விடுதலை பெற்ற குடியரசு காங்கோ நாட்டில், அடர்ந்த காடுகளைக் கொண்ட வடக்கு கிவுவின் தலைநகரான கோமாவின் தெற்குப்பகுதியில் நயிரா காங்கோ என்ற இராணுவ முகாமில் 3871 இராணுவ வீரர்கள், அய்.நா.வின் அமைதி காக்கும் வீரர்கள் என்ற பெயரில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் பிரபலமாக, மொனஸ்கோவில் தொல்லை கொடுக்கும் வீரர்கள் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகின்றனர். காங்கோ இராணுவத்திற்கு எதிராக அண்டை நாடுகளாலும் மற்றும் உள்நாட்டு போராளிக்குழுக்களாலும் நடைபெற்று கொண்டிருக்கிற சண்டையில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவார்கள் என்று நம்பிக்கையின் குறியீடாக மற்ற நாட்டு இராணுவ வீரர்களைப் போல இந்த நயிரா காங்கோ முகாமில் உள்ள இந்திய வீரர்களும் வரவேற்கப்பட்டனர்.
நிகோல் என்ற பாலியல் தொழிலாளி பெண் தனக்கு ஏற்பட்ட சம்பவங்களை நினைவு கூறுகிறார். “அது 2010 மே இரவு. இராணுவ முகாமைப் பார்வையிடுவதற்காக 27 வயதான என்னை அழைத்தனர். அவர்கள் பொதுவாக பெண்களுடன் உடலுறவு கொள்ள சின்னப் பையன்களை அனுப்பி ஆள் பார்த்து வர சொல்லுவார்கள். அது மாதிரியான வேலைகளுக்கு ஒவ்வொரு முறையும் சின்னப் பையன்களுக்கு உணவு தருவார்கள். அது மாதிரி ஒரு சிறுவன் என்னை அணுகினான். நானும் அந்த சிப்பாயுடன் உடலுறவு கொள்ள சம்மதித்தேன். மொனஸ்கோ சுற்று சுவருக்கு வெளியே வெளிச்சம் மங்கிய ஓர் இரவு வேளையில், தான் கொண்டுவந்திருந்த இராணுவ உடுப்பை போட்டுக்கொள்ளுமாறு என்னை அந்த இராணுவச் சிப்பாய் பணித்தான்."
பிறகு அவளுக்கு உள்ளே வருவதற்கான வழியைக் காட்டினான். அந்த இரவு வேளையில் திறந்த வெளிக்கூடாரத்தின் இருண்ட பகுதியில் அவன் ஒருவனுடன் மட்டுமே உறவு கொள்ள பேசப்பட்டது. நிகோல் மேலும் தொடர்கிறார். "கண்காணிப்பு நிறைந்த அந்த முகாமின் உட்பகுதியில் எங்கும் தப்பியோட முடியாத நிலையில், முதலில் அந்த சிப்பாய், பின் அடுத்து ஒருவர், பின் ஒருவர் பின் ஒருவர், பின் கடைசியாக பத்தாவதாக ஒருவர்”. அவரைப் போலவே மேலும் இரு பெண்கள் அடித்து இழுத்து வரப்பட்டு கடைசியில் ஏமாற்றப்பட்டனர். கொதிப்படைந்த பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றாக சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும், பெரிய செய்தியாக்கவும் முடியாதபடி, இந்திய இராணுவ சிப்பாய்களால் மிரட்டப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சனையை சுமூகமான முறையில் விரைவில் முடித்துக்கொள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 3 கோழிக்கறிப் பெட்டியும், 20 லிட்டர் சமையல் எண்ணையும், ஒரு அரிசி மூட்டை மற்றும் கொஞ்சம் பணமும் கொடுக்கப்பட்டது.
