Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பல்வேறு வகைகளில் மோசடியாக நிலக்கொள்ளையர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன. நிலத்தை அபகரிப்பதென்பது தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது. இதுவரை அரசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் அபகரிக்கப்படுவதே பிரதானமாக இருந்தது. இப்போது தனியார் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இந்த அபகரிப்பு சமீப ஆண்டுகளாக தீவிரப்பட்டிருக்கிறது. நிலக்கொள்ளை ஏன், நிலக்கொள்ளை தீவிரப்பட்டிருப்பதற்கான பிரதான காரணங்களை இப்படி வகைப்படுத்தலாம். விவசாயம் சார்ந்த பொருளாதாரமாக இருந்த நிலை மாறி தொழில் சார்ந்த பொருளாதாரமாக மாறுவது. அப்படி மாறுகிறபோது மூலதனம் தொழில்நுட்பம் மனிதவளம் மூலப்பொருட்கள் என ஒரு தொழிற்சாலைக்கோ நிறுவனத்திற்கோ தேவைப்படும் அனைத்தையும் வெளியிடங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் நிலம் மட்டும் எந்த இடத்தில் தொழில் ஆரம்பிக்கப்படுகிறதோ அந்த இடத்கில் வேண்டும். எனவே நிலத்தை தேடுவதும் உத்தரவாதப்படுத்துவதும் தொழில் தொடங்குவோரின் முதல் பணியாக மாறி விடுகிறது. இரண்டாவதாக ரியல் எஸ்டேட் தொழிலில் கிடைக்கும் லாபம். ரியல் எஸ்டேட் தொழிலில் பெருமளவில் ஈடுபடுவோரின் முதல¦டு பெரும்பாலும் கருப்புப்பணமும் பினாமிப் பணமும். இத்தகைய பேர்வழிகள் ஆரம்பத்தில் ஒரு இடத்தை வாங்குகிறபோது அதனருகில் உள்ள இடங்களை கைப்பற்றுவதை வாடிக்கையாகக்கொண்டிருந்தனர். இப்போது தங்களுக்கு வாய்ப்பான இடத்தைத் தேர்வு செய்து அதை போல ஆவணங்கள் மூலம் கைப்பற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

கொள்ளைகள் பலவிதம்:

சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலக்கொள்ளைகள் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம். ஒன்று கோவில்பட்டி ஹாக்கி மைதானம் 1962லருந்து பொதுப் பயன்பாட்டில் இருந்து வருகிறது நகராட்சி எல்கைக்குள் அமைந்திருக்கிற இடத்தை அதை நிர்வகித்து வந்த ட்ரஸ்ட் ரியல் எஸ்டேட் காரர்களுக்கு விற்று ப்ளாட்டுகளாக மாற்றப்பட்டது. இது பொதுச் சொத்தை நிர்வகிப்பவரும் ரியல் எஸ்டேட்காரர்களும் சேர்ந்து கூட்டுக்கொள்ளையில் ஈடுபடுவது. இரண்டாவது 1889 முதல் நான்கு கிராமங்களைச் சார்ந்த மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிற விவசாய நிலத்தை வருவாய் அதிகாரிகள் துணையுடனும் நீதிமன்றங்களை ஏமாற்றியும் ரியல் எஸ்டேட் காரர்களுக்கு விற்று விடுவது. இது ஸ்ரீவைகுண்டம் தாலுகா தெய்வச்செயல்புரம் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மோசடி. மொத்த பரப்பளவு 915 ஏக்கர். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 315 ஆகும்.

