சிங்காரவேலர், சுதந்திரப் போராட்ட வீர ராகவும், தொழிற்சங்க இயக்க வழிகாட்டியாகவும், பொதுவுடைமை இயக்க முன்னோடியாகவும் விளங்கியவர்; அரசியல் போராட்டங்களில் உழன்று கொண்டும், எழுத்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் கூட, எந்நிலையிலும் தொழிற்சங்கப் பணியையும், தொழிலாளர் நலத்தையும் மறந்தார் அல்லர். 

ஏங்கெல்ஸ் அவர்களைப் போன்று இவரும் செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்தவர்; அவரைப் போன்றே ஏழை- எளிய மக்களுக்காகவும், உழைக்கும் வர்க்கத்திற்காகவுமே அயராது உழைத்தவர்.  இவற்றின் காரணமாகத்தான் அவர், இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் தோன்று வதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னரே, தொழி லாளர் மற்றும் உழவர் முன்னேற்றம் கருதி 01. 05. 1923-இல் தொழிலாளர்- விவசாயி கட்சியைத் தோற்றுவித்தார். 

அவர்களின் நலன் கருதி, தொழி லாளன் என்னும் தமிழிதழையும், தொழிலாளி- விவசாயி கெஸ்ட்  என்னும் ஆங்கில இதழையும் தொடங்கி நடத்தினார்.  1921-ஆம் ஆண்டில் நடந்த பி ஆண்டு சி மில் வேலை நிறுத்தத்திலும், 1927-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கரக்பூர் (மேற்கு வங்கம்) ரயில்வே வேலை நிறுத்தத்திலும், அதே ஆண்டில் நடந்த சென்னைப் பர்மாஷெல் எண்ணெய்க் கம்பெனி வேலை நிறுத்தத்திலும், 1928-ஆம் ஆண்டில் திகழ்ந்த தென்னிந்திய ரயில்வே (நாகப்பட்டினம்) வேலை நிறுத்தத்திலும் அவருடைய பங்களிப்பும் வழி காட்டலும் மகத்தானவை.

இவற்றைப்போன்ற பெரிய நிறுவனங்களில் மட்டுமல்லாமல், அலுமினிய தொழிற்சங்கத்திலும், மண்ணெண்ணெய் தொழிலாளர் சங்கத்திலும், சுதேசமித்திரன் அச்சுத் தொழிலாளர் சங்கத்திலும் தலைவராக விளங்கி நல்வழி காட்டியுள்ளார். 

1924 மார்ச் 30, 31, தேதிகளில் கல்கத்தாவில் அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் மாநாடு நிகழ்ந்தது.  அம்மாநாட்டிற்குச் சிங்காரவேலர் தான் தலைமையேற்க வேண்டுமென்று, தமிழகத் தொழிலாளர்களும், வங்காளத் தொழிலாளர்களும் ஒரு சேர முடிவெடுத்துத் தெரிவித்துள்ளனர்.  ஆனால், அந்நாளைய வெள்ளையாதிக்கம், சிங்கார வேலரைக் கான்பூர் சதி வழக்கில் உட்படுத்தி யிருந்ததாலும், அவர் நோயுற்றிருந்ததாலும், அவர் களின் வேண்டுகோளை அவரால் நிறைவேற்ற முடியாமல் போனது. 

அவர் செல்ல இயலாததால் சித்தரஞ்சன்தாஸ் தலைமையேற்று நடத்தியுள்ளார்.  இந்நிகழ்விலிருந்து சிங்காரவேலர் தொழிலாளர் களை இந்திய அளவில் எவ்வளவு கவர்ந்துள்ளார் என்பதை உணரலாம்.  இதற்கு அவரது பலன் கருதாதப் பெருந்தொண்டே காரணமாகும்.

