தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் முதல் 5 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இங்கு கடந்த 5 ஆண்டுகளில் – 213 தலித் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 118 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்; தலித் மக்கள்மீது 192 கடும் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் 70 சதவிகித வழக்குகள் ஆதாரம் இல்லை என முடிக்கப்பட்டுள்ளன; 10 சதவிகித வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

– பி.எல்.புனியா, தலைவர்,  தேசிய எஸ்.சி. எஸ்.டி. ஆணையம்

சென்னையில் (9.7.2015) அளித்த பேட்டியில்

balachandran students movement

(சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் ஜாதி இந்து பெண்ணை காதலித்ததற்காக 23.06.2015 அன்று கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னையில் ‘பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்' சார்பில் நடைபெற்ற கண்டனப் பேரணி)

‘‘யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க?''

ஜாதி அழைப்பொலி: மகõராட்டிர மாநிலத்தில் உள்ள ஷிர்டி என்ற ஊரில் நடைபெறும் திருமணத்திற்கு, சாகர் ஷெஜ்வால் என்ற செவிலியர் படிப்பு படிக்கும் தலித் மாணவர் வந்திருக்கிறார். மே 16 அன்று நண்பகல் 1.30 மணிக்கு அவர் அங்குள்ள பீர் கடைக்கு தன்னுடைய இரு உறவினர்களுடன் சென்றிருக்கிறார். இங்குள்ள டி.எஸ்.பி. அதற்குப் பிறகு நடந்ததை விவரிக்கிறார்: ‘‘அந்தக் கடையில் உள்ள மேசையின் முன்னால் எட்டு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது சாகரின் கைப்பேசியின் அழைப்பு மணியில் அம்பேத்கர் பாடல் ஒலித்திருக்கிறது. அந்த இளைஞர்கள் அதை நிறுத்தச் சொன்னார்கள் (அந்தப் பாடலின் ஒரு சில வரிகள் – ‘பீம் இன்' கோட்டை வலிமையானது; உங்களுக்குத் தேவையானவற்றை உரக்க முழங்குங்கள்). உடனே அந்த இளைஞர்களுக்குள் கைகலப்பு நிகழ்ந்து பிறகு அவர்கள் சாகரை பீர் பாட்டிலால் தாக்கி எட்டி உதைக்கத் தொடங்கினர். பிறகு அவரை அங்கிருந்து இழுத்து வந்து அருகில் உள்ள காட்டுக்கு ஒரு பைக்கில் இழுத்துச் சென்றனர். பைக்கின் கீழ் படுக்க வைத்து சாகரை நசுக்கினர். சாகரின் உடல் 6.30 மணிக்கு நிர்வாண நிலையில் ரூய் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் பல இடங்களில் எலும்பு முறிவாலும் 25 இடங்களில் கடும் காயங்களும் இருந்ததால் மரணம் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது'' (‘தி இந்து' ஆங்கிலம் 22.05.2015). 

ஜாதிக் கல் : அய்.அய்.டி. நுழைவுத் தேர்வில் முதல் 500 இடங்களுக்குள் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பிரிஜேஷ் சரோஜ், மற்றும் ராஜூ சரோஜ் ஆகியோர் முறையே 166 மற்றும் 410 ஆவது இடத்தைப் பெற்று தேர்ச்சி பெற்றனர். தலித் குடும்பத்தைச் சேர்ந்த இவர்களின் தந்தை கூலிவேலை செய்து வருகிறார். அதில் இந்திய அளவில் நடைபெற்ற நுழைவுத்தேர்வில் இம்மாணவர்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றதை அறிந்து பல கட்சித்தலைவர்களும் இவர்களுக்கு உதவ முன்வந்தனர். இந்நிலையில் உத்திரப் பிரதேச முதல்வரை 21.06.2015 அன்று சந்தித்துவிட்டு இச்சகோதரர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபொழுது அவர்களுடைய வீட்டின் மீது சிலர் கல்லெறிந்து தாக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது (‘தினகரன்' 24.06.2015).

ஜாதித் தேநீர்: தஞ்சாவூரில் உள்ள நவகொல்லைக்காடு என்ற கிராமத்தில் கே. மதிமுருகன் (44) மற்றும் அவருடைய உறவினர்களான விக்னேஷ் (22), மாதவன் (22) அரவிந்த் மற்றும் அந்த ஊரில் உள்ள சிலரும் ஒட்டங்காடு சந்தையில் உள்ள தேநீர்க்கடைக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தலித்துகள் என்பதால் அந்த ஊரில் உள்ள ஜாதி இந்துக்கள் அவர்களை கடைக்குள் நுழைய விடாமல் தடுத்து தாக்கியும் இழிவாய்ப் பேசியும் விரட்டியுள்ளனர். திருச்சிற்றம்பல காவல் நிலையத்தில் இத்தாக்குதல் நிகழ்த்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' 26.05.2015). 