மூன்றாவது விவசாயிகளிடம் நிலம் இருக்கும். அத்தனை ஆவணங்களும் அவர்களிடம் இருக்கும். அவர்களுக்குத் தெரியாமலேயே யாரோ ஒருவர் போலி நபர்களை நில உரிமையாளர்களாகக் காட்டி அதிகாரப் பத்திரத்தைப் பதிவு செய்து கொள்வது. அந்த அதிகாரப் பத்திரத்தின் அடிப்படையில் பினாமிகள் பெயரில் கிரையப் பத்திரம் முடிப்பது. பிறகு இப்படி கிரையம் பெற்றவர்களிடமிருந்து ஒரே நபர் மொத்த இடங்களையும் மறு கிரையம் செய்து கொள்வது. இது நடைபெற்றது ஓட்டப்பிடாரம் ஒன்றியம் சல்லாங்குளம் வருவாய் கிராமத்தற்குள். மோசடி அதிகாரப் பத்திரங்களின் எண்ணிக்கை இதுவரை தெரிய வந்த விவரப்படி 49 ஆகும். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் அளவு 3142 ஏக்கர். கிரையத்திற்கு உள்ளான நிலம் 1200 ஏக்கர். மறு கிரையத்திற்குள்ளாக ஒரே நபர் வாங்கியுள்ள இடம் 1112 ஏக்கர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் அதிகாரத்தில் உள்ள பிரமுகரின் நெருங்கிய உறவினர் சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் பத்திர எழுத்தர்கள் பத்திர விற்பனையாளர்கள். நான்காவது வகையிலானது சற்று வித்தியாசமானது. ஒரு குறிப்பட்ட இடத்தில் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் அதிகாரிகள் ரியல் எஸ்டேட் காரர்கள் நிலத்தை வாங்கிக்கொள்வது. அதனருகில் உள்ள விளை நிலத்தை அரசு கையகப்படுத்த நிர்ப்பந்திப்பது.

இதன் மூலம் சிப்காட்டிற்கு அந்த இடங்கள் கையகப்படுத்தப்படுவதால் அருகிலுள்ள இடங்களுக்கு நில மதிப்பு உயரும் என்கிற காரணமும் அதன் மூலம் கொள்ளை லாபம் என்பதுவுமே நோக்கம். இதற்கொரு உதாரணம் வ.உ.சியின் ஓட்டப்பிடாரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி. மேற்சொன்ன வகை பிரமுகர்கள் இதற்கு உடந்தை. ஐந்தாவது கோயில்களின் பெயரால் தலைமுறை தலைமுறையாக மக்கள் அனுபவத்தில் இருந்த நிலங்களை அடியாள், காவல்துறை மற்றும் வருவாய்துறையின் உதவியுடன் கைப்பற்றி முள் வேலியிட்டு மின்சாரம் பாய்ச்சி விவசாயகள் நிலத்தில் இறங்குவதை தடை செய்வது. இந்த வகை மோசடி விவகங்கை மற்றும் விருதுநகரில் நடைபெற்றுள்ளது. ஆறாவதாக அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி தங்கள் நிலத்திற்கருகில் இருக்கும் அரசு புறம்போக்கு ஏரி கண்மாய் அனாதீனம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலங்களை அபகரித்துக்கொள்வது. இதற்கு உதாரணம். திருவள்ளுர் மாவட்டம் காவேரி ராஜபுரம். இப்படி இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. நிலக்கொள்ளையர்களை ஊக்குவிப்பது எது சந்தேகமின்றி இத்தகையவர்களுக்கு அரசின் துறைகள் சோரம் போவதும் சில நிகழ்வுகளில் அரசும் அரசாங்கமும் சம்பந்தப்பட்டவர்களின் தயவிற்காகவும் அவர்களின் கூட்டாளியாகவும் இணைந்து செயல்படுவது தான். அதேபோல் சட்டத்திலிருக்கிற ஓட்டைகளும் இவர்களுக்குச்சாதகமாய் இருப்பதும் காரணமாகிறது.

உதாரணமாக காவேரி ராஜபுரம் பிரச்சனையில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. விருதுநகர், சிவகங்கைப் பிரச்சனையில் குற்றவாளி ஆதீனம். மட நிர்வாகிகள், சல்லாங்குளம் பிரச்சனையில் குற்றவாளி, ஆளும் கட்சியின் பிரமுகர். அமைச்சருக்கும் முன்பாக மரியாதை (Protocol) வரிசையில் இருப்பவரின் உறவினர். தெய்வச்செயல்புரம் பிரச்சனையில் வாங்கியவர் ஆளும் கட்சிப் பிரமுகர். விற்றவர் ஆங்கிலேயருக்கு சேவகம் செய்து பல்லாயிரம் ஏக்கரை வளைத்துக்கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர். சட்டத்தில் உள்ள ஓட்டைகள் என்ன. தெய்வச்செயல்புரம் பிரச்சனை: நில உச்ச வரம்பு சட்டம் அமலில் இருக்கும்போது ஒரு நபர் 915 ஏக்கர் விற்க முடியுமா? பதிவுத்துறையின் பதில் விசித் திரமானது. ஒரு நபர் எவ்வளவு விற்கிறார் ஏன் விற்கிறார் என்பது எங்கள் பிரச்சனையல்ல. வாங்குகிற நிலத்திற்கு உரிய முத்திரை கட்டணம் செலுத்தப்பட்டிருக்கிறதா என்பது மட்டும் தான் எங்கள் வேலை. அதுதான் சட்டம் என்கின்றனர்.