வர்க்க வேற்றுமையை ஒழிக்க, கார்ல்மார்க்ஸ் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்றார்.  அந்த உலகப் பேராசானின் உயர் மொழியை இவர் உயிர்மொழியாகக் கொண்டவர்.  அதனால் தான் கயாவில் 1922-ஆம் ஆண்டில் நடந்த

அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், சுதந்திரப் போராட்டத்தில் தொழிலாளர்களையும், விவசாயி களையும் இணைத்துக்கொண்டு போராட வேண்டு மென்று முதன்முதலில் வலியுறுத்தினார்.  மேலும், அவர்களின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் கட்சி, திட்டம் வகுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.  அதுவே பூரண சுதந்திரமாகும் என்று பேசி, பூரண சுதந்திரம் குறித்து அம்மாநாட்டில் தீர்மானத் தையும் நிறைவேற்றினார்.  சிங்காரவேலர் இவ்வாறு வலியுறுத்தியதால், காங்கிரசு கட்சி, தொழிலாளர் நலனுக்காக சிங்காரவேலர் உள்ளிட்ட ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தொழிலாளர் நலக் குழுவை அமைத்தது.  அகில இந்திய அளவில் அமைத்த முதல் குழு இதுவேயாகும்.  இதற்குக் காரணமாக இருந்தவர் சிங்காரவேலர்.

தொழிலாளர் நலக்குழு அமைக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி அதில் போதிய கவனம் செலுத்த வில்லை; இதில் சிங்காரவேலர்க்கு அதிருப்தி இருந்தது.  எனினும் அவர் தனிப்பட்ட முறையில் அவர்களின் நலனுக்காக இயங்கிக்கொண்டே இருந்தார்.  காங்கிரசு கட்சிக்கும் அவ்வப்போது நினைவுறுத்திக் கொண்டே இருந்தார்.  குறிப்பாக, 26. 04. 1923இல் ஜாரியாவில் அகில இந்திய தொழி லாளர் சங்க மாநாடு நடந்தபோது, சுவாமி தீனானந்து அவர்கட்கு ஒரு தந்தியை அனுப்பி யுள்ளார்.  அதில் காங்கிரஸ் கட்சி, தொழிலாளர் நலனில் அசட்டையாக இருக்கிறதென்றும், தொழி லாளர்- விவசாயிகளின் அடிப்படை நலன்களில் அக்கறை செலுத்தி, அவர்களின் முன்னேற்றத் திற்கும், பாதுகாப்புக்கும் விரைந்து செயல்பட வேண்டுமென்றும் தெரிவித்து, மற்றும் மே நன்னாளை இந்தியா முழுவதும் கொண்டாட காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அத்தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.  கயாவில், அமைக்கப் பட்ட தொழிலாளர் நலக்குழுவில் ஒரு உறுப்பின ராக இருந்தவர்தான் சுவாமி தீனானந்து என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.  தொழிலாளர்- விவசாயிகள் மீது அவர் எத்துணை அக்கறை கொண்டிருந்தார் என்பதை அவர் இந்து நாளேட்டில் (கூhந ழiனேர) காந்தியடிகளுக்கு எழுதிய கடிதத்தில் உணரலாம்.  இக்கடிதத்தின் முக்கியத்துவம் கருதி, திரு.வி.க., நவசக்தி இதழில் 24. 5. 21 அன்று தமிழில் வெளி யிட்டிருந்தார்.  அக்கடிதத்தின் ஒரு சிறு பகுதியைக் கீழே காணலாம்.

“வணக்கத்திற்குரிய ஐயா அவர்களே, யங் இந்தியா (லுடிரபே ஐனேயை)- வின் கடைசிப் பக்கத்தில் விவசாயிகளுக்குத் தாங்கள் அளித்த அறிவுரை எனக்கு ஆழ்ந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.  முதலாளித்துவ தனியாதிக்கத்தை எதிர்த்துப் பேராடாமல், அரசியல் தனியாதிக்கத்தை எதிர்த்துப் போராட முடியாது.

