நண்பர்களே! 

ஜெய் பீம் காம்ரேட் … JAI BHIM COMRADE 

இந்த முழக்கம் நாடு முழுவதும் பற்றிப் பரவிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள், அறிவுதுறையினர் இதில் முன்னணி வகிக்கின்றனர். அய்த்திராபாத் பல்கலை கழகம் ரோஹித் விமுலா மரணம் ஏற்படுத்திய சிறுபொறி இன்று ஜேன்யு பல்கலை கழகம் நாட்டின் தலைநகர் வரை காட்டு தீயாய் பரவி இருக்கின்றது. இந்துத்துவா அரசியலுக்கு மாற்றான பல அரசியல் முனைப்புகளை இணைக்கிறது ஆனந்த் பட்வர்த்தன் உருவாக்கிய ஜெய் பீம் காம்ரேட்(2011) ஆவணப்படம். மூன்று மணி நேரம், 20 நிமிடங்கள் ஓடக்கூடியது. "ஜெய் பீம் காம்ரேட்" 14 வருடங்களுக்கும் மேலாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

1997-ஆம் ஆண்டு. ஜூலை 11-ம் தேதி. காலை நேரம். மும்பையில் தலித் மக்கள் வசிக்கும் ராமாபாய் நகர் பகுதியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு 'செருப்பு மாலை'அணிவிக்கப்பட்டிருந்தது. 2,000ஆண்டுகளுக்கு மேலாக மனித வாழ்வின் அடிப்படை வசதிகளான உணவு, உடை, வீடு ஆகியவை மறுக்கப்பட்டு, சுதந்திர இந்தியாவின் அடிமைகளாகவே வாழும் தலித் மக்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர் அம்பேத்கர். சாதிய வேறுபாட்டையும் தீண்டாமையையும் ஒழிக்க கடுமையாக போராடி, பின் இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கர் மறைந்து 20ஆண்டுகளுக்கு பிறகும் தொடர்ந்த இந்த சாதிய வெறியை எதிர்த்து கொதித்து எழுந்தது ராமாபாய் நகர். தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, தலித் மக்களின் உரிமைகளையும் முன்னேற்றத்தையும் தனது புரட்சிகர பாடல்கள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த மராட்டிய இடதுசாரி தலித் கவிஞர் விலாஸ் கோக்ரே, "இந்நாட்டில் இனி போராட்டத்திற்கு மதிப்பில்லை" என்று மனமுடைந்து தன் உயிரை மாய்ந்துக்கொண்டார்.

இந்த நிகழ்வுகளை மையப்படுத்தி பயணிக்கும் இப்படம், காலங்காலமாகத் துப்புரவு தொழிலாளர்களாகவே நசுக்கப்படும் தலித் மக்களின் அவலநிலை,அவர்களுக்கு கிடைக்கும் சொற்பமான இடஒதுக்கீட்டைக்கூட கேள்விக்கேட்கும் மனநிலை, தலித் உயிர்களை வேட்டையாடும் அதிகார வர்க்கம், அவர்களை தங்களது ஒட்டுக்காக காப்பாற்றும் சாதிய அரசியல்வாதிகள், பால் தாக்கரே,மனோகர் ஜோஷி போன்ற அரசியல்வாதிகளின் சாதிய வெறியைத் தூண்டும் பேச்சுகள்,ஒடுக்கப்பட்ட மக்கள் மீது போடப்படும் பொய் வழக்குகள்,தொடரப்படும் வன்முறைகள் என முட்கள் நிறைந்த பாதையில் கொண்டுச்செல்கிறது. சாதி வேறுபாட்டை பிரதானமாக பேசும் இப்படம், பெண்களுக்கு ஏற்படும் அதீத கொடுமைகளையும்வெளிப்படுத்தத் தவறவில்லை. இத்தனை துயரங்களையும் தாண்டி ஒவ்வொருவரின் முகத்திலும்தெரிவது நம்பிக்கையும் போராட்ட குணமும்தான்.

மக்களிடையே சமத்துவத்தை வலியுறுத்தும் ‘கபீர் கலா மஞ்ச்’ என்ற கலைக்குழு, தலித் மக்களுக்கு எதிரான இதுபோன்றஅடக்குமுறைகளை எதிர்த்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். 5 பேர் கொண்ட இக்குழுவில் ஒரே பெண்ணாக ஷீதல் சாத்தே இடம்பெறுகிறார். இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆனால்,வெகுவிரைவிலேயே இக்குழுவை' நக்சலைட்டு' அமைப்புடன் தொடர்புடையது என தடை செய்யப்படுகிறது. இருப்பினும்,இவர்களின் பாடலும் இசையும் அந்த மக்களிடம் ஒலித்துக்கொண்டே இருப்பதுடன் படம் நிறைவடைகிறது.

