கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

casteபச்சிலை என்பது பாம்பின் விஷத்தைக்கூட முறிக்கும் தன்மை வாய்ந்தது. ஒரு இலை அல்ல பல இலைகளை ஒன்று சேர்த்து, பக்குவமாக பயன்படுத்தினால் பச்சிலைiயும் மருந்தாகும்.

பக்குவமாக பயன்படுத்த நமக்கு தெரியாத வரைக்கும் பச்சிலை வெறும் இலையாகவோ, காட்டுச் செடியாகவோ நம் கண்ணுக்கு தெரியும்.

அதைப் போலவே, இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகளை சரியான பாதையில் வழிநடத்தும் பக்குவம் இல்லாதவர்கள், அவர்கள் மீது வீணான பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

இன்றைய டிஜிட்டல் இந்தியா காலத்தில், தங்களை சமுதாய தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரும் சாதிய, மதரீதியாக இளைஞர்களை, மாணவர்களை வழிநடத்தி, அவர்களின் வாழ்வாதார நிலை குறித்தும், அவர்களின் குடும்பநிலை குறித்தும், தான் வாழும் சமூகநிலை குறித்தும் சிந்திக்க விடாமல், அவர்களை பயனற்ற காட்டுச்செடியாகவே வளர்க்க நினைக்கின்றனர்.

சாதிப்பற்று, மதப்பற்று, இந்த சாதியின் பாதுகாவலன், அந்த மதத்தின் பாதுகாவலன் என்று விஷமப் பிரச்சாரம் செய்து, அறிவுசார் பிரிவுக்கு தலைவராக ஜோசியர்களை நியமித்து, மக்களை அறிவியல் பாதையில் சிந்திக்க விடாமல் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கின்றனர் அறிவிலிகள்.

ஆனால், இத்தகைய விஷமப் பிரச்சாரத்திற்கெல்லாம் முறிமருந்தாக இந்திய மாணவர் சங்கமும், ஜனநாயக வாலிபர் சங்கமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கமும், சமூகத்தின் கடைக் கோடியில் இருக்கும் இளைஞர்களையும், மாணவர்களையும் ‘கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்” என்ற அண்ணல் அம்பேத்கரின் வழியில் நின்று வழிநடத்தி, பச்சிலையை மருந்தாக்கும் வித்தையை செவ்வனே செய்துவருகிறார்கள்.

நாம் வாழும் சமூகத்தின் வாழ்நிலையை எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் விதத்தில் மாற்றி அமைக்கும் செயல்பாடு உழைக்கும் மக்களின் ‘போராட்டம்” ஆகும்.

உழைக்கும் மக்களின் வாழ்நிலையை மேம்பட்டதாய் மாற்றி அமைக்கும் வெகுமக்களின் தீவிரமான செயல்பாடு ‘புரட்சி” ஆகும்.

பச்சிலையை மருந்தாக்கும் செயல்பாடு, வெகுமக்கள் இணைந்து செயல்படும்போது, புரட்சிகரமானதாக மாறுகிறது. அது உழைக்கும் மக்களுக்கு நன்மையைத் தருகிறது.

வித்தைகளில் பலவகை உண்டு. குறிப்பாக செப்படி வித்தை, கண்கட்டு வித்தை காட்டுகிறான் என்று பொதுவெளியில் பேச்சுவழக்கு ஒன்று உண்டு. பச்சிலை என்னும் இளைஞனை சமூக மாற்றத்திற்கான மருந்தாக்கும் வித்தை மூடியிருக்கும் அனைவரது கண்களையும், நீதிதேவதையின் கண்களையும் திறக்க வைக்கும் போர்க்குணம் மிக்கது.

சிறுவன் ஒருவன் தொலைக்காட்சியில் வீராதி வீரர்கள் மோதிக்கொள்ளும் மல்யுத்தம் பார்த்துக் கொண்டிருந்தான். அதில், உடலளவில் சிறியவர்களாக இருந்தவர்களும், பெரியவர்களாக இருந்த பலரும் தனித்தனியே மோதிக்கொண்டனர். அப்போது உடலளவில் பெரியதாக இருந்தவன் ஆட்டக்களத்தின் கீழே நின்று கொண்டிருந்தவன் உதவியோடு பல தில்லுமுல்லுகளைச் செய்து, நன்றாக மல்யுத்தம் செய்து கொண்டிருந்த உடலளவில் சிறியவனாக இருந்தவனை வென்றுவிட்டான்.

