உழைப்பு இல்லாமல் உலகம் இல்லை; உலகத் தொழிலாளர்களும் இல்லை.  உழைப்பாளர்களின் ஒப்பற்ற நாளாகிய மே நாளைப் போற்றாத உலக நாடுகளும் இல்லை.  இதில் தமிழுக்கும், தமிழர்க்கும் உள்ள பங்கினை ஆராய்வது அவசியம்.

mayday 600முதலாளித்துவ நாடாகிய அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1886 ஆம் ஆண்டு எட்டுமணிநேர வேலைக்காகப் போராட்டம் தொடங்கியது.  போராடிய தொழிலாளர்களின் குருதியில் தோய்ந்ததுதான் இந்த மேதினம்.  இந்தச் சிவப்பு இரத்தம் வரலாற்றில் அழிக்க முடியாத அடையாளமானது.

அக்காலத்தில் வேலை என்பது ‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ என்பதுதான்.  இது தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்தது.  இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வெளிக்காட்டினர்.  சங்கம் வைக்கும் உரிமை மறுக்கப்பட்ட அக்காலத்தில் வேலை நேரம் பற்றியும் பேச முடியவில்லை.

ஊதிய உயர்வுக்காகவும் சங்கம் வைக்கும் உரிமைக்காவும் அமெரிக்கத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். அமெரிக்காவில் பாட்டாளி வர்க்கத்தின் பெரும் பகுதியினரான கருப்பு இனத்தொழிலாளி அடிமையாக நீடிக்கும்வரை வெள்ளையர்களின் வாழ்க்கையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

அமெரிக்காவில் உள்நாட்டுப் போருக்குப் பிறகு அடிமைத்தனத்தின் அழிவிலிருந்து புதிய வேகம் பிறந்தது.  எட்டுமணி நேர வேலைக்கான போராட்டமும் வெடித்தது. பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பும் எட்டுமணி நேர வேலைக்கான கோரிக்கைக்காகப் போராடும்படி உலகத் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுத்தது.

காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தாகுதலை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் தொழிலாளர் மீது தாக்குதல் தொடங்கியது.  கூட்டத்தில் எறியப்பட்ட குண்டு ஒன்று இராணுவ அதிகாரியைக் கொன்றது.  இதன் விளைவாக எழுந்த மோதலில் ஏழு காவலர்களும், நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையில் தொழிலாளர்களின் தலைவர்களாகிய பார்சன்ஸ், ஸ்பைபஸ், ஃபாஷர், எங்கெல் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.  இந்நிகழ்வு உலகில் உள்ள தொழிலாளர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களுக்கு மேதினம் ஒரு திருப்பு முனையாக மரியது.  எட்டுமணி நேர வேலைதான் முக்கியக் கோரிக்கை.  உலகத் தொழிலாளர் ஒற்றுமை, எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாக்குரிமை, ஏகாதிபத்தியப்போர் மற்றும் காலனி ஆதிக்க எதிர்ப்பு, தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை, அரசியல் மற்றும் சங்கம் கட்டும் உரிமை முதலிய கோரிக்கைகளும் அதில் அடக்கம்.

paris 350சிகாகோவில் நிகழ்ந்த இந்நிகழ்வுக்குப் பின்னர் உலகப் பொதுவுடைமைத் தலைவர்கள் பாரிஸ் நகரில் கூடி 1890 முதல் மே நாளைச் சர்வதேச நாளாகக் கொண்டாடும்படி அறைகூவல் விடுத்தனர்.  இந்த வேண்டுகோளை ஏற்று ஐரோப்பிய நாடுகள் கொண்டாடத் தொடங்கின.

இந்தியாவில் மே நாளை முதன் முதலில் கொண்டாடிய பெருமை சிங்காரவேலரையே சாரும்.  1923 ஆம் ஆண்டு மே முதல்நாளைக் கொண்டாடி, ‘தொழிலாளி விவசாயி கட்சி’ (Labour and Kissan Party of Hindustan)யையும் தோற்றுவித்தார்.  இக்கட்சியின் சார்பாக சென்னையில் இரு இடங்களில் மே தினக் கூட்டங்கள் நடந்துள்ளன.

ஒரு கூட்டம் சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதி மன்றத்தின் அருகில் உள்ள கடற்கரையில் நிகழ்ந்துள்ளது.  மற்றொரு கூட்டம் திருவல்லிக்கேணி கடற்கரையில் நிகழ்ந்துள்ளது.  கட்சியின் செயலாளர் எம்.பி.எஸ். வேலாயுதம் தலைமை ஏற்றுள்ளார்.

இந்தக் கூட்டங்களில் சுப்பிரமணிய சிவா, கிருஷ்ணசாமி சர்மா உள்பட காங்கிரசு கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.  மே தினம் கொண்டாடிய செய்தி ‘இந்து’ ஆங்கில நாளிதழிலும், ‘சுதேசமித்திரன்’ தமிழ் திசையிலும் 2-5-1923 அன்று வெளியாகியுள்ளது.