அயல்நாட்டு அதிகார வர்க்கத்தை மட்டு மன்றி, எதிர்காலத்தில் நம் சொந்த மக்களின் அதிகார வர்க்கத்தையும், எதிர்த்து நாம் வெற்றி பெறும் வரையில், நமது நற்பேறற்ற மக்கள் சுதந்திர மாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது.  ஆதலால், கம்யூனிசம் மட்டுமே  சிறந்த வழி.  அதாவது நாட்டிலுள்ள எல்லாத் தொழிலாளர்கள் பொதுவாகப் பயன்படுத்தவும், நலம் பெறவும் நிலத்தையும், இன்றியமையாத தொழிற்சாலை களையும் பொதுவுடைமையாக்குவதே நம் மக்களுக்கு மனநிறைவையும், சுதந்திரத்தையும் அளிக்கும் உண்மை யான நடவடிக்கையாகும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

பொதுவுடைமை இயக்கம் தோன்றுவதற்கு முன்பே, காங்கிரசு கட்சியில் இருந்து கொண்டே பொதுவுடைமையே இந்நாட்டிற்குச் சரியான வழியென்று கூறியுள்ளார்.  மேலும் தொழிலாளி - விவசாயிகளின் நலன்களுக்காக அக்காலத்திலேயே காந்தியடிகளை மறுத்து வெளிப்படையாகக் கடிதம் எழுதியுள்ளார் எனில், அம்மக்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டை நன்கு உணரலாம்.  அவர் தலைவராக, பெரும் சிந்தனை யாளராக, எழுத்தாளராக இருந்திருந்தாலும், தன்னை அவர் ஒரு தொழிலாளியாகவே கருதிக் கொண்டிருந்தார்; அதனைத் தம் எழுத்துக்களில் குறிப்பிட்டும் இருந்திருக்கிறார்.  அதனைக் கீழே காணலாம்.

“நண்பர்களே! உங்களைப் போலவே நானும் ஒரு தொழிலாளி ஆவேன்.  நான் வயல்களில் வேலை செய்கிறேன்.  நிலத்தை உழுகிறேன்.  செடி களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன்.  உலகத்திலுள்ள தொழிலாளர்களும், நம்மைச் சேர்ந்தவர்கள்தான் என்று நாம் கருதவேண்டும்.  அதுதான் உங்கள் சங்கத்தின் முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டும்” - சிந்தனைக் களஞ்சியம்- பக். 7-8.

தம்மைத் தொழிலாளியாகக் குறிப்பிடுவதன் மூலம் அவரது எளிமையையும், அவர்கள்பால் கொண்ட வாஞ்சையையும் இனிது உணரலாம்.  தொழிலாளர்கள், தம் நாட்டுத் தொழிலாளர் களை மட்டுமன்றி, உலகத் தொழிலாளர்களையும் தம்மினத்தவர் என்றே கருத வேண்டும் என்கிறார்.  அதாவது, அவர்களுக்கு உலகப் பார்வையை, உலக அறிவைப் புகட்ட விரும்புகிறார்.  இதன்வழி ஆழ்ந்த மனித நேயத்தை உருவாக்க முயல்கிறார்; ஆம், அவர்தான் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்.

மும்பையில் 1921-ஆம் ஆண்டில் அகில இந்தியத் தொழிற்சங்கம் காங்கிரசு மாநாடு நிகழ்ந்த போது, பிரிட்டனின் தொழிற்கட்சியின் சார்பில், கர்னல் வெட்ஜூவுட், பிரய்ல்ஸ் போர்டு, ஹால்போர்ட் நைட் ஆகியோர் கலந்துகொண்டனர்.  அப்போது வெட்ஜ்வுட் அவர்கட்கு சிங்காரவேலர் ஒரு தந்தியை அனுப்பியிருந்தார்.  அச்செய்தியைக் கீழே காணலாம்.

“தொழில் உற்பத்திக் கட்டுப்பாடு, நிலத்தைத் தேசிய மயமாக்குதல் ஆகியவற்றைக் கேட்க சோசலிசம் தூண்டுகிறது.  இலாபத்தில் பங்கு, ஊதிய உயர்வு போன்ற வெறும் தற்காலிகச் சலுகைகள் அல்ல யாம் கேட்பவை.  மற்றும் எதேச் சதிகாரத்துவத்துக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிராகத் தொழிலாளரைக் காக்க ஆலோசனைக் குழுவை அமைக்கக் கேட்டுக் கொள்கிறேன்”. - தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்- பக்- 76.