உடலளவில் பெரியவனாக இருந்தவன் போட்டியில் செய்த தில்லுமுல்லுகளை அந்த போட்டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி மறைத்துவிட்டது. அதனைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களும் உடலளவில் பெரியவனாக இருந்தவனே பலசாலி என்று நம்பி ஏமாந்துகொண்டிருக்கும் காலமாக இன்றைய டிஜிட்டல் இந்தியா உள்ளது.

சிறிது நேரத்தில் குழுவாக மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்றது. அதில் உடலளவில் பெரியவனாக இருக்கும் தில்லுமுல்லு செய்து, வெற்றிபெறுபவனையும், அவனுக்கு போட்டி விதிமுறைகளை மீறி உதவி செய்யும் கூட்டாளிகளையும், உடலளவில் சிறியதாக இருந்தவன் தனது கூட்டாளிகளின் உதவியோடு முறையாக குழு மல்யுத்தம் நடத்தி வெற்றி கண்டான்.

உடலளவில் சிறியதாக இருந்தவனின் கூட்டாளிகளின் ஒன்றுசேர்ந்த போராட்டமே, இறுதியில் வெற்றிக்கு உதவியது. இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் அதிகாரத்தில் இருக்கும் பலரும் பல தில்லு முல்லுகளைச் செய்து விவசாயிகளின் போராட்டங்களை இந்திய மக்களின் பார்வையில் இருந்து திசைத் திருப்பிவிடலாம் என்று கணக்குப்போடும் வேளையில் இந்திய மக்கள் நலம் விரும்பும் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுகூடி களத்தில் இறங்கினால், இந்திய நாட்டின் போராட்ட வரலாறு புதிய சகாப்தம் படைக்கும்.

நாம், சக்திமான் என்னும் கற்பனைத்தொடர் நாடகத்தில், சக்திமானின் தனிநபர் சாகசங்களை கண்டு வியந்திருக்கிறோம். சக்திமான் ஒரு கற்பனை நாயகன். அவனைப்போன்ற அதீத, அறிவியலுக்குப்புறம்பான மாயாஜால சக்தி, மனிதர்களிடம் கிடையாது.

ஆனால், அதே சக்திமான் எனும் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் தனது அதீத கற்பனாவாத சக்திகளை இழந்து, வெறுமனே சாதாரண மனிதனாக ‘கங்காதர்” என்ற கதாபாத்திரத்தில் தீமை செய்பவர்களை எதிர்த்து போராடுவார்.

கங்காதர் போல ஒவ்வொரு தனிமனிதனும், வெகுஜனமும், இளைஞர்களும் இணைந்து செயல்படும்போது, பல பச்சிலைகள் ஒன்று சேரும்போது, சாதியம், மதவாதம், பட்டப்பகல் கொள்ளைக்கார முதலாளித்துவம் எனும் விஷம் முறிவது உறுதி.

இன்றைய இளைஞர்கள் பல சினிமாக்களை மிகவும் ஆர்வமுடன் பார்க்கின்றனர். அதில் வரும் கதாநாயகன் தனி ஒரு மனிதனாக, பொதுமக்களுக்கு தீமை செய்யும் அரசியல்வாதிகளையும், வில்லன்களான பெருமுதலாளிகளையும் பந்தாடுகிறார்.

ஆனால், எதார்த்த நடைமுறையில் இளமை இருக்கும்போது, செயல்படும் வேகம் முதுமையில் குறைந்துபோகும் என்பதே அனுபவ உண்மை. தனி ஒரு மனிதனாக செயல்படுவதைக்காட்டிலும், ஒவ்வொரு தனிமனிதரும் ஒன்றுசேர்ந்து ஒரு இயக்கமாக செயல்படுவதே நாம் வாழும் சமூகத்திற்கு பயன்தருவதாக அமையும் செயல்பாடாகும்.

ஆக இளமையோ, முதுமையோ, இளைஞர்களும், வாலிபர்களும், உழைக்கும் மக்களும் ஒன்றுசேர்ந்து, நம் கண்முன்னே நடக்கும் சமூக அவலங்களுக்கெதிராய் ஆளும் அரசுகளின் தவறான சட்ட திட்டங்களுக்கெதிராய், பெருமுதலாளிகளின் உழைப்புச் சுரண்டலுக் கெதிராய் ஒன்றுசேர்ந்து போராடினால் மட்டுமே ‘பொன்னுலகம் இப்பூவுலகில் உண்டாக வழிபிறக்கும்.

மதங்கள் இல்லாத சொர்க்கத்தை இறந்தபிறகு பார்க்கலாம் என்று நம்பவைத்து உழைக்கும் மக்களை சிந்தித்து செயல்பட விடாமல், எல்லாம் தலைவிதி என்ற அடிமை எண்ணத்தோடு வாழ நிர்ப்பந்திக்கின்றன.