சரி. வாங்குகிறவர்களில் ஒருவர் ஆளும் கட்சிப் பிரமுகரின் வாகன ஓட்டுநர். மற்றொருவர் அவரிடம் காவலராகப் பணியாற்றியவர். மற்றொருவர் அவரது சகோதரர். இவர்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பதையோ அது முறையான பணமா கணக்கில் காட்டப்பட்டதா என்பது குறித்தும் யாரும் கவலைப்பட முடியாதாம். சல்லாங்குளம் பிரச்சனையில் ஒரு ஊரில் உள்ள அவ்வளவு நிலங்களுக்கு ஒருவர் பொது அதிகாரப் பத்திரம் வாங்குகிறாரே என்கிற சந்தேகமும் அதன் அடிப்படையில் விசாரணையும் மேற்கொள்ளப்பட வேண்டாமா என்றால் அது சட்டத்தில் இல்லை என்கின்றனர். இந்த ஆவணப் பத்திரங்கள் மோசடியானவை என்பதால் மாவட்ட ஆட்சித்தலைவர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஒன்று இந்த பத்திரப் பதிவுகளின் அடிப்படையில் வருவாய் பதிவேடுகளில் மாற்றம் செய்யக்கூடாது. இரண்டு விவசாயக்கடன் மற்றும் உரத் தேவைகளுக்கு விவசாயிகளிடம் வில்லங்கச் சான்று கேட்கக்கூடாது. ஏனெனில் வில்லங்கச் சான்றில் மோசடிப் பேர்வழிகளின் பெயரில் தான் இருக்கும். எனவே 10 (1) அடங்கல் ஆவணத்தின் அடிப்படையில் உர விநியோகமும் கடன் வழங்குவதும் இருக்க வேண்டும். மூன்றாவதாக சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இவையெல்லாம் மோசடி நடந்திருப்பதை உறுதி செய்யும் அம்சங்கள். பிறகு ஏன் மோசடி பத்திரங்களை ரத்து செய்யக்கூடாது என்றால் சட்டத்தில் அதற்கு இடமில்லையாம். தமிழக அரசின் Reginet இணையதளத்தல் இதற்கு விடை கிடைக்கலாம் என்று தேடினால் விடை கிடைத்தது. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்ற பகுதியில்

கேள்வி எண் 13: ஆள் மாறாட்டம் உண்மைகளை மறைத்தல் பதிவு செய்தல் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் சார் பதிவாளரோ உயர் அதிகாரிகளோ அத்தகைய பத்திரப் பதிவை ரத்து செய்ய முடியுமா?

பதில்:

தற்போது பதிவுச் சட்டத்தில் எந்தக் காரணத்தாலும் பத்திரப்பதிவை ரத்து செய்ய முடியாது. ஆனால் பத்திரப் பதிவிற்கான விளைவுகளை எழுதிக்கொடுத்தவர் ரத்துப் பத்திரம் எழுதி இல்லாமல் செய்து விட முடியும். பதிவை உரிய நீதிமன்றம் தான் ரத்து செய்ய முடியும்

எழுதிக் கொடுக்காதவர் எப்படி ரத்துப் பத்திரம் எழுத முடியுமென தெரியவில்லை. அதாவது மோசடியே என்ற தெரிந்தாலும் ரத்து செய்ய கோர்ட்டுக்கு தான் போக வேண்டும். யார் நிலத்தையும் யாரும் திருடிக்கொள்ளலாம். மீட்பதற்கு நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டுமாம்! இது மோசடிப் பேர்வழிகளை ஊக்குவிக்கும் சட்டம் தானே. இன்னொரு கேள்வி எழுகிறது. ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு இடத்தில் முத்திரை கட்டணம் 10ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. இன்னொரு இடத்தில் அதுவே சில லட்சம் ரூபாயாக இருக்கிறது. இதன் பொருள் என்ன? கூடுதல் மதிப்புள்ள இடத்திற்கு ரிஸ்க் அதிகம். எனவே அதற்கு கூடுதல் கட்டணம் பெறப்படுகிறது என்பது தானே. எனவே முத்திரைக் கட்டணம் பதிவதற்கு மட்டுமல்ல பாதுகாப்பதற்கும் தானே! எனவே, ஏற்கனவே பதிவு செய்துள்ள பயன்பாட்டாளர் ஒருவரின் நிலத்தைப பாதுகாப்பது அரசின் கடமையல்லையா? இன்னொரு வகையான பிரச்சனையும் எழுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் சில தனி நபர்களால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. துத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் பொட்டலூரணி மற்றும் கொம்புக்கார நத்தம் கிராமங்களுக்கிடையில் 1800 ஏக்கர் நிலம் முன்னாள் அமைச்சர் ஒருவரால் வாங்கப்பட்டுள்ளது. பணம் கொடுத்துதான்.

