உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்வராய், கன்வில்கர் ஆகியோரைக் கொண்ட ஆயம் 16.02.2018 அன்று காவிரி ஆற்றுநீர் பங்கீடு வழக்கில் தன் இறுதித் தீர்ப்பை வழங்கியது. 2007இல் காவிரி நடுவர் மன்றம் தன் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு ஒதுக்கிய 192 டி.எம்.சி. நீரில் 14.75 டி.எம்.சி. நீரைக் குறைத்து 177.25 டி.எம்.சி. மட்டுமே உச்சநீதிமன்றம் தன் இறுதித் தீர்ப்பில் வழங்கி தமிழ்நாட்டை வஞ்சித்தது. தீர்ப்பு வெளியான நாளிலிருந்து ஆறுகிழமைகளுக்குள், அதாவது 29.3.18க்குள் இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான “ஒரு செயல் திட்டத்தை” (A Scheme) நடுவண் அரசு உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் திட்டவட்டமான முறையில் வரையறுக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று இதற்குமுன் நடுவண் அரசுக்கு வலியுறுத்திய உச்சநீதிமன்றம் “ஒரு செயல்திட்டம்” என்ற வழுக்கலான சொற்கோவையை வேண்டுமென்றே தன் தீர்ப்பில் பயன் படுத்தியதா? என்று நினைக்க வேண்டியுள்ளது.

பிப்பிரவரி 16 அன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான அன்றே ஆறு கிழமைகளுக்குள் காவிரி மேலாண்மை வாரியமோ அல்லது தீர்ப்பில் கூறப்பட்டுள்ள “ஒருசெயல் திட்டமோ” ஏற்படுத்தப்படாது என்று காவிரிச் சிக்கலில் இந்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் போக்கை நன்கு உணர்ந்தவர்கள் கூறினர். மேலும் கர்நாடக மாநிலத்தில் மே  மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மோடி அரசு ஆறு கிழமைகளுக்குள் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது வாக்குவங்கி அரசியலின் அரிச்சுவடி பாடமாகும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துரைத்தனர்.

கடந்த காலங்களில் நடுவண் அரசில் காங்கிரசு இருந்தாலும் பா.ச.க. ஆட்சி செய்தாலும் தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமை களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளன. கடந்த அய்ம்பது ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஆட்சி செய்துவரும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தன்னல அரசியல் நோக்கங்களுக்காக இந்திய அரசின் தமிழின உரிமைப் பறிப்பு நடவடிக்கைகளைக் கண்டுங் காணாமல் இருந்துவிட்டன. இதே தன்மையில் தான் பிப்பிரவரி 16 அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின்னும் இக் கட்சிகள் நடந்து கொண்டன.

தி.மு.க.வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்ட அறிவிப்பைச் செய்தபிறகு தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க., அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டடத்தை 22.2.18 அன்று கூட்டியது. அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதி களும் தில்லிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு கிழமைக்குள் அமைக்குமாறு வலியுறுத்துவது என்று அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நரேந்திர மோடி தமிழகப் பிரதிநிதிகளைச் சந்திக்க மாட்டார் என்பது நன்கு தெரிந்திருந்தும் மக்களை ஏமாற்றுவதற்காக இப்படி ஒரு தீர்மானம் போட்டார்கள். மோடியும் சந்திப்பதற்கு நாள் ஒதுக்கவில்லை.

நடுவண் அரசு காவிரியில் தொடர்புடைய நான்கு மாநிலங் களின் தலைமைச் செயலாளர்களின் கூட்டத்தை 9.3.2018 அன்று நடத்தியது. ஒன்றுபட்ட கருத்து இக்கூட்டத்தில் ஏற்படாது என்று தெரிந்தே நடுவண் அரசு இக்கூட்டத்தைக் கூட்டியது. தானும் நடவடிக்கை எடுத்ததுபோல் காட்டிக் கொள்வதற்காகவும், நான்கு மாநிலங்களுக்குள்ளும் ஒத்த கருத்து உருவாகாததால் ஆறு வாரங்களுக்குள் உச்சநீதிமன்றம் கூறியவாறு நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று கூறுவதற்காகவுமே இக்கூட்டம் எனும் நாடகம்! இக்கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய நடுவண் அரசின் நீர்வளத் துறைச் செயலாளர் உபபேந்திர பிரசாத் சிங் “30.3.18க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் அப்படியொரு உத்தரவை உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிடவில்லை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த ஒரு திட்டத்தை உருவாக்கவேண்டும் என்றுதான் உச்சநீதி மன்றத் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது” என்று இந்திய அரசின் வஞ்சகத் திட்டத்தை வெளிப்படையாகக் கூறினார்.

