maruthu painting 1பெருங்காமநல்லூர் படுகொலையின் 100ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு...

15 ஆம் நூற்றாண்டில் வெளிப்படையாக ஆரம்பித்த உழவர் கிளர்ச்சியும், 18 ஆம் நூற்றாண்டில் வெடித்த புரட்சியும் இன்றுவரை தொடரும் போராட்டக் களத்தின் பின்னணி வரலாறாகக் கொள்ளலாம். இது பற்றிய ஒரு சுருக்கமான பார்வை 

'வழுதிலம் பட்டு உசாவடியில் வலங்கை தொண்ணூற்றெட்டும், இடங்கை தொண்ணூற்றெட்டும் நிறைவர நிறைந்து, குறைவரக் கூடி இருந்து' கல்வெட்டின்படி….

கி.பி.1429 சித்திரை மாதத்தில் வலங்கையின் 98 சாதிகள் - இடங்கையின் 98 சாதிகள் ஒன்றுகூடி அரசிற்கு எதிராக நிறைவேற்றிய ஒற்றுமைத் தீர்மானம்

'ஐரோப்பியர்களின் அதிகாரம் வீழும் நாளில் நிலையான கண்ணீரற்ற மகிழ்ச்சியை பெறுவோம்' - திருச்சிக் கோட்டை சுவரில் 1801இல் மருது சகோதரர்கள் வெளியிட்ட புரட்சிக்கான அழைப்பு.

‘தற்சமயம் பல நாட்டு மக்கள் ஒன்றுபட்டு எழுந்து போராடினால் ஆங்கிலேயர் அழிக்கப்படுவர்’ - செவத்தைய்யா, தஞ்சை அரசருக்கு 1801இல் எழுதிய கடிதம்

அரசிற்கும் குடியானவர்களுக்குமான போராட்டம் இன்று துவங்கப்பட்டதல்ல. இதற்கென்ற ஒரு வரலாற்று தொடர்ச்சி இருந்திருக்கிறது. சமூகத்தின் பல்வேறு படிநிலைகளில் இருக்கும் மக்கள் சுரண்டப்படுவதும், அச்சுரண்டலுக்கு எதிராக சாமானிய மக்கள் கலகம் செய்வதும் வரலாறாகவே ஆவணமாக பதிவாகி இருக்கிறது.

இது போன்ற ஒரு போராட்ட வரலாறு தமிழ்நாட்டிலும் இருந்து வந்துள்ளதை வரலாற்றாசிரியர்கள், தொல்லியல் அறிஞர்கள், அரசியல் செயற்பாட்டளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இப்போராட்டம் உச்சத்தை அடைந்ததை பாளையக்காரர்களின் புரட்சியில் நாம் பார்க்கிறோம். இப்புரட்சிக்குப் பின்புலமாக இயங்கிய எளிய மக்களின் திரட்சி இந்த போராட்ட வரலாற்றை நமக்கு சொல்லுகிறது. இந்த மக்கள் திரட்சி வெள்ளையர்கள் வருவதற்கு முன்பிருந்தே கூர்மைப்பட்ட ஒரு போராட்ட நிலையாக தமிழ்நாட்டில் இருப்பதை நாம் காண முடிகிறது. சோழர்கள் காலத்திலும் அதற்கு பின்புமான காலத்திலும் மக்கள் திரண்டு தமக்கான உரிமையைப் பெற்றுக் கொள்வது தொடர்ந்து நிகழ்ந்திருக்கிறது.

ஆரிய வேத மரபினை ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்ட பின்னர் குடியானவர்கள் பல்வேறு சாதிகளாக பிரிக்கப்பட்டனர். குடிகள் சாதிகளாக மாற்றம் பெற்று சாதிய மேலாண்மையின் அடிப்படையிலான பிராந்திய நாடுகள் உருவாக்கப்பட்டன. இப்படியான பிளவுகள் உருவான போதிலும், இந்நாடுகள் கடந்த பொது அமைப்புகள் குடியானவர்கள் இடையே ஏற்பட்டதை கல்வெட்டு ஆவணங்கள் நமக்குச் சொல்கின்றன. இந்த அணி சேர்க்கை பிற்காலத்தில் போராட்டத்தினை ஒருங்கிணைக்கவும் உதவியிருக்கிறது.

ஆங்கிலேயர் நம்மை காலனியாக்கியப் பின்பு இந்த பிராந்தியக் நாடு எனும் கட்டமைப்புகள் சிதைவுற்ற நிலையிலும், குடியானவர்கள் காலனியத்திற்கு எதிராகத் திரண்டனர். காலனிய காலத்தில் நடந்தேறிய அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பாக வெடித்துக் கிளம்பிய வெகுமக்களின் புரட்சிகர செயல்பாட்டினை மருது சகோதரர்களின் ஜம்பு தீபகற்ப பிரகடனத்தில் நாம் ஆவணமாகக் காண முடிகிறது.

பேரரசுகள் தமிழ்நாட்டில் உருவான காலத்தில் ஏற்பட்ட சமூக, அரசியல் மாற்றங்கள் இப்போராட்டங்களில் பிரதிபலிக்கின்றன. குடியானவர்களின் போராட்டங்கள் அதிகப்படியான வரிச் சுரண்டலை எதிர்ப்பது என்பதிலிருந்து சமுகரீதியான மதிப்பை உயர்த்துதல், சமய மதிப்பைக் கோருதல் என்கிற கோரிக்கை வரை நீண்டிருக்கிறது. அதாவது வரியை நீக்குதல், உழவு உற்பத்தி மீதான அரசுக் கட்டுப்பாடுகளை நீக்குதல் என்பதிலிருந்து, தங்களது சாதிக்கு சமூக மதிப்பளிக்கும் சம்பிரதாயங்களை அதிகாரப் பூர்வமாகப் பெறுதல், சமூக மதிப்பை உயர்த்தும் வழிமுறையைக் கோருதல் என பல்வேறு கோரிக்கைகளுக்கு போராட்டம் நடந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் அடித்தள மக்களாகிய குடியானவர்கள் பல்வேறு சாதிகளாகப் பிரித்து வைக்கப் பட்டிருந்தாலும், சுரண்டுதலுக்கு எதிராக போராடும் பொழுது போர்க்குணத்தையும், சமூக ஒற்றுமையையும் பேணிக் காத்து வந்திருக்கிறார்கள்.

பல்லவர் - சோழர் காலத்திய சமூகம் அமைப்புகளும், சுரண்டல்களும்:

கங்கை வெளியிலும், தக்காண பீடபூமியிலும் பார்ப்பனர்களுக்கு நிலம் வழங்கும் முறை இருந்தது. இது பல்லவர்கள் காலத்தில் தென்னகத்திற்கும் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. குப்தர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்ட இம்முறையை பல்லவர்களும், அவர்களுக்கு பின் வந்த சோழர்களும் பின்பற்றினர். பார்ப்பனர்களுக்கு வழங்கிய கிராம நிலங்களை / தானங்களை பிறச் சமூக மக்கள் மீட்டெடுக்க இயலாத வண்ணம் வேத மரபுகள் மக்களிடத்தில் திணிக்கப்பட்டன.

பல்லவ அரசரான இரண்டாம் நரசிம்மவர்மனின் ரேயூருச் செப்பேடு பின்வரும் தகவலைக் கொடுப்பதாக அறிஞர்கள் நொபுரு கராசிமா-சுப்பராயலு அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அச்செப்பேடு (83-86 (88)) என்பது, "பிராம்மணன் சொத்து கொடிய விசம், வேறு எந்த விசமும் விசமாகாது. விசம் ஒருவனைக் கொல்லும். பிரம்ம சொத்தோ புத்திர பெளத்திரர்களையும் (கொல்லும்). தான் அளித்தது பிற அளித்தது எதுவாயினும் பூமியை அபகரிக்கும் ஒருவன் அறுபதினாயிரம் ஆண்டுகள் மலத்தில் புழுவாகப் பிறந்து உழல்வான்” என்கிறது.

இதையே முதலாம் இராசராசன் காலத்து கல்வெட்டு 'பிராமணர்களின் ஊரில் பிறர் (பிற சமூகத்தினர் தங்களுடைய) நிலத்தை விற்றுவிட வேண்டுமென்று' ஆணை பிறப்பிக்கிறார். தம்முடைய சாதிய படிநிலையை மீறுகிறவர்களுக்கு 'பல்வேறு தண்டனைகள் பாவமாக வந்து சேரும்' எனும் பழிச்சொல் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்படுகிறது. இந்த வழிமுறை ஆரிய அடிமையாக மக்கள் சுரண்டப்பட்டதை காட்டுகிறது.

இவ்வாறு கடுமையான சூழலில் மக்கள் வாழ்ந்த பொழுதிலும், அடக்குமுறைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து கிளர்ச்சி செய்து வந்திருக்கிறார்கள். எனவே தான் இந்த சாதிய வரையரையை/ கட்டுப்பாட்டை/ முடிவுகளை மீறுகிறவர்களுக்கு ‘பாவம்’ எனும் தண்டனை கிடைக்கும் என்று பல்லவர்கள் காலத்தில் 7 ஆம் நூற்றாண்டில் சொல்லப்பட்டது. இந்த தண்டனைகள் என்பது சோழர் காலமான 11, 12 ஆம் நூற்றாண்டில் மாறுபாடு கொள்கிறது. அதாவது பேரரசுகள் உருவான பின்னர் இந்த 'பாவம்' எனும் தண்டனை ‘ராச துரோகமாக’, ‘தேச துரோகமாக’ வரையரை செய்யப்படுகிறது. இது மக்களிடத்தில் இருந்த கட்டுப்பாட்டினை மீறும் போக்கினைத் தடுக்கும் வகையில் தீவிரமாக்கப்பட்டதைக் காண முடியும். இந்தக் கட்டுப்பாடுகள் மூலமாக பிராந்திய நாடுகளாக ‘சதி-குலவழி’ நாடுகளை பாதுகாக்கும் முறையாக இருந்திருக்கின்றன. மேலும் இந்த சாதிய இறுக்கத்தினைப் பாதுகாக்க இது பயன்பட்டது, என்றாலும் அடிப்படையில் இந்தக் கட்டுப்பாடுகள் என்பது உயர்சாதிகளின் சுரண்டலுக்கான பாதுகாப்பாகவே உருவாக்கப்பட்டன என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும். அரசாட்சியை நிலைநிறுத்த மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்த சூழலையும், வளர்ந்து வந்த இறுக்கத்தையும் இந்தப் போக்குகள் காட்டுகிறது.