இது போன்ற தவறான வழி பாலின அத்துமீறல்கள் இந்திய இராணுவ சிப்பாயிடம் மட்டுமல்ல உயர் அதிகாரிகளிடமும் உள்ளது. இதற்குக் காரணம், அளவுக்கு அதிகமான சம்பளம் மற்றும் மிகவும் ரகசியமான முறையில் அய்.நா.வின் நடத்தை விதிகளை தந்திரம் நிறைந்த அறிவாளித்தனத்தால் மீறுவது ஆகியவையே ஆகும்.
இது மமி என்பரின் சாட்சியம். 2007 வாக்கில் மமி தனது நண்பர்களுடன் அடிக்கடி கரிபு விடுதிக்கு வருவது வழக்கம். அவள் மொனஸ்கோ முகாமில் பணிபுரியும் இந்திய இராணுவ அதிகாரியை கோமா வானூர்தி நிலையத்தில் சந்தித்துள்ளார். அதிகாரி அங்கேயே அவளுடன் பேச ஆரம்பித்துள்ளார். அய்.நாவின் படையில் உள்ள வெளிநாட்டு இராணுவத்தினர், உள்ளூர் பெண்களுடன் தொடர்பு கொள்வது என்பது தடைசெய்யப்பட்ட ஒன்று என்று அவர் மமியிடம் கூறியுள்ளார். மேலும் நாம் இருவரும் நண்பர்களாக வேண்டும்; அதுவும் ரகசியமான முறையில் என்று கேட்டிருக்கிறார். மமியும் அந்த அதிகாரிக்கு தனது தொடர்பு எண்ணைக் கொடுத்துள்ளார். தொடர்ந்த அழைப்புகளால் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அவள் அந்த நாளை நினைவு கூர்கிறாள். மார்ச் 21,2007. அந்த அதிகாரி மமியை கேரிசுடர் விடுதிக்கு அழைத்தார். அங்கே தான் அவர்கள் முதலில் உறவு வைத்துக்கொண்டனர். அவளுக்கு 100 அமெரிக்க டாலர்களைப் பரிசாகக் கொடுத்தார் அந்த உயர் அதிகாரி. அதன் பிறகு கரிபு விடுதி அவர்களின் ரகசிய சந்திப்புகளின் இடமாக மாறியது.
"நாங்கள் தோட்டங்களிலும் நீச்சல் குளங்களுக்கு அருகாமையிலும் உறவு வைத்துக்கொண்டோம். அவர் ஒரு நாளும் என் வீட்டுக்கு வரவில்லை. நமது உறவைப் பற்றி நீ யாரிடமும் சொல்லக்கூடாது, முக்கியமாக நீ கருத்தரிக்க கூடாது என்று அறிவுரைக் கூறினார். அவருக்கு திடீரென வேலைமாற்றம் கிடைத்தது, எங்கள் உறவும் முடிவுநிலையை எட்டியது. எனக்கு 350 அமெரிக்க டாலர்களைக் கொடுத்தார். அது ஒருவேலை அவருடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்களுக்காக எனக்கு கொடுத்த பரிசாக இருக்கலாம்." ஆனால் மமி கருத்தரித்தாள். திருமணத்திற்கு முன்பாக கருக்கலைப்பு என்பது காங்கோ சட்டப்படி குற்றம். இதனால் மமியின் குடும்பம் கருக்கலைப்புக்கு உடன்படவில்லை. மேலும் தனது குழந்தையைப் பாதுகாக்க என் பெற்றோர்களும் நண்பர்களும் உதவினார்கள் என்று மமி கூறுகிறாள்.
"நான் அவளுக்கு மிரிலி எனப் பெயரிட்டேன். இதில் வருத்தம் என்னவென்றால் அவள் அப்பாவை என்னால் மீண்டும் சந்திக்கவே முடியவில்லை." மிரிலியின் தோளின் நிறம் வெளுப்பாக உள்ளது. தவறுதலாக மற்ற காங்கோ குழந்தைகளை விட வித்தியாசமாகப் போய்விட்டது. அவளின் குழந்தை சிரிப்பு எல்லோரையும் வசீகரிக்கிறது. மணமாகாமல் கரு உண்டானால் அதை கலைப்பது என்பது காங்கோவின் சட்டப்படி தவறாகும். ஆக இந்திய சிப்பாய்களினால் பெறப்பட்ட குழந்தைகளுடன் உள்ள பெண்கள் அவமானச் சின்னங்களாகப் பார்க்கப்படுகின்றனர்.
