அத்தனை வலிமையானவை அவை
அலைகளை உருவாக்கிப் பரப்பும்
அவர்களின் பாதங்கள்
குறுத்தெலும்புகளும் துடிக்கும்
ரத்தக் குழாய்களும்
அவர்களின் ஆற்றல் மூலங்கள்
இயற்கையின் பேரன்பில் மலர்ந்த பூக்கள்
காலப்பாட்டுக்காரனின் உயிர் சுரங்கள்
அழகின் பூக்கூடலில் மணம் பரப்பும்
மனித மொட்டுக்கள்
புன்னகையில் பொய்ம்மை யில்லா
கண்ணாடி மனங்கள்
வாசிக்கப்பட வேண்டிய
மழலைப் பாடங்கள்
உயிர்க்கருக்குள் விளைந்த
உன்னத சித்திரங்கள்
புதிய நோக்கின் பொக்கிஷங்கள்
தளிர்களின் மென்மையில்
வேர்களின் வலிமைகள்
சொற்களைக் கோர்க்கும் உயிரெழுத்துகள்

எழுத்துகள் அழிக்கப்படுகின்றன
வேர்கள் தோண்டப்படுகின்றன
பொக்கிஷங்கள்
கொள்ளையடிக்கப்படுகின்றன
சித்திரங்கள் சீரழிக்கப்படுகின்றன
பாடங்கள் மறக்கப்படுகின்றன
கண்ணாடிகள் உடைக்கப்படுகின்றன
மொட்டுக்கள் பிய்க்கப்படுகின்றன
பாடல்கள் மதுக்கடைகளில்
இசைக்கப்படுகின்றன
ஆற்றல்கள் சுரண்டப்படுகின்றன
பாதங்கள் பொசுக்கப்படுகின்றன

எப்போது விடுவோம்
குழந்தைகளை
குழந்தைகளாய்?

Pin It