சற்று நினைவு கூர்வோம். அதில் ஹைட்ரஜன் அணுவில் ப்ரோட்டியம், டியூட்ரியம், டிரைட்டியம் ஐசோடோப்புகள் குறித்து பார்த்தோ மில்லiயா. இப்படிப்பட்ட ஐசோடோப்புகளைத் தான் அணுக்கருப் பிணைப்புத் தொழில் நுட்பத்திற்குப் பயன்படுத்து கிறார்கள்.
Deutrium அணுக்கருவுடன் Tritium அணுக்கருவைப் பிணைப்பது DT எனவும், DEUTRIUM அணுக்கரு இரண்டைப் பிணைப்பது DD எனவும், Deutrium அணுக்கருவையும், ஹீலியம் அணுக் கருவையும் பிணைப்பது D3-He எனவும், ஹைட்ரஜன் புரோட்டான், பாரோன் அணுக்கருக்களின் சேர்க்கை P11- B எனவும் நால்வகைப்படுகிறது.
இத்தொழில் நுட்பங்கள் 1997ஆம் ஆண்டு வாக்கில் ஐரோப்பியக் கூட்டு வலயம் (Joint European Torus) சார்பில் மேற்கொள்ளப்பட்டு 2005 வாக்கில் International Thermol Nuclear Experimental Reactor-ITER என்னும் சோதனை அணுஉலை நிறுவப்பட்டது.
இதையடுத்து 2010 வாக்கில் High Power Laser Energy Research (HIPER) மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. எனினும் இம்முயற்சி முற்றாக கைகூடவில்லை. சோதனைகள் தொடர்கின்றன.
ஆபத்தான அணுப்பிளப்புத் தொழில் நுட்பத்திற்கு மாற்றாகவே அணுப் பிணைப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனில் இதிலும் அதே ஆபத்துகள் வேறு வகையில் தொடர்ந்தன. காட்டாக, அணுக்கருப் பிளப்பின்போது வெளிப் பட்டது போலவே ஆபத்தான கதிரியக்கம் அணுக்கருச் சேர்க்கையின் போதும் வெளிப்பட்டது.
ஆக அணு உலைக்கான தொழில் நுட்பத்தில் எரிபொருளும் அதன் இயக்கமும் மட்டும்தான் இதில் மாறி யுள்ளதே தவிர மற்றபடி அணு உலைக் கட்டமைப்பில், வடிவமைப்பில், அணுக் கருப் பிளப்பிற்கான அதே முறையே இதிலும் பின்பற்றப்பட வேண்டியிருப்பதால், அணுப்பிளப்பு உலையில் உள்ள அனைத்து ஆபத்துகளும் இதிலும் நிறைந்திருக்கின்றன.
அணுப்பிளப்பு முறைக் கழிவுகளைப் பொறுத்தமட்டில் யுரேனியம் கழிவு தன் கதிரியக்கத்தில் பாதியை இழக்க 24,000 ஆண்டுகள் ஆகும் என்றால் அணுச் சேர்க்கை முறைக் கழிவுகள் 50 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை மட்டுமே கதிரியக்கத் தன்மை கொண்டதாக இருக்கும் எனப்படுகிறது. என்றாலும் 24,000 ஆண்டுகள் வெளியேற்றத்தை 100 ஆண்டுகளுக்குள்ளேயே இவை வெளிப்படுத்தவேண்டி இருப்பதால் இது, அணுப் பிளப்புக் கழிவைவிட பல மடங்கு வீரியம் மிக்கதாக இருக்கும் எனப்படுகிறது.
அணுப் பிணைப்பு உலைகளிலிருந்து பெறப்படும் கழிவுகளின் அரை ஆயுள் காலம் சொற்பமாகவே இருக்கும் என்கிற அதே வேளை, இதுவே உலகம் முழுக்கப் பரவலாகும் போது அது எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதும் கேள்வியாக இருக்கிறது.
