வேட்டையாடித் திரிந்துவாழ்ந்த ஆதிமனிதன் நிலையாக ஓரிடத்தில் இருக்க முற்பட்டபோது அவனுக்கு உணவுப் பொருளின் தேவை தெரிந்தது. அப் பொழுது, இருக்க விரும்பிய இடத்திலுள்ள நிலத்தைப் பண்படுத்தி உணவுக்குத் தேவையான பொருட்களை விளைவிக்கச் செய்யத் தொடங்கியிருக்கிறான். அப்பொழுது நிலங்களைப் பண்படுத்தத் தேவையான கருவிகளை உற்பத்தி செய்யும் சூழல் உருவானது. காலப் போக்கில் தனக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தவிர, எஞ்சிய பொருட்களைப் பாதுகாக்கக் கருதியபோது சேமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது தனியுடைமைச் சிந்தனையை வளர்த்தது.

குடும்ப அமைப்பும் அதற்குரிய நிலவுடைமையும் ஏற்பட்டன. தனியுடைமைச் சிந்தனை, இருப்போர் இல்லாதோர் என்ற நிலையை உருவாக்கி அதிகார வர்க்கத்தைத் தோற்றுவித்தது. அந்த அதிகார வர்க்கம் ஆளும் வர்க்க மாக வடிவம் பெற்றது; அதனால் அரச மரபு உருவானது. தனிமனிதனின் தேவையைக் கொண்டு உருவான வேளாண் தொழில், காலப்போக்கில் வளர்ச்சி நிலை பெற்று, பிறருக்கும் உணவளிக்கும் உற்பத்திச் சூழலை ஏற்படுத்தியது.

வேளாண் தொழில் செய்ய ஏற்ற இடமாகச் சமவெளிப் பகுதியே இருந்தது. சமவெளிப் பகுதியில் சிறு சிறு குழுக்களுக்குள் நடைபெற்ற வேளாண் தொழில் விரிவடைந்தபோது அதற்கேற்ப பெருமளவு நீரின் தேவை உணரப்பட்டது. அதிகளவு வேளாண் பொருட்களின் உற்பத்திக்கு நீர் வளம் அவசியமானதாகக் கருதப்பட்ட நிலையில், மேட்டு நிலங்களிலிருந்து இயற்கையாக வடிந்தோடி வந்த நீரைத் தேக்கி வைக்கும் தேவை ஏற்பட்டது.

அப்பொழுதுதான் இயற்கையாக இருந்த நீர் வழித் தடங்களின் அருகில் சிறு சிறு ஏரி களையும், குளங்களையும் வெட்டத் தொடங்கியிருக் கிறார்கள். இன்னும் பெருமளவு உற்பத்தித் தேவை ஏற்பட்டபோது ஏரிகளின் அளவும், எண்ணிக்கையும் பெருக்கப்பட்டுள்ளன. அதனினும் பெருமளவு நீரின் தேவை அதிகரித்தபோது அணைகள் கட்டப்பட்டுள்ளன. வேளாண் தொழில் விரிவடைய விரிவடைய நீர்த்தேக்கங் களின் தேவையும் அதிகமானது.

மேட்டு நிலங்களிலிருந்து வரும் நீரைத் தேக்கி வைத்திருந்த நீர்த்தேக்கங்களுக்குக் கீழுள்ள நிலங்களில் வேளாண் தொழில் சிறப்பாக நடைபெற்றது. அணை, ஏரி, குளம் ஆகிய நீர் நிலைகளுக்கு மேலுள்ள இடங் களிலும் வேளாண் தொழில் செய்யக் கருதியபோது பள்ளமான பகுதியிலுள்ள நீர்நிலைகளில் உள்ள நீர் ஊறிவரும் வகையில் ஆழமான ‘குழிகள்’ தோண்டப் பட்டுள்ளன.

நீர் ஊறிவரும் வகையில் தோண்டப்பட்ட குழிகளைப் பண்டைத் தமிழர்கள் ‘கூவல்’ என அழைத்துள்ளனர். சிறுகுழி ‘பத்தல்’ என்றும், பெருகுழி ‘கூவல்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது. பத்தலிலிருந்து நீரை இறைக்கப் பயன்படும் கருவி ‘பத்தர்’ எனப்பட்டது. இந்தப் ‘பத்தல்’ என்பதுதான் பின்னாளில் ‘பொத்தல்’ என மருவி இருக்க வேண்டும். ‘பொத்தல்’ என்பது சிறிய ஓட்டையைக் குறிக்கும் சொல்லாக வழங்குகிறது. பெரிதளவு தோண்டிய குழியைச் சுட்டிய ‘சுவல்’ என்பதே இன்றைக்குக் ‘கிணறு’ என அழைக்கப்படுகிறது.