ஆனால், ‘உழைக்கும் மக்களின் ஒன்றுசேர்ந்த போராட்டமே', சொர்க்கத்தை மனிதர்கள் உயிருடன் வாழும்போதே இப்பூமியில் அனைத்து மக்களுக்கும் கொண்டுவரும் வித்தையாகும்.

இன்றைய இந்தியாவில் சாதிய, மதரீதியாக ஒன்றுசேரும் இளைஞர்களையும், மாணவர்களையும், கல்வி ரீதியாக, அறிவியல் வழியில் ஆக்கப்பூர்வமாக ஒன்று சேர்ப்பதே ‘பச்சிலையை மருந்தாக்கும் வித்தை' ஆகும்.

சாதிய தலைவர்களுக்காக ஒன்றுசேரும் இளைஞர்களை, தான் வாழும் நாட்டில், மாநிலத்தில், மாவட்டத்தில், சொந்த ஊரில் தன் குடும்பத்தைச்சுற்றி வாழும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் போக்க, வருடத்திற்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு வழங்குகிறேன் என்று சொன்னாயே ஆளும் அரசாங்கமே அது எங்கே என்று கேட்க.. இளைஞர்களை பக்குவமாக ஒன்று திரட்டுவதே இன்றைய தேவை.

இன்றைய இளைஞர்களை எதற்கும் உதவாத வெறும் காட்டுச்செடி என்னும் பார்வையை விட்டொழித்து அவனுக்குள் இருக்கும் விஷமுறிவு மருந்தென்னும் அறிவியல் மனப்பான்மையை, பகுத்தறியும் தன்மையை வெளிக்கொணர வேண்டும்.

அதற்கான பணியை ஊழியர் சங்கங்களிலும், தொழிற்சங்கங்களிலும், உழைக்கும் மக்களின் வெகுஜன மக்கள் இயக்கங்களிலும் பங்கெடுத்துவரும் தோழர்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும். புத்தக வாசிப்பு, அறிவியல் மனப்பாங்கு வளர்ப்பு போன்ற தொடர் இயக்கங்களை முன்னெடுத்துவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் அனைவரும் பங்கெடுப்பது நல்ல எதிர்காலத்தை நம் சந்ததிகளுக்கு வழங்கும்.

இன்று உழைக்கும் மக்களின் போராட்டக்களங்களிலே, ஒருசில வயதான தாத்தாக்கள் மட்டுமே உறுதியோடு நின்று போராடுவதை நம்மால் பார்க்கமுடிகிறது. அவர்கள் பகுத்தறிந்து செயல்படும் பண்பாளர்கள். அவர்களின் வழித்தோன்றல்களான மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் இழப்பதற்கு ஏதுமில்லை, அடிமைச்சங்கிலி என்னும் எண்ணவோட்டத்தை தவிர, என்ற முற்போக்கான எண்ணத்தோடு, நம் சொந்த நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக ஒன்று சேரவேண்டும்.

நாடு என்றால் வெறும் நிலப்பரப்பைக்குறிப்பதல்ல. நாடு என்றால் வெறும் மண்ணும் மண்ணாங்கட்டியும் அல்ல. அங்கே வாழும் உயிருள்ள மனிதர்களைக்கொண்டதே நாடு. அந்த மக்களின் நல்வாழ்வுக்காக உழைப்பதே உண்மையான தேசபக்தி. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்றால், ‘எங்கள் தோழர்களே இந்திய மக்களின் தோழர்கள்'.

நமது அறவழி கருத்துக்களும், செயல்பாடுகளும் பாராட்டப்படுகிறதா? அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? என்பதை குறித்து கவலைப்படாமல் நம் செயல்பாடுகள் மற்றும் கருத்துக்கள் மற்றவருக்கு எவ்வளவு கசப்பாக இருந்தாலும், உண்மையை எடுத்துரைப்பதும் அறிவியலின் வழியில் செயல்படுவதுமே நம் இலட்சியமாகக் கொண்டு செயல்படுவோம், பச்சிலையை மருந்தாக்குவோம்.

அடிமை - ஒரேயடியாக விற்பனை செய்யப்பட்டு விடுகிறான். ஆனால், படித்த மாணவர்களும், இளைஞர்களும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் தன் உழைப்பை விற்றுத்தான் இந்த உழைப்புச்சுரண்டல் நிறைந்த சமூகத்தில் வாழ வேண்டியிருக்கிறது.