சோழர், விஜயநகர ஆட்சி காலத்தில் நடைபெற்ற குடியானவர் எதிர்ப்புகளும், கலகங்களும்:

குடியானவர்கள் பல சமூகங்களாக/ சாதிகளாக பிரிக்கப்பட்டு படிநிலையில் வைக்கப்பட்ட போதிலும், தங்களது உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தனர். குடியானவர்களின் எதிர்ப்பு, அல்லது உரிமைக்கோரல் என்பது இரண்டு வகைப்பட்டதாக இருந்தது. ஒருபுறம் சமயச்சடங்குகளில் மேல்நிலையாக்கம் பெற உரிமை கோருதல். அதாவது சாதிய நிலையில் தமக்கு உயர் நிலை வேண்டுமென்பதற்காகவோ, சடங்குகளைச் செய்ய உரிமை கோருவதாகவோ, அல்லது கோவில் பண்டிகைகளில் முன்னுரிமை, சிறப்புரிமை கோருவதாகவோ அமைந்திருந்தது. இந்த போக்குகள் அன்றிலிருந்து இன்று வரை சாதிச் சண்டைகளுக்கே வழிகோலி இருக்கின்றன. இந்த சடங்கு - சமய உரிமைகளை வழங்குவது, பறிப்பதன் மூலம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வினை அரசர்களும், நில உடமையாளர்களான பார்ப்பனர்களும், வெள்ளாளர்களும் நிலைபெறச் செய்தனர்.

இந்த சடங்கு - சமய உரிமைகளை வைத்து இச்சாதிகளுக்கிடையே ஓயாது சச்சரவுகள் இருந்து வந்திருக்கின்றன. இது குறித்து ஏராளமான ஆவணங்கள் நமக்கு காணக் கிடைக்கின்றன. இதே சமயத்தில் அரசின் வரிவிதிப்புகள், நில உடமையாளர்களின் கடுமையான சுரண்டல்கள், ஊழல்கள் எதிராக குடியானவர்களின் போராட்டமும் ஆவணங்களாக கிடைத்திருப்பதை ஆய்வாளர் சுப்பராயலுவும், நொபுரு கராசிமாவும் பதிவு செய்திருக்கிறார்கள். சுரண்டலுக்கு எதிரான இந்த குடியானவர்களின் போராட்டங்களில் மக்கள் சாதி கடந்தும், தமக்கிடையேயான பூசல்களைக் கடந்தும் ஒன்றிணைந்து போராடி இருக்கிறார்கள் என்பதையும் நாம் காணலாம்.

முதலாம் குலோத்துங்கன் காலமான கிபி1070 காலத்தில் கம்மாளருக்கு பல்வேறு சடங்கு உரிமைகளைப் பெற்ற திருச்சி உய்யங்கொண்டான் திருமலைக் கல்வெட்டு சொல்கிறது. இவ்வாறான உரிமைகள் என்பது செருப்பு அணிந்து கொள்வது, தம் வீடுகளுக்கு சுண்ணாம்பினால் வெள்ளையடிப்பது, திருமணச் சடங்குகளில் இரட்டைக் கொம்பு முழங்கிக் கொள்ளுதல் எனும் சடங்குகளுக்கான உரிமைகள். இவ்வாறு சமயச் சடங்குகளில் உரிமையை பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு சாதிகள் உரிமைக் கோரிக்கை வைத்த வரலாறு ஆங்கிலேய ஆட்சிக் காலம் வரை நீடித்த ஒன்றாகும். இன்று வரை நிகழும் சாதிச் சச்சரவுகளில் இந்த சடங்கு வகைப்பட்ட உரிமைகள் மீது நிகழும் சச்சரவுகள் முக்கியத்துவம் பெற்றிருப்பதை நாம் காண முடியும்.

பல்லவர் காலகட்டத்தில் விவசாய சமூகம் விரிவுபடுத்தப்படுகிறது. பின்னர் பிற்கால சோழர்கள் காலத்தில் மேல்லாதிக்க விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த விவசாய உற்பத்தி வளர்ச்சியே சோழர்களின் எழுச்சிக்கும், வளத்திற்கும் காரணமாக அமைந்தது. சோழர்காலத்தில் மக்கள் நிலைபெற்று வாழும் வகையிலான ‘வட்டார நாடுகள்’ உருவாக்கப்பட்டன. வேணாடு, கங்கநாடு, எயில்நாடு போன்றவை பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டனர். பின்னர் சோழர் காலத்தில் வட்டார அளவிலான சாதி நாடுகளாக இவை மாற்றப்பட்டன. கைவினைஞர்கள், மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டவர்கள் இந்த ‘ஊர்’வாழ்க்கையை மேற்கொண்டார்கள். அரசரின் நாட்டிற்குள், இந்த 'சமூகரீதியான-நாடுகள்' கிட்டதட்ட இரட்டை ஆட்சி முறை போல செயல்பட்டன. அரசரின் ஆட்சி மாறினாலும் இந்த சமூக ரீதியான நாடுகள் மாறவில்லை. இவை ஒரு வருவாய் அலகுகளாக தொடர்ந்து இயங்கின.

கிபி 1000ஆம் நூற்றாண்டு வாலிக்கண்டபுரம் கல்வெட்டில் வலங்கை, இடங்கை சாதிப்பிரிவுகள் இருந்ததைக் குறிப்பிடுகிறது. அதாவது சோழர் காலத்தில் சாதிகள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப் பட்டிருந்தன. நிலத்தை வைத்திருந்த நில உடமையாளர் சாதிகள் தங்களோடு இணைத்துக் கொண்ட சாதிகள் வலங்கை சாதிகளாக அறியப்பட்டன. வணிகர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்டவர்கள் இடங்கை சாதிகள் என்று அறியப்பட்டனர் என்று அறிஞர். வானமாமலை கூறுவார். உழவர்கள் அணிகளாக தமக்கான அமைப்பினை உருவாக்கி இருந்தது 12ஆம் நூற்றாண்டில் தென்படுகிறது. இவ்வமைப்பு ‘சித்திரமேழி பெரிய நாடு’ என்று அழைக்கப்பட்டது. இது தவிர ஐந்நூற்றுவர் எனும் வணிகர் அமைப்புகள், வலங்கை - இடங்கை அமைப்புகள் இருந்தன.

அக்காலத்தில் பார்ப்பனர்களும், வெள்ளாளர்களும் வேளாண் உற்பத்தியையும், வருவாயையும் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். பார்ப்பனர்கள் அதிக உரிமைப் பெற்றவர்களாக இருந்தனர். மறுபுறத்தில் நிலமற்றவர்களாக உரிமையற்று பெரும்பாலான குடியான மக்கள் வாழ்ந்தார்கள். இதில் வைதீக (ஆரிய) சடங்குகள் செய்பவர்கள் என்கிற காரணத்தினால் பார்ப்பனர்கள் மேலதிக உரிமை பெற்றவர்களாக இருந்தனர். பிராமண ஊர்களில் ‘பிராமணருக்குக் கீழ்ப்பட்ட ஜாதிகளில் உள்ளோர் தங்கள் காணிகளை (நிலங்களை) விற்றுவிட வேண்டும்’ என்கிற அரசாணை முதல் இராசராசன் கல்வெட்டில் ஆணையாக இருக்கிறது (தென்னிந்திய கல்வெட்டு – நொபுருகராசிமா - சுப்பராயலு 5:1409).

இப்படியான நிலத்தின் மீதான ஆதிக்கத்தினை செலுத்தியவர்களை எதிர்த்து நடந்த போராட்டங்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக வரலாற்றை நிரப்பி உள்ளது. நிலங்கள் மீதான வரிகள் பெரும் சுமையாக இந்த நிலவுடமையாளர்கள் விதித்த பொழுது எல்லாம் எதிர்த்துப் போராடி இருக்கிறது தமிழ்ச் சமூகத்தின் குடியானவர்கள். இந்நிலை விஜயநகரப் பேராரசின் காலத்திலும் தொடர்கிறது. ஆதிக்க ஆற்றல்களை எதிர்த்து கிளர்ச்சிகள் நடந்திருகிறது. அடக்குமுறைக்கு எதிராக, பல ஊர்களில் குடியான மக்கள் ஊரை விட்டு வெளியேறிச் சென்றிருக்கின்றனர்.

15 ஆம் நூற்றாண்டில் உழவர்களின் கலகம்:

விவசாயிகள், வணிகர்கள், கைவினைஞர்கள் மீதான வரியை எதிர்த்து மக்கள் திரண்ட வரலாறை 1429 ஆம் ஆண்டின் தஞ்சை குறுக்கைப் பகுதி கல்வெட்டு சொல்கிறது. அநியாயமான வரியை எதிர்த்து வரி செலுத்துவதில்லை என குடியானவர்கள் முடிவெடுத்து கிளர்ச்சி செய்ததை சொல்கிறது. அதே போல கள்ளக்குறிச்சிக்கு அருகே இருக்கும் குகையூர், திருக்கோவிலூர் பகுதியின் கீழூர், பொன்னேரி அருகில் இருக்கும் திருப்பாலைவனம் மக்கள் வரிவிதிப்பை எதிர்த்து விஜயநகர அரசரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை பெற்றிருக்கின்றனர். எதிர்காலத்தில் இவ்வகையான வரிவிதிப்பை தவிர்க்கும்படி குறுநில மன்னர்கள், பாளையக்காரர்களுக்கு அரசர் உத்திரவிட்டிருக்கிறார் என்பதும் பதிவாகக் கிடைக்கிறது.

இரண்டாம் தேவராய மன்னர் காலத்திலும் கிளர்ச்சி நடந்திருக்கிறது. இராஜன்யாக்கள் எனப்படும் அரசு அதிகாரிகளும், காணியாளர் எனும் நில உடைமையாளர்கள் மற்றும் பார்ப்பனர்களும் தங்களிடம் மேலதிகமாக வரி வசூலிப்பதால் மேற்குறிப்பிடப்பட்டவர்களுக்கு தங்குமிடம் கொடுப்பதில்லை என விருத்தாச்சலம் பகுதியில் வாழ்ந்த சிறுவிவசாயிகள், கைவினைஞர்கள் ஒன்று திரண்டு முடிவெடுத்தனர். இம்முடிவை மீறுபவர்களுக்கு மரணத் தண்டனைக்கு உள்ளாவார்கள் என முடிவெடுத்தனர்.

