கீற்றில் தேட...

(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி II, 1945 மார்ச் 13, பக்கங்கள் 1463-66.)

திருமதி ரேணுகா ரே: ஐயா, நான் பின்வருமாறு முன்மொழிகிறேன்

‘’தொழிலாளர் நலத்துறைஎன்னும் தலைப்பில் கோரப்படும் மானியம் நூறு ரூபாயாகக் குறைக்கப்பட வேண்டும்.

ஐயா, சுரங்கங்களில் நிலத்தடியில் பெண்கள் வேலை செய்வதற்கு 1943 ஆகஸ்டு முதல் அதே ஆண்டு டிசம்பர் வரை இருந்து வந்த தடை முதலில் விலக்கிக் கொள்ளப்பட்டதிலிருந்து இந்த விரும்பத்தகாத நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து உறுதியான கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தாங்கள் சர்வதேச வாக்குறுதியை மீறிவிட்டது மட்டுமின்றி, உலக அபிப்பிராயத்தையும் பெருமளவுக்கு அதிர்ச்சிக்கும் அவமதிப்புக்கும் முற்றிலுமாக உணர்ந்திருக்கிறது,

  ஓராண்டுக்கு முன்னர் அகில இந்திய மாதர் மாநாட்டின் வேண்டுகோளுக்கு இணங்க நான் ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து இந்த தடையை மீண்டும் உடனடியாக நடை முறைக்கு கொண்டு வரும்படிக் கேட்டுக் கொண்டேன் . பட்ஜெட் கூட்டத் தொடரின் போது தொழிலாளர் மானியக் கோரிக்கை சம்பந்தமாக கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மீது பேசுகையில் மதிப்பிற்குறிய என் நண்பர் திருமதி சுப்பராயன் இதே பிரச்சினையை எழுப்பினார். ஆனால் இது அடுத்த அறுவடை காலம் வரை நீடிக்கக்கூடிய ஒரு தாற்காலிக நடவடிக்கைதான் என்றும், யுத்த காலம் முழுவதற்குமான நடவடிக்கை அல்ல வென்றும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வுகான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும், இந்த ஏற்பாடுகள் முடிவடைந்ததும் நிலத்தடியில் பெண்கள் வேலை செய்வதற்கு மீண்டும் தடை விதிக்கப்படுமென்றும் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் அச்சமயம் உறுதி கூறினார். ஆனால் இது வெறும் கண்ணாமூச்சி விளையாட்டாகவே இருக்கிறது. ஒரு வருடம் கழிந்து விட்டது. எனினும் இன்னும் கூட அரசாங்கத்தின் போக்கு மிகவும் பிடிவாத மானதாகவே உள்ளது. தடையை மீண்டும் விதிக்கும் நோக்கும் தமக்கு இல்லை என்பதை மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் தெளிவாக்கி விட்டார் இந்த அவையின் மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் இப்போதைய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அனைத்தையும் நன்கு அறிவார்கள்; ஈவு இரக்கமற்ற, நெஞ்சீரமற்ற ஒரு முதலாளியிடமிருந்து இத்தகைய வாதங்கள் வந்திருந்தால் அவற்றை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

(இச்சமயம் அவைத் தலைவர் மாண்புமிகு சர் அப்துல் ரகீம் தம் இருக்கையில் அமர்ந்தார்.)

ambedkar with friend

ஆனால் பொதுமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் எவ்வாறு இத்தகைய நடவடிக்கையை உறுதி செய்து, அதனை முன்கொண்டு செல்லுகிறார்கள் என்பது நமக்கு அச்சத்தை உண்டு பண்ணுகிறது.

ஐயா, இந்த அவையிலுள்ள அனைத்து உறுப்பினர்களதும், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களதும், அரசாங்கத்தினதும் ஆதரவை வேண்டுகிறேன். ஏனென்றால் இது நியாயமான, நேர்மையான ஒரு கோரிக்கை; இதனை ஏற்க மறுப்பது பண்பு நலத்தின் தூய கோட்பாடுகளையே மறுப்பதாகும்.

ஐயா, இப்போது என் தீர்மானத்தைப் பிரரேபிக்கிறேன்.

திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரகீம்): பின்கண்ட வெட்டுத் தீர்மானம் முன்மொழியப்படுகிறது:

தொழிலாளர் நலத்துறைஎன்னும் தலைப்பில் கோரப்படும் மானியம் நூறு ரூபாயாகக் குறைக்கப்பட வேண்டும்.

மதிப்பிற்குரிய சில உறுப்பினர்கள்: தீர்மானத்தை அவையின் முடிவுக்கு விடலாம்.

மாண்புமிகு டாடக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்த வெட்டுத் தீர்மானத்தைப் பொறுத்தவரையில், எனக்கு அளிக்கப்பட்டுள்ள குறுகியகால அவகாசத்தில் அதைப் பற்றிப் போதிய அளவு பேசுவது கடினம் .இந்தப் பிரச்சினை குறித்து சென்ற முறை கொண்டுவரப்பட்ட ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தின்மீது நான் பேசும்போது இந்திய அரசாங்கம் இந்த முடிவை மேற்கொள்ள நேர்ந்தது பற்றி நான் மிகவும் வருத்தமடைந்தேன். இப்போது இது குறித்து வருந்துகிறேன். ஆனால் தற்போது நாங்கள் எடுத்துள்ள முடிவைத் தவிர வேறு எந்த முடிவையும் மேற்கொள்ள இயலாதவாறு சந்தர்ப்பச் சூழ்நிலைமைகள் அமைந்துள்ளன. இது சம்பந்தமாக நான் ஒரு சில நிமிடங்கள் பேசுவதை அவை பொறுத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன்…..

மதிப்பிற்குரிய சில உறுப்பினர்கள்: இல்லை,இல்லை.

மாண்புமிகு டாடக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ………………இந்த விஷயத்தில் எங்களை நிர்ப்பந்தித்த சந்தர்ப்ப சூழ்நிலைகளை கூறுகிறேன்.

நிலக்கரி சம்பந்தமான நிலைமை எவ்வாறு என்பதை அவைக்கு எடுத்துரைப்பதோடு என் பேச்சை தொடங்குகிறேன். 1941ஆம் ஆண்டில் மொத்த நிலக்கரி உற்பத்தி 2,92,81,000 டன்னாக இருந்தது வீழ்ச்சியடைந்தது.1943 ஆம் ஆண்டு மிக நெருக்கடியான ஆண்டு. அந்த ஆண்டில் மொத்த நிலக்கரி உற்பத்தி 2,37,53,000 டன்னாக வெகுவாக சரிந்தது. இதன் காரணமாகத்தான் இந்தத் தடையை நீக்க வேண்டிய நிர்ப்பந்ததுக்கு உள்ளானோம். ஓரண்டுக்குள்ளாக நிலக்கரி உற்பத்தி ஏறத்தாழ 66,28,000 டன் அளவுக்கு குறைந்து விட்டது என்பதை இதிலிருந்து அவை உணர்ந்து கொள்ளும் என்று நம்புகின்றேன். தொழில் துறைன்னும் சரி, யுத்த முயற்சிகளும் சரி நிலக்கரி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூலப்பொருள் என்பதை இங்கு நான் விரித்துரைக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூலப்பொருளான நிலக்கரி உற்பத்தி மிகப் பெருமளவுக்கு வீழ்ச்சியடைந்து விட்டதை கைளை கட்டிக் கொண்டுப் பேசாது உட்கார்ந்திருப்பது என்பது எந்த அரசாங்கத்துக்கும் சாத்தியமல்ல.

              அவையின் கவனத்துக்கு அடுத்தப்படியாக நான் கொண்டுவர விரும்பும் விஷயம் அந்த ஆண்டுகளின் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்களின் எண்ணிக்கையாகும். 1941ல் மொத்தம் செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கங்கள் 440. 1942-இல் இந்த எண்ணிக்கை 670 ஆகவும் அதிகரித்து விட்டது. சாதாரண சூழ்நிலைமைகளால், 1943 ல் நிலக்கரி சுரங்கங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிட்டதைக் கொண்டு பார்க்கும் போது உண்மையில் நடக்க கிடைத்ததை விட அதிக நிலக்கரி நமக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் விந்தையான ஒரு நிலைமையை நாங்கள் எதிர்கொள்ள நேரிட்டது; அதாவது ஒருபுறம் 366 நிலக்கரிக் சுரங்கங்கள் அதிகரித்திருக்கும்போது இன்னொருபுறம் நிலக்கரி உற்பத்தி 66,28,000 டன் வீழ்ச்சியடைந்தது.