ஆனால் எல்லா அதிகாரிகளும் மமியின் விசயத்தைப் போல் எச்சரிக்கையாக இருப்பதில்லை. தாதாவின் வாழ்க்கை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தாதா நினைவுப்படுத்துகிறாள். அவளுடைய ஆண் துணை ஒரு இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரி. 30 வது வயது மதிக்கத்தக்க அவன் தனது நண்பர்களுடன் வார இறுதிநாட்களின் கேளிக்கைகளில் அவளுடன் மிக தைரியமாகக் கலந்துகொண்டான். அவள் குறிப்பாக அந்த ஒரு வார இறுதிநாட்களின் ஒரு இரவை நினைவு கூர்ந்தாள். "அது 2007ம் ஆண்டு. அந்த இராணுவ உயர் அதிகாரி கோமாவில் உள்ள ஒரு சிறிய விடுதியான லிசாட் லேவிற்கு அழைத்தார். 'என்னிடம் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும் அளவிற்கு நேரமில்லை, என் நண்பர்கள் எனக்காக வெளியில் வண்டியில் காத்திருக்கிறார்கள்' என்று சொல்லி என்னை ஒரு அறைக்கு அழைத்துச்சென்று நாற்காலியில் வைத்து உடலுறவு கொண்டார். அந்த அதிகாரி வெளிப்படையாக மேலும் ஒரு செய்தியை சொன்னார். 'எனக்கு இந்தியாவில் ஒரு மனைவி இருப்பதாகவும் அதனால் உன்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது' என்றும். ஆனால் அவரை நான் ரொம்பக் காதலித்தேன். ஒரு முறை என்னை இந்தியாவில் இருந்து தொடர்பு கொண்டார். அதன் பிறகு அவர் தொடர்பில் இல்லை."
இந்திய இராணுவத்தின் பாலின அத்துமீறல்கள் மற்றும் ஒழுக்கக் கேடுகள் பற்றி ஒரு முணுமுணுப்பு எப்பொழுதும் வடக்கு கிவு முழுவதும் இருந்து வந்தது. அவர்கள் தங்களது முணுமுணுப்பை நிலைத்தன்மையுன் மேலும் உயர்த்தினர். இதன் காரணமாக 2008 டிசம்பரில், இந்திய இராணுவ செய்தித்தொடர்பாளர் அவுட்லுக் பத்திரிக்கைக்கு ஒரு கடிதம் எழுதினார். இந்திய அமைதி காக்கும் இராணுவமானது ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி புகார்கள் அய்.நா. நிறுவனத்திற்கு 2008ல் வந்துள்ளது. வடக்கு கிவுவின் டுத்சுரு பகுதியின் கிவான்ஜாவில் உள்ள உள்நாட்டிலே இடம் பெயர்ந்தோருக்கான அகதி முகாமில் உள்ள 4 பெண்கள் இந்திய இராணுவத்தால் பாலியல் வல்லுறவுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சம்மந்தப்பட்ட இந்திய இராணுவ முகாம் ஜூலை 2008ல் ஒரு விசாரணையை நடத்தி அதுபோன்ற அத்துமீறல்கள் தவறுகள் இங்கே நடைபெறவில்லை எனவும் இது அமைதிக்காக்கும் இந்தியப் படை வீரர்களுக்கு கெட்டப்பெயரை உண்டாக்குவற்கான சூழ்ச்சி என்றும் அறிக்கை கொடுத்துள்ளதாக அந்த செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார். இருந்தாலும் விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் சில குளறுபடிகளிருப்பது தெரிகிறது.
