இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு சவால் விடும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் கொட்டகாச்சியேந்தல் ஊராட்சிகளில் தலித் மக்களின் ஜனநாயக உரிமையை, ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் தட்டிப் பறிக்கும் ஆதிக்கச் சக்திகளை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்து "தலித் ஜனநாயக உரிமை மீட்பு மாநாடு' 16.7.05 அன்று மதுரையில் "நீதியரசர் கிருஷ்ணய்யர் அரங்கத்தில்' நடைபெற்றது.

இம்மாநாட்டில், ஆ. குருவிஜயன் புரட்சி வேங்கைகள், த. பாண்டியன், பூ. சந்திரபோசு தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவை, பெ. மணியரசன் தமிழ்த் தேசிய முன்னணி, பழ. நீலவேந்தன் ஆதித் தமிழர் பேரவை, கலைவாணன் விடுதலைச் சிறுத்தைகள், சங்கர் தந்தை பெரியார் திராவிடர் கழகம், பாஸ்கர் புதிய தமிழகம், வழக்குரைஞர் ரஜினி, ராதாகிருஷ்ணன் சி.பி.அய்., சி. பாலசுந்தரம் இந்திய கம்யூனிஸ்ட்டு (மாவோ) மற்றும் பலர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய மூன்று ஊராட்சிகளும் உசிலம்பட்டி வட்டத்தில் உள்ளன. தலித் தலைவர்கள் இவ்விடத்தில் தங்கள் இயக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆதிக்க சாதியினர் அனுமதிப்பதில்லை. தலித் மக்கள் மீது இழைக்கப்படும் குற்றங்கள் கொலைக் குற்றங்களாயினும், காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்வதில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பிரச்சினையைக் கண்டுகொள்வதில்லை. மேலும், 58 ஆண்டுகளாக சுதந்திரம் பெற்ற இந்த நாட்டில், கவண்டம்பட்டி என்ற கிராமத்தில் தலித்துகள் செருப்புப் போட்டு நடக்க அனுமதி இல்லை. தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை இன்னும் நடைமுறையில் உள்ளது.

இந்த அநீதிகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள் அமைதி காப்பது, அமைதியான ஒத்துழைப்பேயன்றி வேறில்லை. எனவே, அரசியல் சட்டத்தையும் நிர்வாக எந்திரத்தையும் முறைப்படி இயங்க வைக்க, ஆகஸ்ட் 15 முதல் மதுரையிலிருந்து உசிலம்பட்டி நோக்கி தீண்டாமை எதிர்ப்புப் பயணம் மேற்கொள்வது என இம்மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது. "சித்திரவதைக்கு எதிரானப் பிரச்சாரக் குழு' தலைவர் சி.கே. ராசன் தலைமையில் செல்லும் இப்பயணத்தில், தலித், இடதுசாரி, தமிழ்த்தேசிய, பெரியார் இயக்கங்கள் பங்கேற்க உள்ளன.

இம்மாநாட்டில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1) உசிலை நகராட்சியில் உள்ள கவண்டம்பட்டியில், செருப்புப் போட்டுச் செல்ல அனுமதி மறுத்ததை எதிர்த்துக் கேட்டதின் விளைவாக குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள்கூட இல்லாமல் துன்புறும் தலித் மக்களுக்கு, அடிப்படை வசதிகள் செய்துதர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தலித் மக்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க, அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

2) ஒன்பது ஆண்டுகளாக 19 முறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தியும், ஊராட்சித் தலைவர் பதவி காலியாக இருக்கும் நான்கு ஊராட்சிகளிலும் உடனடியாகத் தேர்தல் நடத்தி, ஊராட்சித் தலைவர்கள் பதவியை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். அடுத்த பத்து ஆண்டுகள் பதவிக் காலம் முடிந்த பிறகே இது மாற்றப்பட வேண்டும்.

3) வாடிப்பட்டி வட்டம் காடுபட்டியில் தலித் மக்களின் வீடுகளைத் தாக்கி, காடுபட்டி காவல் நிலையத்திலேயே தலித் மக்களைத் தாக்கிய சாதி வெறியர்களைத் தண்டிப்பதுடன் அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூரில் வேலைவாய்ப்பளிக்கும் மற்ற சமூகத்தினரை அச்சுறுத்தியும், ஊர்க் கட்டுப்பாடு விதித்தும், ஆதிக்கம் செய்யும் சாதி வெறியர்களைக் கைது செய்ய வேண்டும் என்று இம்மாநாடு கோருகின்றது.

4) பேரையூர் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட அன்னக்கொடியின் குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதியும், அவரது மனைவிக்கு அரசுப் பணியும் வழங்கிட வேண்டும் என இம்மாநாடு கோருகின்றது.

5) சாதிவெறியால் இழிவுபடுத்தப்பட்டு, தற்கொலைக்குத் தள்ளப்பட்ட கோவை நாகமநாயக்கன்பாளையம் சம்பத் சாவுக்குக் காரணமான "கல்யாண் டெக்ஸ்டைல் மில்' உரிமையாளர் சண்முக (கவுண்டர்) மீது வழக்குப் பதிவு செய்யாமல் சாதிவெறிக்குத் துணை நின்றதுடன் இழிவாக நடத்திய கோவை சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணியத்தையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும். சம்பத் குடும்பத்திற்கு உரிய நிவாரணம், அவரது மனைவிக்கு அரசு வேலையும் உடனடியாக வழங்க வேண்டும் என இம்மாநாடு கோருகின்றது.

Pin It