இக்குறிப்பிலிருந்து சிங்காரவேலரின் மிகச் சரியான வர்க்கப் பார்வையை உணரலாம்.  இத் தந்தியைப் படித்த வெட்ஜீவுட் அம்மாநாட்டில் “இத்தகு உணர்வு கொண்ட உணர்ச்சியை இது வரையில் இந்தியாவில் கேட்டதில்லை” என்று கூறியுள்ளார்.  இங்குதான் சிங்காரவேலரின் தனித் தன்மை உள்ளது.  சிங்காரவேலர் தொடக்கக் காலத்திலேயே மார்க்சியத்தைக் கற்றிருந்ததாலும், உலக அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து வந்ததாலும் அந்நிலைப்பாடு (வர்க்கப் பார்வை) அவருக்கு வாய்த்திருந்தது எனலாம்.  அதனால் தான் இந்தியாவின் முதல் மார்க்சிய அறிஞராக வாய்த்திருந்தது எனலாம்.  அதனால்தான் இந்தி யாவின் முதல் மார்க்சிய அறிஞராக அவர் விளங்கினார். 

தமிழகத்தில் தெளிவான வர்க்கப் பார்வை யுடன் தொழிற்சங்கத்தை வழிநடத்தியவர் அவர்.  அக்காலத்தில் தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு, கூடுதலான ஓய்வு நேரம், விடுமுறை, சுகாதார வசதி, பழிவாங்கும் நடவடிக்கை ஆகியவற்றைக் குறித்து மட்டுமே கவனம் செலுத்தி வந்தன.  சென்னை மாகாண தொழிற்சங்கமும் (27. 4. 1918) அந்நிலைப்பாடு உடையதாகவே இருந்தது.  சிங்கார வேலரின் பங்களிப்பால், நாளடைவில் அங்கும் மாற்றம் ஏற்பட்டது.  அம்மாற்றம் சிறிது சிறிதாக நிகழ்ந்து வந்தது.

தொழிலாளர் உழைப்புக்கேற்ற ஊதியத்திற்கு மட்டும் அவர் போராடுபவர் அல்லர்; அவர்கள் தத்தம் தொழிற்சாலைகளிலுள்ள சுரண்டலை மட்டுமன்றி, நாட்டின் ஒட்டுமொத்த சுரண்டலையும் ஒழிக்கும் அரசியலில் அவர்கள் முன்னணிப் படை யாக இருக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தி வந்தார்; தொழிலாளர்களின் போராட்டங்கள் ஒருங்கிணைத்து வளர்க்கப்பட்டு, அது அரசியல் ஆட்சியதிகாரப் போராட்டமாக உருமாற்றம் அடையவே அவர் வழிகாட்டினார்.  இதில் அவர் தான் முதல் முன்னோடி.

சுரண்டலை, முற்றிலும் ஒழிக்கப் பெரும்பாலோரான உழைக்கும் மக்களின் நலனை நிலைநிறுத்த வர்க்கப் போராட்டம் தவிர்க்க முடியாததாக உள்ளது.  இந்த வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முன்னணிப் படையே தொழிலாளர் இயக்கம்.  இந்தத் தொழிலாளர் இயக்கம் முழுமையான வெற்றிபெற வேண்டுமென்றால் ஆட்சியதி காரத்தைக் கைப்பற்றும் அரசியல் இயக்கமாக வளர வேண்டும்.

சிங்காரவேலர் இந்தத் தெளி வான வர்க்கப் பார்வையையே போதித்து வந்தார். சிங்காரவேலர்க்கு இந்தத் தெளிவான வர்க்கப் பார்வை இருந்ததால்தான், சுதந்திரப்போராட்ட காலத்தில், வெள்ளை அந்நிய ஆதிக்கத்தை விரைந்து வெளியேற்ற வேண்டுமென்றால், இந்தியா முழுதும் இருக்கும் தொழிலாளர்களையும், விவசாயிகளையும், பல்வேறு அமைப்புகளிலுள்ள பணியாளர்களையும் ஒருங்கிணைத்துப் போராட வேண்டுமென்று, அவ்வப்போது வலியுறுத்தி வந்தார்.  இது குறித்து அவர் கடிதம், அறிக்கை வாயிலாகக் காந்தியடி களுக்கும் காங்கிரஸ் இயக்கத்திற்கும் அடிக்கடி அறிவித்து வந்தார்.  இது குறித்து 1934-இல் சுய ராஜ்யம் யாருக்கு? என்ற நூலையும் பிற்காலத்தில் எழுதலானார்.  அதனாற்றான்

“சங்கம் தொழிலாளர்க் கமைந்தது அவனால்

தமிழர்க்குப் புத்தெண்ணம் புகுந்ததும் அவனால்

பாடுபவர்க்கு உரிமை உயிர்த்ததும் அவனால்

பழமையில் புதுமை மலர்ந்ததும், அவனால்”.

