கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்):

ஐயா;

“1941 ஆம் ஆண்டின் சுரங்கத் தொழிலாளர் மகப்பேறு நலச் சட்டத்திற்கான திருத்த மசோதா, தெரிவுக்குழு அறிக்கையின்படி எடுத்துக் கொள்ளலாம்’’ எனத்தீர்மானம் தாக்கல் செய்கிறேன்.

ஐயா, சட்டத்திருத்த மசோதா, தெரிவுக்குழுவால் வெகுவாகத் திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆகவே, தெரிவுக் குழு செய்த திருத்தங்களில் முக்கியமான சிலவற்றை அவையின் பரிசீலனைக்குக் கொண்டுவரல் முறையென்று கருதுகிறேன்.

(இக்கட்டத்தில் அவைத்தலைவர், மாண்புமிகு சர் அப்துல்ரகீம் வந்து அவைத் தலைமையை ஏற்கிறார்.)

Ambedkar Tribeதெரிவுக்குழு செய்த முதல் திருத்தம் கருவுற்ற மகளிர், நிலத்தடிச் சுரங்கங்களில் பணிசெய்யத் தடை விதிக்கப்படும் காலம் குறித்ததாகும். மூல மசோதாவில், நிலத்தடிச் சுரங்கங்களில் பணிபுரியும் கருவுற்ற பெண்கள் பிரசவத்திற்கு முன்னர் பத்து வாரங்களும், பின்னர் நான்கு வாரங்களும் தடைவிதிக்கலாமென்று மொழியப்பட்டிருந்தது. தெரிவுக்குழு பிரசவத்திற்கு முந்தைய காலத்தைடையில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. ஆனால், பிந்தைய காலம் குறித்து விரிவான மாறுதல்களைச் செய்துள்ளது. முதலாவதாக 4 வார காலத் தடை என்பது முப்பத்தாறு வாரங்களாக நீட்டிக்கப்படுகிறது. இந்த 36 வாரமும் இரண்டு பகுதிகளாய்ப் பிரிக்கப்படும். முதல் பகுதியாக, இருபத்தாறு வார காலத்திற்கு முழுமையான தடையும், அடுத்த பத்து வார காலத்திற்கு முழுமையான தடையும், அடுத்த பத்து வார காலத்திற்குப் பகுதித் தடையும் விதிக்கத் தெரிவுக்குழு முன்மொழிந்துள்ளது. பகுதித்தடை விதிப்பு, நிறுவனத்தில் குழந்தைகள் காப்பகம் உள்ளதா இல்லையா என்பதையொட்டி இரண்டு வகையாகக் கருதப்படும். குழந்தைகள் காப்பகம் இல்லாவிடங்களில் 4 மணி நேரத்துக்கு மேல் நிலத்தடிச் சுரங்கங்களில் பெண்கள் வேலை செய்யத் தடை விதிக்கப்படும். அடுத்தகட்டமாக குழந்தைகள் காப்பகம் இல்லாவிடங்களில் 4 மணி நேரத்துக்கு மேல் நிலத்தடிச் சுரங்கங்களில் பெண்கள் வேலைசெய்யத் தடை விதிக்கப்படும். அடுத்தகட்டமாக குழந்தைகள் காப்பகம் இருக்கும் இடங்களில் கூட, எச்சமயத்திலும் பெண்கள் 4 மணி நேரத்திற்கு மேல் நிலத்தடிச் சுரங்கங்களில் பெண்கள் வேலை செய்யத் தடை செய்யப்படும். இவையே தடைக்காலம் குறித்து தெரிவுக்குழு செய்த மாற்றங்களாகும்.

நிலத்தடிச் சுரங்கங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கான சலுகை குறித்து தெரிவுக்குழு செய்துள்ள மாற்றங்கள் வருமாறு: மூல மசோதாவில், நிலத்தடிச் சுரங்கங்களில் பணிபுரியும் பெண்கள் பேறுகாலச் சலுகைகள் பெறுவதற்கு, இரண்டு தகுதிகள் விதிக்கப்பட்டிருந்தன. முதலாவதாக, பேறுகாலத்திற்க்கு முன்னர் ஆறு மாதங்கள் சுரங்கப் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டுமென்பதும், இரண்டாவதாக அவ்வாறுமாத காலத்தில் 90 நாட்களுக்குக் குறையாமல் நிலத்தடிச் சுரங்கங்களில் பணி புரிந்திருக்க வேண்டும் என்பதுமே அவ்விரு தகுதிகள். தெரிவுக்குழு, ஆறு மாதங்களில், 90 நாட்களுக்குக் .குறையாமல் நிலத்தடிச் சுரங்கங்களில் பணிபுரிந்திருத்தலே இச்சலுகை பெறப் போதுமான தகுதி என மாற்றம் செய்துள்ளது.

