கூடங்குளத்தில் அணு உலை கட்டுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான பொழுதிலிருந்தே தொடங்கிய அணு உலை எதிர்ப்புப் போராட்டம், 'கூடங்குளத்தை இழுத்து மூடு' என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த ஏழு மாதங்களாக உச்சத்தை அடைந்தது. இதில் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக கூடங்குளத்தை இழுத்து மூடவும் செய்தனர் போராடும் மக்கள். இந்நிலையில் தான் தமிழக அரசு மார்ச் 19 அன்று கூடங்குளம் அணு உலைக்கு ஒப்புதல் கொடுத்தது. இதற்கு சில வாரங்கள் முன்பாகவே கூடங்குளம், அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு அதிகார வர்க்கத்திற்கு ஏற்றவர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் கூடங்குளம் சென்று வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டனர்.

koodankulam_police_623

 அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கும் முன்னரே போராட்டக்குழுவைச் சேர்ந்த மக்களை கைது செய்யும் படலம் தொடங்கியது. 11 பேரின் மேல் இந்திய ஒன்றியத்திற்கு எதிராக போர் தொடுக்க முயற்சித்தது, தேசத் துரோகம், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. மீதமுள்ள 184 பேரின் மேல் சட்டத்திற்குப் புறம்பான வகையில் ஒன்றுகூடுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 43 பேர் பெண்கள், இரண்டு பேர் பள்ளி மாணவிகளாவர். மேலும் இங்கு 144 தடையுத்தரவும் போடப்பட்டது. கூடங்குளம் அதைச் சுற்றிய கிராமங்கள் ஒவ்வொன்றும் தனி காவல்படையினால் சுற்றி வளைக்கப்பட்டு கிராமங்களுக்கு இடையிலான தொடர்பும், பிற இடங்களைச் சேர்ந்தவர்கள் இக்கிராமங்களுக்குள் நுழைவதும் தடுக்கப்பட்டது. மேலும் மனிதர்களின் அடிப்படை தேவையான குடிநீர், பால், உணவுப் பொருட்கள் கூட இக்கிராமங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கூடங்குளம் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கடலோர பகுதிகள் என்பதால் அங்குள்ள நிலத்தடி நீரை குடிக்கமுடியாது. அங்கு வாழும் மக்கள் வெளியிலிருந்து வரும் நீரையே குடித்து வந்துள்ளனர். இந்நிலையில் குடிநீர் தடுக்கப்பட்டது அவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் செயலாக அமைந்தது. மேலும் 3,000த்திற்கும் அதிகமான குழந்தைகள் இக்கிராமங்களில் உள்ளனர். இவர்களுக்கான உணவான பால் கூட அங்கு உள்ளே அனுமதிக்கப்படாதது, நம்மை மனித நேய கோரிக்கைகளை நோக்கித் தள்ளியது.

  முன்னர் போராட்ட களமாக இருந்த கூடங்குளம் அணு உலை இப்பொழுது முழுவதுமாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கூடங்குளத்தை இழுத்து மூடு என்ற முன்னைய கோரிக்கையில் இருந்து, அரசு மனித நேய கோரிக்கைகளை எழுப்ப வைத்துள்ளது. நமது கவனம் முழுவதையும் இடிந்தகரை, அதைச் சுற்றிய பகுதியில் மட்டும் இருக்குமாறு காவல்துறையின் வியூகம் அமைந்துள்ளது. ஆம், அதற்காகத் தான் பால், குடிநீர், உணவு போன்ற அடிப்படை பொருட்களை அங்கு தடை செய்தது. மேலும் ஆயிரக்கணக்கில் அங்கு காவல்துறையைக் குவித்து எந்நேரமும் காவல்துறை வன்முறையை ஏவலாம் என்ற நிலையை உருவாக்கியது. இந்நிலையில் தான் ஊடகங்களை நேற்று(21 மார்ச்) மதியம் முதல் இடிந்தகரை பகுதியினுள் காவல்துறை அனுமதிக்கத் தொடங்கியது.

 காவல்துறைக்கு வன்முறையை ஏவும் எண்ணம் இருந்தால் ஊடகங்களை உள்ளே அனுமதித்திருக்காது. காவல்துறையின் வியூகத்தின்படி குறைந்த பட்சம் இன்னும் ஒருமாத காலம் இப்பொழுது இருக்கும் அதே எண்ணிக்கையில் காவல்துறை கூடங்குளத்திலும், இடிந்தகரையைச் சுற்றிய பகுதிகளிலும் இருக்கும். இப்பொழுது அணு உலையின் பராமரிப்பு பணிகளே நடைபெற்று வருகின்றன. கூடங்குளம் இயங்கத் தொடங்கியதும் காவல்துறை இடிந்தகரை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறும். கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள காவல்துறை அணு உலை இயங்கத் தொடங்குவதிலிருந்து குறைந்த பட்சம் இரண்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு பின்னர் வெளியேறக்கூடும்.

koodankulam_people_615

கூடங்குளத்தில் முதல் அணு உலை இயங்கத்தொடங்கும் வரை காவல்துறை நமது பார்வையை இடிந்தகரை பகுதியிலேயே வைத்திருக்க முயல்கின்றது. குடிநீர், பால், உணவு போன்ற மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் அம்மக்களுக்கு கிடைக்கச் செய்ய இயலாததன் மூலம் காவல்துறை இந்நிலையை நீடிக்க இயலும். நாமும் உயிர் தொடர்பான பிரச்சனை என்பதால் இடிந்தகரையில் மட்டுமே நம் கவனத்தை வைத்திருப்போம். அணு உலை தொடங்கிய பின்னர் அதை போராடி நிறுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதனை மனதில் கொண்டே காவல்துறையும், அரசும் செயல்பட்டு வருகின்றது.

பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தவிர தமிழக அளவில் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக பெரிய போராட்டங்கள் நடக்கவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும். அணு உலை எங்களுக்கு வேண்டாம் என்று போராடியதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை நாளை நம்மை நோக்கியும் திரும்பும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சனநாயகத்தின் இறுதி மூச்சு இடிந்தகரை மக்களின் போராட்டத்தில் தான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இடிந்தகரை மக்களின் உயிர்வாழும் உரிமையை மீட்டெடுக்கும் அதே வேளையில் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற கோரிக்கையையும் நம் மனதில் நாம் நிறுத்தவேண்டும். இல்லையென்றால் இவ்வளவு ஆண்டுகளாக மக்கள் அங்கு போராடியததற்கான பொருள் இல்லாமல் போய் விடும்.

மக்கள் போராட்டம் ஓங்குக…..

- ப.நற்றமிழன்

Pin It