சிங்காரவேலர் கொண்டாடிய மே தினத்தைப் பற்றிய செய்தி எம்.என். ராய்  நடத்திய ‘இந்திய விடுதலையின் முன்னணிப் படை’ என்ற இதழிலும் வெளிவந்துள்ளது.  அந்த இதழ் ஜெர்மனியிலிருந்து வெளிவந்தது.

இக்குறிப்புகளைக் கொண்டு ஆராய்ந்தால் இந்தியாவில் மே நாளை முதன் முதலில் கொண்டாடியவர் சிங்காரவேலர் என்பதும், கொண்டாடிய இடம் சென்னை என்பதும் ஐயமின்றி தெளிவாகும்.  இவரது மே தின உரைச் சுருக்கம் ‘தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட்’ என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நன்னாளில் அவர் தொழிலாளர் - விவசாயிகள் கட்சி, ஒன்றையும் தொடக்கியுள்ளார்.  தொழிலாளர்களும், விவசாயிகளும் வெறும் ஊதிய உயர்வு கோருபவர்களாகவும், வேலை நேரத்தைக் குறைக்கப் போராடுபவர்களாகவும் இல்லாமல் முழு உரிமை பெறுவதற்கும், சுரண்டலை ஒழிப்பதற்கும் போராடும் முன்னணிப் படையாக விளங்க வேண்டும் என்பதே அக்கட்சியின் குறிக்கோளாகும்.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சியினர் மிதவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் பிரிந்து கிடந்தனர்.  காங்கிரஸ் கட்சியில் இருந்த இடதுசாரிகள் எல்லாம் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி என்ற பெயரில் இயங்கி வந்தனர்.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய அரசு பொதுவுடைமைக் கட்சிக்குத் தடைவிதித்தது.  தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  கட்சி அலுவலகங்கள், தொழிற்சங்க அலுவலகங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டன.  பத்திரிகைகளைத் தடைசெய்தும், எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் முழுவதும் முடக்கப்பட்டன.  கட்சிப் பெயரை உச்சரிக்க முடியாத அளவுக்கு மக்கள் அச்சுறுத்தப்பட்டனர்.

தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த சில தலைவர்கள் அரசின் கண்களுக்குத் தெரிந்திராத சில அறிவாளர்களை அழைத்து பத்திரிகை நடத்தும்படி கேட்டுக் கொண்டனர்.  அதன் விளைவாக ‘முன்னணி’ வார ஏடு உருவானது.  கவிஞர் குயிலன் ஆசியராகவும், கவிஞர் தமிழ்ஒளி துணை ஆசிரியராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அந்த ஏட்டின் வாயிலாக தடைசெய்யப்பட்ட பொதுவுடைமைக் கட்சியில் செயல்பாடுகளை மக்களுக்குக் கொண்டு சென்றனர்.  அந்த நாட்களில் நடந்த போராட்ட நிகழ்வுகளை பல இலக்கிய வடிவங்களில் தமிழ் ஒளியும் எழுதிவந்தார்.  குறிப்பாக சர்வதேச சிறப்புமிக்க ‘ மே தினம்’ பற்றியும், சீன மக்களின் செஞ்சேனை ஈட்டிய வெற்றிகள் பற்றியும் அவர் எழுதிய கவிதைகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை.

உலகத் தொழிலாளர்களின் வெற்றி விழாவான ‘மே தினம்’ பற்றி’ மே தினம் வருக’ என்ற நெடுங்கவிதை தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முயற்சியாகும்.

மார்க்சிக அறிஞரும், ‘ஜனசக்தி’ ஆசிரியருமான தோழர் ஆர்.கே.கண்ணன், ‘நான் அறிந்தவரை இந்திய மொழிகளில் மே தினம் பற்றி இப்படியரு கவிதை வெளிவந்ததில்லை.  தமிழ் ஒளியின் இந்தக் கவிதை ஒரு பொக்கிஷம்’ என்று கூறியுள்ளார்.

“கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமை போல் உழைத்துப்

பாடுபட்ட ஏழைமுகம் பார்த்துப் பதைபதைத்துக்

கண்ணீர் துடைக்கவந்த காலமே நீ வருக...”

என்று இந்த நெடுங்கவிதை தொடங்குகிறது.

உலகத் தொழிலாளர்களின் வெற்றித் திருநாளான மே நாளை இந்தியத் துணைக் கண்டத்தில் முன் எடுத்த பெருமை தமிழ் மண்ணையே சாரும்.  முதல் பகுத்தறிவாளர் எனப்படும் சிங்காரவேலரும், கவிஞர் தமிழ் ஒளியும் இந்தப் பெருமைக்குக் கால்கோல் இட்டவர்கள்.  இல்லை என்பார் யார்?

Pin It