              அடுத்து தொழிலாளர்கள் விஷயத்துக்கு வருவோம். 1941 ஆம் ஆண்டில் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலைசெய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,11,601 ஆக இருந்தது. 1942 இது 2,08,742 ஆக குறைந்தது. 1943 ஆம் ஆண்டிலோ இது மேலும் குறைந்து 2,05,822 ஆக இருந்தது இக்காலப் பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது இங்கு ஒரு விந்தையாக நிலை உருவாகி இருப்பதைக் காண்கிறோம்; அதாவது சுரங்கங்களின் அதிகரித்திருந்த போதிலும் தொழிலாளர்களின் எண்ணிக்கைப் பெருமளவுக்கு குறைந்துவிட்டதைப் பார்க்கிறோம். இவ்வகையில் மொத்தத்தில் குறைவு 4,879 பேர்களாகும். ஆனால் இத்துடன் கதை முடிந்து விடவில்லை. உண்மையைச் சொன்னால் இது எவ்வளவு கடுமையான சிக்கல் என்பதைப் பலர் உணரவில்லை என்றே கூறி வேண்டும். நிலக்கரி வெட்டுபவர்கள் பற்றிய புள்ளிவிவரங்களைக் கூறினால் அவை இதனை நன்கு உணரும் என்று நம்புகிறேன். நிலக்கரியை வெட்டியெடுப்பவர்கள் 1942க்கு முன்னர் 55,691 பேர் இருந்தனர். இந்த எண்ணிக்கை 1942.ல் 51,438 ஆகவும், 1943ல் 45,306 ஆகவும் குறைந்தது; அதாவது 10,385 பேர் குறைந்தனர். நிலக்கரி உற்பத்தித் துறையில் நிலக்கரி வெட்டுபவர் எவ்வளவு பிரதானமானவர் என்பதை அவையினருக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. நிலக்கரிச் சுரங்கங்களில் எத்தனை ஆயிரம் பேர் பணியாற்றினாலும் நிலக்கரி வெட்டுபவர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லையென்றால் பயனில்லை. இத்துறையில், நிலக்கரி வெட்டுவதுதான் மிக அடிப்படையான, ஆதார சுருதியான நடவடிக்கையாகும். இங்குதான் பிரதான சிக்கலே இருக்கிறது. அதாவது இந்த முக்கியமான தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,385 அளவுக்குக் குறைந்துவிட்டது.

              நிலக்கரி வெட்டும் தொழிலாளர்களின் எண்ணிக்கை இவ்வாறு வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களை அவை நன்கு அறியும். நிலக்கரிச் சுரங்கங்கள் அமைந்துள்ள இடங்களில் பல்வேறு தொழில் நிலையங்களைத் தொடங்குவதற்கும், பலதரப்பட்ட ராணுவப் பணிகளுக்கும், மாற்று வேலை வாய்ப்புகளுக்கும் மிகச் சாதகமான சூழ்நிலைகள் இருந்தன. மேலும், நிலக்கரித் தொழிலை விட இத்தொழில் நிலையங்களில் வழங்கப்பட்ட ஊதியங்கள் கணிசமான அளவுக்கு அதிகமாக இருந்தன. தவிரவும், மாற்று வேலை வாய்ப்புக்கு இன்னொரு அனுகூலமும் இருந்தது; அதாவது மேற்பரப்பில் வேலை செய்வது சமத்துவ சலுகைகளை உத்தரவாதம் செய்ததோடு, நிலத்துக்கு அடியில் பணியாற்றுவதைவிடப் பலரைக் கவரக் கூடியதாகவும் இருந்தது. நிலக்கரி வெட்டுபவர்கள் சுரங்கங்களைக் கைவிட விரும்பியதற்கு மூன்றாவது ஒரு காரணமும் இருந்தது; அதாவது நிலக்கரி வெட்டும் தொழிலாளிக்கு நிலப்பரப்பில் வேறு வேலை கிடைத்தால் அவன் தன்னுடைய மனைவியையும் தன்னுடன் அழைத்துச் சென்று, அவளையும் ஏதேனும் வேலையில் ஈடுபடச் செய்யலாம்; இதன் மூலம் அவனது குடும்ப வருவாய் பெருகும். இதற்கு மாறாக அவன் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்தால், பூமிக்கு அடியில் பெண்கள் பணியாற்றுவதற்குத் தடையிருப்பதால் அவள் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்பு இல்லாது போய்விடும். இதுதான் நிலக்கரிச் சுரங்க வேலையை விட்டு விட்டு மாற்று வேலையைத் தேடும்படி நிலக்கரி வெட்டுபவர்களைப் பெருமளவில் தூண்டியது எனலாம்.

