திருவாரூரில் நேற்று (23-08-2022) ‘ஓ.என்.ஜி.சி.யை காப்போம், ஓ.என்.ஜி.சி. ஒப்பந்த தொழிலாளர்களை காப்போம்’ என்று தொழிலாளர்கள், விவசாயிகள் ஒற்றுமைப் பேரணி எனும் தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். இதில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஓ.என்.ஜி.சி.யின் துரப்புப் பணிகளை துவக்கக் கோரியும், இந்நிறுவனத்தை நம்பி 40 ஆண்டுகாலமாக ஒப்பந்த ஊழியர்களாக இருக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உத்திரவாதப்படுத்தவும், மேலும் நாட்டின் இயற்கை எரிவாயு தேவையை ஓரளவு பூர்த்தி செய்து அன்னிய செலவானி நிதி இழப்பிலிருந்து தேசத்தை காத்திடவும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சமுதாயப் பணிக்காக ஒவ்வொரு ஆண்டும் செலவிடும் இந்நிறுவனத்தை காத்திடவும், நாட்டின் பொதுத்துறையை காத்திடவும் இப்போராட்டமென அறிவித்திருக்கிறார்கள்.
இப்போராட்டத்தில் சி.பி.ஐ. கட்சியின் நாகை நாடாளுமன்ற உறுப்பினர், திரு.செல்வராஜ், சி.பி.எம்.-இன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மாரிமுத்து, கீழ்வேளூர் சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினர் திரு.நாகை மாலி, திருத்துறைப்பூண்டி சி.பி.ஐ. சட்டமன்ற உறுப்பினர் திரு.மாரிமுத்து உட்பட அக்கட்சிகளின் மாவட்ட பொறுப்ப்பாளர்கள் முன்னனி தலைவர்களாக பங்கேற்று உள்ளனர். இப்போராட்டம் பல கேள்விகளை இந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் நோக்கி எழுப்பி உள்ளது.
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக சூழலியல் விதிகளுக்கு புறம்பாகவும், அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியும் செயல்பட்டதாலேயே அப்பகுதி மக்கள் இந்நிறுவனத்திற்கு எதிராக போராட ஆரம்பித்தனர். மேலும் இந்நிறுவனத்தினால் விவசாயிகளின் நிலங்களுக்கு ஏற்பட்ட நட்டங்கள் முறையாக நிவர்த்தி செய்யப்படாமலும், அரசின் முறையான அனுமதி பெறாமலும் பலவேறு துரப்புப் பணிகள் துவங்கப்பட்டன. இது மட்டுமல்லாது, இதன் துரப்புப் பணிகள் டெல்டா பகுதியில் மட்டுமல்லாது புதுச்சேரி முதல் இராமநாதபுரம் வரையிலான பகுதி வரை வரைமுறையின்றியும், சூழலியல் பரிசோதனை இன்றியும், நிலத்தின் உரிமையாளர்களின் அனுமதி இன்றியும், கிராம அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அனுமதி இன்றியும் மேற்கொள்ள தனியார் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கும் வகையில் பாஜக ஆட்சி காலத்தில் சிறப்புச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
இந்த துரப்புப் பணிகளில் ஓ.என்.ஜி.சி. மட்டுமல்ல பல தனியார் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. க்ரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் பின்னர் வேதாந்தா நிறுவனம் என மக்கள் விரோத தொழில் பணிகளில் ஈடுபடும் இந்நிறுவனங்களுக்கு அனுமதி எனும் வகையில் பாஜக அரசு இத்திட்டங்களை முன்னகர்த்தியது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவன போராட்டத்தில் அப்பாவிகளை சுட்டுப்படுகொலை செய்த வேதாந்தா நிறுவனம் இதுபோன்ற மக்கள் விரோத, தொழிலாளர் விரோத செயல்களை, சாவுகளை தனது இந்திய அளவிலான தொழிற்சாலைகளில் செய்திருக்கிறது. ஆப்பிரிக்காவிலும் இதே போன்று செயல்பட்டதால் இங்கிலாந்தின் நீதிமன்றம் இந்நிறுவனத்திற்கு கடுமையான தண்டனைகளை வழங்கியது. இப்படியான நிறுவனம் காவிரி டெல்டாவில் அனுமதிக்கப்படுவதற்கு முகன்மையான நிறுவனமாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விளங்கியது.
இதன் தொழிற்திட்டங்கள் காவிரியின் வேளாண் மண்டலத்தை முற்றிலுமாக சிதைத்துக் கொண்டிருப்பதை ஆதாரங்களுடன் மக்கள் தளத்தில் முன்வைக்கப்பட்டன. அடியக்கமங்கலம், திருவாரூர் உள்ளிட்ட துரப்புப் பணி நடந்த பகுதிகளில் எண்ணைக் கசிவுகள் உள்ளிட்டவை இந்நிறுவனத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை அம்பலப்படுத்தின. இது போன்ற பல தகவல்களை அடுக்கிக்கொண்டே செல்வதற்குரிய நிகழ்வுகள் கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்ததாலேயே அப்பகுதி மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளின் அடிப்படை கோரிக்கையான ஒப்பந்த ஊழியர்களின் பாதுகாப்பு என்பது அக்கட்சிகளின் தொழிற்சங்கத்தின் தொழிலாளர் குறித்தான அரசியல் நிலைப்பாட்டினை நோக்கிய கேள்வியை எழுப்புகிறது.