இவரது அறிக்கையில் இருந்து வேறுபடும் விதத்தில் அய்.நாவின் செய்தித் தொடர்பாளர் ஆகத்து 12, 2008ல் “நாயகம் பான் கீ மூன் இந்திய சிப்பாய்களின் மீதான விசாரணையின் முடிவுகள், அவர்கள் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக இருப்பதால் அவர் மிகவும் நெருக்கடியில் உள்ளார்" என்று கூறினார். இதிலிருந்து டிசம்பர் 2008க்கு முன்பாகவே அய்.நாவிற்கு இப்பிரச்சனை பற்றி தெரியும் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. மேலும் அவர் “இந்திய அரசு சம்பந்தப்பட்ட சிப்பாய்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என பான் கீ மூன் எதிர்பார்ப்பதாகவும்” தெளிவுபடுத்தினார்.
சீக்கிய இராணுவப்பிரிவு 2009 ஜூலையில் மீண்டும் விசாரணையைத்தொடங்கி மே 2010ல் தயாரித்த அறிக்கையை ஆகஸ்ட் 2010ல் இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்தது. இது 2008க்குப் பின்னரான சம்பவங்கள் பற்றியதா அல்லது 2008க்கு முன்பானதா என்று விளங்கவில்லை. மேலும் அய்.நா.வின் உண்மை அறியும் குழு காங்கோ குழந்தைகளிடம் நடத்திய மரபணு சோதனையில் இந்தியர்களின் மரபணுக்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை உறுதி செய்துள்ளதாக அவுட்லுக் செய்தி வெளியிட்டுள்ளது.
12 உயர் அதிகாரிகள் மற்றும் 39 சிப்பாய்களின் மரபணுக்களை எடுத்து சோதனை செய்து அதை காங்கோ குழந்தைகளின் மரபணுக்களுடன் ஒப்பிட்டு குற்றத்தைக் கண்டறிய டில்லி அருகில் உள்ள மீரட் இராணுவ நீதிமன்றம் முடிவு செய்துள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் கிடைத்துள்ள நிக்கோல், மமி, தாதா மற்றும் சில வழக்குகள் மூலம் இந்திய இராணுவம் பாலின அத்துமீறல்களை நிகழ்த்தியுள்ளது தெளிவாகிறது. அய்.நா எதிர்பார்த்த கிவான்ஜா பகுதியையும் மீறி வெளியேயும் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன. டெல்லி அவுட்லுக், காங்கோ பகுதியில் விசாரணையைத் தொடங்கி, பாதிக்கப்பட்ட பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து, புகைப்படத்துடன் பெயர் மற்றும் முகவரிகளை கண்டறிய கோமா நிருபர்களின் உதவியுடன் முயற்சி மேற்கொண்டது. அவர்களின் துயரங்களையும் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளையும் பதிவு செய்ய 6 வார காலங்கள் எடுத்துக்கொண்டது.
இந்திய இராணுவத்தின் பாலின அத்துமீறல்களை மரபணுச் சோதனையின் மூலம் சரியான முடிவுகளை கண்டறிவது விவாதப்பொருளாகும் அபாயம் உள்ளதாக இராணுவ நீதிமன்றம் இந்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. காரணம் இந்திய உடல்கூறுகளை கொண்டுள்ள காங்கோ குழந்தைகள் ஒவ்வொன்றாக இறந்துவருகின்றன. மேலும் வடக்கு கிவு பகுதியில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைப்பிரிவின் மீதான விசாரணையானது முடிவுக்கு வர சில மாதங்கள் பிடிக்கும் எனவும் கூறியுள்ளது.