இந்த சுரண்டல் தொடர்ந்த பொழுது 1501 ஆம் ஆண்டில் எளவானசூர் கல்வெட்டில் ஒரு முக்கியமான தகவலைக் கொடுக்கிறது. வலங்கை, இடங்கை என தொடர்ந்து சச்சரவிட்டுக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருந்த குடியான தமிழர்கள் ஒன்று கூடி தமக்குள்ளான சச்சரவுகளுக்கு முடிவு கட்டி ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர். இந்த ஒற்றுமையின் விளைவாக வரிவிதிப்பை தவிர்ப்பது எப்படி என்றும் முடிவெடுத்தனர் என்பதைக் இக்கல்வெட்டு நமக்கு சொல்கிறது. இதன்படி பார்ப்பனர்களும், வெள்ளாளர்களும் தம் மீது விதிக்கும் ‘வாரவரி’யை நிறுத்த வேண்டும் முதலான தீர்மானத்தை நிறைவேற்றினர். (வாரவரி என்பது நிலத்தில் உழைக்கும் மக்கள் கட்ட வேண்டிய வரி). நிலம் என்பது தமக்கு சொந்தமாகாத வண்ணம் தம்மை சுரண்டிக் கொண்டிருந்த ஆரிய - வேத முறையை எதிர்க்க வழி இல்லாத வண்ணம் இம்மக்கள் சுரண்டப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்த ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் தமக்குள்ளாக ஒற்றுமையை ஏற்படுத்த முயன்று கொண்டிருந்த வரலாறு சோழர் காலத்திற்கு பின் பாண்டியர் ஆட்சி ஏற்பட்ட சமயத்திலும் நடந்திருப்பதை பாண்டியர் நாட்டுப்பகுதியில் கிடைத்த கல்வெட்டுகள் நமக்குத் தருகின்றன.

மதுரையை அடுத்த திருமங்கலத்தில் கண்டறியப்பட்ட 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் இடங்கை, வலங்கை சாதிகள் தமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொண்டதைப் பற்றிய தகவல் நமக்குக் கிடைக்கிறது. இக்கல்வெட்டின் காலகட்டம் மதுரை கோச்சடையவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவரின் பதினான்காம் ஆட்சியாண்டில் இது நிகழ்ந்தது. விருதராஜ பயங்கர வளநாட்டைச் சார்ந்த குறுக்கை நாடு, காளி நாடு, விளத்தூர் நாடு, மாந்துறை நாடு, திருமங்கலநாடு எனப்பெறும் இந்த ஐந்து நாட்டு இடங்கை, வலங்கைப் பிரிவினராகிய சாதியினர் எல்லாம் திருமங்கலம் கோயிலில் கூடி இனி சந்திரன் - சூரியன் உள்ள அளவும் தங்களுக்குள் இடங்கை - வலங்கைப் பிரிவுகளை மேற்கொள்ள மாட்டோம் என முடிவெடுத்திருக்கின்றனர். இம்முடிவில் அவர்கள் உறுதியுடன் இருந்ததை 'இடங்கை – வலங்கை பிரிவினை யாரேனும் கொண்டாடுவார்களாயின் அவர்கள் ஐந்து நாட்டிற்கும் அநியாயம் செய்தவர்களாகக் கருதப்படுவர்' என்றும் முடிவு எடுத்து கல்வெட்டாக்கி இருக்கின்றனர்.

இவை நமக்குச் சொல்வதெல்லாம், அரசுகள் ஆரிய வேதமுறையில் மக்களைப் பிரித்தாளும் காலகட்டத்தில் குடியானவர்கள் தமக்குள் ஒற்றுமையை கட்டிக் காக்க முயன்றிருக்கிறார்கள். இச்சாதிப் பிரிவினைகள் அவர்களுக்கு வீழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்றும், தாங்கள் சுரண்டப்படுவதை இக்கட்டமைப்புகள் ஊக்குவிக்கின்றன என்கிற நிலை தோன்றியதாலேயே, இந்த ஒற்றுமைக்கான தேவை உண்டாக்கியிருக்கிறது.

இப்படியான உள்ளூர கனன்று கொண்டிருந்த நெருக்கடியும், முரணும் ஒரு பெரும் கிளர்ச்சியாக 15ஆம் நூற்றாண்டின் கி.பி. 1429ஆம் ஆண்டு உழவர் கிளர்ச்சியாக வெடித்ததை கல்வெட்டுகள் கூறுகின்றன. விஜயநகர ஆட்சியில் தென்பெண்ணைக்கும், கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் (இராஜ்ஜியம் என அழைக்கப்பட்ட நிலப்பிரிவான சாவடி) 'வழுதிலம்பட்டு சாவடி' பகுதியில் கிடைத்த கல்வெட்டு சொல்லுகிறது. இங்கு வலங்கை 98, இடங்கை 98 ஆகிய இருபிரிவு சாதிகளும் ஒன்றிணைந்து எடுத்த முடிவாக காணியாளர், அரச படைகள், ஆளுனரின் அடக்குமுறையை எதிர்ப்பது என இரண்டு பிரிவு மக்களும் சேர்ந்து முடிவெடுத்தனர். இந்த முடிவிற்கு எதிராக இருப்பவர்கள், அதிகார வர்க்கத்துக்கு உடந்தையாக செயல்படுபவர்கள், சமூகவிரோதிகளாக கருதப்பட்டு சமூகத்தில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் என முடிவெடுத்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கிளர்ச்சி விரிவடைந்து காவிரி சமவெளிப் பகுதியையும் சென்றடைகிறது. தஞ்சையின் காவிரிப்பகுதியில் இது பற்றி கல்வெட்டுகள் இப்போராட்ட விரிவாக்கம் பற்றி சொல்கிறது. திருவைக்காவூர், திருவையாறு கல்வெட்டுகள் இதைச் சொல்கிறது.

தென்னாற்காட்டில் ஆரம்பித்த இப்போராட்டம் ஒரு ஆண்டிற்குள் தஞ்சை மாவட்டத்தின் வடபகுதியில் பரவியது. ஏறக்குறைய 5000 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவு நிலப்பகுதியில் குடிகள் கிளர்ந்தெழுந்தார்கள். இதன் அடிப்படைக் காரணம் வரிப்பளுவாகும். இப்பிரச்சனை குறித்த ஒரு கல்வெட்டில் நமக்கு கிடைக்கும் தகவல் என்பது, ஒரு பகுதிக்கு வரிவசூலிக்கும் உரிமையை 200 பொன்னுக்கு குத்தகைக்கு ஏலத்தில் எடுத்த அதிகாரிகள், பின்னர் ஒரு சில வருடத்தில் 2000 பொன்னாக உயர்த்தினர் என்கிறது நாகை மாவட்டத்தின் தேவூர் கல்வெட்டு (கிபி 1426, தெ.இ.க 17:562 – நொபுருகராசிமா - சுப்பராயலு) சொல்லுகிறது. இப்படியாக நில உடமையாளர்கள் தங்களைச் சுரண்டியதை எதிர்த்து கிளர்ச்சி செய்து கிட்டதட்ட ஓராண்டிற்கும் அதிகமாக இக்கிளர்ச்சியை வளர்த்தெடுத்து கோரிக்கைகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆயினும் இவை தற்காலிக தீர்வினையை குடியானவர்களுக்குக் கொடுத்திருக்கிறது என்பதை தொடர்ந்த கிளர்ச்சிகள் நமக்குச் சொல்லுகின்றன. குடியானவர்களை பிரித்து வைத்திருந்த சாதி அமைப்புகளே இவர்கள் சுரண்டப்படலுக்கு காரணமாக இருந்திருக்கின்றன.

காலனியத்தின் ஆரம்ப காலத்திய சுரண்டலும், சிதைவும்:

இப்படியான உழவை முதன்மையாகக் கொண்டிருந்த அரசர்களின் ஆட்சிமுறைக்கு முற்றிலும் மாறானதாக காலனிய வெள்ளையர்-ஐரோப்பியர் காலனியம் தமிழகத்திற்குள் 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகமாகிறது. முழுவதுமாக வணிக நோக்கில் வந்த ஐரோப்பியர், குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சி முறை விரிவுபடுத்தப்பட்ட பொழுது சோழர் காலத்தில் நிலைபெற்ற ‘சமூகரீதியான-நாடுகள்’ பாதிப்பிற்குள்ளாகின. நிலைத்த தன்மை கொண்டதாக இருந்த இந்த நாடு - கட்டமைப்பின் உழவு, உற்பத்தி, வணிகம் என்பதை வெள்ளையர் வருகை சிதைந்தது.

வெள்ளையரின் ஆட்சி விரிவாக்கம் என்பது அரசாட்சியினை ஒத்ததாக இல்லை. நிலப்பரப்பினை கைப்பற்றுவதன் பின்னனியில் வணிக லாபவெறி நோக்கம் இருந்தது. அதுவரை தமிழ்நாட்டில் இருந்த ஆட்சிவிரிவாக்க முறைக்கும், வெள்ளையர் விரிவாக்க முறைக்குமான வித்தியாசத்தை இது சொல்லுகிறது. நிலத்தை மட்டுமே கைப்பற்றி அதில் உற்பத்தியாகும் விளைபொருட்கள், உழவு பொருட்களை வருமான வாய்ப்பாக பெற்றிருந்த நில உடமை அரசர்களுக்கு முற்றிலும் வேறுபட்டது வெள்ளையர் தலையீடு. தங்களது வணிகம், வரி, சுரண்டல், கொள்ளையிடல் என்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக ஐரோப்பியர் வருகை தமிழகத்திற்குள் நிகழ்ந்தது. அவர்களது முதன்மை நோக்கம் வணிகமாக இருந்ததே அன்றி, நிலைத்த அரசையும், நீதிபரிபாலனை, வளர்ச்சிக் கட்டமைப்புகள் உருவாக்குவதான நோக்கம் கொண்டது அன்று.

