மக்கள் கவிஞர் இன்குலாப் (73) டிசம்பர் முதல் தேதி சென்னையில் முடிவெய்திவிட்டார். சமரசத்துக்கு இடமில்லாத கவிஞர். அவரது கவிதைகள் மக்களுக்காகவே பேசின. சென்னைப் புதுக் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியர். ஆனாலும் கவிஞராக, போராளியாக, நாடக ஆசிரியராக  அவரது அடையாளங்கள் விரிந்து நின்றன. மார்க்சிய லெனினியத்திலும் பெரியாரி யத்திலும் அவர் ஈர்க்கப்பட்டார். 1996ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இன்குலாப் இல்லாமல் பெரியார் திராவிடர் கழக மேடைகள் இல்லை என்ற அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்.

ingulab17.9.2000ஆம் ஆண்டு சென்னை இராயப் பேட்டை சைவ முத்தையா முதலி 5ஆவது வீதியில்  பெரியார் திராவிடர் கழகத்துக்கான தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தவர் கவிஞர் இன்குலாப். விளம்பர வெளிச்சங்களிலிருந்து ஒதுங்கி நின்ற உண்மையான மனிதர். தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை 2009ஆம் ஆண்டு ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதையும் ஒரு இலட்சம் ரூபாயையும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியவர். ஈழம் சென்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனை நேரில் சந்தித்தப் பெருமையும் அவருக்கு உண்டு. இஸ்லாமியராக பிறந்தாலும் சுய மத மறுப்பாளர் என்பது அவரது தனிச் சிறப்பு. கழகச் சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் காஞ்சி மாவட்டம் காட்டாங்கொளத்தூரிலுள்ள அவரது இல்லம் சென்று அவரது உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினர். அவரது விருப்பப்படி அவரது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு கொடையளிக்கப்பட்டது.

‘ஆனால்’ என்ற தலைப்பில தொகுக்கப்பட் டுள்ள அவரது கட்டுரை ஒன்றிலிருந்து சில பகுதிகள்:

மூவேந்தர்களின் கொடிகள் தொடங்கி

மூவண்ணக் கொடியின்

இன்று வரைக்கும்

எல்லாக் கொடிகளும் ஏற்றப்படுவது

எந்த நூலால்?

பூணூலால்.

எனவே யாரினும் கூடுதலாக இந்த ஜாதிக்கே அதிகாரம் குவிக்கப்பட்ட ஒரு பாரதம் வேண்டும். இந்தப் பார்ப்பனர்களுக்கு தனிமொழி எதுவு மில்லை. இவர்கள் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்  பேசினாலும் ஆத்மாவை வடமொழிக்கே அடகு வைத்தவர்கள்.

இந்தியாவில் எந்த மாநிலத்தில் பார்ப்பனர்கள் பிறந்தாலும் அவர்களின் சங்கமத் துறையாக சமஸ்கிருதம் இருக்கிறது. அவர்களை ஒன்றுபடுத்தும் கயிறாகப் பூணூல் இருக்கிறது.

அதனால் மொழிகளால் அடையாளம் காணப்படும் தேசிய இனங்களின் உரிமை, மேன்மை, விடுதலை என்பவை இந்தப் பார்ப்பனர்களின் அடிப்படை நலன்களுக்கு மாறானவை. எனவே இவற்றை இவர்கள் துச்சமாகக் கருதுகிறார்கள். சோவிலிருந்து எஸ்.வி.சேகர் வரை இந்த விழுமியங்கள் இழிவுபடுத்தத் தயங்குவதில்லை. ஒடுக்கப்பட்ட தேசிய இனங் களை மட்டுமல்ல உரிமைக்குப் போராடும் பாட்டாளி மக்களின் போராட்டங்களும் இந்தத் தன்னலவாதிகளால் கேவலப்படுத்தப்படுகின்றன. நியாயமான உரிமை வேட்கைகளுக்கு எதிராக இந்திய அரசு தொடுக்கும் தாக்குதல்களில், இவர்கள் பண்பாட்டுப் பிரிவுக்குத் தலைமை தாங்குகிறார்கள். தாக்குகிறார்கள். ஏனெனில் அனைத்துப் பண்பாட்டுத்  தளங்களும் இவர்களது கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

புத்தர் காலத்திலேயே பேச்சு வழக்கு இழந்துபோன மொழி சமஸ்கிருதம். தமது சிந்தனைகளை மக்கள் பேசாத சமஸ்கிருத்தில் தொகுக்க வேண்டாம் என்று தம் மாணவர்களுக்குப் புத்தர் அறிவுரை கூறினார். இருந்தும் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தின் அடையாளமாகச் சமஸ்கிருதத்தைப் பார்க்கின்றனர். செத்துப் போன இந்த மொழியை அரியணையில் ஏற்ற முடியாததால் இதனுடைய சாயல் பெற்ற இந்தி மொழியை ஆட்சி மொழியாக்குவதில் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள அனைத்துப் பார்ப்பனர்களும் ஒன்றுபட்டு நிற்கின்றனர். 1905இல், இந்து மத மீட்புவாதியான திலகர், சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்துஸ்தானிதான் இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்றார். இன்று இந்தி மொழி தனது வளர்ச்சிக்கு முதன்மையாக சமஸ்கிருதச் சொற் களஞ்சியத்திலிருந்தே வேண்டிய சொற்களைப் பெற வேண்டும் என்றும் பிற இந்திய மொழிகளிலிருந்து தேவைப்பட்டால் பெறலாம் என்றும் இந்திய அரசியல் சட்டம் வழி காட்டிக் கொண்டிருக்கிறது. அதாவது திலகர் போன்ற இந்துமத மீட்புவாதிகளின் வேட்கையை இந்திய அரசியல் சட்டம் நிறைவு செய்து கொண்டிருக்கிறது.

இதனால் பிற தேசிய இனங்களில் மொழி, பண்பாடு முதலியவை அழிந்து போகலாம். உண்மையில் அவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கிறது.

மேலும் பெரம்பலூர் வட்டத்தில் குளப்பாடி கிராமத்தில் தீண்டப்படாத மக்கள், கிணற்று நீரைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக தண்ணீருக்குள் மின்சாரம் பாய்ச்சி இருந்தனர். தண்ணீர் குடிக்கச் சென்ற தலித் குழந்தைகள் மடிந்தார்கள். அப்போது கவிஞர் இன்குலாப் எழுதிய கவிதை இது.

மனுசங்கடா நாங்க மனுசங்கடா

உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள

மனுசங்கடா நாங்க மனுசங்கடா

எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா - உங்க

இழுப்புக்கெல்லாம் பணியறதே எங்களின் கணக்கா

உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா

நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா

உங்க தலைவன் பொறந்த நாளு போ°டர் ஒட்டவும்

உங்க ஊர்வலத்துல தர்ம அடிய வாங்கிக் கட்டவும் - அட

எங்க முதகு நீங்க ஏறும் ஏணியாகவும் - நாங்க

இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்

குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது

தண்ணியும் தீயாச் சுட்டது - இந்த

ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது - உங்க

சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது

எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க - நாங்க

எரியும்போது எவன் மசுரப் புடுங்கப் போனீங்க - டேய்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா

உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள

மனுசங்கடா நாங்க மனுசங்கடா.

Pin It