இதுபோன்று பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் தனி நபர்களால் வாங்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை இம்மாவட்டத்தின் நிலப் பயன்பாட்டுத் தன்மையில் மாற்றத்தை உருவாக்காதா? ஏரி குளத்தைப் பாதுகாப்பது எதற்காக? விவசாயத்தைப் பாதுகாக்க. விளைநிலங்கள் அனைத்தும் தொழிலுக்கும் நிறுவனங்களுக்கும் போய்விட்டால் விளைச்சல் எப்படி சாத்தியமாகும். அரசு செய்ய வேண்டியதென்ன? 1) பொது அதிகாரப் பத்திரம் பதிவு செய்யும் போது தாய் பத்திரங்கள் பார்வையிட்டு பதிவு செய்யப்பட வேண்டும். பொது அதிகாரப் பத்திரம் பதிவு செய்தவுடன் வில்லங்கச் சான்றிதழில் பொது அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். 2) ஒரு குறிப் பிட்ட எல்கைக்குள் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பொது அதிகார ஆவணம் பதிவு செய்யப்பட்டால் எழுதிக்கொடுப்பவர் உண்மையான நபர் தான் என வருவாய்த் துறையால் நேரடியாக சான்றளிக்கப்பட வேண்டும். 3) அடையாள சாட்சிகள் எழுதிக்கொடுப்பவர் வாங்குபவர் பற்றி உரிய முன் அறிமுகம் இன்றி கையெழுத்திட்டால் அவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். 4) பதிவுத்துறை அதிகாரிகள் தவறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உண்மையான நிலச் சொந்தக்காரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் சிரமம், பணச்செலவு ஆகியவற்றை ஈடு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து வசூலிக்க சட்டம் வேண்டும். கிரிமினல் நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட வேண்டும். 5) மோசடிப் பத்திரம் (பொது அதிகாரப் பத்திரமோ, கிரையப்பத்திரமோ) என்று முதல் நிலையில் தெரிந்தால் தொடக்க நிலை முதல் அதுகாறும் நடந்திருக்கும் பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு நில உடைமையாளரின் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும்.

6) வாங்குபவரின் பணம் முறையான வழியில் பெறப்பட்ட கணக்கில் வந்த பணம்தானா? என்பது உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். ஒரு வரையறைக்கு மேற்பட்ட மதிப்புள்ள பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையின் கவனத்திற்கு அனுப்பப்பட வேண்டும். 7) ஒவ்வொரு மாவட்டத்திலும் விளை நிலங்கள் என்று வகைப் படுத்தப்பட்டவற்றை பட்டியலிட்டு அப்பகுதியில் பெரும்பரப்புகள் வேறு பயன்பாடுகளுக்காக மாற்றப்படுவதை தடை செய்ய வேண்டும். 8) விவசாய நிலங்கள் வேறு பயன்பாடுகளுக்கு மாற்றப்படாமல் இருக்க விவசாயத்தை ஊக்குவிக்க உற்பத்தித் திறனை மேம்படுத்த அரசு முன் வரவேண்டும். நிறைவாக: இவையனைத்தும் மக்கள் நலன் பேணுகிற அரசால் மட்டுமே சாத்தியம். கொள்ளையில் கூட்டு என்கிற நிலை யெடுத்தால் அராஜகமே தலைவரித்தாடும். இப்போது அராஜகமே கோலோச்சுகிறது. அரசின் அணுகுமுறை மாற வேண்டும். அதை மாற்ற வைக்கிற சக்தி மக்களிடம் மட்டுமே உள்ளது. தங்கள் சக்தியை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

- க.கனகராஜ்

 

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 namachivayam 2011-04-28 20:21
anathu etatthai eppatiththan mosati seyya muyarchikkirarg al uthavuveercala
Report to administrator

Add comment


Security code
Refresh