 ஆங்கிலேயர் உள்ளிட்ட பிற ஐரோப்பியர்களின் கட்டுப்பாடற்ற லாபவெறி கொண்ட வணிகம் தமிழர்களை அடிமைகளாக ஏற்றுமதி செய்வது வரை விரிவடைந்திருந்தது. தமிழர்கள் அடிமைகளாக வாங்கப்பட்டும், விற்கப்பட்டும், ஏற்றுமதி செய்யப்பட்டதும் தமிழகத்தின் கடற்கரை நகரங்களில் ஏகபோகமாக நடந்தது. தமிழ்நாட்டில் பல காலமாக இந்த அடிமைத் தொழில் முறை இருந்த போதிலும், அடிமைகளாக்கபட்டவர்கள் ஏற்றுமதிப் பண்டமாக மாற்றபட்டது ஐரோப்பியர்களின் வருகைக்கு பின்பே உண்டானது. தமிழ்நாட்டில் இருந்த மன்னர்கள் ஐரோப்பியரின் இந்த அடிமை விற்பனை முறையை எதிர்த்த பொழுதிலும் இக்கடத்தலை முழுமையாக தடுக்க இயலவில்லை.

அடிமை வணிகத்தில் ஈடுபட்ட தரகர்களை தஞ்சை மன்னர்கள் கடுமையாக தண்டித்ததைப் பற்றிய ஆவணங்கள் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக பதினெட்டாம் நூற்றாண்டில் இது போன்ற ஏராளமான ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. தரங்கம்பாடியிலிருந்து பயணம் சென்ற ஒரு பரப்புரையாளர் 05-09-1741இல் பதிவு செய்துள்ள ஆவணத்தின்படி, அவர் செல்லும் வழியில் மரத்தில் ஒரு வெட்டப்பட்ட கை தொங்கிக் கொண்டிருந்ததை கண்டிருக்கிறார். அந்த வெட்டுண்ட கை என்பது அடிமை வணிகத் தரகருடையது எனவும், அடிமை வணிகம் தஞ்சை அரசரால் தடை செய்யப்பட்டு இருந்ததையும் மீறி இதை டேனிஷ் வணிகர்கள் செய்து வந்ததை பதிவு செய்திருக்கிறார். தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு சாதிகள் இவ்வாறு அடிமைகளாக ஏற்றுமதி செய்யப்பட்டனர் என்கிற விவரங்களும் ஆவணங்களில் புலப்படுகிறது. இவ்வாறான சீரழிவு நிலையிலேயே ஐரோப்பியர் எதிர்ப்பும், குறிப்பாக வெள்ளையர் எதிர்ப்பும் தமிழகத்தில் முனைப்பு பெருகின்றன.

பல ஐரோப்பிய காலனியரின் போட்டியில் வெற்றிபெற்ற ஆங்கில வெள்ளையரின் ஆதிக்கம் என்பது இங்கிலாந்தின் ஆட்சியை தமிழகத்தில் நிறுவுவது அல்ல. மாறாக அது ஒரு (கார்ப்பரேட்) வகைப்பட்ட கம்பெனியின் (கிழக்கிந்திய கம்பெனி) சுரண்டலையும், கொள்ளையடிப்பதையுமே முன்னிலைப்படுத்தி இருந்தது. இது குடியான மக்களின் வாழ்வியலை பெரிதும் சிதைத்தது. வட்டார அளவிலான சமூக-நாடுகள் கட்டமைப்பு சிதைந்து ஒற்றைத்தன்மை கொண்ட ஆட்சி அமைப்பினை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கியது. தமிழ்நாட்டின் அரச-உற்பத்தி கட்டமைப்பை சிதைத்த ஆங்கிலேயரின் செயல்பாடு இருவகைப்பட்டது. ஒன்று கடுமையான வணிக நோக்குடன் வரி/கடன் வசூல் நடவடிக்கைகள் மற்றது பேரழிவையும், கொள்ளையிடலையும் கொண்டு வந்த படையெடுப்புகள். இந்த நிகழ்வுகளின் அடிப்படையில் சொல்லவேண்டுமெனில் வெள்ளையர் தலையீடு என்பது முழுக்கொள்ளையடிப்பு நிகழ்வாகவே 17ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து 18ஆம் நூற்றாண்டில் தீவிரம் பெற்று, 19ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

வெள்ளையரின் படையெடுப்பும், அழிவுகளும்:

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தினால் முதன்முதலில் பெரும் பாதிப்பிற்குள்ளானவர்கள் குறிஞ்சி, முல்லை நில வாழ்க்கையை கொண்டவர்கள். தமது ஆடுமாடுகளை மேய்க்கும் கிராமத்து எல்லைக்குள் இருந்த மேய்ச்சல் நிலங்கள் மீதான உரிமையை இழந்தார்கள். இந்த மேய்ச்சல் நில பாதுகாப்பினை முன்னர் இருந்த ‘சமூக-ரீதியான’ நாடுகள் உறுதி செய்தன. இது வெள்ளையர் காலத்தில் இந்த மேய்ச்சல் உரிமைப் பறிபோனது. நிலத்தை ஆங்கிலேயர் காலத்தில் தனிஉடமையாக்கி அதன் மீது வரிவிதிப்பினை செய்ய ஆரம்பித்தனர். இதற்கு முன்பிருந்த ஆட்சிமுறையின் தொடர்ச்சியில் கடுமையான வரிவிதிப்புகளை மேற்கொண்டனர்.

இக்காலகட்டத்தில் நடந்த வரிவிதிப்பினைப் பற்றிய ஆவணங்களை கவனித்தால் இக்கொடுமைகள் நமக்கு எளிதில் விளங்கும். கிராமங்கள் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் சென்ற பகுதியில் கடுமையான மேலதிக வரியையும் எதிர்கொண்டார்கள். உதாரணமாக, தோமா மன்றோ எனப்படும் ஆங்கிலேய கலெக்டர் (சென்னையில் இவருக்கு சிலை உண்டு) கடுமையாக வரியை உயர்த்தினார். ஹர்திஸ் எனப்படும் திண்டுக்கல் கலெக்டர் கூடலூரில் 96 சதவீதம் உயர்த்தினார், கம்பத்தில் 11 சதம் உயர்த்தினார் பழனியில் 17.5 சதம் உயர்த்தினார். மைசூர், கன்னடா பகுதிகளில் தாமஸ் மன்றோ நிலவரியை 96 சதம் உயர்த்தினார். சேலம் பகுதியில், நொய்யல் ஆற்றுப்பகுதியில் 93 சதம் உயர்த்தினர். கோவைப் பகுதியில் நிலவரி 118 சதம் உயர்த்தப்பட்டது. திருநெல்வேலிப் பகுதியில் 117 சதம் உயர்த்தப்பட்டது. இவை அனைத்தும் 1790களில் நடந்தது. இதே நிலையே செங்கல்பட்டிலும், ராமநாதபுரத்திலும் நடந்தது.

இந்த வரிக்கொள்ளையை புரிந்து கொள்ள வேண்டுமெனில், ஒரு கிராமத்தின் மொத்த வருமானம் 3000 பகோடாக்கள் (அன்றய பண மதிப்பு) எனில், அக்கிராம மக்கள் வெள்ளையர்களுக்கு 4500 பகோடாக்களை வரியாக கொடுக்க வேண்டி இருந்தது. 1797இல் ராமநாதபுரத்தில் இருந்த 739 கிராமங்களின் மொத்த உற்பத்தியும் 53,500 பகோடாக்களாக இருந்தது. ஆனால் அவர்கள் 71, 629 பகோடாக்கள் என்று மதிப்பிட்டு வரியாக வசூலித்தனர். மொத்த விளைச்சலையுமே வரியாக வெள்ளையருக்கு கொடுக்க வேண்டி இருந்தது. இது அவர்களது ஒரு வருடத்திற்கு தேவையான உணவாக இருந்தது என்பது பெரும் துயரம். இதோடு வெள்ளையர் கொள்ளை நிற்கவில்லை. மக்களிடம் எஞ்சி இருந்த கால்நடைகளையும், பொருட்களையும் வாரிசுருட்டிச் சென்றனர். இதே நிலையைத் தான் தென்னிந்தியா முழுவதும் மக்கள் எதிர்கொண்டார்கள்

இதில் முதன்முதலாக பாதிக்கப்பட்டது தமிழகத்தின் வடக்கு, மேற்கு பகுதி மக்கள். கிழக்கிந்தியக் கம்பெனி இரண்டு வகையில் சுரண்டியது. ஒரு புறத்தில் ஆட்சியாளர்களாக இருந்த அரசர்கள்/ நவாபுகள் மற்றும் வட்டாரத் தலைவர்கள் அல்லது பாளைய பொறுப்பாளர்கள் மீது அதிகமான வரிச்சுமை/கடன் சுமையை சுமத்தியது. இதே போன்று குடியானவர்கள்/ விவசாயிகளின் மீது கொடுமையான வரியை விதித்தது. வெள்ளையர்கள் நிலவரியை பண்டமாக இல்லாமல், பணமாக வசூலித்ததால், கிராமப் பொருளாதாரம் முடங்கியது. இது கிராமப்புற கட்டமைப்பை சிதைக்கத் தொடங்கியது. இப்படியான வரிக்கொடுமையில் நிலைபெற்று இருந்த வட்டார ‘சமூக-ரீதியான நாடுகள்’ அழிந்து போனது.

இப்படியான கடுமையான சுரண்டல் காரணமாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது. பெருமளவில் மக்கள் பசியால் மாண்டார்கள். கொடிய நோய்கள் அதிகரித்தது (காலனியமும், தொற்று நோய்களும் மே17 இயக்கக் குரல் கட்டுரை மார்ச் 2020) இதுவரை வாழ்ந்து வந்த பாதுகாப்பான வாழ்க்கையை இழந்தனர். பஞ்சமும், தொற்று நோய்கள் இருந்தும் வெள்ளையர்கள் வரிவசூலிப்பில் தீவிரமாக இருந்தார்கள்.

ரெவென்யூ அதிகாரிகள், காவல் அதிகாரிகளின் அராஜகம் தலைவிரித்தாடியது. வரி வசூல் செய்யும் பொழுது ஏழை எளியவர்களை கடுமையாக சித்திரவதை செய்தார்கள். சாட்டையால அடிப்பது, மாட்டின் வாலில் தலைமுடியை கட்டி விடுவது, விரல்களை நசுக்குவது என சித்திரவதைகள் தொடர்ந்தன. இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் நிலங்களை ஆக்கிரமிக்க போர் நடத்தும் பொழுதெல்லாம் வெள்ளையர்கள் கொடூரமான கொள்ளையை நிகழ்த்தினார்கள். மக்கள் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கிராமங்கள் அழிக்கப்பட்டன. பல ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்த கொடுமையான வரிவிதிப்பு, சுரண்டல், கொள்ளை, கொலைகளால் சமூகங்கள் சிதைந்தன.