மேடான நிலப்பகுதி ‘சுவல்’ என்றும் பள்ளமான நிலப்பகுதி (விளை நிலம்) ‘அவல்’ என்றும் அழைக்கப் பட்டுள்ளது. நெல்லை (ஊறவைத்து) வேகவைத்து இடித்துச் செய்யப்படும் உணவு வகையன்றை ‘அவல்’ என்று அழைக்கும் வழக்கம் இதனால் வந்திருக்கக்கூடும். சுவலில் (விளை நிலத்தில்) தோண்டிய கூவலிலிருந்து (கிணறு) வேளாண் தொழிலுக்குத் தேவையான பெருமளவு நீர் கிடைத்துள்ளது. இன்றைக்கும் ஆற்றுப் பாசனம் இல்லாத ஊர்களில் கிணற்றுப் பாசனத்தைக் கொண்டே வேளாண் தொழில் நடைபெற்று வருகிறது.

கிணற்று நீரைக் கொண்டு வேளாண் தொழில் செய்யும் முறை நெடுநாட்களாகத் தமிழர்களிடம் இருந்து வருகின்றது. இதற்குரிய முன்வடிவம் பழந்தமிழ் இலக்கியங்களில் கிடைக்கப் பெறுகிறது. சங்க இலக்கியங்களில் பயின்றுவரும் ‘கூவல்’ என்னும் சொல், மேட்டு நிலப்பகுதியில் தோண்டப்பட்ட இன்றைய ‘கிணறு’களுக்கான முன்மாதிரி குறிப்பைத் தருகின்றது.

சீறூர் மன்னன், பெருவேந்தன் ஏவலின் பொருட்டுப் போர்மேல் சென்றிருந்த காலத்தில், பாணன் ஒருவன் அம்மன்னனைக் கண்டு பொருள் பெற்றுச் செல்லலாம் என்று வருகிறான். அப்பொழுது அங்கிருந்த வீரன் ஒருவன், சீறூர் மன்னன் இல்லாத செய்தியுடன் மன்னன் சிறப்புகளையும் பாணனுக்குச் சொல்வதாக அமைந்தது அப்பாட்டு. அதில்,

பூவற் படுவில் கூவல் தோண்டிய

செங்கண் சில்நீர் பெய்த சீறில்

முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி

யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று

(புறம். 319: 1 - 4)

என்றொரு குறிப்பு வருகின்றது. இப்பாடலடிகள் ‘சிறிய இல்லத்தின் முற்றத்தில், செம்மண் நிலத்தில் தோண்டிய கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட சிவந்த நீர், அகன்ற வாயினையுடைய சாடியில் இட்டு வைத் திருப்பர். அதில் கடுக்காயை இட்டு வைத்தமையால் அந்நீர் சிறிது தெளிந்து மாசில்லாததாய் ஆயிற்று’ என்கிறது இந்தப் பாடலடிகள். செம்மண் நிலத்தில் கிணறு தோண்டி எடுக்கப்பட்ட கலங்கல் நீர், சாடிகளில் வைக்கப்பெற்று, கடுக்காய் இட்டுத் தெளிய வைக்கப் பெறும் என்ற குறிப்பைத் தருகின்றன. பொதுவாகச் செம்மண் நிலப்பகுதி மேட்டு நிலப்பகுதியாகவே அமைந்திருக்கும். மேடான செம்மண் நிலத்தில் ‘கிணறு’ தோண்டிய குறிப்பு இப்பாட்டில் வெளிப்படுகிறது.

அகநானூற்றுப் பாடலொன்றில் ‘வன்னிலத்தில் கோவலர் தோன்றிய கிணறு நீரின்றி போக கைவிடப் பட்டு சருகுகள் மூடிக் கிடக்கும். அவற்றை வேடர்கள் தம்மைப் பிடிக்க வைத்திருக்கும் குழிகள் என்று கருதி யானைகள் பெருங்கற்கள் கொண்டு தூர்க்கும்’ என்ற குறிப்பைத் தருகின்றது. அக்குறிப்பைத் தரும் பாடலடிகள்,

பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த

வல் வாய்க் கணிச்சி கூழ் ஆர் கோவலன்

ஊறாது இட்ட உவலைக் கூவல் (அகம் 21: 21-23)

என வருகின்றன. இன்னொரு அகநானூற்றூப் பாடலில் (155) ‘பசுக்கள் நீர் உண்ணும் பொருட்டுக் கோவலர், தாம் தோண்டிய கிணற்றினின்று வளைந்த வாயினையுடைய பத்தலால் இறைத்த நீர், ஒழுகிச் சென்று சிறுகுழியில் நிரம்பியது’ என்ற குறிப்பு வருகின்றது.