ஜாதிச்சவாரி:             ஒரு தலித் மணமகன் தன்னுடைய திருமண அழைப்புக்காக குதிரையில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்திலுள்ள நெக்ரான் என்ற ஒரு கிராமத்தில் தலித் மணமகன் குதிரையில் சவாரி செய்வதைக் கண்டித்து ஜாதி இந்துக்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்குப் பிறகு குதிரையை அவர்கள் எடுத்துக்கொண்டு போய்விட்டனர். குதிரையை அவர்கள் எடுத்துச் சென்றபிறகு மணமகனின் குடும்பத்தாரால் மற்றொரு குதிரை ஏற்பாடு செய்யப்பட்டது. காவலர்களின் முன்னிலையில் குதிரையில் மணமகனை மீண்டும் அமர வைத்து ஊர்வலம் நடத்தப்பட்டது. இருப்பினும் கல்வீச்சுத் தாக்குதல் தொடர்ந்தது. உடனே போலிஸ் அதிகாரிகள் மணமகனுக்கு தலைக்கவசத்தை அணிவித்து அழைத்துச் சென்றனர். காவல்துறை இத்தாக்குதலுக்கு காரணமான 72 பேர் மீது வழக்குத் தொடுத்துள்ளது (‘தி இந்து' ஆங்கிலம் 13.05. 2015). 

ஜாதி சிறுநீர்: மனிதத்தன்மை அற்ற வன்கொடுமைச் சம்பவங்கள் தமிழகத்தில் இப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கருவானூர் என்ற கிராமத்தில் 2.2.2015 அன்று கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களான அரவிந்தன், தினேஷ் ஆகியோரை அதே ஊரைச் சேர்ந்த மாற்று சாதி இளைஞர்கள் சிலர் தாக்கினர். ஒரு தலித் இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்தனர். நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 19 அன்று இந்த சம்பவம் எதிரொலித்தது. (‘ஜூனியர் விகடன்' 29.03.2015).                                               

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலித்துகள் மீதான வன்கொடுமை, பாகுபாடு, இழிவு அனைத்தும் பனிப்படலத்தின் ஒருசிறுமுனை மட்டுமே. வன்கொடுமைகளை கண்டிப்பவர்கள் (ஒரு பாதி) அதற்கு ஆதாரமாக நிற்கும் இந்து மதத்தையோ, ஜாதி அமைப்பையோ, இந்து பண்பாட்டையோ, இந்து கடவுளர்களையோ (மறுபாதி) கண்டிக்க மறுக்கிறார்கள். தலித்துகள் மீதான வன்கொடுமைகள் தொடர்வதற்கு இத்தகைய ‘அரைவழி'ப் போராட்டங்களும் ஒரு முக்கியக் காரணம் 

கண்முன்னே நடைபெறும் புரட்சிகர மாற்றம்!

ஆதித்தமிழர் பேரவை சார்பில் 6.7.2015 அன்று சென்னையில் சமூக நீதிப் பாதுகாப்பு மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களில் ஒன்று: ‘‘தமிழகத்தில் வாழக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்களில் மூன்றில் ஒரு பங்காக உள்ள அருந்ததியர் மக்களுக்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் மூன்று விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் பலனாக இன்று அருந்ததியர் மக்கள் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் சற்றே முன்னேற்றம் கண்டு வருகின்றனர். எடுத்துக்காட்டாக, மருத்துவக்கல்வியில் ஆண்டுக்கு 65 க்கும் மேற்பட்ட இடங்களும் பொறியியல் கல்வியில் 1500 க்கும் மேற்பட்ட இடங்களும் சட்டம் மற்றும் இதர கல்வியில் ஓரளவிற்கு இடங்களும் கிடைத்து வருகின்றன. இதே போன்று தமிழக அரசுத்துறைகளில், துணைப்பேராசிரியர்கள், நீதிபதிகள், ஆசிரியர்கள் மற்றும் காவல் போன்ற துறைகளில் ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெறுகின்றன. இந்நிலையில் அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கின்ற விதமாக, அருந்ததியர்களுக்காக ஒதுக்கப்படும் வேலை வாய்ப்புகளை பிற தாழ்த்தப்பட்டோருக்கு மடைமாற்றம் செய்வது, இட ஒதுக்கீட்டை முற்றிலும் தடுத்து நிறுத்தி விடுவது என்று நீதிமன்றங்களில் வழக்கு மேல் வழக்கு தொடுப்பது போன்ற நெருக்கடிகளை தற்பொழுது அதிகளவில் செய்து வருகின்றனர். எனவே மேற்கண்ட நெருக்கடியிலிருந்து அருந்ததியர் உள் ஒதுக்கீட்டைப் பாதுகாத்து முறையாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.''

‘சுதந்திர' இந்தியாவில் அருந்ததியர்களுக்கு இழைக்கப்பட்ட 68 ஆண்டுகால அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவர்களின் அரிதிலும் அரிதான பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முனைபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அம்பலப்படுத்திட அனைவரும் முன்வர வேண்டும். ஆனால், ‘திராவிடக் கட்சிகளும் இயக்கங்களும் தலித் மக்களுக்கு எதிராக இருக்கின்றன' என்று மூச்சிரைக்கப் பேசும் தலித் ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் –தற்பொழுது அருந்ததியர்களுக்கு ஒதுக்கீடே கூடாது என்று வழக்குமன்றம் வரை சென்றிருக்கக் கூடியவர்கள் யார் என்பதைப் பற்றி வாய் பேச மறுக்கிறார்களே – அது ஏன்? 

Pin It