1999 ஆண்டு சூலை 23 அன்று தினக்கூலியை 70 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்த வேண்டும், மகப்பேறு காலங்களில் பணியிலிருக்கும் பெண்களுக்கு விடுப்பு வேண்டும்,  வேலை நேரத்தை எட்டு மணி நேரமாக வரையறுக்க வேண்டும்,

இதே கோரிக்கைக்காக போராடியதால் சிறையில் அடைக்கப்பட்ட 652 தொழிலாளர்களை விடுதலை செய்யவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தேயிலைத் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும், சில கட்சி, அமைப்பு களைச் சேர்ந்தோரும் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம்  மனு கொடுக்கச் சென்றனர்.

இந்தப் பேரணியைப் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியும், அன்று அவர்களோடு கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ்,  கம்யூனிஸ்ட் கட்சிகள், இசுலாமிய அமைப்புகளும் முன்னின்று நடத்தினர். இந்தப் பேரணியில் பெரும்பாலும் மாஞ்சோலை தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தேவேந்திரகுல வேளாளர்களும், சிறிய அளவில் மற்ற சாதியைச் சேர்ந்தவர்களும், இசுலாமியர்களும் இருந்தனர்.

முன்னின்ற அரசியல் தலைவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி மறுத்து, கூடியிருந்த தொழிலாளர்கள் மீது வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டது காவல் துறை. தப்பிச் செல்ல தாமிரபரணி ஆற்றில் குதித்தவர்களையும் விடாமல் வெறிகொண்டு தாக்கியது காவல்துறை, இதில் 17 பேர் கொல்லப்பட்டனர், 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.  அன்றைக்கு ஆட்சியில் இருந்தது திமுக. வழமை போலவே ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்ட இந்தப் படுகொலையும் அரசினால் மூடி மறைக்கப்பட்டது. கூலி உயர்வு கேட்டுப் போராடிய கீழ் வெண்மணியாகட்டும், மாஞ்சோலையாகட்டும் என்றுமே இந்த அரசு, சாதி ஆதிக்கச் சக்திகள் பக்கம்தான் நின்றுள்ளது.

போராட்டக் களத்தில் உயிர்த் தியாகம் செய்த எம் மக்களுக்கு செவ்வணக்கத்தை உரித்தாக்குவதோடு ஆளும் வர்க்கத்திற்கு எதிரானப் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் ஒற்றுமையை உயர்த்திப் பிடித்து அணிதிரள உறுதியேற்போம்.

Pin It