கையால் மலமள்ளும் தொழிலை இந்தியாவில் முற்றிலுமாக ஒழிப்பதற்கான அதிகாரப்பூர்வ இறுதிநாள் மார்ச் 2009. ஆனால் இன்றளவும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் கையால் மலமள்ளுவதாக அரசே ஒப்புக் கொள்கிறது. மலமள்ளும் தொழிலை ஒழிக்கப் பணியாற்றும் "சபாய் கரம்சாரி அந்தோலன்' என்ற அமைப்பு, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் – அதில் 90 சதவிகிதம் பேர் பெண்கள் என்றும் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.

கையால் மலமள்ளுவது இழிவான தொழில் மட்டுமல்ல; இத்தொழிலில் ஈடுபடுவோர், "மிக மோசமான கிருமிகளால் தாக்கப்படுவதால் கடும் நோய்களை எதிர்கொள்கின்றனர்' என்று அய்க்கிய நாடுகள் அவை தெரிவிக்கிறது. 62 சதவிகிதத் தொழிலாளர்கள் சுவாச நோயிலும், 42 சதவிகிதம் பேர் மஞ்சள் காமாலையிலும், 42 சதவிகிதம் பேர் நிரந்தர தோல் நோய்களாலும், 23 சதவிகிதம் பேர் "டிரக்கோமா'வாலும் பாதிக்கப்படுவதாக, "சபாய் கரம்சாரி அந்தோலன்' அமைப்பு தெரிவிக்கிறது. இச்சமூகக் கொடுமையை ஒழிக்க அரசு ஏன் தாமதிக்கிறது என, "கையால் மலமள்ளுவோருக்கான விடுதலை மற்றும் மறுவாழ்வு ஆணை'யத்தின் 1992 – 2002 மீதான கணக்கு தணிக்கை அறிக்கை சொல்கிறது: மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட மத்திய அரசின் பல கோடி ஆயிரம் ரூபாய் நிதி "கழிவறைக்குக் கீழே சென்று விட்டது''

அரசின் புள்ளிவிவரப்படி, கையால் மலமள்ளும் தொழிலாளர்களை அதிகளவு கொண்ட மாநிலங்கள்: ஒரிசா – 16,386; பீகார் – 15,352; மத்தியப் பிரதேசம் – 15,213; மகாராட்டிரம் – 13,320; தமிழ்நாடு – 11,892

ஆதாரம் : "தி வீக்'

கதறலை ஆற்றுப்படுத்தும் குறியீடு

"உயர் சாதியினர் எங்களோடு உணவைப் பகிர்ந்து கொள்வதில்லை. இன்னும் பலர் எங்களை அருவருக்கிறார்கள். சீக்கிய மதத்தை நாங்கள் தழுவியது என்பது, மனித கண்ணியத்தைப் பெற வேண்டும் என்ற எங்களது கதறலின் குறியீடுதான். ஜாதி, வர்க்கம், அந்தஸ்து காரணமாக ஒருவரை ஒதுக்குவது; பாகுபாடு காட்டுவது ஆகியவற்றைக் கண்டிக்கவே மதம் மாறுகிறோம்'' – பீகார் மாநிலத்தின் ஹல்ஹாலியா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவரின் கூற்று இது. சஞ்சய் மற்றும் இவருடைய சகோதரர் நரேந்திரா ஆகியோர் தங்களின் பரம்பரை நிலத்தில் ஒரு "குருத்வாரா'வை (வழிபாட்டுத் தலம்) கட்டியிருக்கிறார்கள். இவர்கள் "முஷாகர்' என்ற தலித் பிரிவைச் சேர்ந்தவர்கள். எலிகளை உண்ணும் இவர்களை சாதி இந்துக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்துகிறார்கள். இம்மக்கள் தற்போதைய மதமாற்றத்தால், தங்களுக்கு தனித்த அடையாளம் கிடைத்திருப்பதாகக் கருதுகிறார்கள் ("இந்திய டுடே' 5.8.09).