பின்னர் 1790இல் ஆரம்பித்த மூன்றாவது மைசூர் போர் முழுமையான விடுதலைப் போராக வெடித்தது.

ஆங்கிலேயர் தென் தமிழகம் நோக்கி படையெடுப்புகளை தொடர்ந்து நடத்தினர். ஆற்காடு நவாபிற்கு துணையாக இப்படையெடுப்புகளை அவர்கள் மேற்கொண்டனர் என்றாலும், தமிழ் குடியானவர்கள் இப்படையெடுப்புகளால் சிதைக்கப்பட்டனர். 1750களில் துவங்கிய இப்படையெடுப்புகள் அடுத்த ஐம்பது ஆண்டுகள் நடந்து வேலூர் கலகத்தில் நிறைவு பெற்று மொத்த தமிழ்நாடும் ஆங்கிலேயர் கைகளுக்கு வந்து சேர்ந்தது.

கிபி1751 முதல் தொடர்ந்து 1805வரை போர்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்தன. 1751இல் காப்டன் கோப் தலைமையில் வந்த ராணுவம் வெற்றி கிட்டாமல் திரும்பியது. பின்னர் 1755இல் கர்னல் அலக்சாந்தர் பிகோட் என்பவர் தலைமையில் பெரும்படை தெற்கு நோக்கி சென்றது. இவர் மணப்பாறை பாளையத்தின் மீது கொடுமையான கொலைகளை நடத்தினார். இதன் பின்னர் இருந்த நத்தம் நோக்கி படையெடுத்தவர் அங்கிருந்த கோவில்குடியை தாக்கினார். இப்பகுதியானது, திருச்சி, மதுரை, தஞ்சைக்கு இடைப்பட்ட பகுதி கள்ளர் நாடு எனப்படும் பகுதி. தமிழ்நாட்டில் இவ்வாறு எட்டு நாடுகள் இருந்ததாக ஆங்கிலேயர் கணக்கிட்டனர்.

மொத்த தமிழ்நாட்டையும் கைகளுக்கு கொண்டு வருவதற்கு தமிழகத்தின் மையத்தில் இருந்த கள்ளர் நாட்டை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டிய நெருக்கடி வெள்ளையருக்கு இருந்தது. இந்நாட்டு குடிகள் உள்ளூர் பாளையங்கள், அரசர்களுக்கு நெருக்கமாகவும், உதவிகரமாகவும் இருந்து யுத்தம் புரிந்தனர். முதலில் முரண்பட்ட போதிலும் பின்னர் கான்சாகிப் படைகளுக்கு ஆதரவாக நின்றனர், பின்னர் தொடர்ந்து நடந்த வெள்ளையர் படையெடுப்புகளை தடுத்து நிறுத்தவும் செய்தனர். வெள்ளையருக்கு எதிராக கிட்டதட்ட ஐந்து பெரும் யுத்தங்களை செய்திருந்தனர். இவர்களைக் கடந்து செல்வது என்பது கடுமையான போருக்கு பின்னரே சாத்தியமாகவும் அமைந்தது.

இப்படியாக இருந்த நத்தம் பகுதிக்குள் வெற்றிகரமாகச் சென்ற கர்னல். ஹெரான் கள்ளர்களை வீழ்த்தி அவர்களது கோவில் சிலைகளை திருடிச் சென்றார். இப்படையெடுப்பில் வெள்ளையர் படைகள் பெரும் கொலைகளைச் செய்தது. பல்லாயிரக்கணக்கான கள்ளர் மக்களை படுகொலை செய்து அவர்களிடத்தில் அச்சத்தை மூட்ட முனைந்தது. வெள்ளையர் படை பயங்கரவாதத்தை வழிமுறையாகக் கொண்டு நாட்டுக்கோட்டையில் இதே போன்ற படுகொலைகளை செய்தனர். இவ்வாறான வழிமுறைகளில் பாளையங்களை சரணடைய வைத்தனர். இவர்களை பாஞ்சலக்குறிச்சியும், நெற்கட்டும் சேவல் பாளையமும் பலவீனமாக்கின, இதிலிருந்து திரும்பும் வழியில் நத்தம் பகுதியில் கள்ளர் நாடு தாக்குதலை தொடுத்து கடுமையான இழப்புகளை ஏற்படுத்தி தமது கடவுள் சிலைகளை மீட்டனர்.

1761இல் ஜான்காலியாத் தலைமையில் ஒரு படையெடுப்பு நடந்தது. 1763-67இல் மேஜர் ப்ரஸ்டான் படையெடுத்தான். இதே சமயத்தில் காப்டன் ரம்லே மேலூர் பகுதியில் 3000 கள்ளர்களை படுகொலை செய்தான். அவனது இரண்டாவது படையெடுப்பில், அப்பகுதியில் மேலும் 2000 கள்ளர்களைப் படுகொலை செய்தான். தளபதி டொனால்ட் காம்ப்பெலின் படையெடுப்பு அரியலூரில் ஆரம்பித்து சிங்கம்பட்டிப்பாளையம், வாசுதேவநல்லூர் வரை சென்றது. 1783இல் புல்லர்ட்டனின் படையெடுப்பு நடந்தது. இவ்வாறான படையெடுப்புகளினால் 20க்கும் அதிகமான பாளையங்கள் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளாவில் சிதைக்கப்பட்டு ஆங்கிலேயர் வசமாயின.

இந்த தொடர் போர்கள் என்பது சாமானிய மக்களின் அரச கட்டமைப்பாக அன்று இருந்த பாளையங்கள் மீது நடந்தன. இந்தப் போரை எதிர்கொள்ள கிராம மக்கள் பாளையக்காரர்களுக்கு உதவும் நிலை உண்டானது. தம் கிராமங்களுக்கு வெள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பிற்காக பாளையத்தினருக்கு நிதி உதவி செய்யும் பொறுப்பும், மறுபுறத்தில் வரிகட்ட வேண்டிய நெருக்கடியும் இம்மக்களுக்கு வந்து சேர்ந்தது. இப்படியான போர்களின் பொழுது கிராமங்களை அழித்தொழிக்கும் வேலையையும், கொள்ளையடித்தலையும் வெள்ளையர்கள் செய்தனர். இதுவே நிலைபெற்ற ‘பிராந்திய நாடு’ கட்டமைப்பினை முற்றிலும் சிதைத்தது. மறுபுறத்தில் உழவும், உற்பத்தியும் சிதைந்தது.

அரசர்கள் மீது விதிக்கப்பட்ட கடுமையான கடன், வட்டியினால் நவாப்புகள் சிதைந்தனர். கொடுமையான வரிவிதிப்பினால் பாளையங்கள் கடுமையான நிதிச்சுமைக்குள்ளாகின. இந்த இரண்டு சுமைகளுக்காக குடியானவர்கள் கடுமையான சுரண்டலுக்கு உள்ளாகினர். வெள்ளையரின் வரிவிதிப்பை மக்களிடம் அமுல்படுத்தி வசூலிக்காத பாளையங்கள் வெள்ளையரால் வேட்டையாடப்பட்டன. இதுமட்டுமல்லாமல் வெள்ளையர் அதிகாரிகளின் ஊழல்கள், கொடுமையான வரிவிதிப்பும் தாங்க இயலாத நிலைக்கு மக்களைத் தள்ளியதால் கிளர்ச்சிக்கு தயாரானர்கள். இதே போன்றதொரு நெருக்கடிக்குள்ளாகியதால் பாளைய தலைவர்களும் கிளர்ந்தெழுந்தனர். இதுவே பெரும் பாளையக்காரர் புரட்சிக்கு வித்திட்டது.

இதைப் பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர். இராசய்யன், “இவ்வாறு ஆங்கிலேய கம்பெனியார் பாளையங்களை ஒடுக்கியது, பாளையங்களின் ஆட்சியாளரோடு முடிந்துவிட்ட பிரச்சனை அல்ல. கிராமமட்டத்தில் சட்ட ஒழுங்குக்கட்டமைப்பான ‘தேசக்காவல்முறையை’ பாதித்தது. அதை நம்பிப் பிழைத்தவர்கள் வேலையிழந்தனர். பாளையங்கள் பாழாக்கப்பட்ட போது மேலை நாட்டினர் நமது கிராம சமூதாயத்தினருடன் ஒரு மோதலை ஏற்படுத்தினர். இது ஆங்கிலோ- சாக்சானிய மேலைக் கலாச்சாரம், திராவிடக் கீழைக் கலாச்சாரம் ஆகிய இரு வேறுபட்ட பண்பாட்டு முறைகளின் மோதலில் முடிந்தது…” என்கிறார்.

அரசர் – பாளையக்காரர் - கிராமம் என இருந்த கட்டமைப்பில் கிராமத்தின் பாதுகாப்பும், உறவும் பாளையக்காரர்களுடன் நெருக்கமாக இருந்தது. அரசுகள் மாறினாலும், இந்த உறவுகள் மாறவில்லை. கிராமங்களுக்கான பாதுகாப்பை பாளையக்காரர்கள் வழங்கினார்கள். அரசர்களுடைய ஒடுக்குமுறையிலிருந்து கிராமங்களை பாதுகாப்பவர்களாக பாளையங்கள் விளங்கியதாக பேராசிரியர். ராஜய்யன் குறிப்பிடுவார். கிராமங்களின் ‘காவல்/ கண்காணிப்பு’ என்பது உள்ளூர் போலீஸ் எனப்படும் வகையிலாக அமைந்திருந்தது. இந்த பிணைப்பு நீண்ட காலமாக வழங்கி வரும் கட்டமைப்பாகும். ஆங்கிலேயரின் வருகையால் இக்கட்டமைப்பு சிதையத் தொடங்கியது. கிராமத்தின் காவல் என்பது சிதைந்ததை அடுத்து, கிராமங்களுக்கு பாளையங்கள் நேரடியாக காவல் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. இந்தக் காவல்முறை ‘தேசக்காவல்’ எனப்பட்டது. இந்த நெருங்கிய பிணைப்பே பாளையக்காரர்களின் எழுச்சியில் மக்களின் பங்களிப்பாக மாறியது.

ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இங்கு உற்பத்தியான நெசவுத் தொழில் சிவகங்கைச் சீமை, சேதுச்சீமை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய இடங்களில் வளர்ந்த தொழில். தூத்துக்குடியில் வேளாண்கருவி உற்பத்தியும், உப்புத் தொழிலும், படகு கட்டுதலும் நடந்தது. தொண்டியிலும் படகுக் கட்டப்பட்டது. இதையெல்லாம் வெள்ளையர் முடக்கினர். இதனாலேயே மருதுபாண்டியரின் ஜம்பு தீபகற்ப பிரகடனத்தில் “இந்நாட்டுக் கிராமங்களின் பொருளாதாரம் ஆங்கிலேயரின் சுரண்டலால் எவ்வளவு பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளது’ என்று அறிவுறுத்துகின்றனர்.

சாதிகடந்து மக்கள் கிளர்ச்சி 15ஆம் நூற்றாண்டின் வழியில் பாளையத் தலைவர்கள் பின்னால் அணி திரண்டார்கள். எளிய படையணிகளோடும், குறைந்த நிதி வசதிகளுடன் சாமானியர்களில் இருந்து தலைவர்களாக, தளபதிகளாக உயர்ந்தவர்கள் இப்புரட்சிக்கு தலைமை தாங்கினார்கள் என்பதே தமிழகத்தின் முதல் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம்.

ஆங்கில கம்பெனியாருக்கு எதிரான கலகங்கள்:

கொடுமையான ஆங்கில கம்பெனியாருக்கு எதிராக உழவர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். 1796ல் தமிழ்நாட்டில் பச்சைமலை, முனியூர், அஞ்சியூர் ஆகிய இடங்களில் கலகம் வெடித்தது. இவர்கள் மலைவாழ் மக்கள். இவர்கள் மீது விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து போராடினார்கள். 1800இல் சேலத்தில் கலகம் நடந்தது. 1802இல் தர்மபுரியில் இருக்கும் பாரம்கல், பாலக்கோடு, ஒசூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் உழவர்கள் எழுச்சி நடந்தது.

சமூகத்தின் அடித்தளத்தில் எழுந்த கலக மனநிலை பாளையக்காரர்களின் எழுச்சிக்கு பக்கபலமாக இருந்தது. வெள்ளையர்களின் மூர்க்கமான போரும், அதனுடன் நடந்த கொள்ளை - கொலையும், அதன் பின்னர் நடந்த கொடுமையான வரிவிதிப்புமே தமிழகத்தில் நிகழ்ந்த புரட்சிக்கான காரணம். இந்தப் பின்னனியிலேயே மருது சகோதரர்கள், கட்டபொம்மன், விருப்பாச்சி கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை போன்றோரின் போராட்டத்தையும், பிரமலைக் கள்ளர்கள், வலையர், ஒட்டர்கள், குறவர்கள் உள்ளிட்ட சமூகங்கள் மீது கொடுமையான முறையில் விதிக்கப்பட்ட குற்றப் பரம்பரை ஒடுக்குமுறையையும் புரிந்து கொள்ள முடியும்.

இந்த எழுச்சியை நிகழ்த்தியதன் பின்னனியில் அனைத்து சாதி-சமூகங்களின் ஒருங்கிணைப்பையும் காணமுடியும். இப்போராட்டத்தின் வழியிலேயே பல சமூகங்களைச் சேர்ந்த பூலித்தேவன், ஒண்டிவீரன், அழகுமுத்துக்கோன் போன்ற முதல்கட்ட வீரர்களும், பின்னர் எழுந்த எழுச்சியில் சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை, முத்துராமலிங்க சேதுபதி (சேதுசீமை), கருப்பையா சேர்வை (ஓடாநிலை), கட்டன கருப்பணன் (நெல்லை), அப்பாஜிராவ் (சேலம்), கான்–இ-ஜஹான் (கோவை), முத்துக்கருப்பத் தேவர் (ராமநாதபுரம்), ஞானமுத்து (தஞ்சை) முகம்மது ஹசம் (தாராபுரம்), மேலப்பன் (ராமநாதபுரம்), தானாபதி பிள்ளை (பாஞ்சாலங்குறிச்சி) எனப் பலரும் வெள்ளையரின் கொடுமையை எதிர்த்து கலகம் புரிந்தனர்.

இந்த குடியானவர்களின் ஒன்றிணைவு என்பது கிட்டதட்ட ஆயிரம் வருட வரலாறை சுமந்து வருகிறது. பல்லவர் காலத்தில் ஆரிய வேத பார்ப்பனிய முறையில் சுரண்டல் ஆரம்பித்து சோழர் காலத்தில் அது விரிவடைந்து, விசயநகர ஆட்சியில் கூர்மையானது. இந்த தொடர் சுரண்டல் முறைக்கு எதிராக திரண்டெழுந்த குடியானவர் ஒன்றிணைவு ஆங்கிலேய கம்பெனியாரின் கொடுமையான சுரண்டல் காலத்தில் வெடித்துக் கிளம்பியது. அரசருக்கும் குடியானவர்களுக்கும் இடையில் இருந்த நில உடமையாளர்களான பார்ப்பன -வெள்ளாளர்கள் - படையாட்கள் இந்த கலகத்தை முதலில் எதிர்கொண்டார்கள்.

15 ஆம் நூற்றாண்டில் இக்கிளர்ச்சி கூர்மையடைந்து பல பகுதிகளுக்கு விரிவடைந்ததும், இந்த நில உடமையாளர்கள் குடியானவர்களுடன் சமரசம் செய்தார்கள். வாய்ப்புள்ள இடங்களில் குடியானவர்களுடன் இணைந்தார்கள். இதே போன்றதொரு ஒருங்கிணைவில் குடியானவர்களுடன் பாளையத் தலைவர்கள் இணைந்தனர். கடந்த காலத்தில் கொடுமையான வரிவிதிப்பிற்கு எதிராக அரசர்களுக்கு எதிரான இக்கலக மனநிலை ஆங்கிலேய கம்பெனியார்களின் காலத்தில் மேலும் கூர்மையடைந்தது.

ஆங்கிலக் கம்பெனியின் சுரண்டலுக்கு இடங்கொடுக்க இயலாத படையாட்களாக இருந்த பாளையக்காரர்களும், வரிக்கொடுமை தாங்க இயலாத குடியானவர்களும் சாதி, மத நம்பிக்கைகளைக் கடந்து ஒன்றிணைந்தனர். பாளையக்காரர்களின் வெள்ளையருக்கு எதிரானப் போருக்கு குடியானவர்கள் ஒத்துழைத்தனர். நிதி பங்களிப்பு மற்றும் படையணிகளாக மாறி உதவினர். பாளையக்காரர்களாக எழுந்த போராளிகளில் கிட்டதட்ட பெரும்பாலோனோர் எளிய குடியானவர்களாக இருந்தவர்கள். மருது சகோதரர்களோ, தீரன் சின்னமலையோ, ஹைதர்அலியோ கூட பரம்பரை ஆளும் வர்க்க குடும்பத்தில் தோன்றியவர்கள் அல்ல.

பாளையக்காரர் எழுச்சி - பாளையங்கள் வழியாக தமிழ்க்குடியானவர்களின் போர்:

இப்படியான தொடர் போர்களினால் தமிழர்களின் பல பகுதி மக்கள் எண்ணற்ற / சொல்லிலடங்கா கொடுமைகளுக்கு ஆளாயினர். வெள்ளையர்களின் கொடுமையான வரிவிதிப்பும், வாழ்வியலை சிதைத்த யுத்தங்களும் குடியானவர்கள் ஒன்றுதிரளும் சூழலை உருவாக்கியது. வெள்ளையர்களின் ஆதிக்கத்தை தென் தமிழகம் நோக்கியும், மேற்கு தமிழகம் நோக்கியும் நகர்த்த விரும்பியதை எதிர்த்து நின்றனர். திருச்சிக்கு தெற்கே மதுரை ராமநாதபுரம், திருநெல்வேலி வரையிலும், மேற்கே சேலம், கோவை, கேரளா வரையிலும் இந்த அணிசேர்க்கை விரிவடைந்தது. இப்பகுதி குடியானவர்கள் இப்புரட்சிக்கான அடித்தளத்தை அமைத்து புரட்சியாளர்களைப் பாதுகாத்தனர். இக்குடியானவர்களே பாளையங்களின் பெரும்படையாக மாறினர்.

அரசர்களிடத்திலேயே பெரிய போர்ப் படையிருந்து வந்த நிலையில் அரசர்களும், நிஜாம்களும், நவாப்புகளும் வெள்ளையரோடு சமரசம் செய்து கொண்ட நிலையில் திப்பு, மருது, கட்டபொம்மன், தீரன் சின்னமலையோடு போன்ற போராளிகளோடு அணி சேர்ந்தவர்கள் ஏழை எளிய குடியானவர்களே. வெள்ளையரின் தேர்ந்த பயிற்சியளிக்கப்பட்ட படையின் முன்னர் இப்படைகள் தோல்வியைத் தழுவிய போதிலும் எந்த யுத்தத்திலும் சமரசம் செய்யாமல் வீரமரணத்தை தழுவினார்கள். இந்த தென் தமிழக ஒருங்கிணைப்பிற்கு தெற்கு-மேற்கு-கிழக்குப் பகுதி மக்கள் பெரும் பக்கபலமாக நின்றனர் என்பதை வரலாற்று சம்பவங்கள் நமக்கு சொல்லுகின்றன. கொங்குமண்டலமும், கள்ளர் நாடும் தெற்கத்திய சீமைகளும், நவாபின் படைகளிலிருந்து வெளியேறிய இசுலாமியர்களும் சாதி-மதம் கடந்து ஒன்றாக எழுந்தன எனும் பெரும் வரலாற்றுக் சொந்தமாக பதினெட்டாம் நூற்றாண்டு விளங்குகிறது.