இதில் இப்படிப்பட்ட பல பின்னடைவுகள் இருந்தும் அறிவியல் ஆய்வாளர்கள் ஆபத்தில்லாத தொழில் நுட்பத்தை நோக்கித் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
காரணம், மனித குலத்தின் நவீன வாழ்க்கை வசதிகளுக்கு, தொழில் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு ஆற்றலின் தேவை மிகமிக இன்றியமையாததாக இருக்கிறது. அதைப் பெற மேற்கொண்ட அணுக்கருப் பிளப்புத் தொழில்நுட்பம் பேராபத்தை விளைவிப்பதாக இருப்பதை உலகம் உணர்ந்து கொண்டது. இந்நிலையிலேயே மாற்றுத் தொழில் நுட்பம், தேடிஅணுக் கருப் பிணைப்புச் சார்ந்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
மட்டுமின்றி, அணுக் கருப் பிணைப்பிற்குப் பயன்படுத்தப் படும் ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம் முதலான மூலப் பொருள்கள் பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் கிடைக்கக் கூடிய வகையில் இயற்கையில் மலிந்துள்ளதால், மனித குலத்தை இந்த ஆற்றல் நெருக்கடியிலிருந்து மீட்க இந்த வற்றாத வளத்தைப் பயன்படுத்துவது பற்றி அறிவிய லாளர்கள்ஆராய்ந்து வருகிறார்கள்.
அணுக்கருப் பிளப்புத் தொழில்நுட்பம் பல்வேறு பேரபாயங் களையும், பேரழிவுகளையும் ஏற்படுத்தி மனித குலத்தை கிலி கொள்ளச் செய்துள்ள நிலையில் இதற்கு மாற்றாக அணுக்கருச் சேர்க்கை தொழில் நுட்பமாவது கை கொடுக்காதா, மனித குலத்தை வாழ வைக்க உதவாதா என்கிற அவா எழுகிறது. ஆனால் இதுவரை கண்டு வந்துள்ள தொழில் நுட்பம் அணுக்கருப் பிளப்பு போலவே, அணுக்கருப் பிணைப்பும் ஆபத்தானதுதான் என்பதையே மெய்ப்பித்து வருகிறது.
இந்நிலையல் இப்படிப்பட்ட ஆபத்துகளற்ற ஆற்றல் உற்பத்தித் தொழில் நுட்பத்தை மனித குலம் பெற வேண்டும் என்பதே அனைவரது அவாவும்.
இந்த நோக்கில், ஒன்று அணுக்கரு சார்ந்து வெற்றிகரமானதொரு தொழில் நுட்பத்தை அறிவியல் உலகம் காண வேண்டும். இல்லையென்றால் இதை விட்டு மாற்றுத் தேடல்களில், மாற்று ஆற்றல்கள் பற்றி சிந்திக்கவேண்டும். அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள முயல வேண்டும். இதுவே மனித குலத்தை ஆற்றல் நெருக்கடியிலிருந்து மீட்கவும் வாழ வைக்கவும் வழி வகுக்கும்.
- இராசேந்திர சோழன்
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
"நீ அந்த நடிகையின் படத்தத்தானே பார்த்திருக்கே, நான் தொட்டே பார்த்திருக்கேன் தெரியுமா''.
அதெப்படி, கும்பகோணத்தில இருக்கிற கோபால், பாவுலிட் நடிகையைத் தொட்டிருக்க முடியும். அதற்குத்தான் வந்திருக்கிறது ஹேப்டோ கிராஃபி. லாஸேஞ்சலிஸில் இருக்கும் பேரக்குழந்தையின் விரலை லால்குடியிலிருந்தபடியே தாத்தா தொட்டுப் பார்த்து ஆசையைத் தீர்த்துக்கலாம். நீங்கள் பார்த்ததை இன்னொருவரும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள், பிரச்சனையில்லை மோபைல் கேமராவே போதும். படம் எடுத்து காட்டிவிடலாம். நீங்கள் தொட்டு அனுபவித்ததை இன்னொருவரிடமும் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள், இப்போது போட்டோ கிராஃபி போல ஹேப்டோகிராஃபி வந்திருக்கிறது. (படம். குச்சன்பெக்கர்.ஹேப்டோகிராஃபிநிபுனர். இவரின் கீழ் 50 மாணவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள்.)
