அன்றைய அரசியல் பின்னணி:

தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில், ரஷ்ய நாட்டின் விவசாயிகளையும் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியால் பாதிக்கப்பட்ட, சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களையும் ஓரணியில் திரட்டி சோசலிசப் புரட்சியை நடத்தி, கம்யூனிஸ்டுகள் அமைத்திருந்த பாட்டாளி வர்க்க அரசும், அதன் புதிய பொருளாதார கொள்கைகளும் சட்டங்களும் திட்டங்களும் உலகம் முழுக்க குறிப்பாக, ஆசிய ஆப்பிரிக்க காலனி நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த காலம்.

இந்தியா மட்டும் விதி விலக்கா என்ன ? இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்திலிருந்த முற்போக்காளர்கள் போலிஷ்விக் புரட்சியின் பால் ஈர்க்கப்பட்டனர். அப்படி ஈர்க்கப்பட்ட காங்கிரஸ்காரர்களில் ஒருவர் தான், "சுதந்திரப் பித்தர்" என இராஜாஜியால் புகழப்பட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். சோவியத் யூனியன் போலவே, உலகெங்கும் குறிப்பாக இந்தியாவில் தொழிலாளர் புரட்சி ஏற்பட்டுவிடுமோ என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அஞ்சிச் செத்துக் கொண்டிருந்த கெடுபிடிக்காலம்.ஆனாலும் கூட தகவல் தொழில் நுட்பம் மற்றும் போக்குவரத்து வசதிகள் வளர்ச்சியுறாத காலம். பிரிட்டிஷ் இந்தியா எனும் துணைக்கண்டம் பல மொழி, பல இனம், பல மதம், பல சாதிகள், மற்றும் பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட பல நூறு தேசங்களாகப் பிரிந்திருந்த காலம்.

தங்கள் நிர்வாக சுரண்டல் வசதிக்காக பிரிட்டிஷார் நிறுவியிருந்த பல ராஜதானிகளில் சென்னை இராஜதானியும் ஒன்று. ஒடிசா எல்லை வரையில் நீண்டிருந்த அந்தப் பிரதேசத்தில் தமிழர், மலையாளி,கன்னடர், தெலுங்கர் நிரம்பியிருந்தனர். தொழிலாளர் வர்க்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்களும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கடுமையான அடக்குமுறைகளும் வளர்ந்து கொண்டிருந்த காலம். இந்தப் பின்னணியில் தான் தோழர் சிங்கார வேலருக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்குமான உறவை நினைவு கூறுகிறோம்.

தொழிற்சங்கத் தொடக்கக் காலம்:

1917 ஆம் ஆண்டு அக்டோபரில் ரஷ்யப்புரட்சி நடந்தேறியது. 1918-ல் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான "சென்னை தொழிலாளர் சங்கம்" தொடங்கப்பட்டது. அது முதற்கொண்டே தொழிலாளர் பிரச்சினைகளில் தோழர் சிங்காரவேலர் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார்.

தொழிலாளர் இயக்கத்தின் தொடக்கக் காலத்தில் எந்தவொரு சங்கத்தின் முக்கியப் பொறுப்புகளிலும் அவர் இல்லை எனினும், அந்தக் காலக்கட்டத்தில் இரயில்வே தொழிலாளர், டிராம்வே தொழிலாளர், மின்வாரியத் தொழிலாளர், மன்ணெண்னெய் தொழிலாளர், ரொட்டித் தொழிலாளர், தெரு கூட்டும் தொழிலாளர், பஞ்சாலைத் தொழிலாளர் ஆகியோரின் போராட்டங்களில் பங்கேற்பதைத் தனது பழக்கமாகவே கொண்டிருந்தார்.

1920 டிசம்பர் 9 அன்று பி.என்.சி. மில் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி உத்தரவின் பேரில் தொழிலாளர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 2 தொழிலாளர்கள் களத்திலேயே மாண்டனர். இந்தியத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் முதல் தியாகிகள் இவ்விருவரே. மறுநாள் நடந்த இறுதி ஊர்வலத்தில் பாடையைத் தூக்கிச் சென்றவர்களில் தோழர் சிங்கார வேலரும் ஒருவர்.