சங்க இலக்கியங்களில் பயின்றுவரும் ‘கூவல்’ என்னும் சொல் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்குமான ‘தண்ணீர்’ தேவைக்காகத் தோண்டப்பட்ட குழிகளையே சுட்டி நிற்கின்றது. வன்னிலத்தில் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்குமான ‘தண்ணீர் தேவைக்காகத் தோண்டப்பட்ட கூவலின் (குழி) நீச்சியாகவே இன்றைய ‘கிணறுகள்’ அமைகின்றன. ஆழமான கிணற்றுள் உள்ள நீரைக் ‘கவலை’ (காண்க படம் - 1) அமைத்து எடுக்கும் வழக்கம் இந்த நூற்றாண்டு வரையிலும் தமிழகத்தில் வழக்கிலிருந்தது. கிணற்று நீரைக் கவலை அமைத்து எடுத்துப் பாய்ச்சி வேளாண் தொழில் செய்யப்பட்டது.

கிராமங்கள் அனைத்திலும் ஊர்மக்களின் குடிநீர் தேவைக்காகக் கிணறுகள் தோண்டப்பட்டிருக்கின்றன. பொதுவாக இக்கிணறு வட்ட வடிவில் அமைந் திருக்கும்.

குடிநீருக்காக ஊரின் மையப்பகுதியில் உள்ள கிணற்றை எங்கள் ஊரில் ‘சேந்து கிணறு’ என அழைக்கும் வழக்கம் இருந்தது. நீரைத் தோண்டியால் (காண்க படம் - 2) சேந்தி எடுப்பதால் ‘சேந்து கிணறு’ எனச் சுட்டும் வழக்கும் வந்திருக்கக்கூடும்.

நிலத்தடி நீரின் அளவு குறைந்துகொண்டே செல்லும்நிலையில் ஆழ்துளைக் குழாய்களின் மூலமாகக் குடிநீரை எடுக்கும் வழக்கத்தால் குடிநீருக்கான கிணறுகள் பயன்பாடற்று மெல்ல

தூர்ந்து மறைந்துவருகின்றன.

வேளாண் தொழிலுக்காகத் தோண்டப்படும் கிணறுகளுள் பலவகை உண்டு. அதனுடைய வடிவத்தைப் பொறுத்து கிணற்றின் பெயர்கள் வழங்குகின்றன. பொதுவாக வட்ட, சதுர, செவ்வக வடிவங்களில் கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன.

வட்டமான கிணற்றை எங்கள் பகுதியில் ‘குண்டு கிணறு’ என்பர். வேளாண் நிலத்தின் பரப்பளவிற்கு ஏற்றாற்போல் கிணறுகளின் அளவும், ஆழமும் வேறுபட்டிருக்கும். நிலத்தடி நீர் மட்டத்தைப் பொறுத்தும் கிணற்றின் ஆழம் வேறுபட்டு அமைவதுண்டு.

பண்டைக்காலத்தில் குடிநீர் தேவைக்கும் கால் நடைகளின் தண்ணீர் தேவைக்குமாகச் சிறுசிறு அளவில் தோண்டப்பட்ட கூவலின் (குழியின்) நீட்சியாக, பெரு மளவு குடிநீர் தேவை, வேளாண் தொழில் செய்யும் நிலை ஏற்பட்டபோது தோண்டப்பட்ட ‘கிணறுகள்’ அமைகின்றன.

இந்த இருவகைத் தேவைக்காகவும் கிணறு தோண்டும் வழக்கம் இன்று அருகிவருகின்றது. நவீனக் கருவிகளின் பெருக்கம் இதற்குக் காரணமாக இருக்கின்றன; இதனால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்துவருகின்றன.

மனித சக்தியைக் கொண்டு தோண்டப்பட்ட கிணறுகள், அவற்றுள்ள நீரை எடுக்கும் பாரம்பரியமான முறைகள் (கவலை, தோண்டி) ஆகியன வழக்கிலிருந்த காலம்வரை நிலத்தடி நீர் மட்டம் பாதுகாப்பாக இருந்தது. பெருமளவு உற்பத்தியை நோக்கமாகக் கொண்டு உருப்பெற்ற நவீன முறைகள், நிலத்தடி நீர்மட்டத்தை வேகமாகக் குறைத்து வருகின்றன.

ஆழ்துளையிட்டுக் குழாய் அமைத்து நிலத்தடி நீரை எடுக்கும் நவீனமுறைகள், கிணறு தோண்டும் வழக்கத்தை அற்றுப் போகச் செய்துவிட்டது. இன்னொருபுறம் வெட்டப்பட்ட கிணறுகளும் ‘காணாமல் போன கிணறுகளின்’ பட்டியலில் வேகமாகச் சேர்ந்துவருகின்றன.

நவீன முறைகளைத் தவிர்க்கமுடியாமல் ஏற்றுக்கொள்கின்ற காலச்சூழலில் வாழும் நமக்குப் பாரம்பரிய முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல் சுகமளிக்கக்கூடியதாக இருக் கின்றது. அப்படித் தெரிந்துகொள்ள முற்பட்டதன் விளைவே இந்தக் ‘கூவல்’ என்னும் சொல் பற்றிய கட்டுரை.

(இத்துடன் “சங்கச்சொல் அறிவோம்” கட்டுரைத் தொடர் முற்றுப் பெறுகிறது,)

Pin It