நமக்கு இருவித தொடு உணர்ச்சிகள் இருக்கின்றன. டேக்டைல் உணர்ச்சிகள் சருமம் மூலம் அறியும் சுற சுறப்பு, வழுவழுப்பு, அழுத்தம், நழுவுதல், அதிர்வுகள், சூடு, குளிர் முதலியன. இன்னொரு உணர்ச்சி கைனீஸ்த்தடிக் உணர்ச்சி. மூட்டுகளின் பொசிஷன், உடம்பின் அசைவுகள், தள்ளு வேகம் போன்றவை.
செயற்கையாக காட்சிகள், வாசனைகள், சுவைகள், ஒலிகள் முதலியவற்றை கம்ப்யூட்டரால் உருவாக்க முடிகிறது. தொடு உணர்ச்சியையும் உருவாக்கினால் என்ன. ஹேப்டிக் டெக்னாலஜி அது பற்றியதுதான். இப்போதே உங்கள் மோபைல் ஃபோனில் வைப்ரேஷன் மூலம் கொஞ்சம் தொடு உணர்ச்சியை உணர்கிறீர்கள். சீக்கிரமே சகல தொடு உணர்வுகளையும் உற்பத்தி செய்யும் பரப்புகள் வந்துவிடும்.
கை, விரல் போன்ற செயற்கை உறுப்புகள் நிஜமான தொடு உணர்வை உங்கள் கைகளுக்குத் தரும். இனி ஃப்ளையிங் கிஸ் தேவையில்லை, மொபைல் ஃபோனை கன்னத்தில் வைத்தால் நிஜமான முத்தம் அதே உயிரூட்டத்துடன் கிடைக்கும். எதையும் தோடாமலே தொட்டது போன்ற உணர்ச்சிகள் கிடைக்கும். காற்றின் அதிர்வுகளே உங்கள் உடம்பில் தொட்டுத் தழுவிய உணர்ச்சியை வழங்கும்.
மூளையில் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனி இடங்கள் உண்டு. இதில் மிக அதிமான இடம் காட்சிக்கும் தொடு உணர்ச்சிக்கும்தான். வாசனை, சுவை, சப்தம் ஆகியவற்றிற்கு கொஞ்சம் இடம்தான் தரப்பட்டுள்ளது. இப்படியிருக்க ஏன் தொடு உணர்ச்சியை நாம் செயற்கையாக இத்தனைநாள் உருவாக்காமல் இருந்தோம் என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகிறார்கள். (படம். டேவிட். சிற்பி- மைக்கெலாஞ்சலோ)
எந்த பரப்பின் உணர்ச்சியை சித்தரிக்க வேண்டுமோ அந்த பரப்பின் மீது பேனா போன்ற கருவியை தேய்த்தால், அதில் ஏற்படும் தொடு உணர்ச்சிகள் கம்ப்யூட்டரில் டிஜிட்டலாக பதிவாகிவிடும். அந்த உணர்ச்சியை அதே தண்மையில் விரும்பிய பொருளில் செலுத்தலாம். (படம்: மோனாலிசா. ஓவியர்-லியனார்டோடா வின்சி)
ஹேப்டோ கிராஃபி வெறும் வேடிக்கைப் பொருளல்ல. சும்மா உங்களை உசுப்பேத்தத்தான் ஜன ரஞ்சகமான விஷயங்களைப் பற்றி சொன்னேன். இதன் உண்மையான அப்ளிகேஷன்களைக் கேட்டால் அசந்துவிடுவீர்கள்.
