ஊரில்
ஊர்த் தெருவில்
அக்கம் பக்கத்து கிராமங்களில்
ஏழூரு பஞ்சாயத்தில்
எட்டுப்பட்டிகளில்
இன்று அதிகாலையில் செத்துப்போனதாய்
சொல்லப்பட்டவன்
நேற்றுவரை ஜாதிநோயில் கிடந்தவன்.

உயிரோடு இருந்தவரை
உன்னை அவன் தெருவில் வரவிட்டதில்லை
உன் சகோதரன் வாயில் பீ திணித்ததும்
உன் மாமன் மைத்துனனை வெட்டிச் சாய்த்ததும்
உன் பெண்களை வலியப்புணர்ந்ததும் அவனே.

கோயில் கொடைக்கு
கொட்டிக் கொடுத்திருக்கிறான்
கொலையாளியை ஜாமினில் எடுத்திருக்கிறான்
நெஞ்சக்கறையை வேட்டியில் தோய்த்து
கட்டித் திரிந்தவன்
ஜாதி ஜனத்துக்கே சகலமும் செய்வான்
உனக்கு ஒரு பைசா ஈந்ததில்லை.

நீ எப்போதும் அவனை
சாமியே என்பாய்
அவனோ உன்னை
என்னடா நாயே
என்றுகூட நினைத்ததில்லை.

உன் உழைப்புக்கு கூலிகொடுத்ததை
உபகாரமாக நீ நினைக்க வேண்டியதில்லை
நீயின்றி அவன் பிழைப்பில்லை

நிலைமை இவ்வாறிருக்க
பிறகு என்ன மயித்துக்கு
அவன் பிணத்தின்முன் நின்று
பறையடித்துக் கொண்டிருக்கிறாய்?

மானமற்றவனே
செத்துட்டான் செத்துட்டான் என்று
அவனைப் புதைக்கும்வரை
நீ பறையடித்து சொல்ல வேண்டிய
அவசியமென்ன?

சுவரொட்டி அடிக்கட்டும்
ஆட்டோவில் மைக்செட் கட்டி
ஊர்ஊராய்ப் போய் கத்தட்டும்
கேபிள் தொலைக்காட்சியில்
விளம்பரம் தரட்டும்
உனக்கென்ன காச்சாரம்?

வயிற்றுக்கு இல்லையென்றால்
உடல் வற்ற உழை; செத்துத் தொலை
தாக்கினால் தாக்கு

ஓரம் ஒதுக்கமாய் நின்று
பார்வை எச்சிலைத் துடைத்தபடி
கைவிடப்பட்ட தனிமையில்
நீ பறையடிப்பது
காலம் நெடுக
மாரடித்துப் புலம்புவதாய்த் தோன்றுகிறது
நெஞ்சைப் பிளக்கிறது

தளர்ந்த உடம்பு குலுங்கக் குலுங்க நீயும்
தோள்கள் ஓயாமல் உன் பேரனும்
அடித்துக் கிளப்புவது
உனக்கு இசை
அவனுக்கோ தீட்டுச்சத்தம்

சபைகளில் ஏறி நீ இசைத்தால்
சன்மானங்கள் கிடைக்கும்
சாதிப்பயலுக்கு வாசித்தால்
சல்லிதானே கிடைக்கும்.

பறையடிக்க மறுத்ததற்காய்
கட்டை விரல் இழந்தவரின்
ரத்தம் மேலும் வடிய வடிய
இன்னும் ஏன் இசைக்கிறாய்?

அடிப்பதை நிறுத்து
குச்சியை உடைத்து
அந்த மேளத்தைக் கிழித்து
தீயிட்டுக் கொளுத்து

- அழகிய பெரியவன்

Pin It