சலுகை பெறும் காலம் குறித்தும் தெரிவுக்குழு சில திருத்தங்களைச் செய்துள்ளது. மூல மசோதாவில் பிரசவத்திற்கு முந்தைய பத்து வாரங்களும், பிந்தைய நான்கு வாரங்களுக்கு சலுகைக் காலமாக மொழியப்பட்டிருந்தன. தெரிவுக்குழு பிரசவத்திற்க்குப் பிந்தைய நான்கு வாரங்களை, ஆறுவார காலமாகத் திருத்தம் செய்துள்ளது. சலுகைத்தொகை குறித்தும் தெரிவுக்குழு மாற்றம் செய்துள்ளது. மூல மசோதாவில் சலுகை விடுப்பு ஊதியம் நாள் ஒன்றுக்கு எட்டணா (ரூ.0.50) என இருந்ததை, வாரத்திற்கு ரூ.6.00 ஆகவும் உயர்த்திப் பரிந்துரைத்துள்ளது (இது நாள் ஒன்றுக்குப் பதினான்கு அணா (ரூ.0.87) விடச் சற்று குறைவானது). மேலும் சலுகை விடுப்புக்காலம் முழுவதையும் அனுமதிக்கப்பட்ட விடுமுறைக் காலமாக அறிவிப்பதன் வாயிலாக, இச்சட்டத்தின்கீழ் வரும் பெண் தொழிலாளர்களைச் சலுகை விடுமுறைக் காலத்தில் முதலாளிகள் பணிநீக்கம் செய்ய இயலாது என்னும் உரிமையும் உறுதி செய்யப்படுகிறது.

தெரிவுக்குழு செய்துள்ள திருத்தங்களில் முக்கியமான மற்றொன்று, சலுகை உரிமைக்குத் தகுதியுள்ள பெண்கள் கோரினால், அவர்களது மருத்துவப் பரிசோதனை பெண் மருத்துவர்களைக் கொண்டே நடத்தப்பட வேண்டும் என்பதாகும்; இஃதும் மூல மசோதாவில் இல்லாத புதிய சலுகையாகும். மேலும், பிரசவத்திற்குப் பிந்தைய 36 வார காலத்தில், முதல் 4 வாரங்களைத் தவிர எஞ்சிய 32 வாரங்களில், நிலத்தடிச் சுரங்கப்பணி தவிர்த்த பிற பணிகளில் ஈடுபட்டுக் கூடுதல் வருவாய்க்கு வழிசெய்து கொள்ளப் பெண் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கும் திருத்தத்தையும் தெரிவுக்குழு செய்துள்ளது என்பதையும் அவையின் கவனத்திற்குக் கொண்டு வர விழைகிறேன். (இச்சலுகையும் மூல மசோதாவில் இடம் பெறவில்லை). பிரசவத்தையடுத்த 4 வார காலத்தில் மட்டுமே அவர்கள் எப்பணிக்கும் செல்லக் கூடாதெனத் தடைவிதிக்கப்படுகிறது. எனவே, திருத்தப்படும் மசோதாவின்படி தரைப் பரப்பில் பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு சலுகைத் தொகை நாள் ஒன்றுக்கு எட்டணா (ரூ.0.50)விலிருந்து, பன்னிரண்டனாவாக (ரூ.75),அதாவது முந்தைய சட்டம் அனுமதித்ததை விட கூடுதலாக சலுகைத்தொகை உயர்த்தப்படுகிறது.

இவை தெரிவுக்குழு செய்துள்ள முக்கியமான திருத்தங்களுள் சிலவாம். முன்னரே நான் குறிப்பிட்டது போன்று, தெரிவுக்குழு மசோதாவில் கணிசமான மாற்றங்களைச் செய்துள்ளது. இருப்பினும் இத்திருத்தங்கள் தேவைப்படுகின்ற அளவில் விந்தையான நிலைமைகள் இருத்தலைக் கணக்கில் கொண்டு, அரசு தடையேதும் முன் வைக்காமல் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை ஏற்க முடிவு செய்துள்ளதால், இம்மசோதாவை அவையில் தாக்கல் செய்கிறேன்.

திரு.அவைத்தலைவர்(மாண்புமிகு சர் அப்துல் ரகீம்):

“1941 ஆம் ஆண்டின் சுரங்கத் தொழிலாளர் மகப்பேறு நல உதவிச் சட்டம், தெரிவுக்குழுவின் அறிக்கைப்படி ஏற்கப்படலாம்” எனத் தீர்மானம் தாக்கலாகிறது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)