சகோதரர்களே!

இன்று நான், இன்ன விஷயத்தைப் பற்றித் தான் பேச வேண்டுமென்று நான் முடிவு செய்யவில்லை, ஆகிலும் கமிஷன் பகிஷ்காரம் என்னும் பொருள் பற்றிச் சிறிது பேச விரும்புகிறேன். ஏனெனில் அதுதான் இப்போது அரசியல் உலகத்தில் முக்கியமாக அடிபடுகிறது. அதாவது நமக்கு இதற்குமுன் சர்க்காரால் அளிக்கப்பட்டு நாம் அனுபவித்து வருகிற சீர்திருத்தத்தைக் குறித்தும், இந்தியர்களுக்கு இன்னும் அதிகப்படியான சீர்திருத்தம் கொடுக்கலாமா, அவர்கள் அவற்றை அடைய லாயக்குதானா என்பவைகளைக் குறித்தும் விசாரித்து அறிவிக்கும்படி பிரிட்டிஷ் பார்லிமெண்டு இப்போது ஒரு கமிஷனை அனுப்பியிருக்கிறது என்பதைப் பொருத்தவரை அரசியல்வாதிகள் ஒப்புக் கொள்ளுகிறார்கள். எனவே, நாம் இதை இப்போது பகிஷ்கரிக்க வேண்டுமா அல்லது அதனிடம் நமது குறைகளைச் சொல்ல வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒத்துழைப்பதால் நாட்டுக்கு நன்மையுண்டா அல்லது பகிஷ்கரித்தால் நன்மையுண்டா என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.

periyar with mr radhaநான் ஆரம்பத்திலிருந்தே ஒரு சிலர் ஆரம்பித்திருக்கும் கமிஷன் பகிஷ்காரம் வெறும் புரட்டென்றும், ஏதோ சில பார்ப்பனர்கள் கமிஷனால் தங்களுடைய ஆதிக்கம் போய் விடுமோ என்னும் பயத்தால் பகிஷ்காரம் பகிஷ்காரம் என்று வெறும் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்களென்றும், அவர்கள் மற்றவர்களை ஏமாற்றி தங்கள் காரியம் கொண்டு போகவே இவ்வியக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்களென்றும், ஆகையால் இழிவையும் கொடுமையையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் இத்தகைய ஏமாற்று வார்த்தைகளுக்கு ஆளாகாமல் கமிஷனிடம் தங்களுடைய கஷ்ட நஷ்டங்களை தெரிவித்தால்தான் அவர்களுக்கு ஏதாவது நன்மை உண்டாகலாமென்றும் நான் அடிக்கடி கூறி வந்திருக்கிறேன்.

சைமன் கமிஷன் பிரச்சினையின் ஆரம்பத்தில் ஜஸ்டிஸ் கட்சியும் கூட முதலில் திணறி விட்டது. அது நமக்கும் கமிஷனுக்கும் என்னென்ன சம்பந்தங்களிருக்கின்றன, நமக்கு அதனால் நன்மை ஏதாவது கிடைக்குமாவென்றெல்லாம் கவனிக்காமல் பகிஷ்கரிக்கத் தீர்மானித்து விட்டது. ஏனெனில் அவர்கள் அடுத்த தேர்தல் எப்படி எப்படி வந்து முடியுமோவென்று பயந்து விட்டார்கள். நம் ஓட்டர்களுக்கோ ஓட்டை எப்படி உபயோகிப்பது என்கிற அறிவு இன்னும் வரவில்லை. அவர்களை ஏமாற்றி வயிறு வளர்க்க ஒரு சாரார் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அக் கூட்டத்தில் ஜனங்களை ஏமாற்றிப் பிழைக்க வேண்டிய கூலிகளெல்லாம் சேர்ந்து கொண்டார்கள். ஆனால் சமூக சீர்திருத்தத்துக்காகப் பாடுபடுகிறவர்களும், உத்தியோகத்தை விரும்பாதவர்களும், சுயமரியாதையுள்ளவர்களும், 'பகிஷ்காரம் புரட்டு, அதில் ஒன்றுமேயில்லை, பகிஷ்காரம் என்று கூச்சல் போடுகிறவர்களின் யோக்கியதை நமக்குத் தெரியும்' எனச் சொல்லி மக்களை எச்சரிக்கை செய்து கொண்டு வந்தார்கள். சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், பகிஷ்காரம் புரட்டு என்று கூறி வந்தார்கள். நானும் எனது பத்திரிகையில் அவ்வாறே எழுதி வந்தேன்.