மதமாற்றம், பொருளாதார மாற்றத்தை மட்டுமல்ல, இப்பகுதியின் சமூக விதிகளையும் மாற்றியிருக்கிறது. பெரும்பாலான கிராமவாசிகள் மது அருந்துவது, எலிகளைப் பிடித்து உண்பது ஆகியவற்றை விட்டுவிட்டனர். இந்த தலித் மக்களைப் பொருத்தவரையில் தற்பொழுது நிகழ்ந்திருப்பது, கடவுள் நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மட்டுமல்ல; அவர்களது வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கான மாற்றம்தான் என்கிறது, "இந்தியா டுடே' செய்திக் கட்டுரை. மதமாற்றத்திற்கு எதிராக ஊளையிடுகின்றவர்கள், சிந்தித்துப் பார்க்க வேண்டிய நிகழ்விது. ஏழ்மையைப் போக்கிக் கொள்வதற்காக எவரும் மதம் மாறுவதில்லை. ஏழ்மைக்கும், இழிவுக்கும், உரிமைகள் மறுக்கப்படுவதற்கும் மூல காரணமாக இருக்கும் ஜாதியின் – மதத்தின் கொடூரப் பிடியிலிருந்து விடுதலை பெறவும், மானத்துடன் வாழவுமே தலித்துகள் மதம் மாறுகின்றனர். (இந்து) நோயை குணப்படுத்த மருந்தை (மதமாற்றம்) உட்கொள்ள வேண்டும் என்பது அறிவியல். மருந்தை உட்கொள்ள மறுத்து செத்துப் போகும்வரை, நோயுடன் போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அறிவீனம்!

ஜாதிக்கு அரசியல் சாட்சி !

கோவை மாவட்டம் அவினாசி அருகில் உள்ள தண்டுக்கரம்பாளையம் என்ற கிராமத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த கே. பழனிச் சாமியும் அவருடைய துணைவியார் தங்கமணியும், தங்கள் பணியை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, சாதி இந்துக்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். கடும் பாதிப்பிற்குள்ளான பழனிச்சாமி, அவினாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, "விழுதுகள்' இயக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது, அங்கிருந்த எஸ்.அய். ரமாதேவி வழக்கைப் பதிவு செய்யாமல் அலட்சியப்படுத்தி இருக்கிறார். கொதித்தெழுந்த தலித்துகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பிறகே வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னியப்பன் என்ற முக்கியக் குற்றவாளி மட்டும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட பழனிச்சாமி மீதும் காவல் துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது என்பதுதான் இதைவிட முக்கியச் செய்தி. அந்த ஊரைச் சேர்ந்த சாதி இந்து பெண் ஒருவர், பழனிச்சாமி தன்னை மானபங்கப்படுத்தினார் என்று புகார் கொடுத்ததன் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனராம் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' 10.8.09).

கோவை மாவட்டத்தில் தலித்துகளுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெறும் வன்கொடுமைகளைக் கண்டித்து, "அருந்ததியர் மக்கள் முன்னேற்றக் கழகம்' சார்பில் 10.8.09 அன்று திருப்பூர் மாநகராட்சிக்கு எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த "விழுதுகள்' எம். தங்கவேல், ""கொங்கு வேளாளர் பேரவை தொடங்கப்பட்ட பிறகு, இங்குள்ள பகுதிகளில் இப்போதெல்லாம் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பல இடங்களில் தலித்துகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்கின்றன. பழனிச்சாமியும் அவருøடய மனைவியும் வேலைக்குப் போய் விட்டு வந்து கொண்டிருந்தனர். அங்கு கூட்டமாக நின்று கொண்டிருந்த சாதி இந்துக்கள், எந்தக் காரணமுமின்றி அவர்களை நிறுத்தி அவர்களுடைய ஜாதியை கேட்டுத் தாக்கி இருக்கிறார்கள். குற்றவாளிகள் மீது புகார் செய்தால், பாதிக்கப்பட்ட தலித்துகள் மீதே சாதி இந்துக்கள் பொய்ப் புகார் கொடுத்து, பிறகு சமரசத்திற்கு வருமாறு தலித்துகளை நிர்பந்திக்கும் சூழ்ச்சியை செய்து வருகிறார்கள்'' என்கிறார். சமத்துவபுரங்களை உருவாக்குகின்ற அரசு, ஜாதி சங்கங்களை அனுமதிக்கலாமா? நேரடியாக சாதி சங்கங்களை உருவாக்கினால் அதற்குப் போதிய செல்வாக்கு இருக்காது என்பதால்தான், பாதுகாப்பாக அதற்கு அரசியல் முலாம் பூசிவிடுகிறார்கள். வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியானது போல, ஜாதி சங்கங்கள் தங்களை "ஜனநாயகப்' படுத்திக் கொள்வதற்கான பாதுகாப்பு அரணாக அரசியல் பயன்படுகிறது. அரசியலை ஜாதிமயமாக்கி, ஜாதியை அரசியல்மயமாக்கும் அயோக்கியத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காதவரை, வன்கொடுமைகளை எப்படி தடுத்துவிட முடியும்?