                      இத்தகைய நிலைமையில், சுரங்கம் வெட்டும் தொழிலாளியின் மனைவிக்கும் வேலையும் ஊதியமும் கிடைக்க ஏற்பாடு செய்வோமேயானால் அந்தத் தொழிலாளி திரும்பவும் சுரங்கத்துக்கே வந்துவிடுவான் என்பதில் ஐயமில்லை. நிலைமையைச் சமாளிப்பதற்கும் சுரங்கம் வெட்டும் தொழிலாளியை சுரங்கத்துக்குத் திரும்பச் செய்வதற்கும் இதைத் தவிர வேறு வழியில்லை என்பது என் கருத்து. ஊதியங்களை உயர்த்தினால் சுரங்கம் வெட்டும் தொழிலாளிகள் திரும்பவும் வந்துவிடுவார்கள் என்று சிலர் கூறலாம். இது வாதத்துக்குப் பொருந்துமே தவிர நடைமுறையில் உரிய பலனை அளிக்காது. இங்கிலாந்தில் சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஏராளமாக ஊதியம் வழங்கப்படுகிறது. இது அங்கு தாராளமாக ஊதியத்தை அள்ளி வாரித்தரும் மிகச் சிறந்த தொழில்துறையாக விளங்குகிறது என்று என்னுடைய நண்பர் திரு.ஜோஷி நேற்று கூறினார். ஆனால் சுரங்கத் தொழிலாளர்களுக்கு அபரிமிதமாக ஊதியம் அளிக்கும் இங்கிலாந்தில் கூட நிலக்கரிச் சுரங்கங்களில் ஆள் பற்றாக்குறை மிகப் பெருமளவில் நிலவுகிறது என்கிற உண்மையை திரு.ஜோஷி மறந்துவிட்டார். ஆதலால் சிலர் கூறுவதுபோல் ஊதிய உயர்வு மட்டுமே இந்தச் சிக்கலைத் தீர்த்துவிடாது, இதற்கு உகந்த பரிகாரமாக இருக்காது என்பது தெள்ளத் தெளிவு. எனவே, இந்த மிக இக்கட்டமான, கடுமையான நிலையிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி நாங்கள் எடுத்துள்ள முடிவேயாகும் என்பது எங்களது துணிபு.

                      அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக மற்றொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. இந்த வாதத்தைப் புறக்கணிக்காமல் அதனை எதிர்கொள்ளவே விரும்புகிறேன்; ஏனென்றால் இந்த வாதத்தில் ஓரளவு வலு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இங்கிலாந்திலும் ஏனைய நாடுகளிலும் நிலக்கரிப் பற்றாக்குறை நிலவினாலும் அங்கு பெண்கள் பூமிக்கு அடியில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியிருக்கும்போது. இந்தியாவில் மட்டும் பெண்களைப் பூமிக்கு அடியில் வேலை செய்ய நாம் ஏன் அனுமதிக்க வேண்டும் என்று கேட்கப்படுகிறது. இந்தக் கேள்விக்கான பதில் இரண்டு அம்சங்களைக் கொண்டது. முதலாவதாக, பூமிக்கடியில் பணியாற்ற பெண்கள் அனுமதிக்கப்படாத இங்கிலாந்து போன்ற நாட்டில் சிக்கலுக்குப் பரிகாரம் காண அவர்களுக்கு வேறொரு வழி இருக்கிறது; அதுதான் கட்டாய ஆள்சேர்ப்பு. அங்கெல்லாம் நிலக்கரிச் சுரங்கங்களில் போய் வேலை செய்யும்படி மக்களை அவர்கள் கட்டாயப்படுத்த முடியும், அவ்வாறே கட்டாயப்படுத்தவும் செய்கிறார்கள். அண்மையில் பத்திரிக்கைகளில் ஒரு செய்தி படித்தேன்; அதாவது 1941ல் ராணுவத்துக்கு ஆளெடுக்கப்பட்டவர்கள் பெல்ஜியம் அரசாங்கத்தால் நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அனுப்பப்பட்டதாக அந்தச் செய்தி தெரிவித்தது. இத்தகைய அதிகாரம் நமக்கு இல்லையென்பதை இந்த அவை அறியும். எனவே இந்த வழியை நம்மால் பின்பற்ற முடியவில்லை.