வேலை நிறுத்தம் சுமார் ஓராண்டு காலத்திற்கு நீடித்தது. ஆங்கிலேயே கவர்னர் வில்லிங்டனுக்கு எதிரான தொழிலாளர் பேரணியில் திரு.வி.க,சர்க்கரைச் செட்டியார், இ.எஸ்.ஐயரோடு தோழர் சிங்காரவேலரும் பங்கேற்றார். இப்போராட்டத்தில் சுமார் 13,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். அப்போதே சாதியைக் கொண்டு தொழிலாளர் ஒற்றுமையைக் குலைக்க பிரிட்டிஷார் முயற்சித்தனர். முடியாமல் போகவே 1921 ஆகஸ்ட் 29 அன்று பிரிட்டிஷ் போலீஸ் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ஒரு பெண் உட்பட ஏழு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இது பற்றி, தோழர் சிங்காரவேலர் எழுதிய ( தி இந்து,சுதேசமித்திரன் ) கட்டுரை குறித்து, 'வரலாற்றுப் புகழ் பெற்றது" என திரு.வி.க. பாராட்டினார். செப்டம்பர் 19 மற்றும் அக்டோபர் 15ல் மீண்டும், மீண்டும் தொழிலாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அப்போது நடந்த தொழிலாளர் ஊர்வலத்தை தோழர் சிங்காரவேலரே வழி நடத்தினார்.

இந்தியாவின் முதல் மே தினம்:

தொழிலாளர் பிரச்சினை பற்றி, தி இந்து , சுதேசமித்திரன், நவசக்தி, ஸ்வதர்மா போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதினார். "சென்னை தொழிலாளர் பிரச்சினையில் நெருக்கடி" என்ற தலைப்பிலும்,பஞ்சமர் அல்லாத தொழிலாளரிடையே பிளவை உருவாக்கும் சதி முயற்சியில் பிரிட்டிஷார் ஈடுபட்ட போது தி இந்து பத்திரிக்கைக்கு, 'ஆசிரியருக்கு கடிதம்' பி.என்.சி. மில் பகுதியில் பிரிட்டிஷார் போலீசை நிறுத்தியபோது, 'கவர்னர் வில்லிங்டனுக்குப் பகிரங்கக் கடிதம்', 'நகர் மன்ற உறுப்பினர்களும்,ஆலை நிர்வாகமும்' என்ற தலைப்பில் தி இந்துவிலும் எழுதினார். 1921 ஆகஸ்ட் 24 வேலை நிறுத்தம் போராட்டம் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அய்லிங் தலைமையிலான குழுவிடம், நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே,தொழிலாளர்கள் அதற்கு ஒத்துழைக்காதது மிகச் சரியானதே என விளக்க ‘‘போலீஸ் துப்பாக்கிச்சூட்டால் இறந்தவர்களின் ஊர்வலம் பற்றிய அறிக்கை, வேலை நிறுத்தம் செய்ய உரிமை’’ என்ற தலைப்புகளில் எழுதினார். அன்றைய நிலைமைகளில், ‘‘பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை பிரச்சினைகள்’’ குறித்தும் ‘‘அரசு, அதன் எந்திரத்துடன் அதற்குள்ள உறவு’’ பற்றியும் விளக்கமாக எழுதினார்.

இவை ஸ்வதர்மா மற்றும் நவசக்தி இதழ்களில் வெளிவந்தன. 1921 மே 17அன்று சூளை பஞ்சாலைத் தொழிலாளரிடையே பேசியபோது, உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் நிலையையும், ஒற்றுமையின் தேவையையும் வலியுறுத்தினார். ‘‘எல்லாவற்றையும் தொழிலாளரே உற்பத்தி செய்கின்றனர். ஆனால், அவர்களிடம் ஏதும் இல்லை’’ என்பதைச் சுட்டிக்காட்டினார். பல்வேறு நாடுகளில் நடந்துகொண்டிருந்த வர்க்கப் போராட்டங்களை ஆய்வு செய்து, சென்னைத் தொழிலாளர்களுக்கு வழிகாட்டினார். ஆம் அதில் அவரின் மார்க்சிய சிந்தனைப் போக்கின் வளர்ச்சி வெளிப்படலாயிற்று.