தமிழகத்தின் மத்தியப் பகுதியில் இருந்த திண்டுக்கல்-திருச்சி-மதுரை-தஞ்சைப் பகுதியில் இருந்த நத்தம் காட்டுப்பகுதி கள்ளர் நாடு வெள்ளையருக்கு எதிரான யுத்தம் புரியும் பாளையங்களுக்கு துணையாக நின்றது. கான் சாகிப்பிற்கும், ஹைதர் அலிக்கும், பின்னர் மருது சகோதரர்களுக்கும், விருப்பாச்சி கோபால் நாயக்கருக்கும் பின்னனி படையணியாக நின்றனர். இவர்களது பகுதியில் கிடைத்த பாதுகாப்பில் மருது சகோதரர்களும், விருப்பாச்சி கோபால் நாயக்கரும் தென்னிந்திய புரட்சி கூட்டமைப்பை உருவாக்கினர். இந்த பகுதியே தீரன் சின்னமலைக்கும், திப்புவின் படையினருக்குமான பாதுகாப்பு பகுதியாக மாறிப் போனது. மருது சகோதரர்களின் வெள்ளையருக்கு எதிரான கொரில்லா யுத்தத்திற்கு இப்பகுதியே களமாகிப் போனது. இது போன்றே தமிழ்நாடு முழுவதும் உள்ள குடியான மக்கள் வெள்ளையருக்கு எதிரான புரட்சியை செய்த போராட்டக்காரர்களுக்கு துணையாக நின்றனர்.

மேற்கு மண்டலத்தில் வெள்ளையர்கள் கடுமையான கண்காணிப்பை செய்துக்கொண்டிருந்தனர். ஏனெனில் வடக்குப் பகுதியில் இருந்த மைசூரின் திப்புவிற்கும், தெற்கில் போராடிக்கொண்டிருந்த பாளையங்களுக்கும் இடையேயான பகுதியாக தமிழகத்தின் கொங்குப்பகுதி இருந்தது. மதுரைக்கு தெற்கே, கிழக்கே இருந்த திருநெல்வேலிப்பகுதி பாளையங்களும், ராமநாதபுர பகுதி பாளையங்களும் மதுரை-திண்டுக்கல் பகுதி வழியாக திரண்டு, கொங்குப்பகுதியின் வழியாக வடக்குப்பகுதியில் போராடியவர்களுடன் உறவுகளை மேற்கொள்ள இப்பகுதி குடியான தமிழ் மக்கள் பெரும் துணை செய்தனர்.

கட்டபொம்மன், சேது சீமை போராளிகள், தஞ்சைப் பகுதி போராளிகள் எனப் பலரை ஒருங்கிணைத்து மருது சகோதரர்கள் வலிவான புரட்சிக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். இப்புரட்சியாளர்களுக்கான சந்திக்கும் தளத்தையும், பயிற்சி தளத்தையும் விருப்பாச்சி கோபால் நாயக்கர் செய்தார். இந்தக் கூட்டமைப்புடன் மேற்கு மண்டலத்தில் வெள்ளையரை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த தீரன் சின்னமலை, அப்பாஜிராவ், கான் இ-ஜகான் ஆகியோர் இணைந்தனர். இப்படியான கூட்டமைப்பில் கேரளப்பகுதியில் வெள்ளையரை எதிர்த்து போராடிய பழசி நாட்டின் கேரளவர்மனும் இணைப்பினை ஏற்படுத்தினார். இந்தக் கூட்டமைப்பினை மருது சகோதரர்கள் வடக்குப் பகுதியில் போராடிக் கொண்டிருந்த போராளிகளுடன் இணைக்க விரும்பினார்.

வட கர்நாடகத்தில் தூந்தாஜிவாக் பெரும் படையுடன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார். திப்புவின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தப் படை ஆங்கிலேயரை திணறடித்துக் கொண்டிருந்தது. இச்சமயத்தில் வெள்ளையரின் கடுமையான வரி விதிப்பிற்கு எதிராக கொங்கன், மலபார் பகுதியில் போராடிய போராளிகள் இவர்களோடு ஒன்றிணைந்தனர். முதலில் ஹைதர் அலியையோ, திப்புவையோ எதிர்த்துக் கொண்டிருந்த பாளையக்காரர்கள், சிற்றரசர்களான இவர்கள், வெள்ளையரின் கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுந்து, திப்புவின் படைகளுடன் ஒன்றாக திரண்டனர். இவ்வாறே தீரன் சின்னமலையும், கேரளவர்மனும் வெள்ளையருக்கு எதிரான அணி சேர்க்கையில் ஈடுபட்டனர். இவர்கள் இருவருமே அரசர் பரம்பரையில் வந்தவர்கள் அல்ல.

சிவகங்கை – விருப்பாச்சி - திண்டுக்கல் பகுதியில் ஏற்பட்ட கூட்டமைப்பை வடபகுதி தூந்தாஜிவாக்குடன் தொடர்பு ஏற்படுத்தி கூட்டமைப்பை விரிவு செய்யும் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கொங்குப் பகுதியில் வலுவாக இருந்த வெள்ளையர் கண்காணிப்பை மீறி தூந்தாஜியிடன் தொடர்பேற்படுத்தும் பெரும் முயற்சியை மருது சகோதரர்கள் மேற்கொண்டார்கள். இப்பெரும் பொறுப்பினை மேற்கொண்டு தூந்தாஜியை சென்று சந்தித்து ஆதரவைப் பெரும் முயற்சியின் முதல் பயணத்தை தீரன் சின்னமலை மேற்கொண்டார். இந்தப் பயணத்தை பாதுகாப்பாகவும், வெள்ளையரின் கண்காணிப்பில் இருந்து பாதுகாப்பாகவும் மேற்கொள்ள கொங்குப்பகுதி உழவர்கள் உதவி செய்தனர். இப்பகுதி மக்களின் துணை இல்லாமல் இந்தப் பயணங்கள் சாத்தியமாகி இருக்காது. இவர்களே ரகசிய தூதர்களை பாதுகாத்தனர், இடம் அளித்தனர்.

தூந்தாஜியின் தூதர்கள் இக்கூட்டமைப்புடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி ரகசிய பரிவர்த்தனைகளைச் செய்ய விருப்பாச்சி தொடர்பிற்கான இடமாக மாறியது. இவர்களுக்கான பாதுகாப்பினை இப்பகுதியே வழங்கியது. மதுரைக்கு தெற்கே இருந்த பாளையங்களுக்கு அனைத்து சமூக மக்களின் ஒத்துழைப்பும், திரட்சியும் பெரும் வலிமையைக் கொடுத்தது. சிவகிரி பாளையம், பாஞ்சாலங்குறிச்சி பாளையம், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை பாளையங்கள் என பல பாளையங்கள் வெள்ளையருக்கு எதிராக ஒன்று திரளக் காரணம் அடித்தட்டு மக்கள் சாதிகடந்து வெள்ளையருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதே.

சாதி கடந்து ஒன்றிணைந்த வரலாற்றிற்கு எடுத்துக்காட்டாய் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் படையணியிலிருந்த கட்டபொம்மனும், வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும், தானாபதி பிள்ளையும், செளந்தர பாண்டியனும், ஊமைத்துரையும், சிவத்தைய்யாவும் நமக்கு சொல்லிச் செல்கிறார்கள். ஆக வெள்ளையருக்கு எதிராக 18ஆம் நூற்றாண்டில் திரண்டெழுந்த தமிழர்களின் எழுச்சி என்பது சாதி கடந்த எளிய குடியானவர்கள் எழுச்சி. 15 ஆம் நூற்றாண்டில் நடந்த உழவர் கிளர்ச்சிக்குப் பின்னர் அனைத்து தரப்பினரும் சாதிகடந்து எழுந்த எழுச்சியே பாளையக்காரர் எழுச்சி.

குற்றப் பரம்பரை சட்ட ஒடுக்குமுறையும், பெருங்காமநல்லூர் படுகொலையும்

இந்த எழுச்சிகளின் பின்புலமாக இயங்கிய சமூகங்கள் குறிவைத்து சிதைக்கப்பட்ட வரலாறே 19ஆம் நூற்றாண்டின் நெடுக நாம் பார்க்க இயலும். இந்த ஒடுக்குமுறை 20ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. வெள்ளையர் இம்மக்களை தமது கொடுமையான சட்டங்களின் வழியாக குற்றப் பரம்பரையாக மாற்றினர். வெள்ளையரின் ஆட்சி, போர் ஆகியவற்றினால் சிதைந்த தமது வாழ்வியலை பாதுகாக்க போர்க்குணத்துடன் போராடிய சமூகங்களின் வாழ்வியல் ஒரு புறம் சிதைக்கப்பட்டது, நிலைத்த வாழ்க்கை கொண்டிராமல் சமூகங்களுடன் இயங்கிக் கொண்டிருந்த மக்கள் சட்டங்கள் ஊடாக கடுமையான ஒடுக்குமுறை செய்தனர்.

உழவர் சமூகங்களும், கைவினைஞர் சமூகங்களும் வெள்ளையர்களின் வரிவிதிப்பினால் சிதைந்து போயினர். இதைத் தவிர வணிகங்கள், மேய்ச்சல், வேட்டையாடுதல், காவல்காத்தல் என பணிகளைச் செய்த சமூகங்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. குறிப்பாக பழங்குடிகளாக இருந்தவர்கள், போர்க்குணத்துடன் எதிர்த்தவர்கள், வெள்ளையர் வணிகத்திற்கு தடையாக இருந்தவர் என பலதரப்பாக அடையாளம் காணப்பட்டு சிதைக்கப்பட்டனர். இவ்வாறான கடுமையான ஒடுக்குமுறைக்காக 1781ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டதே குற்றப் பரம்பரைச் சட்டம் போன்ற கொடுமையான சட்டங்கள். இச்சட்டங்கள் ஆங்கில ஆட்சியின் இறுதி வரை தொடர்ந்தது.

கிட்டதட்ட 18ஆம் நூற்றாண்டிலிருந்தே குடியானவர்கள், பழங்குடி மக்களை ஒடுக்கமுனைந்தது வெள்ளையர் அரசு. மருது சகோதரர்களின் வீழ்ச்சிக்கு பின்னர், பாளையங்கள் ஒடுக்கப்பட்ட பின்னர், இம்மக்களை ஒருங்கிணைக்கும் பெரும் போராட்ட ஆற்றல் தமிழகத்தில் இல்லாது போயிற்று. இந்நிலையில் பாளைய புரட்சியாளர்களுக்கு பின்புலமாக விளங்கிய மக்களைப் பிரித்து சிதைக்கும் சூழ்ச்சியை ஆங்கில அரசு 1805க்குப் பின் தமிழகம் அவர்களது கைகளுக்கு வந்த 19ஆம் நூற்றாண்டு முழுவதும் செய்தது. இதில் கள்ளர் நாட்டு மக்கள் புரட்சிக் குழுக்களுடன் தொடர்ந்து இயங்கியவர்களாக இருந்தது மட்டுமல்லாமல், பாளையங்களின் வீழ்ச்சிக்குப் பின்னரும் ஆங்கில அரச கட்டமைப்பு கிராமங்களுக்குள் ஊடுறுவுவதில் பெரும் தடையாக இருந்தனர். இவர்களது உள்ளூர் காவல் கண்காணிப்பு என்பது வெள்ளையர் அதிகாரத்தின் விரிவாக்கலுக்கு அச்சுறுத்தலாக 19ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது.