அதன்பிறகு 15.3.18 அன்று தமிழச் சட்டமன்றத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை உரிய காலத்திற்குள் அமைக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் இயற்றி அனுப்பப் பட்டது. அதன்பின் மார்ச்சு 21, 23 ஆகிய நாள்களில் தமிழக அரசு இது குறித்து இந்திய அரசுக்கு மடல்கள் எழுதியது. மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் இந்திய அரசுக்கு எழுதிய மடல்களுக்கும் இந்திய அரசு மயிரளவுக்கும் மதிப்பளிக்காத போது மீண்டும் அதே சனநாயகக் கேலிக்கூத்தை நடத்துவது ஏன்?

நாடாளுமன்ற மக்களவையில் 37 உறுப்பினர்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது. மாநிலங்கள் அவையில் 11  பேர் இக்கட்சிக்கு இருக்கின்றனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இருந்தும் அ.தி.மு.க. மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விலக்கு பெற ஏதும் செய்யவில்லை. அ.தி.மு.க.வை விட குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கு தேசம் கட்சியும் ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.காங்சிரசும் நாடாளு மன்றத்தின் இரு அவைகளையும் செயல்படாவிடாமல் முடக்கிக் கொண்டிருந்த நாள்களில் அ.தி.மு.க. உறுப்பினர்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தொடர்ந்து முழக்க மிட்டதைச் சாதனையாகக் கூறிக் கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான இறுதி நாளான 29.3.18 அன்றுகூட தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று இரவு வரையில் பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறிக் கொண்டிருந்தார். காலக்கெடு முடிந்த அடுத்தநாளில் (30.3.18) கூட நடுவண் அரசு உச்சநீதிமன்ற ஆணையின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதது வருந்தத்தக்கது என்றோ, கண்டிக்கத்தக்கது என்றோ தமிழக அரசின் சார்பிலோ, அ.தி.மு.க. கட்சியின் சார்பிலோ எவரும் கூறவில்லை. மோடி அரசின் சார்பிலும் 30.3.18 அன்று எவரும் கருத்து கூறவில்லை.

stalin cauvery strike 600தமிழக அரசு 31.3.18 அன்று உச்சநீதிமன்றத்தில், நடுவண் அரசின் அமைச்சகச் செயலாளர் பி.கே.சின்ஹா, நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி.சிங் ஆகியோருக்கு எதிராகத் தமிழக அரசின் பொதுப்பணித்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் சார்பில், ஆறு வாரங்களுக்குக்குள் உச்சநீதிமன்ற ஆணையை நிறைவேற்றாத தற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தமிழக அரசு தொடுத் துள்ளது. 3.4.18 அன்று அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்த அதேநாளில் (31.3.18) நடுவண் அரசு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம் அளிக்கக் கோரியும், இதைச் செயல்படுத்த மேலும் மூன்று மாதங்கள் கால நீட்டிப்புக் கேட்டும் விண்ணப்பம் அளித்தது. அதில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

  1. மாநிலங்களுக்கிடையிலான ஆற்றுநீர்ச் சிக்கல் தீர்வுச் சட்டத்தின் பிரிவு 6-ஏ அடிப்படையில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ‘ஒரு செயல்திட்டம்’ (scheme) என்றால் என்ன? அந்தச் செயல் திட்டத்தை நடுவண் அரசு அமைக்க முடியுமா?
  2. புதியதாக அமைக்கப்படும் வாரியத்தின் பணிகள் என்ன? எப்படிச் செயல்படவேண்டும்? மேலும் வாரியத்தின் நிர்வாக, தொழில்நுட்ப அம்சங்களை மாற்ற நடுவண் அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா?
  3. கர்நாடகத்தில் வருகிற மே 12ஆம் நாள் சட்டப் பேரவைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரிச் சிக்கல் கர்நாட கத்தில் உணர்வுபூர்வமானதாக இருப்பதால், கடந்த காலங்களில் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அதனால் மனித உயிரிழப்புக்கு ஏராளமான சொத்துகளும் அழிக்கப்பட்டுள்ளன. எனவே சட்டம் ஒழுங்கையும் இரு மாநில நட்புறவையும் கருத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை மூன்று மாதங்களுக்குப் பிறகு அமைக்க கால நீட்டிப்புத் தேவைப்படுகிறது. (காவிரிக் காகத் தமிழகத்தில் வன்முறையிலான போராட்டங்களை நடத்தாததால் இந்திய அரசு தமிழர்களைக் கோழைகளாகக் கருதுகிறதா?

எந்நிலையிலும் எதற்கும் அஞ்சாமல் உறுதியான நடவடிக்கை எடுக்கக்கூடிய வல்லமைபடைத்தவர் நரேந்திர மோடி என்று பா.ச.க.வினர் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நரேந்திரமோடி கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலையும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாது என்றும் கால நீட்டிப்புக் கேட்டு உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பம் போட்டுள்ளார். மோடி ஆட்சியின் நோக்கம் கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல் வரையில் மட்டுமின்றி, 2019இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தள்ளிப் போடுவதே ஆகும். கருநாடத்தில் மீண்டும் காங்கிரசுக் கட்சியின் ஆட்சி அமையுமானால் பழியைக் காங்கிரசு மீது போட்டுவிடலாம் என்றும் ஒருமனக் கணக்கு பா.ச.க.வுக்கு இருக்கிறது.

