இடிந்தகரை நிலவரம் – மார்ச் 22, 2012

இங்குநிலைமைஇன்னும்மோசமாகத்தான்உள்ளது. கடற்கரையோர கிராமங்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் பொதுமக்கள் உள்ளனர். இதில் பெரும்பாலனவர் பெண்கள்தான், இவர்களில் கர்ப்பிணி பெண்களும், இளம் தாய்மார்களும் உள்ளனர். காவல்துறையினரால் பால் இங்கு உள்ளே அனுமதிக்கப்படாததால் இங்கு குழந்தைகளுக்கு சர்க்கரைத் தண்ணீரைக் கொடுத்து வருவதை நான் நேரடியாகப் பார்க்கிறேன். சாலைகள் தடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடல்வழியாகவும், காட்டு வழியாகவும் நடந்தும் இங்கு வருகின்றனர். போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. போதுமான அளவு கழிவறைகள் இல்லாததால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எந்த ஒரு சுகாதார அலுவலரும் இங்கு எங்களுக்கு உதவ வரவேயில்லை.

kudankulam_623

எங்களில் 15 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றோம், எங்களது உடல்நிலையைப் பரிசோதிக்க எந்த ஒரு மருத்துவ அலுவலரும் இங்கு வரவேயில்லை. தினமலம் நாளிதழ் நாங்கள் நன்றாக உண்டுவிட்டு உண்ணாவிரதம் இருந்து நடிப்பதாக இன்று எழுதியுள்ளது. தமிழர்களுக்கு எப்பொழுதும் எதிராகவே எழுதும் இந்த நாளிதழ் என்னுடைய வயிற்றிலோ, புஷ்பராயனது வயிற்றிலோ ஒரு துண்டு உணவு இருப்பதற்கான சான்றைக் காண்பித்தால் நாங்கள் இப்பொழுதே இந்தப் போராட்டத்தை விட்டு விலகிவிடுகின்றோம். அப்படி இல்லையென்றால் இந்த முட்டாள் நாளிதழ் தனது பத்திரிக்கைத் தொழிலை நிறுத்திவிடுமா? நாங்கள் ஒரு அணுஉலை இல்லா தேசத்திற்காகப் போராடி வருகின்றோம், தினமலம் போல எங்களது ஆன்மாவை வைத்து விபச்சாரம் செய்யவில்லை.

மார்ச் 21 அன்று சென்னையிலுள்ள மாநில தலைமைக் காவல் நிலையத்திலிருந்து பேசுவதாக தி.உதயகுமார் என்ற வழக்கறிஞர் என் அன்னையிடம் பேசியுள்ளார். இந்தப் போராட்டத்திலிருந்து நான் இப்பொழுது விலகிவிட்டால் என்மீது உள்ள எல்லா வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு, நான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்று என் அன்னையிடம் கூறியுள்ளார். என் மகன் அப்படிபட்டவனில்லை என்று கூறி என் அன்னை அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டார். அன்று மாலை திருநெல்வேலி தலைமைக் காவல் கண்காணிப்பாளர் எனது அலைபேசிக்கு அழைத்து என்னை தனியே வந்து சரணடையச் சொன்னார், இப்படி செய்வதனால் மற்ற மக்களுக்கு எந்தவிதப் பிரச்சனையும் ஏற்படாது எனக் கூறினார்.

நான் அதற்குத் தயாராகத்தான் உள்ளேன், ஆனால் இடிந்தகரையில் என்னுடன் உள்ள மக்கள் என்னை தனியே அனுப்பத் தயாராக இல்லை, அவர்களும் என்னுடன் சேர்ந்தே கைதாகிறேன் என்கிறார்கள் எனக் கூறினேன். மேலும், போதுமான பேருந்துகளையும், இரண்டு காவல் அதிகாரிகளையும் நீங்கள் அனுப்புங்கள்; நாங்கள் எல்லோரும் அமைதியான முறையில் அந்த பேருந்தில் ஏறி உங்களுக்கு எங்கு வரவேண்டும் எனக் கூறுகின்றீர்களோ அங்கு வருவதற்குத் தயராக இருக்கின்றோம். கூட்டநெரிசலோ, வேறுபிரச்சனையோ ஏற்படாமல் இருக்கவே குறைவான அளவில் காவல் அதிகாரிகளைக் கேட்கின்றோம். ஆனால் அவர் இதை ஒப்புக்கொள்ளவில்லை, பதிலுக்கு “இதுதான் நான் உங்களிடம் இறுதியாகப் பேசுவது” என கோபமாகக் கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