                      ஐயா, இது சம்பந்தமாக நான் அளிக்கும் மற்றொரு பதில் இதுதான்: பிரிட்டனிலும் தென்னாப்பிரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் நிலத்துக்கு அடியில் பெண்கள் வேலை செய்யும் பழக்கம் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்நாடுகளின் பெண்கள் ஒரு சமயம் அநேகமாக 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அடியில் வேலை செய்தனர். எனவே, இந்த விஷயத்தை எதார்த்தங்கள் கொண்டு பார்க்குமாறு அவையைக் கேட்டுக்கொள்கிறேன். நமது நாட்டில் 1937 வரை பெண்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் பணியாற்றி வந்திருக்கிறார்கள் என்பது உண்மை இல்லையா? இந்த நாட்டில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை கூட பெண்கள் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்து வந்திருக்கிறார்கள் என்பது உண்மை இல்லையா? எங்கள் பெண்கள் நிலத்துக்கடியில் வேலை செய்வதை நூறு ஆண்டுக் காலமாகவே நிறுத்திவிட்டார்கள் என்று பிரிட்டிஷ் மக்கள் கூறுவதைப் போன்று இந்தியாவில் எவரேனும் சொல்ல முடியுமா?

                      இது சம்பந்தமாக 1934ல் அகில இந்திய மாதர் மாநாட்டின் கருத்து என்னவாக இருந்தது என்பதை இந்த வெட்டுத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கும் மதிப்பிற்குரிய பெண்மணி மறந்து விட்டார் என்று நினைக்கிறேன். இந்த விஷயத்தை அவைக்கு விளக்கிக் கூற விரும்புகிறேன். பெண்கள் நிலத்துக்கடியில் வேலை செய்வதை நிறுத்தும் பொருட்டு 1929 ஆம் ஆண்டு முதலே சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்துள்ளது; இதனைப்படிப்படியாக செய்வதற்கான ஒரு திட்டத்தையும் வகுத்தது; இதன்படி 1937ல் நிலத்துக்கு அடியில் பெண்கள் எவரும் வேலை செய்ய மாட்டார்கள். இத்தகைய ஒரு மரபைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பேச்சு எழுவதற்க்கு முன்பே இது நடைபெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இது சம்பந்தமாக அகில இந்திய மாதர் மாநாட்டின் நிலை எத்தகையதாக இருந்தது? 1934 டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற அகில இந்திய மாதர் மாநாட்டின் கூட்டத்தொடரில் இந்த விஷயம் பரிசீலிக்கப்பட்டது என்று அறிகிறேன். என்னிடமுள்ள அறிக்கையின்படி…….(திருமதி ரேணுகா ரே குறிக்கிடுகிறார்), தயவுசெய்து என் பேச்சில் குறுக்கிடாதீர்கள். இந்தப் பிரச்சனையை ஆராய்வதற்காக அச்சமயம் அகில இந்திய மாதர் மாநாடு ஒரு குழுவை அமைத்தது. இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து அகில இந்திய மாதர் மாநாடு என்ன கருத்து கொண்டிருந்தது என்பதைக் கூறும் இரண்டு சுருக்கமான வாக்கியங்களை மட்டும் இங்கு வாசிக்கிறேன். 53 ஆம் பக்கத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறேன். அரசாங்கத்தின் முடிவின் அனுகூலங்களை அறிக்கை முதலில் கூறிகிறது. பின்னர் அதன் பிரதிகூலங்களை எடுத்துரைக்கிறது இப்போது இங்கு வெட்டுத் தீர்மானத்தைக் கொண்டிருக்கும் பெண்மணி அகில இந்தியா மாதர் மாநாடு நியமித்த குழுவில் உறுப்பினராக இருந்தார் என்பதை அவையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம். அந்த அறிக்கை பின்வருமாறு தொடங்குகிறது:

            ‘’நிலத்துக்கடியிலான பணியிலிரந்து பெண்களை விலக்குவது சுரங்கத் தொழிலானார்களிக் இன்றைய வாழ்க்கை நிலைமைகளுக்க மொத்ததில் ஏற்புடையதல்ல என்பதே எங்கள் கருத்து. ‘’

பின்னர் அறிக்கை பின்வருமாறு முடிகிறது:

          ‘’நிலத்துக்கடியில் பெண்கள் வேலை சேய்வதிலிருந்து இப்போதைய நிலைமையில் விலக்கப்பட்டால் அவர்களை நிலத்துக்கடியில் பணியாற்ற அனுமதிக்குட் தீமைகளைவிட சுரங்கத் தொழிலாளர்களது குடும்பங்களின் துயரம் மிக அதிகமாக இருக்கும்.

      (திருமதி ரேணுகா ரே குறுக்கீடு.)

                      திரு.தலைவர் (திரு.மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): மதிப்பிற்குரிய உறுப்பினர் விட்டுக் கொடுக்க மாட்டார் போல் தெரிகிறது.

          மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: 1935ல்நடைபெற்ற கூட்டத்தொடரில் அகில இந்திய மாதர் மாநாட்டால் இந்த விஷயம் பரிசீலிக்கப்பட்டபோது, அச்சமயம் ஏற்கப்பட்ட சர்வதேச நடைமுறை மரபை ஆதரிப்பது என்று அவர்கள் முடிவுக்கு வந்தனர். இந்திய அரசாங்கம் கடைப்பிடித்துவரும் போக்கு தங்களுக்கு உடன்பாடில்லாத போதிலும் இந்த முடிவை அவர்கள் மேற்கொண்டனர். 1935ல் அகில இந்திய மாதர் மாநாடு எடுத்த இந்த நிலை 1934 –ல் அவர்கள் கடைப்பிடித்த நிலையிலிருந்து மாறுபட்டிருந்ததற்கு சர்வதேச நடைமுறை மரபு அங்கீகரிக்கப்பட்டதே காரணமாகும். 1935 ஆம் வருட இந்த சர்வதேச நடைமுறை மரபு ஏற்கப்பட்டிருக்கவில்லை என்றால் நிலக்கரிச் சுரங்கங்களில் பெண்கள் வேலை செய்வதைத் தடுக்கும் இந்திய அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக அகில இந்திய மாதர் மாநாடு தொடர்ந்து கிளர்ச்சி செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த விஷயத்தில் அகில இந்திய மாதர் மாநாடு தனது நிலையை மாற்றிக் கொண்டதற்கு ஏதோ தீய உள்நோக்கம் இருக்கக்கூடும் என்று நான் கூறவில்லை. ஆனால் அதேசமயம் நெருக்கடி நிலைமை மறைந்ததும் ரத்து செய்யப்படக் கூடிய ஒரு நடவடிக்கையைச் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு பத்தாண்டுக் காலத்துக்குள் இந்த நாட்டு மக்களின் தார்மீக, அரசியல் உணர்வுகளில் இத்தகைய ஒரு புரட்சி ஏற்பட முடியும் என்பதை நான் நம்பத் தயாராக இல்லை என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

  ஐயா, நிலக்கரிச் சுரங்கங்களில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் போனால் 15,000 தான், அவர்களாலும் கூடுதலாக நிலக்கரியை உற்பத்தி செய்ய முடியவில்லை; அப்படியிருக்கும் போது இந்த 15,000 பெண்களும் பூமிக்கு அடியில் வேலை செய்து தான் ஆக வேண்டும் என்று இந்திய அரசாங்கம் ஏன் பிடிவாதம் பிடிக்கிறது என்று என்னிடம் சிலர் கேட்கிறார்கள். இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது அப்படி ஒன்றும் சிரமம் அல்ல. முதலாவதாக…

        திரு.சாமி வெங்கடாசலம் செட்டி: பொதுமக்களின் கருத்து எத்தகையதாயிருப்பினும் பெண்கள் தொடர்ந்து சுரங்கங்களில் வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதில் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் உடும்புப் பிடிவாதமாக இருக்கிறாரா?

