udayakumar_634

ஐயா பழ.நெடுமாறன், வை.கோ, திருமாவளவன், சீமான், பத்திரிகையாளர் ஞாநி ஆகியோரும், மேலும் பல நல்ல உள்ளங்களும் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை நாங்கள் உடனடியாக கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். நானும், புஷ்பராயனும், மற்ற 13 தோழர்களும் மிகவும் பலவீனமாக உள்ளோம். உண்ணாவிரதமிருந்த மூன்று பெண்கள் நேற்று மயக்கமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ராயனுக்கும், எனக்கும் வயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது, மேலும் எனக்கு மயக்கம் வருவது போல உள்ளது. அரசு மருத்துவக் குழு என்னை சோதித்து, எனது இதய துடிப்பு குறைந்து வருகின்றது என கூறியுள்ளார்கள். அவர்கள் என்னை அருகிலுள்ள மருத்துவ நிலையத்திற்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூறினார்கள்; ஆனால் நான் இங்கிருந்து செல்வதில்லை என கூறிவிட்டேன்.
 
எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் ஒன்பது நாட்கள் ஆன பின்னர் இன்று தான் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை பேச்சுவார்த்தைக்கு நியமித்துள்ளார்கள். மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக பத்து பேரைத் தேர்ந்தெடுத்து பேச்சுவார்த்தைக்கு அனுப்பியுள்ளார்கள்.
 
அதே சமயம், காவல்துறையோ தாங்கள் கூத்தப்புள்ளி கிராமத்தில் கைது செய்த 178 பொது மக்கள் மீதும் மிக மோசமான வழக்கான “தேசத்திற்கு எதிராக போர் தொடுத்தல்” பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் (இதில் 30 பேர் 18 வயதிற்கு கீழேயுள்ள சிறுவர்கள், 48 பேர் பெண்களாவர்). இதன் மூலம் அவர்களை பிணையில் வெளிவிடவும் மறுத்துள்ளார்கள். அதே போலவே கடலூர் சிறையில் உள்ளவர்களின் மீதும் இதே போன்ற பல மோசமான பிரிவுகளின் கீழ் மீண்டும் வழக்குகள் பதிந்துள்ளார்கள்.
 
இந்திய அரசு எங்களை முற்றிலுமாக அழித்தொழிப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றது. இதன் மூலம் அணு உலைகளுக்கு எதிராக, உலகமயமாக்கத்திற்கு எதிராக, அரசுக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஒரு பாடத்தை கற்பிக்க முனைகிறது. வெளிநாடுகளுக்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிரானதுமான பல சட்டங்களை உணவுப் பாதுகாப்பு, குடிநீர் வினியோகம், சில்லறை வர்த்தகத்தில் தனியார் முதலீடு போன்ற முக்கியமான பிரச்சனைகளில் அரசு அமல்படுத்தி வருகின்றது. மிக மோசமான‌, இயற்கைக்கு எதிரான, அடுத்த தலைமுறைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பல பெரிய திட்டங்களை அமல்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. இவற்றையெல்லாம் நாம் அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நினைக்கின்றது அரசு.
 
நமது இந்திய சகோதரர்களிடம் நாம் கேட்க விரும்பும் எளிய கேள்வி இது தான், ஒரு இந்தியக் குடிமகனாக அரசு கொண்டுவரும் திட்டங்களையும், அரசியல் நடவடிக்கைகளையும் அமைதியான முறையில், சனநாயகமான வழியில் எதிர்க்க எங்களுக்கு அனுமதியுண்டா? அனுமதியிருக்கின்றது என்றால் ஏன் எங்கள் மீது தேசத்திற்கு எதிராக போர் தொடுத்தல், தேசத் துரோகம் போன்ற வழக்குகளை அரசு ஏவி முற்றாக அழிக்கப்பார்க்கின்றது?
 
நாங்கள் மிகவும் அமைதியான முறையில் போராடி வருகின்றோம். நாங்கள் வன்முறையாக நடந்து கொண்டோம் என எங்கள் மீது ஒரு வழக்கு கூட கிடையாது. எங்களால் எந்த ஒரு தனிப்பட்ட நபரும் தாக்கப்படவில்லை. நாங்கள் எவருடைய சொத்திற்கும் சேதம் விளைவிக்கவுமில்லை. பின் ஏன் நாங்கள் இந்திய அரசால் இதுபோன்ற கொடூரமான முறையில் நடத்தப்படுகின்றோம்?  நாங்கள் ஏழைகள், தாழ்த்தப்பட்ட சாதியினர் என்பதாலா? அல்லது எங்களில் பெரும்பாலோர் சிறுபான்மை வகுப்பைச் சார்ந்த கிருத்துவ, இசுலாமியர் என்பதாலா? யோசித்து பாருங்கள்.
 
இந்த கடுமையான அடக்குமுறை மூலம் அரசு இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றது? அமைதியான வழியிலோ அல்லது வன்முறையான வழியிலோ தங்களது உரிமையையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க யாரும் போராடக்கூடாது; எதைப் பற்றியும் புகார் தெரிவிக்கக்கூடாது;  பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதற்கு அவர்கள் அமைதியாக உதவ வேண்டும் என்றா?
 
இந்தியாவில் 70 விழுக்காடு மக்கள் ஏழைகள், 50 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்களுக்கு அடிப்படை கழிவறை வசதிகள் கூட இல்லை. 46 விழுக்காட்டிற்கும் அதிகமான குழந்தைகள் சரிவிகித உணவில்லாமல் போதுமான எடையின்றி உள்ளார்கள். பெரும்பாலான அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், இராணுவத் தலைவர்கள், தொழிலதிபர்கள் இந்த மக்களை ஈவுஇரக்கமின்றி சூறையாடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த பணத்தையெல்லாம் சுவிசு வங்கிகளில் கொண்டு சேர்க்கின்றனர். மேலும் அவர்கள் இப்பொழுதெல்லாம் இலட்சங்களிலோ, கோடிகளிலோ கொள்ளையடிப்பதில்லை, இலட்சக்கணக்கான கோடிகளில் மட்டுமே கொள்ளையடிக்கின்றார்கள். ஆனால் இந்தியாவின் ஏழை மக்களுக்கோ பாதுகாப்பான குடிநீரோ, இரண்டு வேளை உணவோ கூட கிடைப்பதில்லை.
 
இந்தக் கொள்ளையர்களிடமிருந்து நாட்டைத் திரும்பப் பெற இந்திய மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, அமைதியான முறையில், சனநாயகமான வழியில் போராட வேண்டும். நம்மை மீண்டும் இரசியா, அமெரிக்கா, பிரான்சு அல்லது மற்ற நாடுகளுக்கெல்லாம் இவர்கள் மீண்டும் காலனி நாடாக்குவதற்கு முன்பு இது நடைபெறவேண்டும்.
 
இந்திய அரசின் கொடூரமான பிடியிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். இந்தியா முழுவதும் எங்களுக்காகப் போராடிவரும் எல்லா சகோதர, சகோதரிகளுக்கும் நாங்கள் நன்றி கூறிக்கொள்கின்றோம். இது போல நிறைய மக்களும், நிறைய போராட்டங்களும் இப்போது தேவை.

- சுப.உதயகுமார்.

தமிழில்: ப.நற்றமிழன்

Pin It