இவ்வாறு எதிர்வினை செய்து கொண்டிருந்த இம்மக்களை 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சக சமூகமக்களுடன் இருந்த உறவினை துண்டித்து தனிமைப்படுத்தினர். ஒன்றாகப் போராடிய மக்களை பிரித்து சச்சரவுகள் வளர்க்கப்பட்டு, இவர்கள் பிரிக்கப்பட்டனர். இவ்வாறு தனிமைப் படுத்தப்பட்டவர்களை, வெள்ளையரின் விரிவாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தவர்களை குற்றப் பரம்பரையினராக மாற்றும் சட்டத்தினை 1781ஆம் ஆண்டே முன்மொழிந்தது கிழக்கிந்தியக் கம்பெனி. இந்தக் குற்றப் பரம்பரைச் சட்டம் வளர்த்தெடுக்கப்பட்டு 20 ஆம் நூற்றாண்டில் அமுல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் பல சமூக மக்களை இப்பட்டியலில் திணித்தது. இதில் பிறமலைக் கள்ளர்கள், வளையர், ஒட்டர், குறவர், உப்புக்குறவர் உள்ளிட்ட பழங்குடிகளை குற்றப் பரம்பரையினராக சித்தரித்து கொடுமை செய்தது.

இந்த தொடர் ஒடுக்குமுறையினர் வெளிப்பாடே 1920இல் நடந்த பெருங்காமநல்லூர் படுகொலை. வெள்ளையர் அரசின் கொடுமையான குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ மதுரை - உசிலம்பட்டி - திருமங்கலம் - தேனிக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்த பிறமலைக்கள்ளர் மீதான இந்த இழிவு செய்யும் ஒடுக்குமுறைக்கு எதிராக பெருங்காமநல்லூர் பகுதியில் மக்கள் திரண்டார்கள். இச்சமூகத்தின் ஆண்கள் வயது வித்தியாசமின்றி அனைவரும் வெள்ளையர் காவல் அதிகாரிகள் முன்பு தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றது இந்த சட்டம்.

இரவு முழுவதும் காவல்துறை அலுவலகத்தின் முன்பு திறந்தவெளியில் படுத்திருக்க வேண்டுமென்றும், வெளியூர் செல்வதெனில் காவலதிகாரிகளிடம் ஒப்புதல் ரசீது பெற்றுச் செல்ல வேண்டுமென்றும் சட்டம் கொடுமையான விதிகளை விதித்தது. மிகச்சிறிய குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. ஆடுகள் இரண்டு திருடு போன குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது போதாதென்று நாடுகடத்தல் உத்தரவைப் பெற ஆங்கில அரசு முனைந்தது. இவ்வாறான கடும் ஒடுக்குமுறையை இம்மக்கள் மீது ஏவுவதற்கு காலனியாதிக்கப் போர்களின் பொழுதில் இம்மக்கள் காட்டிய எதிர்ப்பும் மிக முக்கிய காரணம். இவ்வாறான கடும் அடக்குமுறை குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அனைத்து மக்களின் மீதும் திணிக்கப்பட்டது. 

இச்சட்டத்தின் அடித்தளம் என்பதே அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் எழுப்புபவர்களை ஒடுக்கும் நோக்கமாகும். இச்சட்டம் என்பது தேசத் துரோகமாக விரிவடைந்து வெள்ளையரை எதிர்த்து நின்று போராடிய போராளிகளை தேசத்துரோகிகளாக சித்தரித்து ஒடுக்கியது.

இந்த அடக்குமுறைச் சட்டங்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே இன்றளவும் தேசத்துரோகச் சட்டம் ஏவப்படுகிறது. பல்வேறுச் சமூக பின்னனியில், சமூக-அரசியல் காரணத்திற்காக கிளர்ந்தெழும் மக்களை இச்சட்டங்களைக் கொண்டு இன்றளவும் அரசு ஒடுக்கி வருகிறது. கடந்த நூற்றாண்டுகளில் சாதி கடந்து ஒன்றுபட்டு போராடிய தமிழ் இனத்தை சாதியாக பிரித்து நிறுத்துவதன் மூலம் ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியில் பெருந்திரளான மக்கள் பங்கு பெருவதென்பது தடுத்து நிறுத்தும் முயற்சிகளை அரசு செய்து வருவதை பார்க்க முடியும்.

தமிழக மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராடிய சமயங்களில் சாதிகடந்து ஒன்றாகி இருக்கின்றனர். இச்சமயங்களில் எல்லாம் போராடும் மக்களை சாதியாக பிரித்து, போராட்டத்தை உடைக்கும் யுக்தியை கடந்த காலத்தின் அனுபவத்திலிருந்து அரசு பெற்றுக் கொள்கிறது. சமீபத்தில் நடந்த போராட்டங்களான முல்லைப் பெரியார் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவுப் போராட்டம், கூடன்குளம் எதிர்ப்புப் போராட்டம், சல்லிக்கட்டுப் போராட்டம், மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், கெயில் குழாய் எதிர்ப்புப் போராட்டம் என விரியும் போராட்ட களங்கள் சாதிகடந்து மக்கள் ஒன்றாய் திரளும் கடந்த கால அனுபவத்தில் தமிழர்கள் வலுவான போராடும் படையாக எழுந்தார்கள். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் 15, 18 ஆம் நூற்றாண்டு எழுச்சியைப் போல சாமானிய குடியானவர்கள் அரசு ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்திய எழுச்சிப் போராட்டங்களாகும்.

இந்தப் போராட்டங்களில் மருது சகோதரர்களும், தீரன் சின்னமலையும், அப்பாஜிராவும், பொட்டிவீரன் பகடையும், சுந்தரலிங்கமும், ஒண்டிவீரனும், பூலித்தேவனும், கட்டபொம்மனும், செளந்திரபாண்டியனும், கான் –இ ஜஹானும், கோபால் நாயக்கரும் தானபதி பிள்ளையும் உயிர்த்தெழுந்தார்கள் எனலாம். பெருங்காமநல்லூர் களம் நூற்றாண்டு இடைவெளியில் ஸ்டெர்லைட் களமாக உயிர்த்தெழுந்தது. மருதுவின் வெள்ளையருக்கு எதிரான கொரில்லாப் போராட்டத்தில் கள்ளர் நாட்டின் பங்களிப்பு என்பது 300 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் கொரில்லா யுத்தத்திற்காக தமிழகத்தை பயிற்சிக் களமாக மாற்றிய திராவிட இயக்கத்தின் ஈகமாக மீண்டெழுந்தது. 15 ஆம் நூற்றாண்டின் வலங்கை-இடங்கை சாதிகளின் ஒன்றிணைந்த எழுச்சியைப் போல சாதிகடந்து காவிரிச் சமவெளி ஒன்றிணைந்து எழும் பொழுது ஹைட்ரோகார்பன் விரட்டி அடிக்கப்பட்டிருக்கும்.

வரி கொடாமல் தூக்கிலேறிய கட்டபொம்மனும், அடிமையாமல் ஜம்பு தீபகற்ப பிரகடனத்தைச் செய்த மருது சகோதரர்களும், புரட்சியாளர்கள் ஒன்றிணையவும் பயிற்சியும் பெறவும் தம் குடும்பத்தோடு பலியாகிய கிழச்சிங்கம் கோபால் நாயக்கரும், சமரசமில்லாமல் உழைக்கும் மக்களுக்காய் அடங்கா நெருப்பாய் போராடி காட்டிக் கொடுக்கப்பட்ட தீரன் சின்னமலையும், வெள்ளையனின் கேந்திர முக்கியத்துவமான கோவை கோட்டையை மீட்டெடுக்கும் போரில் கொல்லப்பட்ட அப்பாஜிராவும், கோவை முற்றுகை போராட்டத்தை வழிநடத்தி, வெள்ளையரிடத்தில் சிறைப்பட்ட பொழுது தீரன் சின்னமலை உள்ளிட்டவர்களை காட்டிக் கொடுக்காமல் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்த முகம்மது ஹாசம், வெள்ளையர் ஆயுதக் கிடங்கை தற்கொலைப் படையாக அழித்த குயிலியும், வெள்ளையர் படைக்கு அடிபணியாமல் தலைநிமிர்த்தி தூக்கிலேறிய சுந்தரலிங்கமும் - தானபதிபிள்ளையும் என சாதி கடந்து ஈகம் செய்தது இம்மண்ணை அந்நியரின் ஆக்கிரமிப்பில் இருந்து காக்கவே என்பதை நினைவில் கொள்வோம்.

பெருங்காமநல்லூர் படுகொலை நடந்து நூறு ஆண்டுகள் நிறைவு பெறும் இந்த வருடத்தில் இந்த ஈகங்களையும், வரலாற்றினையும் நினைவிலேந்தி தமிழர்களின் உரிமை மீட்க உறுதி பூணுவோம்.

- மே 17 இயக்கக் குரல்

ஓவியங்கள்: டிராட்ஸ்கி மருது

நூல் பட்டியல்:

தமிழகத்தில் சாதி உருவாக்கமும், சமூக மாற்றமும் - நொபுரு கராஷிமா, சுப்பராயலு

South Indian Rebellion - Dr.K.Rajayyan

காலனியத் தொடக்கக் காலம் - ஜெயசீல ஸ்டீபன்

மருது பாண்டியர்கள் - மீ.மனோகரன்

கூலித்தமிழ் காட்டும் சமுதாயம் - ஆ.சிவசுப்பிரமணியன்

குற்றப்பரம்பரை அரசியல் - முகில் நிலவன்

தமிழகத்தின் பொருளாதார வரலாறு - தேவ.பேரின்பன்

BBC.COM