           மாண்புமிகு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்: மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் என்னைப் பற்றி இத்தகைய தவறான, கொடியதான கருத்தைக் கொண்டிருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். என்னைப் பற்றி எத்தகையஅபிப்பிராயம் கொண்டிருக்கவும் அவருக்கு உரிமை உண்டு. அதேபோன்று அவரைப் பற்றி நான் என் சொந்த அபிப்பிராயம் கொண்டிருக்க எனக்கும் உரிமை இருக்கிறது.

  பெண்களை நாங்கள் ஏன் நிலத்துக்கடியில் வேலை செய்வதில் ஈடுபடுத்துகிறோம் என்று கேட்கப்படுகிறது. இதற்கு மூன்று காரணங்கள் உண்டு. முதலாவதாக, நாங்கள் இப்போதுள்ள நிலைமையில், நிலத்துக்கடியில் வேலை செய்யும் ஒரு பெண்ணை தனித்த முறையில் பிரித்துப் பார்க்க முடியாது. அவள் மேற்கொள்ளும் முடிவால் பல விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும். அவள் வேலையிலிருந்து நின்று கொண்டால்…

              திரு. தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): மாண்புமிகு உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடியப் போகிறது.

              மாண்புமிகு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்: நான் 20 நிமிடத்திற்கு மேல் பேசவில்லை.

              அவள் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்வதிலிருந்து நின்று கொண்டால், நிலக்கரி வெட்டும் தொழிலாளியும் வேலையிலிருந்து நின்று கொள்வான், இதனால் நிலைமை மேலும் மோசமாகும். இது முதல் விளைவாகும். அவள் வேளையிலிருந்து நின்று கொண்டால் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலைக்கு வராதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது இரண்டாவது விளைவாகும். அடுத்து மூன்றாவது விளைவு என்னவென்றால், தற்போது பெண்கள் செய்துவரும் நிலக்கரியைச் சுமந்து செல்லும் வேலையை நிலக்கரி வெட்டும் தொழிலாளர்களில் சிலர் செய்ய வேண்டிவரும்; இதனால் நிலக்கரி வெட்டும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் குறையும். பெண்களால் நிலக்கரியை அதிகம் உற்பத்தி செய்ய முடிவதில்லை என்ற வாதம் சரியல்ல. நான் அவையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புவது...

              மதிப்பிற்குரிய பல உறுப்பினர்கள்: மாண்புமிகு உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது.

              மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நான் ஏற்கெனவே கூறியது போன்று, முற்றிலும் அவசியமானதற்கும் அதிகமாக ஒரு நிமிடம் கூடப் பெண்களை நிலக்கரிச் சுரங்கங்களில் வேலையில் ஈடுபடுத்தும் உத்தேசம் ஏதும் எங்களுக்கு இல்லை. நிலைமையைச் சமாளிப்பதற்கு நாங்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதை அவை அறியும். நாங்கள் கோரக்பூரிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்திருக்கிறோம்; பல்வேறு எந்திர சாதனங்களை இறக்குமதி செய்திருக்கிறோம்; இதர பல நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம்.

     (இப்போது மணி ஐந்தாகிறது).

 திரு.தலைவர் (மண்புமிகு சர் அப்துல் ரஹீம்): வெட்டுத் தீர்மானம் வருமாறு:

             “தொழிலாளர் நலத்துறை” என்னும் தலைப்பில் கோரப்பட்டும் மான்யம் நூறு ரூபாயாகக் குறைக்கப்பட வேண்டும்.”

 தீர்மானம் ஏற்கப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)