ஆன் லைன் ஷாப்பிங் செய்கிறீர்கள், வாங்கும் புடவை, உள்ளாடைகள், எலெக்டரானிக் பொருள்களை வீட்லிருந்தே தொட்டுப் பார்க்கலாம். தொடாதே என்ற எச்சரிக்கையை அரும்பொருள் காட்சியகங்களில் பார்க்க முடியாது. விர்ச்சுவல் பிம்பங்களைத் தொட்டு அனுபவிக்கலாம். முற்காலச் சோழர்களின் ஐம்பொன் சிலைகளை உச்சி முதல் உள்ளங்கால் வரை தொட்டு ரசிக்கலாம்.
ஹேப்டிக் கையுறைகள், முழங்கை உறைகள் இன்னம் இதுபோன்ற உடல் உறுப்புகளுக்கான உறைகள் உள்ளன. இவற்றை விளையாட்டு பழகுபவர்கள் அணிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டரில் விரும்பிய ஸ்போர்ட்ஸை தொடங்கிவைத்தால், ஒரு கோச் எப்படி கைகளை, கால்களைப் பிடித்து கற்றுத் தருவாரோ அதுபோல சொல்−த்தரும். உடம்பில் அணிந்த உறைகள் கோச் பிடிப்பது போலவே பிடித்து எப்படி அசைக்க வேண்டும் என்று செய்யும். பரத நாட்டியம், டிஸ்கோ, ஹிப் ஹாப் எந்த நடனமாக இருந்தாலும வீட்டிலிருந்தே செய்யலாம்.
மருத்துவ மாணவர்கள் நோயாளிகளை எப்படி கையாளவேண்டும், நுட்பமான சர்ஜரிகளை செய்யும் உணர்ச்சிகளை வழங்கி வெட்டுவது, தைப்பது, போன்ற வேலைகளை செய்து செய்து பழகலாம். சொத்தைப் பல்லை பல் மருத்துவ கருவிகளின் உதவியால் எப்படி கண்டுபிடிப்பது போன்ற பயிற்சிகளை வகுப்பறைகளிலேயே வழங்க முடியும்.
நான் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? கோயம்புத்தூர் பீளமேட்டிலிருந்து அங்குலம் கூட நகராமல் பிரெஞ்ச் லூவ்ர் மியூசியத்தில் உள்ள மோனாலிசாவைத் தொடுவேன், இத்தாலியில் ஃப்ளாரென்சில் மைக்கெலாஞ்சலோவின் டேவிட் சிலையைத் தொட்டு மகிழ்வேன்.
- முழுமை அறிவியல். மணி.
- ஹிக்ஸ் போசான் (கடவுள் துகள்?!)
- மூளை சித்தரிக்கப்படுகிறது
- அணுசக்தி சட்டம் 1962
- கோமாவில் கிடப்பவர்கள் முன்னே
- இந்திய அணுசக்தி துறையின் திட்டமும் திண்டாட்டமும்
- இந்தியாவில் அணுசக்தி திட்டங்கள்
- அணு உலை எதிர்ப்பும் உலக நாடுகளும்
- செர்னோபில் அணு உலை விபத்து
- அமெரிக்காவும் அணுசக்தித் திட்டங்களும்
- அணுசக்தி - பொதுவான வாதங்கள்
- அணுசக்தி தூய்மையானதா? நம்பகமானதா?
- அணுசக்தி சாதகமும் - பாதகமும்
- கதிரியக்கத்தின் உயிரியல் விளைவுகள்
- அணுசக்தித் தொழில் நுட்பம்
- அணுகுண்டும் அணு உலையும்
- கதிரியக்கமும் கதிர்வீச்சும்
- அணுக்கரு ஆற்றலும் இதர ஆற்றல்களும்
- அணுக்கரு ஆற்றல்
- பல்வகை ஆற்றல்கள்
- அணுவின் இயற்பியல் & வேதியியல் பண்புகள்