நமது மதத்திலுள்ள ஊழல்களையும், புரட்டுகளையும் எடுத்துக் காட்டினால் நம்மை நாஸ்திக மதத்தைப் பரப்புவர்களென்று சொல்வது போல் அரசியல் புரட்டுகளை எடுத்துக் காட்டினால் தேசத் துரோகிகள், சர்க்கார் பூசாரிகள், உத்தியோக வேட்டைக்காரர்கள் என்றெல்லாம் நம்மை ஒரு சாரார் தூற்றி வந்தார்கள். அந்தக் காலத்தில் நாம் எக்காரணத்தைக் கொண்டு கமிஷன் பகிஷ்காரம் புரட்டென்றும், அதனிடம் நமது குறைகளைச் சொல்லிப் பார்த்து விட வேண்டுமென்றும் கூறி வந்தோமோ அந்தக் காரணங்களைக் கொண்டே முன்பு பகிஷ்காரத்தில் சேர்ந்திருந்தவர்கள் இப்போது வந்து விட்டார்கள். முன்பு பகிஷ்கரிப்பதென முடிவு செய்த ஜஸ்டிஸ் கட்சியும் கமிஷனுடன் ஒத்துழைக்க முடிவு செய்து விட்டது. ஏனெனில் அவர்கள் கமிஷனுடன் ஒத்துழைப்பதற்கு தடையாயிருந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டு விட்டன.

சென்னையில் ஒரு கூட்டத்தார் கமிஷனை பகிஷ்கரிக்க வேண்டுமென்று கூச்சலிட்டதுமன்றி சைமன் இந்தியாவுக்கு வந்திறங்கிய தினத்தில் ஹர்த்தாலும் நடத்தினார்களே, அது என்னவாயிற்று. இரண்டொருவர் ஹைகோர்ட்டு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டதோடு அது நின்றது. அவர்களில் சிலர் இப்போது சட்டசபை கமிட்டித் தேர்தலுக்கும் அபேட்சகர்களாக நிற்கிறார்கள். அவர்கள் அடுத்த தேர்தலை எண்ணியே பகிஷ்காரத்தில் சேர்ந்தார்கள். ஒரு மாகாணத்திலும் பகிஷ்காரம் பலிக்கவில்லை. அவர்கள் கூறும் பகிஷ்காரத்துக்கு நம்முடைய குறைகளை சர்க்காரிடமும், கமிஷனிடமும், பார்லிமெண்டாரிடமாவது சொல்லிக் கொள்ளக் கூடாதென்பது தான் அர்த்தமா? பகிஷ்காரமென்று கூச்சல் போடுகிறவர்களுக்கு உள்ளுக்குள் ஒத்துழைக்க வேண்டுமென்பது தான் எண்ணம். ஆனால் மக்களை ஏமாற்றி வாழ்வதற்கே அவ்வாறு சொல்லிக் கொண்டார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளை நன்கு கவனித்தால் அவர்களுடைய யோக்கியதை இன்னதென்பது நமக்குத் தெரியவரும். பகிஷ்காரம் வெறும் கூச்சலாக இல்லாவிட்டால் ஒவ்வொருவரும் தனித் தனியாக சுயராஜ்யத் திட்டம் தயாரித்து அனுப்புவானேன்?

ரகசிய திட்டங்கள்

ஸ்ரீ. எஸ். சீனிவாசய்யங்கார் தயாரித்த திட்டம் பார்லிமெண்டு குப்பைத் தொட்டிக்குப் போயிற்று. அம்மட்டோ? அவர் இங்கு பகிஷ்காரம், பகிஷ்காரம் என்று சொல்லி விட்டுச் சீமைக்கு தேகசுகத்தை முன்னிட்டுச் செல்வதாகச் சொல்லிப் போய் அங்கு பல ஆங்கிலேயர்களையும், அரசியல்வாதிகளையும் ஒருவர் பாக்கியில்லாமல் நேரில் கண்டு பேசி தம்முடைய திட்டத்தை அவர்களிடம் கொடுத்து அதை ஒப்புக் கொள்ள வேண்டுமென்று கெஞ்சினார். இதெல்லாம் பகிஷ்காரமா அல்லது ஒத்துழைப்பா?