ஒப்பந்த ஊழியர்கள் என்பவர்கள் போராடிப் பெற்ற தொழிலாளர் நலச்சட்டவிதிகளுக்கு உட்படாத தொழிலாளர்களாவார்கள். பணி நிரந்தரம், தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்கள் எவற்றையும் பெற இயலாத சுரண்டப்படும் தொழிலாளர்களே ஒப்பந்த ஊழியர்கள். ஓ.என்,ஜி.சி. எனும் அரசு நிறுவனத்தை பாதுகாப்போம் என்று கூறும் கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிலாளர் நலனில் கவனத்தினைக் கொண்டிருந்தால் 40 ஆண்டுகளாக அந்நிறுவனம் நடத்தி வரும் தொழிலாளர் விரோத ஒப்பந்த ஊழியர் முறையை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஒரு பொதுத்துறையில் நடக்கும் இந்த அநீதியை குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் அப்பகுதி சி.பி.ஐ. கட்சியின் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செல்வராஜ் அவர்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடி இருக்க வேண்டும். அத்துறை அமைச்சர்களிடத்தில் போராட்டத்தினை கொண்டு சென்றிருக்க வேண்டும். இப்படியான போராட்டங்களை நடத்திடாமல், இத்தொழிலாளர்களை மேலும் ஒப்பந்த ஊழியர்களாக சுரண்டப்பட வேண்டுமென கோரிக்கை வைப்பது தொழிலாளர் விரோதம்.
ஓ.என்.ஜி.யை நோக்கி தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடும் சிறுவிவசாயிகளுக்கு எதிராக ஒப்பந்த தொழிலாளர்களை நிறுத்துகிறது கம்யூனிஸ்ட் கட்சிகள். இவ்வகையில் உழைக்கும் வர்க்கத்தினரை, பாட்டாளிகளை கூறுபோட்டு எதிரெதிராக நிறுத்துவது ஓ.என்.ஜி.சி.க்கும், இப்பகுதிக்கு வர முயலுகின்ற பெருநிறுவனங்களுக்கும் வாய்ப்பான சூழலை கொண்டுவரும் என்பது புரியாதவர்கள் அல்ல கம்யூனிஸ்ட் கட்சியினர். இவர்களே தங்கள் துண்டறிக்கையில் குறிப்பிடும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபமீட்டும் ஓ.என்.ஜி.சி., இத்தொழிலாளர்களை 40 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யாததன் காரணமென்ன என்பதை இவர்கள் மக்கள் மன்றத்தில் விளக்க வேண்டும்.
மேலும் இந்நிறுவனம் பங்கு சந்தையில் லாபத்தினை தனியாருடன் பங்கு போடும் நிறுவனம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. மேலும் பெட்ரோலிய கச்சா எண்ணையை தனியாருக்கும் விற்பனை செய்துவருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அடைந்த லாபமென்ன என்று தேடினால், கச்சா எண்ணையால் பாதிக்கப்பட்ட நிலத்தையே காட்ட முடியும்! பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அந்நிய முதலீட்டை சேமிக்கிறது என்றால், இதனால் நேரடி லாபமடைந்த ஒன்றிய அரசு இந்த லாபத்தை எவ்வாறு டெல்டா மக்களுக்கு பகிர்ந்திருக்கிறது என்பதையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்க வேண்டும். பெட்ரோலியம், எரிகாற்று ஆகியவை தனியாரின் வசம் ஆக்கிரமிக்கப்பட்டு கொள்ளை லாபத்தில் மக்களைச் சுரண்டும் துறையாக பாஜகவினால் மாற்றப்பட்ட நிலையில் கம்யூனின்ஸ்ட் கட்சிகளின் போராட்டம் அவர்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது.
இதுமட்டுமல்லாமல் துரப்புப் பணிகள் குறித்து பாஜக கொண்டு வந்திருக்கும் பல்வேறு சட்டங்களான HELP (Hydrocarbon Exploration & Licensing Policy) திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட Open Acreage Licensing Policy போன்ற சட்டங்கள் மக்களுக்குண்டாகும் பாதிப்புகள் பற்றிய ஆய்வுகளை நடத்தாமலும், அவர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமலும், துரப்புப் பணிகளுக்கான ஆய்வுகளை மேற்கொண்டு துரப்புப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை போடலாம் என சொல்லுகிறது. இக்கோரிக்கை வேதாந்தா நிறுவனத்தின் முதலாளி அனில் அகர்வாலால் முன்மொழியப்பட்ட ஒன்று. பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா துரப்புப் பணிகளை மேற்கொள்ளப் போவதாக சில வருடங்களுக்கு முன் அறிவித்தது. இதையடுத்து மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்பட வேண்டுமென்று சிறு விவசாயிகள், தொழிலாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள் ஆகியோரின் கோரிக்கை வலுப்பெற்றது என்பதை கம்யூனிஸ்ட் கட்சிகள் மறந்து விடக்கூடாது.
இப்படியான மக்கள் விரோத நிறுவனமாக செயல்பட்டு தஞ்சை டெல்டாவின் சூழலியலை அழித்து, தனியாருக்கு தாரைவார்க்க உதவும் கொள்கை கொண்ட இத்துறை இப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகளின் இப்போராட்டம் என்பது பாஜகவின் தனியார் லாபவெறி கொள்கைக்கும், ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும், விவசாய நிலங்களை நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கும் ஆதரவான சந்தர்ப்பவாத போராட்டமாகும், இது எவ்வகையிலும் பாட்டாளிகள் நலன் சார்ந்ததோ, தனியார்மய எதிர்ப்பு சார்ந்ததோ, சூழலியல் பாதுகாப்பு சார்ந்ததோ அல்ல. பாட்டாளிகளை கூறுபோட்டு பெருநிறுவனங்களை பாதுகாக்கும் மக்கள் விரோத போக்குகளை கைவிடவில்லையெனில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களிடம் அன்னியப்படுமென்பதில் சந்தேகமில்லை.
- மே பதினேழு இயக்கம்