இதற்கு சிசிலியின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. கோமா வானூர்தி நிலையம் அருகில் உள்ள மொனசுகோ முகாமை சேர்ந்த இந்திய இராணுவ வீரனுக்கும் சிசிலிக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி அவள் வீட்டுக்கு வருவான், நிறைய இனிப்புகள் மற்றும் பணம் தருவான். அவளுக்கு ஒரு நாள் அவன் மீது சந்தேகம் வந்தது. காரணம் அவன் எப்போதும் சாதாரண உடுப்பில் இருப்பான், தனது பெயர் மற்றும் தனது பதவியை மறைத்தே வைத்திருந்தான். மற்றவர்களைப் போல, இவனும் கருத்தரிக்கக் கூடாது என எச்சரித்தான். ஆனால் அவள் கருத்தரித்திருப்பதை சொன்னாள். உடனே 200 அமெரிக்க டாலர்களை பரிசாகக் கொடுத்து உறவை முறித்துக் கொண்டான். ஒரு வருடத்திற்குப் பிறகு அவள் குழந்தை ஜூலின் வயிற்றுப்போக்கினால் இறந்துவிட்டாள். சிசிலியின் அப்பாவிற்கு சாவின் மர்மம் தெரியாது. ஆனால் அவருக்கு விவரம் தெரியவந்த போது மரபணு நடத்த வாய்ப்பில்லை. மேலும் வழக்கு போட்டு அவளுக்கு வேசிப்பட்டம் வாங்கிக்கொடுத்து அவளை அவமானப்படுத்த விரும்பவில்லை.
மேலும் சில வித்தியாசமான வழக்குகள்:
19 முதல் 22 வயதுள்ள இளம்பெண்களை மயக்கி காதல் வயப்படுத்தி திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பிறகு கைவிடப்படுகின்றனர். பிறகு வேறு வழியில்லாததாலும் பெற்றோர்களின் வற்புறுத்தலாலும் வேறு திருமணத்திற்கு சம்மதிக்கின்றனர். சிலர் உடலை விற்று பிழைப்பு நடத்தக் கூடிய அவலநிலைக்கும் ஆளாகிறார்கள்.
பாய்தா என்ற காட்டினோ உயர்நிலைப்பள்ளி மாணவி, அங்குள்ள இந்திய இராணுவ முகாமின் அருகிலுள்ள ஒரு போக்குவரத்து நிறுவனத்தின் வழியாக பள்ளிக்குப் போவாள். அப்போது அங்கிருந்த ஒரு இராணுவ சிப்பாய், தனது மொழிபெயர்ப்பாளருடன் அப்பெண்ணை அணுகி பாய்தாவுடன் நட்பு கொள்ள விரும்புவதாகக் கூறினான். அது 2005ம் ஆண்டு. கட்டினோ பல்கலைகழகத்தின் அருகில் உள்ள ஒரு உணவு விடுதியில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். டாலர் பரிசு, மணிக்கணக்கில் பேச்சு. மணம் ஒத்துப்போனார்கள். நகந்தா லா லிருங்கா என்ற சிறு விடுதியில் வார இறுதி நாட்களில் காதலிக்க இடம் பிடித்தனர். ஒரு நாள் தான் கருவுற்றிருப்பதை அந்த சிப்பாயிடம் தெரிவித்தாள். அவன் நொந்துபோய் காணப்பட்டான். 150 அமெரிக்க டாலர்கள் கொடுத்து கருக்கலைப்பிற்கு வற்புறுத்தினான். "கெட்ட வாய்ப்பாக நான் அதை ஏற்றுக்கொண்டேன். பிறகு அவன் என்னை சந்திக்கவே இல்லை. அவன் இந்தியா போகும்போது போய் வருகிறேன் என்று சொல்லிக்கொள்ளவும் இல்லை." பின்னர் அவள் கருக்கலைப்பு செய்துகொண்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொண்டாள்.