என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வீறுடன் பாடினார்.  சுதந்திரப்போராட்ட காலத்தில், அந்நிய ஆட்சி எதனைக் கண்டு அஞ்சும் என்பதையும், நாடு விடுதலை பெறுவதற்குச் சிறந்த வழி என்ன என் பதையும் அவர் கீழே எழுதியிருப்பது மிகக் குறிப் பிடத்தக்கது.

“சுயராஜ்ய குறிக்கோளை அடைய இந்திய தொழிலாளர்களை நாம் பயன்படுத்தத் தவறி யுள்ளோம். வன்முறையற்ற ஒத்துழையாமை அடிப் படையில் அதனை ஒரு தேச அளவிலான வேலை நிறுத்தத்திற்கு உறுதி செய்யத் திட்டமிட்டு, அதற்குக் காங்கிரசு தலைமை தாங்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.

தேசிய வேலைநிறுத்தங்களைச் செய்யாமல், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தைச் சின்னஞ்சிறு அளவில்கூட அசைக்க முடியுமென நான் நினைக்கவில்லை.  தொழிலாளர்களை நேரடி யாக அணுகி, நாட்டிலுள்ள தொழிற் சங்கங் களைக் காங்கிரஸ் அமைப்பின் ஒரு பகுதியாக ஒன்று திரட்ட வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்” - சிந்தனைக்களஞ்சியம்- பக்- 122.

கயாவில் 1922-இல் நடந்த காங்கிரசு மாநாட்டில் இவ்வாறு அறிவித்துள்ளார்.  ஆனால், காங்கிரசு இந்த வழியைப் பின்பற்றவில்லை என்பதுதான் சோகமானது.  அவர் மேலும் சில கட்டுரைகளிலும், பேச்சுகளிலும் குறிப்பிட்டுள்ளவை நம் ஆழ்ந்த கவனத்திற்கு உரியவை.

“சுயராஜ்யம் அடைய வேண்டுமென்று உறுதி பூண்டுள்ள எந்தக் கட்சிக்கும் ஒன்று பட்ட தொழிலாளரின் தீவிர ஒத்துழைப்பு இன்றியமை யாதது.  தொழிலாளரும் விவசாயிகளும் ஒன்று பட்டால்தான், அவர்களும் நாடும் கடைத்தேற முடியும்.  உழைக்கும் மக்களின் முனைந்த ஒத்துழைப்பு இல்லாமல், கற்றறிந்தோர், நாட்டில் சுயராஜ்யத்தைப் பெற்றுத்தர முடியாது.

“சுயராஜ்யம் இன்றேல் வாழ்வில்லை; தொழிலாளி இன்றேல் சுயராஜ்யம் இல்லை” சிந்தனைக்களஞ்சியம் - பக். 141, 141, 140.

மேற்குறித்தவை, அவர் 1925-இல் கான்பூரில் பேசிய பேச்சின் சில பகுதிகள், இவற்றைப் போன்ற பல குறிப்புகள் அவரது களஞ்சியத்தில் ஆங்காங்கே காணக் கிடக்கின்றன.  எனினும், மற்றொரு குறிப்பைப் பார்த்துவிட்டு, விடுதலை வரலாற் றோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால், அவரது தொலைநோக்குச் சிந்தனையை, தீர்க்கதரிசனத்தை நன்கு உணரலாம்.

“தொழிற்சங்கங்களும், அவற்றைச் சார்ந்த தேசிய சுரங்க யூனியன்களும், கப்பல் வேலைக் காரர்களும், சுரங்கங்களிலுள்ள தொழிலாளர் களும் சேர்ந்து முதலாளித்துவ ஆதிக்கத்தையும், ஏகாதிபத்திய யுத்தத்தையும், அதிக பொருள் உற்பத்தியையும் முழுவன்மையோடு எதிர்க்க வேண்டும்”.