1922 பிப்ரவரியில் திருவொற்றியூரில் நடந்த தேசியத் தொண்டர்கள் கூட்டத்தில் பேசும்போது, பஞ்சமர், பஞ்சமர் அல்லாதாரிடையே முதலாளிகள் பிளவை உண்டாக்கச் செய்த சதியை அம்பலப்படுத்தினார். 1922 ஆகஸ்ட் 25 அன்று சிங்காரவேலர் வீடு பிரிட்டிஷ் போலீசால் சோதனையிடப்பட்டது. கயா காங்கிரசு மாநாட்டில் சிங்கார வேலரின் முயற்சியால் ஏ.ஐ.டி.யு.சி விற்கு உதவிட 6 பேரடங்கிய குழு அமைக்கப்பட்டது. அதில் சிங்காரவேலும் ஒருவர். 1920 லேயே ஏ.ஐ.டி.யு.சி பம்பாயில் தொடங்கப்பட்டுவிட்டது. என்றாலும் 1923ல்தான் இந்தியாவிலேயே, முதன்முதலாக சென்னையில் மே தினம் கொண்டாடப்பட்டது. அந்தப் பெருமையை நமக்கு வழங்கியவர் தோழர் சிங்கார வேலர்.

முதல் தமிழ் கம்யூனிஸ்ட்

முதல் மே தினத்தன்று (1923) தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி தொடங்கப்படுவதாக சிங்காரவேலர் அறிவித்தார். அதாவது, சுயராஜ்யத்திற்கு மாற்றாக, ‘தொழிலாளரின் சமதர்ம சுயராஜ்யத்தை‘ நிறுவிட காங்கிரசுக்கு மாற்றாக, ஒரு கட்சி வேண்டியதன் அவசியத்தை அவர் உணர்ந்ததின் வெளிப்பாடே புதிய கட்சி என்றாலும்கூட, இக்கட்சி காங்கிரசுக்குள்ளேயே ஒரு பிரிவாக பணியாற்றியது.

இந்நிலையில்தான், மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட சிங்காரவேலருக்கும், மற்ற சென்னைத் தொழிலாளர் சங்க தலைவர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு வெளிப்படத் தொடங்கியது. 1923ல் சென்னைக்கு வெளியே நடக்கின்ற தொழிலாளர்கள் இயக்கங்களைப் பற்றியும், அரசியலில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்கு பற்றியும், சென்னைத் தொழிலாளர்களைப் பயிற்றுவிப்பதற்கு, ‘தொழிலாளன்‘ என்ற வார இதழை தொடங்கினார்.

1924ல் ‘மாகாணத் தொழிலாளர் மாநாடு‘ சென்னையில் நடந்தபோது உடல்நிலை மோசமானதால், சிங்காரவேலர் மாநாட்டில் பங்கு பெறவில்லை. அதே சமயத்தில், ‘கான்பூர் போல்ஷ்விக் சதி‘ வழக்கு அவர் மீது போடப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனால், அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் விடுதலை செய்யப்பட்டார்.

இதுவரை குழுக்களாகச் செயல்பட்டு வந்த இந்திய கம்யூனிஸ்டுகளின் முதல் மாநாடு 1925 டிசம்பர் இறுதியில் கான்பூர் நகரில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பிரிட்டிஷ் போலீசாரின் கட்டுக்காவல்களை மீறி, ஒரு வெங்காய மண்டியில் மாநாடு கூடியது. ஒற்றை இலக்கத்தைத் தாண்டிய எண்ணிக்கையில் கூடிய கம்யூனிஸ்டுகளின் அந்த இரகசிய மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் வேறுயாருமல்ல. கடும் நோயால் பாதிப்புக்கு ஆளாகியிருந்த, ‘சிவப்புக் கிழவன்‘ சிங்காரவேலரே! இந்திய கம்யூனிச இயக்கத்தில் தமிழ் பேசும் கம்யூனிஸ்ட்களுக்கு, வரலாற்றுப் பெருமையை வழங்கிய, ‘முதல் தமிழ் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர்தான்.

இதோ அவரின் செய்தி: சங்க வலிமையே, பாட்டாளி வர்க்கத்தின் வலிமை! சங்கத்தை வலுப்படுத்துங்கள்! பிற நாட்டுத் தொழிலாளருடனும் தோள் சேர்ந்து நில்லுங்கள்.!. எந்தக் காலத்தில், தொழிலாளர் ஆதிக்கம் பெற்ற சமதர்மம் நிலைக்கின்றதோ, அன்றுதான் உலகம் பசியற்று, சண்டையற்று, சுகப்பட்டு வாழும் எனஅறிக. அன்றுதான் சாந்தமும், சமாதானமும் உலகில் நிலவும் எனவும் அறிக!

Pin It