மூன்று மணி நேரம் நீளும் இப்படத்தை பார்த்து முடிக்கையில், ஒரு மிகப்பெரிய மனிதப் போராட்டத்திலுள்ள வலி, வேதனை, துணிவு, வலிமை, உறுதி, இழப்பு, கனவு ஆகியவற்றை உணர முடிகிறது.

பாட்டாளி வர்க்க மற்றும் தலித்திய ஒற்றுமையை வலியுறுத்திய இரு பாடகர்களின் வாழ்க்கையைச் சொல்லும் இந்தப் ஆவணப்படம் ஒரு புரட்சிகர இசைப்பயணத்தின் அனுபவத்தை நமக்குத் தருகிறது. இசைப் பயணம் போல் தோன்றும் இந்த ஆங்கில ஆவணப்படத்திற்கு கவித்துவமான, ஆற்றொழுக்கான, அற்புதமான தமிழ் மொழிபெயர்ப்புக்களை ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசனும் அவரது நண்பர்களான மகிழ்நன், மில்லர், வி.எ.சூர்யா, மதியழகன் சுப்பையா போன்றவர்கள் தந்திருக்கிறார்கள்.

“பாடல்களும் கவிதைளும் அரசியலும் கருத்தியல் சரச்சைகளும் கொண்ட இந்த ஆவணப்படம் பல்லடுக்குகள் கொண்ட சொல்முறையை வரித்துக் கொண்டிருக்கிறது. அம்பேத்கரின் வாழ்வும் பங்களிப்பும் பற்றி இப்படம் பேசுகிறது. எழுபதுகள் துவங்கி மராட்டிய மாநிலத்தில் தலித் பாந்தர் இயக்கத்தின் நாற்பதாண்டு கால தோற்றம் வளர்ச்சி தேய்வு சீரழிவு பற்றி இப்படம் பேசுகிறது. இந்துத்துவ சக்திகளிடம், காங்கிரஸ் கட்சியினரிடம், சிவசேனாவிடம் எவ்வாறு மராட்டிய தலித் இயக்கம் சரணடைந்தது என்பது குறித்து இப்படம் பேசுகிறது. மார்க்சியர்களுக்கும் தலித்தியர்களுக்கும் இடையிலான முரண்கள் குறித்தும் இப்படம் பேசுகிறது. தலித் மக்களின் மீது தொடுக்கப்படும் வன்முறைகளை கயர்லாஞ்சி அனுபவத்தை முன்வைத்து இப்படம் பேசுகிறது. அரசு, நீதித்துறை, காவல்துறை போன்றவற்றில் நிலவும் சாதிவெறி பற்றி இப்படம் பேசுகிறது. மரத்வாடாக்கள், சித்பவன் பார்ப்பனர்கள், மோடி பிஜேபி சிவசேனா வகையினர் எவ்வாறு இட ஒதுக்கீட்டுக்கும், வன்கொடுமைச் சட்டத்திற்கும் எதிராக ஒருமித்த சக்தியாகத் திரண்டு வருகிறார்கள் என்பதைப் படம் சொல்கிறது.

அரசு ஒடுக்குமுறை குறித்த அக்கறை இன்றைய தலித் அரசியல் இயக்கங்களிடம் இல்லை என்பதனை இப்படம் சுட்டிக்காட்டுகிறது. மனுஸ்மிருதியை அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் கைகாட்டிவிட்டு, அரச ஒடுக்குமுறையைக் காணாது விடும் போக்கின் ஆபத்தை படம் சுட்டிக்காட்டுகிறது." என்கிறார் விமர்சகர் யமுனா ராஜேந்திரன்.

நாள் : 05-03-2016 வரும் சனிக்கிழமை, மாலை 4 மணி 
இடம் : கவிக்கோ அரங்கம்
6, இரண்டாவது மெயின் ரோடு
சிஐடி காலனி
மியூசிக் அகாதமி அருகில்
மயிலாப்பூர்

திரைப்பட விமர்சன உரை: ஆர். ஆர். சீனிவாசன்

அனைவரும் வாருங்கள்.. அனுமதி இலவசம்.

ஜெய் பீம் காம்ரேட் … JAI BHIM COMRADE முழக்கத்தை உயர்த்தி பிடிப்போம்..!!
ஏற்பாடு : அறிவுச்சுடர் நடுவம். 
பேச : 9940176599

Pin It