இக்கருத்தினைக் காங்கிரசு இயக்கம் பின் பற்றியதோ இல்லையோ ஆனால் சுதந்திரப் போராட்டத்தால் எழுச்சி பெற்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், விவசாயிகளும், இராணுவ வீரர்களும் மற்ற பிரிவினரும் போராடி சுதந்திரம் விரைவில் பெறத் துணை புரிந்தவர்கள் என்பது தான் வரலாறு; பல்வேறு அமைப்புகள் போராடியதைச் சுருக்க மாகப் பார்த்தாலே அவ்வுண்மை தெரியும். 

இந்தியா முழுதும் தொழிலாளர்கள், விவசாயிகள், மாண வர்கள், இளைஞர்கள் மட்டுமல்லாமல், தரைப் படை, கப்பற்படை, விமானப்படை வீரர்களும் களத்தில் இறங்கிப் போராடினார்கள்; சில இடங் களில் காவல்துறையும் வேலைநிறுத்தம் செய்தது; மகாராஷ்டிராவில் பழங்குடிகளும், வட வங்காளத்தில் விவசாயிகளும், தெலுங்கானா விவசாயிகளும், கல்கத்தாவில் அஞ்சல் தொழிலாளர்களும், பல மாநிலங்களில் ஆலைத் தொழிலாளர்களும், தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது வெள்ளை ஆதிக்கத்தை நடுங்க வைத்தது. 

குறிப்பாக 1945-இல் 7 லட்சத்து 47 ஆயிரம் தொழி லாளர்களும், 1946-இல் 19 லட்சத்து 69 ஆயிரம் தொழிலாளர்களும், 1947-இல் 18 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்களும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். 

அப்போதைய வைஸ்ராய் வேவல் இவற்றைக் கண்டு மிரண்டு உள்ளார்.  ஆறாம் ஜியார்ஜ்க்கு அவர் எழுதிய கடிதத்தில் “இந்தியா ஒரு புதிய அமைப்பைப் பெற்றெடுக்கும் பிரசவ வலியில் இருக்கிறது என்று சொல்வதே சரியானதாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.  அதாவது, இந்தியா சுதந்திரம் பெறுவதை மேலும் தடுக்க முடியாது என்பதையே அவர் பூடகமாக அறிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த கப்பற்படை வீரர்களின் வீரஞ்செறிந்த போராட்டம் வெள்ளை ஆதிக்கத் தையும் பிரிட்டனின் ஆட்சியையும் நடுங்க வைத்தது.  இருபதாயிரம் கடற்படை வீரர்கள் வெள்ளை ஆதிக்கத்தின் கட்டளைக்கு அடிபணிய மறுத் தார்கள்; ஆகாயத்திலிருந்து குண்டு போட்டு உங்களை ஒழிப்போமென்று அந்நிய அரசு அச் சுறுத்தியபோதும், அவர்கள் பின்வாங்காமல் போராடினார்கள். 

இவர்களுக்கு ஆதாரமாக விமானப்படை வீரர்களும் வேலைநிறுத்தம் செய்தார்கள்; இவர்களைப் பின்பற்றி மும்பையிலும், வேறு மாநிலத்திலும் பல அமைப்புகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் களத்தில் இறங்கினார்கள்.  இவற்றைக் கண்ட வெள்ளை ஆதிக்கம் இருண்டு மிரண்டது.  இதில் பெரும் வியப்பு என்னவென்றால், இப்போராட்டங்களைக் காங்கிரசு ஆதரிக்கவில்லை என்பது தான்; மாறாக, போராட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியது.  கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுதான் அதற்குப் பேராதரவு அளித்தது; இது மிக முக்கியமானது.  அவ்வியக்கம் அவர்களோடு ஒன்றிணைந்து போராடியது; வழி காட்டியது.