பொதுவுடைமைச்சமுதாயம் அமைத்து, பெருமுதலாளிகள் கையிலிருக்கும் அறிவியலின் கண்டுபிடிப்புகளான உற்பத்தி கருவிகளும், இயந்திரங்களும், அரசியல் அதிகாரமும் எப்போது உழைக்கும் இளைஞர்களின் கைகளில் எல்லோருக்கும் பொதுவானதாய் வந்துசேருமோ அன்றே பொன்னுலகம் அமையும் நாள்.

அரசு நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய மாநில அரசுகளின் மோசமான நிர்வாகத்தை அகற்ற பச்சிலையை மருந்தாக்கும் வித்தை அத்தியாவசியமான ஒன்று.

அனைத்து தொழிற்சாலைகளையும், உற்பத்தி நிறுவனங்களையும் அரசாங்கம் கையகப்படுத்தி ஏற்று நடத்த வேண்டும். அரசு வேலைவாய்ப்பு அனைத்து இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

தனியார் நிறுவனங்களும், அரசு நிறுவனம்போல் தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் உரிமைகளை வழங்க தொழிலாளர் நலச்சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

நாம் வாழும் சமூகத்தில் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார அசமத்துவம் மறைந்து, இந்திய அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு ‘பொருளாதாரச் சமூகநீதி” நிலைநாட்டப்பட வேண்டும்.

மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும், ஆண்களும் இனிமேலும் காட்டுச்செடியாய் வளராமல், பச்சிலையாய் மாறி, சாதி மதம், வேலைவாய்ப்பின்மை, சமத்துவமின்மை, அதிகார அரசியலை ஒழித்து, சோசலிசம் என்னும் சமதர்மப்பாதையில் சமுதாயம் செல்ல நமது அறிவியல் பகுத்தறிவுப்பார்வை வழிகாட்டும். பச்சிலையை மருந்தாக்கும் வித்தையை பக்குவமாய் பயில்வோம் வாருங்கள் தோழர்களே.

நிலப்பிரபுத்துவ காலத்தில் நம் முன்னோர்களை பண்ணையடிமைகளாக வைத்திருந்தது நமது உழைப்பை சுரண்டிப் பிழைத்த கூட்டம். இப்போது தொழிற்புரட்சிக்குப் பின்னர், முதலாளித்துவ தனியார்மய, தாராளமய, உலகமய காலத்தில், படித்து கடைநிலை வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்களின் உழைப்பை சுரண்டி வாழ்கிறது ஆளும் வர்க்கம் என்னும் அதிகார வர்க்கம்.

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பாராளுமன்ற, சட்டமன்ற தலைமைச்செயலகம் என உயர்பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டு, ஆளும் அரசுகளின் தவறான சட்ட திட்டங்களின் பெயரால் உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது ஆளும் அரசுகளின் அடிவருடிக்கூட்டம்.

தேசம் என்றால் மக்கள் என்பதை மறந்து, ஆளும் அரசுகள் மக்களுக்கு விசுவாசமாக இருப்பதற்கு பதிலாக மதவாதத்திற்கும், சுரண்டிப்பிழைக்கும் முதலாளித்துவத்திற்கும் துணை போகின்ற காலகட்டம் இது.

இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் இளைஞர்கள், நாம் அனைவரும் உழைக்கும் மக்களின், விவசாயிகளின் சந்ததிகள் என்பதை உணர்ந்து, ஒரே இயக்கமாக ஒன்று சேர வேண்டும்.

தன் குழந்தைகளின் கல்விக்கும், தன் குடும்பத்தாரின் மருத்துவத்திற்கும் தாங்கள் சம்பாதித்த பெரும்பணத்தை செலவு செய்யும் அவலநிலை நடைமுறையில் இருக்கும் இன்றைய சூழலை மாற்றியமைத்து, அனைத்து கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் அரசுடைமையாக்க, அரசாங்கமே ஏற்று நடத்த, அரசு நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆளும் அரசுகளை உந்தித்தள்ளும் அங்குசமாய் இளைஞர்கள் மாறவேண்டும்.

இளைஞர்கள் எனும் பச்சிலையை முதலாளித்துவ சுரண்டல் முறை, வேலைவாய்ப்பின்மை எனும் நெருக்கடி நிலை கசக்கி பிழிந்து கொண்டிருக்கும் 21 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டின் இறுதிக்கட்டத்தில், இளைஞன் எனும் பச்சிலை மருந்தாகும் காலம் வந்துவிட்டது என்பதே டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் நமக்கு சுட்டிக்காட்டும் அறிகுறி.

 - சுதேசி தோழன்