கிராமக் கட்டமைப்புகளில் சட்டங்களின் ஆட்சி நடப்பதில்லை. ஜாதியமே தனது அதிகாரத்தைக் கொடூரமாகத் திணித்து வருகிறது. தமிழ்நாடும் இதில் விதிவிலக்கு அல்ல. ஒப்பீட்டளவில் தமிழகத்தின் பெருமை பேசலாமே தவிர, இதை ‘கள்ள மவுனத்துடன்’ கடந்து போக முயற்சிக்கக் கூடாது, எதிர்வினைகளை முன்னெடுக்க வேண்டும்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவியாக தேர்வு செய்யப்பட்ட தலித் சமூகத்தைச் சார்ந்த ராஜேஸ்வரி சரவண குமார் என்ற பெண், பஞ்சாயத்து ஜாதிவெறி துணைத் தலைவரால், தரையில் உட்கார வைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராடசி மன்ற தலித் சமூக பெண் தலைவர், ‘சுதந்திர நாளில்’ தேசியக் கொடியை ஏற்ற ஆதிக்க ஜாதி வெறியர்களால் தடுக்கப்பட்டுள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு எதிரான இந்த ‘தீண்டாமை’யை அரசு நிர்வாகத்துக்குக் கொண்டு செல்லத் தவறிய ஊராட்சி மன்ற செயலாளராக இருந்த பெண், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் டுள்ளார். இவை வெளிச்சத்துக்கு வந்த ‘வன்கொடுமைகள்’. பல கிராம பஞ்சாயத்துகளில் தலித்  பெண்கள் ஒடுக்குமுறைக் குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே எதார்த்தம்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் முடிதிருத்தும் சமுதாயத்தைச் சார்ந்த 12 வயது சிறுமி, கும்பல் பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். ‘நான் தான் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தேன்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்த கிருபானந்தம் என்ற குற்றவாளி, திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தால் சாட்சியங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுதும் 3 இலட்சம் முடிதிருத்தும் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அரசு இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

தலித் மற்றும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வரும் பெண்கள் மீதான பாலுறவு வன்முறை, தீண்டாமைக் கொடுமைகளை பெண்களுக்கு எதிரான பெண்ணுரிமைக் கண்ணோட்டத்தில் மட்டும் அணுகுவது சரியான பார்வையாக இருக்க முடியாது. மாறாக, இதில் பொதிந்து நிற்கும் ஜாதிய ஒடுக்குமுறைகளோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

புதுடில்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா கொடூரமாக பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஆனால் தலித் பெண்கள் மீதான வன்கொடுமை - பாலுறவு வன்முறைகள் நாட்டின் ‘மனசாட்சி’யை அசைப்பதுகூட இல்லை என்பதற்கு என்ன காரணம்? கற்புத் தூய்மை - ஜாதித் தூய்மையை பெண்கள் மீது சுமத்தும் பார்ப்பனிய ஜாதிக் கட்டமைப்பு, அந்தத் தூய்மைகளிலிருந்து தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஒதுக்கி விடுகிறது.

அன்றாட வாழ்வுக்கு - காடுகளுக்கும் - கட்டுமானப் பணிகளுக்கும் செல்ல வேண்டிய இந்தப் பெண்கள், ஆதிக்க ஜாதியினருக்கு எளிதாகக் கிடைக்கக் கூடிய ‘பாலியல் நுகர்வு பொருள்களாகவே’ ஜாதிய இந்து சமூகம் பார்க்கிறது. நீதிமன்றங்களும், காவல்துறையும், ஊடகங்களும், அதிகார வர்க்கமும் தங்கள் பொதுப் புத்திகளில் ஜாதிய சிந்தனைகளையே சுமந்து நிற்கின்றன.

பெண்கள் - இரண்டாம்தர குடிமக்களாகவும், குடும்ப கட்டமைப்பு, ஜாதிய கட்டமைப்புகளைக் காப்பாற்ற வேண்டிய கடமைகளுக்காகவே பிறவி எடுத்தவர் களாகவுமே கலாச்சாரங்கள் - சடங்குகள் - ஆச்சாரங்கள் - பழக்கவழக்கங்கள் - நடைமுறைகள் நிலைநிறுத்தப் பட்டுள்ளன. பொருளாதார சுதந்திரம் - பெண்களை ஓரளவு அடிமைத்தளையிலிருந்து விடுவித்திருப்பது உண்மை. ஆனால் ஜாதியக் கட்டமைப்பு அவர்களின் பொருளாதார சுதந்திரத்துக்குப் பிறகும் தொடர்ந்து தடைக் கல்லாகவே நீடித்து வருகிறது.

பார்ப்பனிய சீரழிவு கலாச்சாரத்தைப் புனிதமாகவும், அதையே தங்களின் பெண்மைக்குரிய அடையாளமாக பார்ப்பன உயர்ஜாதி இடைநிலை ஜாதியப் பெண்கள் கருதுகிறார்கள்.  அதன் காரணமாக படி நிலையில் தங்களுக்குக் கீழான ஜாதிய அடுக்கில் சிக்கி நிற்கும் பெண்களை தங்களைப் போலவே கருதுகிற மனநிலை இல்லை.  

பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுக்கக் கூடிய சமூகக் கவலையுள்ள மாற்றத்தை விரும்பும் அனைவருமே பெண்கள் மீதான ஆணாதிக்க வன்முறை என்ற எல்லையோடு நின்று விடாமல், ஜாதிய அமைப்புக்கும் பெண்ணடிமையை நியாயப்படுத்தும் சாஸ்திர, சடங்கு, சம்பிரதாயங் களுக்கும் புனிதமாகப் போற்றப்படும் மதவாதத்துக்கும் எதிராகக் குரல் கொடுக்க முன் வர வேண்டும்.

நிலவுடைமையும் நிலக் குவியலும் முற்றாக தகர்க்கப்படும் போதே ஜாதியத்தின் ஆணிவேர்களை அழிக்க முடியும் என்ற சித்தாந்தப் பார்வை மட்டும் இந்த ஜாதி சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து விடாது என்பதை கடந்த கால வரலாறுகள் உணர்த்தி வருகின்றன.

தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் நில உரிமைகள் வந்து சேர்ந்தாலும் அந்த உரிமைகளை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள முடியாத சமூகச் சூழலில் கெட்டித் தட்டி கிடக்கிறது. உடைமைகளுக்கு உரித்தான பெண்களும் ஜாதியம் திணித்த பண்பாடுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளத் தயாராக இல்லை என்பதையும் கண்கூடாகவே பார்த்து வருகிறோம். எனவே ஜாதிய சீரழிவு கலாச்சாரம், சடங்கு, மதங்களின் கொடூரங்களைத் தோலுரித்துப் பேசாமல் கடந்து போகும் தத்துவார்த்த நிலைப்பாடுகள் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

உள்ளாட்சிகளில் பெண்களுக்கும் தலித் பெண்களுக்கும் இடஒதுக்கீடு என்ற உரிமை சட்டம் வந்தது உரிமைகளுக்கான முதல் திறவுகோல். இந்தச் சட்டம் உயிர்ப்புடன் செயல்பட சமூகத்தின் ஜாதிய மனநிலைக்கு எதிரான தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும் போதுதான் சட்டத்தின் நோக்கத்தை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும்.

இந்த இடத்தில் ஓட்டு வாங்கும் அரசியல் கட்சிகளைவிட சமுதாய மாற்றத்துக்காகக் களத்தில் நிற்கும் இயக்கங்களின் முக்கியத்துவம் மேலும் கூடுதலாகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விடுதலை இராசேந்திரன்

Pin It