அன்று இரவு நாகர்கோவில் நகருக்கு வெளியே இருக்கும் “சாக்கர்” என்ற எங்கள் பள்ளிக்கு இரவுநேரம் காவல் இருந்த காவலதிகாரியை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து அழைத்து நீங்கள் இன்று இரவு காவல் இருக்க வேண்டாம்; வீட்டிற்குச் செல்லுங்கள் என கூறியுள்ளார்கள். பிறகு (காவல்துறையின் ஆசியோடு) வந்த குண்டர்கள் பள்ளிக்கூடத்தை சூறையாடிவிட்டுச் சென்றுள்ளனர். சுற்றுபுறச்சுவர் முழுவதுமாக பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது, நுழைவாயில் கதவு மிகமோசமான நிலையில் சேதமாகி உள்ளது. பள்ளிக்கூட பேருந்தும், மகிழுந்து (கார்) நிறுத்தும் இடத்தின் கதவையும் மிகமோசமாகத் தாக்கியுள்ளார்கள்.

kudankulam_380மழலைக் குழந்தைகள் படிக்கும் வகுப்பறைக்குள் சென்று அவர்கள் அமரும் சின்னஞ்சிறு இருக்கைகளையெல்லாம் உடைத்துள்ளார்கள். மேலும் பள்ளியின் மற்ற வகுப்பறைக்குள் இருந்த இருக்கை, மேசை என எல்லாவற்றையும் உடைத்துள்ளார்கள். இந்த பள்ளிக்குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்? மேலும் ”குண்டர்கள்” பள்ளியிலுள்ள நூலகத்திற்குச் சென்று அங்கிருந்த 12 கண்ணாடி புத்தக அலமாரிகளையும் உடைத்து புத்தகங்களை எல்லாம் கிழித்தெறிந்துள்ளார்கள். எங்கள் பள்ளியில் படிக்கும் 250 குழந்தைகளும் இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை எல்லாம் மிக அதிகமாக நேசித்து தொடர்ந்து படித்து வந்தவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்களக் காடையர்களால் யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டதுதான் என் நினைவுக்கு வந்தது.

என்னை ஒசாமா பின்லேடன் போலவும், எம்மக்களை மூளையில்லாத தீவிரவாதிகளைப் போலவே இந்த அரசும், காவல்துறையும் நடத்துகின்றது. மனிதத்தன்மையற்ற, மிகவும் மூர்க்கமான இந்த நடவடிக்கைகள் எங்களை வேதனைக்குள்ளாக்குகின்றது. கடந்த இரண்டு நாட்களாக குடிநீர், பால், உணவுப்பொருட்கள், மின்சாரம் போன்றவை எங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. கடுமையான காவல்துறை அடக்குமுறையால் இடிந்தகரைக்குள்ளே யாரும் வரமுடியாது, உள்ளேயிருப்பவர்களும் வெளியில் செல்ல முடியாது. நாங்கள் காவல்துறையால் சூழப்பட்டுள்ளோம், உண்மையாகவே நான் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருப்பதுபோல உணர்கின்றேன். அதிகமான பிரச்சனைகளைக் கொண்டதும், முழுமையாக சோதனை செய்யப்படாத வெளிநாட்டு அணுஉலைகளை எதிர்த்து அமைதியான முறையில், சனநாயக வழியில் போராடும் எளிய மனிதர்கள் நாங்கள். இந்த எட்டுமாத காலப் போராட்டத்தில் நாங்கள் எந்த தனிப்பட்ட ஒருவருக்கோ, அவர்களது உடமைகளுக்கோ எந்தவிதத் தீங்கும் விளைவித்தது கிடையாது. எங்களது மக்களை நினைத்து இந்நாட்டு மக்கள் பெருமை கொள்கின்றார்கள்.

எங்கள் போராட்டம் தொடர்கின்றது. எங்களுக்கு ஆதரவாக இந்தியாவின் பல இடங்களிலும், தமிழ்நாட்டிலும் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. தொலைநோக்குப் பார்வையுள்ள எவரும் இந்தியாவின் பாமர குடிமகன்களின் எதிர்காலத்தைப் பற்றி வருத்தப்பட்டும், இயற்கைவளத்தைப் பற்றி கவலைப்பட்டும், எங்கள் நலனில் அக்கறை கொண்டும் இருக்கின்றார்கள். நாம் கடினப்பட்டு பெற்ற சுதந்திரத்தை “புதிய கிழக்கிந்திய அணுஉலை நிறுவனங்களிடம் விற்கமாட்டோம். சனநாயகத்தின் அடிப்படை விழுதுகள் எங்களுக்கு ஆதரவாக இருக்கும். எங்களுக்கு ஆதரவாக இருக்கும் உங்களுக்கு நன்றி கூறுகின்றோம். எவ்வித கடுமையான ஒடுக்குமுறை வரினும் அதை எதிர்கொண்டு, எங்களது அமைதியான ஒத்துழையாமைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்.

தமிழாக்கம் - ப.நற்றமிழன்

Pin It