ஜாதி சான்றிதழா நம்மை கீழ் ஜாதியாக்கியது?Srilanka war crime

ஒருபுறம், பிற்படுத்தப்பட்ட சாதியினரில் சிலர், தங்களை எஸ்.சி. பட்டியலில் இணைக்கக் கோருகின்றனர். மறுபுறம், இப்பட்டியலில் இருந்து தங்களை நீக்க வேண்டுமென, "தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு' நீண்ட நாட்களாகக் கோரி வருகிறது. அதிலும் அந்த இட ஒதுக்கீட்டின் மூலம் வந்த உமாசங்கர் என்ற அய்.ஏ.எஸ் அதிகாரியும் அக்கூட்டத்தில் பங்கேற்று, இந்தக் கோரிக்கையை ஆதரித்திருப்பது வெட்கக்கேடானது ("குமுதம் ரிப்போர்ட்டர்' 30.8.09). இந்தியாவில் ஒருவருடைய ஜாதி, பிறப்பின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது ; தொழில் அடிப்படையிலோ, அரசின் ஜாதி சான்றிதழ்களின் அடிப்படையிலோ அன்று. இந்நிலையில் எஸ்.சி. பட்டியலில் இருந்து தங்களை நீக்கிக் கொண்டால் "உயர் ஜாதி'யாகி விடலாம் என்று பிதற்றுவதன் மூலம் இவர்கள் – உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்க முயல்வதை அனுமதிக்க முடியாது. தங்களை பிறப்பிலேயே கீழ்ஜாதியாக்கிய இந்து மதத்தின் மீது கோபம் கொள்வதற்கு மாறாக, அதற்கு தீர்வு கண்டு, பட்டியல் சாதியினராக்கி நம்மை முன்னேற்றிய அம்பேத்கரின் செயல்திட்டத்தை ஒழிக்க முயல்வது, கடும் கண்டனத்திற்குரியது. 

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர் முடியவில்லை!

இலங்கையில், நாற்பது ஆண்டுகளாக மனித உரிமை ஆர்வலராக செயலாற்றும் பெண் வழக்குரைஞர் நிமல்கா பெர்னாண்டோ, "பிளாட்பார்ம் பார் பிரீடம்' அமைப்பின் தலைவர். சிங்களரான இவர், தமிழகத்தில் நடைபெற்ற மனித உரிமை மாநாட்டில் பங்கேற்க வந்திருந்தபோது, "குமுதம் ரிப்போர்ட்டர்' (20.8.2009) இதழுக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி : ""மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசக் கூடாது என்பது, சர்வதேச போர் நெறிமுறை. ஆனால், சிங்கள ராணுவம், வவுனியா மருத்துவமனை மீது குண்டுகளை வீசியிருப்பதை நான் அங்கு சென்றபோது கண்கூடாகவே பார்த்தேன். அதுவும் முள்ளிவாய்க்காலில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருக்கின்றன. இறுதிக் கட்டப் போரில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். சுமார் மூன்று லட்சம் தமிழர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களின் நிலை படுமோசம். ஆயிரம் பேருக்கு ஒரு கழிவறைதான் இருக்கிறது. எங்களைப் போன்றவர்கள் சொன்னதால், 800 பேருக்கு ஒரு கழிவறை என மாற்றப்பட்டிருக்கிறது. குடிப்பதற்குக்கூட சொற்ப தண்ணீர்தான் வழங்கப்படுகிறது. விரைவில் பருவ மழை தொடங்கும்போது, முகாம்களுக்குள் மழை நீர் பெருக்கெடுக்கும்போது, மக்களால் தங்க முடியாது. மழை பெய்கிறதே என்று எழுந்து ஓடினால், ராணுவம் சுட்டுவிடும் என்ற நிலைதான் அங்கு இருக்கிறது. முகாம் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்குள்ள ஒரு தாயின் சோகத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. ராணுவம் குண்டு போட்டபோது தப்பிப்பதற்காக குடும்பத்தோடு ஓடியிருக்கிறார்கள். அப்போது ஒரு குண்டு வெடித்ததில் அந்த கர்ப்பிணித் தாயின் இடுப்புக்குக் கீழ் சிதைந்து விட்டது. அப்போது அவர் மீது அவருடைய பத்து வயது மகள் பிணமாக விழுந்திருக்கிறார். அதன் பிறகே அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அதை வளர்க்கக்கூடிய மனநிலையில் அவர் இல்லை. முகாம்களில் உள்ள இளைஞர்களை, கருணா ஆட்கள் அடையாளம் காட்டியவுடன் அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அதன் பிறகு என்ன ஆகிறார்கள் என்றே தெரிவதில்லை.''

Pin It