அடுத்து மிம்மி என்பவள். இவளை ஒரு இந்திய இராணுவ சிப்பாய் அணுகி உடலுறவு கொள்ளும் ஆசையை சொன்னான். அவளும் சம்மதித்து HIV சோதனை செய்து கொண்டனர். அவள் ஒரு பள்ளி மாணவி. அவன் அவளை தனது முகாமில் உள்ள அறைக்கு வரவழைத்து உறவு கொண்டான். அந்த நேரத்தில் அவன் நண்பர்கள் வெளியேறிவிடுவர். அவளிடம் குழந்தையை இந்தியாவுக்கு எடுத்துப்போவதாக உறுதியளித்திருந்தான். ஆனால் அவள் அப்பா அதை எதிர்த்தார். கடைசியில் அவனும் அய்.நா விதி, அது இது என்று காரணங்களைச் சொல்லி குழந்தையை மறுத்துவிட்டான். வேறு வழியில்லாமல் குழந்தை பிறந்தது. இதனால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டாள். அவளுக்கு வயது 18. பிறகு நடந்த ஒரு சாலை விபத்தில் அந்த குழந்தை உயிரிழந்தது. பிறகு மீண்டும் பள்ளியில் சேர்ந்தாள். “அவனால் எனக்கு நிறையத் துன்பம், படிப்பு தடைப்பட்டது. ஒரு முறை பெண் பார்க்க வருபவர்கள் மீண்டும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. இப்போது எனக்கு 24 வயதாகிறது. ஆனால் திருமணம் ஆகவில்லை.” என்று கூறினாள்.
கடைசிக்கதை. ஒரு இந்திய இராணுவ சிப்பாய்க்கு ஆண் குழந்தை வேண்டும். ஒரு காங்கோ பெண்ணை அணுகினான். எல்லாம் முடிந்தது. அவன் நாட்டுக்குப் போய்விட்டான். அதன் பிறகு இவள் கருத்தரித்தாள். அவளுக்கு ஒரு பெண் குழந்தை ஏஞ்சலினா பிறந்தாள். படத்தில் இருப்பவள்.
இதைப் படிப்பவர் ஆச்சரியமும் குழப்பமும் அடைய நேரிடும். பணம் கொடுத்துப்போகிற மற்றும் விருப்ப உடலுறவுகள் நீல நிற தலைக்கவசத்திற்கு மட்டும் தடைசெய்யப்பட்டுள்ளது ஏன்?
அய்.நா கூறும் காரணங்கள்:
இப்படிப்பட்ட உறவினால் குழந்தை பிறந்தால்,
1. அந்த சம்பந்தப்பட்ட இராணுவ வீரன் அங்கேயே தங்கிவிட வேண்டும்
2. தவறும் வேளையில் அப்பெண்கள் அந்த வீரர்களால் மிரட்டப்படும் அபாயம் உள்ளது.
நிகோல் சொல்கிறாள், “நான் இந்திய சிப்பாய்களுடன் உறவு கொண்டு குழந்தை பெறுவது எனக்கு வசதியாக இருந்தது. ஏனெனில் எனக்கு மானிய அரிசி கிடைக்கும்."
இந்தியா தனது காலடித்தடத்தைப் பதித்து அந்த நாட்டில் உள்ள பெண்களுக்கு குழந்தையை கொடுத்துவிட்டு வந்துள்ளது. எனவே இந்திய அரசு அப்பெண்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய நீதிமன்றம் திருமணமாகாமல் குழந்தை பெற்ற பெண்களுக்கும் அந்த குழந்தைக்கும் சம்பந்தப்பட்ட ஆண் உதவித்தொகை வழங்கவேண்டும் என்று சொல்கிறது.
இந்த காங்கோ சென்ற இந்தியப் படை, அமைதி காக்கும் படையின் பெயரை அசிங்கப்படுத்திவிட்டது. 50 ஆண்டுகளுக்கு முன் மாஜ் கர் பச்சன் சிங் சலாரியா, இந்திய அமைதிக்காக்கும் படையில் இருந்து உயரிய விருதான பரம் வீர் சக்கராவை பெற்றவர். இந்திய அமைதிப்படையின் தற்போதைய செயல்பாடுகள் தனது அமைதிப்படை நினைவுகளை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக அவர் கூறுகிறார்.
பின்னிணைப்புகளுக்கு அவுட்லுக் இதழைப் பார்க்கவும்.
http://www.outlookindia.com/
மொழிப்பெயர்ப்பு: குமணன்