இனி “ஹிந்து” ஆசிரியர் ஸ்ரீ. எ.ரெங்கசாமி அய்யங்கார் ஒரு திட்டம் தயாரித்து அனுப்பினார். அதுவும் பார்லிமெண்டு குப்பைத் தொட்டிக்கு இரையாயிற்று. அன்னிபெசண்டு அம்மையார் குடியாட்சி மசோதா ஒன்று தயாரித்து அனுப்பினார். அது ஒன்றரை வருஷமாகப் பார்லிமெண்டில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த மாது இந்தியாவில் கதவு வைத்த வீடு வீடாகச் சென்று அதற்கு சம்மதம் வாங்கிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ்காரர்கள் தாங்கள் கெட்டுப் போனதல்லாமல் மற்றக் கட்சிகளையும் கெடுக்கும் பொருட்டு சர்வகட்சி மகா நாடொன்று கூட்டி கமிஷனை பகிஷ்கரிக்க வேண்டுமென்று தீர்மானம் செய்துவிட்டு, மற்றொரு அரசியல் திட்டத்தைத் தயாரித்து கமிஷன் கால்களில் வைத்துப் பூசை செய்யக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பண்டித நேரு ஒரு திட்டம் தயாரித்திருக்கிறார். அதுவும் கமிஷனுக்கு அனுப்பவே தயாரிக்கப் பட்டிருக்கிறதென்று நான் திட்டமாகக் கூறுகிறேன். ஆகவே அவர்கள் ஒவ்வொருவரும், தலைவரும், தனித்தனியாக திட்டங்களும், அபிப்பிராயங்களும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இனி பார்ப்பனர் சபையொன்று ஒரு யாதாஸ்து தயாரித்து அனுப்பி வருகின்றது. பார்ப்பனர்களெல்லாம் இவ்விதம் ரகசியமாக தங்களுடைய குறைகளையும், அபிப்பிராயங்களையும் கூறிக் கொண்டு வருகையில், பார்ப்பனரல்லாதாராகிய நாம் ஏன் நமது குறைகளை சர்க்காரிடம் சொல்லிக் கொள்ளக் கூடாதென்பது எனக்கு விளங்கவில்லை. இனி மற்ற மாகாணங்களெல்லாம் கமிஷனை பகிஷ்கரித்து விட்டதென்றும், சென்னை மாகாணம் மட்டும்தான் கமிஷனை பகிஷ்கரிக்க மறுக்கிறதென்றும் அதற்குப் பார்ப்பனரல்லாதார் தான் காரணமென்றும் பார்ப்பனர்கள் இப்போது பறை சாற்றி வருகிறார்கள்.

நமது குறைகளை சர்க்காரிடத்தில் உள்ளபடி கூறுவதிலோ, அரசியல் புரட்டுகளை எடுத்துக் காட்டுவதினாலோ நாம் தேசத் துரோகிகளாக மாட்டோம். இதுவரை நாம் பார்ப்பனர்களிடம் இருந்து ஒத்துப்பாடியும் அவர்கள் நம்மை லட்சியம் செய்தார்களா? இதிலிருந்து அவர்கள் நம்மை ஏமாற்றுவதற்கே பகிஷ்காரக் கூச்சல் போடுகிறார்களென்பது தெரிய வரும். நாம் இதுவரை ஏமாந்து வந்தது போதும். கோயமுத்தூர் மகாநாட்டில் கவர்னர் மீது நம்பிக்கையில்லை என்ற ஒரு தீர்மானம் செய்யப்பட்டபோது இந்தப் பார்ப்பனர்கள் கவர்னரிடம் ஓடிப் போய் இதுவரை ஜஸ்டிஸ் கட்சிக் காரர்களை நல்லவர்களென்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்கள். பாருங்கள், இப்போது உங்களையே விரட்ட வேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கின்றார்கள்? என்று கூறினார்கள். இப்படிப்பட்டவர்களை நம்பலாமா?

இதுவரை நாம் அவர்களுடைய பேச்சைக் கேட்டு ஏமாந்து வந்ததுபோதும். ஆகையால் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் குறைகளை சர்க்காரிடம் சொல்லிக் கொள்வதில் குற்றமில்லை. கடைசியாக நான் என்ன சொல்கிறேன் என்றால், பார்ப்பனரல்லாதார் அரசியல் விஷயத்தில் தனித்து நின்றால்தான் உண்மையான விடுதலை பெற முடியுமேயல்லாமல் பார்ப்பனருடன் கலந்தால் அவர் கள் நம்மை அரசாங்கத்திற்குப் பலி கொடுத்துக் கூலி பெற்றுக் கொள்வார்கள்.

(குறிப்பு : 06.09.1928 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற பார்ப்பனரல்லாதார் பொதுக் கூட்டச் சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 16.09.1928)

Pin It