மோடி அரசு எந்த நோக்கத்திற்காக உச்சநீதிமன்றத்தில் 31.3.18 அன்று விண்ணப்பித்ததோ, அது சரி என்று உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி 2.4.18 அன்று இதை விசாரணைக்கு ஏற்ற நிலையிலேயே கருத்துரைத்துள்ளார். ‘செயல்திட்டம்’ (ஸ்கீம்) என்பது காவிரி மேலாண்மை வாரியம் என்று மட்டும் பொருள் கொள்ள முடியாது” என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மோடி அரசின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார். தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்கும் என்று “அருள்வாக்கு”க் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் நோக்கமும் தில்லியில் மோடி ஆட்சியின் நோக்கமும் ஒன்றே ஆகும். இருவரும் திட்டமிட்டுப் பேசிவைத்தது போல் உச்சநீதிமன்றத்தில் விண் ணப்பித்துள்ளனர். அ.தி.மு.க. 3.4.18 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதுடன் அமைதியாடைந்துவிடும். யாரேனும் எதிர்த்துக் கேட்டால் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்காகக் காத்திருக் கிறோம் என்று பா.ச.க.வின் குரலாக விடைசொல்லும்.

22.2.18 அன்று அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டிய எடப்பாடி அரசு 29.3.18 அன்று காலக்கெடு முடிந்ததும் மீண்டும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், தனிப்போக்காகக் செயல்பட்டது ஏன்? தில்லியில் வகுத்துத் தரப்படும் திட்டத்தின்படி செயல்படும். ஒரு ஏவல் அரசாக எடப்பாடி ஆட்சி இருக்கிறது என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தில்லியின் நோக்கம் காவிரிச் சிக்கலில் தமிழகக் கட்சிகள் ஒன்றுபட்டுச் செயல்படாமல் தடுப்பதே ஆகும். ஆனால் கர்நாடகத்தில் காவிரிச் சிக்கலில் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் மக்களின் விழிப்புணர்வால் ஒன்றுபட்டுச் செயல்படுகின்றன.

farmers cauvery strike 600காவிரிப் பாசன உழவர் சங்கங்களின் கூட்டமைப்பு 3.4.18 அன்று போராட்டம் நடத்தஉள்ளது. தி.மு.க. 1.4.18 முதல் தமிழகம் முழுவதும் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து போரட்டங்களை நடத்தி வருகிறது. 5.4.18 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. விக்ரமராசா தலை மையிலான வணிகர் சங்கம் 3.4.18 அன்றும் வெள்ளையன் தலைமையிலான சங்கம் 11.4.18 அன்றும் கடை அடைப்பு செய்ய உள்ளன. பா.ம.க. 11.4.18 அன்று வேலை நிறுத்தம் செய்ய உள்ளது. விசயகாந்த் 6.4.18 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனார். ஜி.கே.வாசன் தனியாகப் போராட்டம் அறிவித்துள்ளார். வேல்முருகன் தனியாகச் சுங்கச் சாவடிகளில் போராட்டம் நடத்துகிறார். 1.4.18 முதல் முற்போக்கு இயக்கங்களும் புரட்சிகர அமைப்புகளும் தீவிரமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. நடுவண் அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் ஆகியவை செயல்படவிடாமல் நடத்தப்படும் போராட்டங்களே மோடியின் மண்டையில் உரைக்கும்.

தமிழகத்தின் வேளாண்மைக்கும், மக்களின் உயிர் வாழ்வுக்கும், குடிநீருக்கும் பெரும் ஆதாரமாக உள்ள காவிரி ஆற்று நீர் உரிமையைக் காக்க வேண்டியது ஒட்டுமொத்த தமிழர்களின் தலையாயக் கடமையாகும். அரசியல் கட்சிகள் சில நாள்கள் போராட்டம் நடத்தி ஓய்ந்து போகக்கூடும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் காவிரி நீரால் வளங்கொழித்த வேளாண்மையும் நிலமும் பாலையாகிவிடக்கூடிய பேராபத்து நம்முன் நிற்கிறது. காவிரி நீர் கர்நாடகம் தரும் சலுகை அல்ல; காலந்தோறும் நாம் பெற்றிருந்த உரிமை! எனவே மாணவர்கள், இளைஞர்கள், உழவர்கள், பெண்கள் என்று தமிழர்கள் அனைவரும் வெகுண்டெழுந்து தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே நம் காவிரி உரிமையை வென் றெடுக்க முடியும்!

Pin It