இவ்வாறான தொழிலாளர்- விவசாயி போராட்டங்களும், இராணுவ வீரர்களின் காவல் துறையினரின் போராட்டங்களும், மேலும் பழங்குடி மக்களின், உதிரித் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களுமே வெள்ளையாதிக்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  இனி இந்தியாவுக்கு விடுதலை அளிப்பதில் காலம் கடத்துவது சரி யன்று என்பதை அவர்களுக்குத் தீவிரப்படுத்தியது இந்த வீரஞ்செறிந்த போராட்டங்களேயாகும். 

இந்திய விடுதலைக்கான இந்த முக்கிய காரணத்தைக் கம்யூனிஸ்டுகளையும், முற்போக்கு வரலாற்றாசிரியர் களையும் தவிர்த்து, ஏனைய இந்திய வரலாற்றா சிரியர்கள் குறிப்பிடுவதே இல்லை.  திட்டமிட்டு மறைக்கிறார்கள்.  இதனால் பிற எழுத்தாளர் களும், தலைவர்களும், இந்திய விடுதலை குறித்துத் தவறான புரிதலையே கொண்டிருக்கிறார்கள்; இத் தவறான போக்கு, நம்நாட்டுப் பாடத்திட்டத்திலும், வரலாற்று நூல்களிலும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  இது மிக வருந்தத் தக்கது.

இந்தப் போராட்ட வரலாற்றை ஒட்டி ஒரு வியப்பான தகவல் ஒன்றுண்டு.  இந்தியா சுதந்திரம் அடைந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னால், இங்கிலாந்தின் மேனாள் பிரதமர் அட்லி இந்தியாவிக்கு வந்திருந்தபோது,

கல்கத்தாவில் கவர்னர் மாளிகையில் தங்கியிருந் துள்ளார்.  அப்போது கல்கத்தாவின் நீதிபதியாக இருந்து, கவர்னராக விளங்கிய பி.பி. சக்கரவர்த்தி, அட்லியை நோக்கி, “இந்தியாவை விட்டு ஆங்கிலே யர்கள் வெளியேறியதற்குப் பிரிட்டிஸாரின் முடிவில், காந்தியடிகளின் நடவடிக்கைகள் எந்த அளவுக்குச் செல்வாக்குச் செலுத்தின?” என்று வினவினாராம்.  அதற்கு அட்லி, சிரித்துக்கொண்டே “மிகக் குறைவு” என்றாராம்.  இதனை, இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான சுனித்குமார் கோஷ் தம் நூலில் பதிவு செய்துள்ளதாகத் திருமாவேலன்

31. 01. 2016 அன்று வெளிவந்த ஜூனியர் விகடனில் குறித்துள்ளார்.  இந்த வேலை நிறுத்த வரலாற்றை நோக்கினால், சிங்காரவேலர் முப்பதுகளிலேயே, சுதந்திரப் போராட்டத்தில் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் இணைக்காமல் சுதந்திரத்தைப் பெறமுடியாது என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்தது எத்துணை உண்மையென்பது நன்கு விளங்கும்.

அவர், சுதந்திரத்தைப் பற்றி மட்டுமன்றி, சுதந்திரத்திற்குப் பின்னால் காங்கிரசு கட்சி, எத்திசையில் செல்லும் என்பதையும் மிகச் சரியாகக் கணித்துள்ளார்.  சிங்காரவேலர் சுதந்திரம் பெறு வதற்கு முன்பே (11. 02. 1946) காலமாகி விட்டார்.  அவர் சுதந்திரத்தை காணாமல் கண்மூடியது பெரும் சோகமானது.  அவர் காங்கிரசைப் பற்றி அப்போதே அவர் குறிப்பிட்டிருப்பது மிக முக்கிய மானது அந்தத் தொலைநோக்குச் சிந்தனையை கீழே காணலாம்.

“இந்திய தேசிய காங்கிரஸின் உழைப்பால் நாம் ஒருவாறு விடுதலை அடைய இருந்தாலும், உலகத்திலுள்ள மற்ற தேசங்களிலுள்ள முதலாளிகள் அரசியல் போலவே இந்தியா இருக்கும் என்பதற்கு ஐயமில்லை” - சிந்தனைக் களஞ்சியம் - பக். 1458

இக்கூற்றிலிருந்து அவரின் தேர்ந்த தீர்க்க தரிசனத்தை நன்கு உணரலாம்.  அவர்தான் சிங்காரவேலர்.

Pin It