கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மோடியின் ஆட்சி ஆர்.எஸ்.எஸ். கட்டுப் பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதற்கு சான்றாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாமிய எதிர்ப்பை முன்வைத்து இந்தியாவில் இந்துக்களை அணி திரட்டி, ‘இந்துத்துவா’ நாடாக மாற்றுவதற்கான திட்டத்தின் கீழ் ‘சங்பரிவார்’ காய் நகர்த்துகிறது. இதற்காகவே அரசின் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

புதுடில்லியில் அமைச்சகங்களில் ‘சவுத் பிளாக்’ என்று அழைக்கப்படும் வெளியுறவுத் துறை அதிகார வலிமையுடன் திகழ்வதாகும். பார்ப்பனர்கள் அதிகாரப் பிடிக்குள் இந்தத் துறை சிக்கியிருக்கிறது. ஈழத் தமிழர்கள் நடத்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு சூழ்ச்சிகரமான செயல் திட்டங்களை உருவாக்கியது இந்த ‘சவுத் பிளாக்’தான்! இப்போது ‘சவுத் பிளாக்’கையே ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ். நேரடியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

பிரதமர் மோடியின் பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருக்கும் அஜீத் டோவல் என்பவரிடம் வெளிநாட்டுத் துறை தொடர்பான கொள்கைகளை முடிவெடுக்கவும் செயல்படுவதற்குமான அதிகாரங்கள் வந்துவிட்டன.

மோடியே இந்த அதிகாரத்தை வழங்கிவிட்டார். அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, அய்க்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட நாடுகளுடன் சிறப்பு விவாதங்கள் நேரடிப் பேச்சு வார்த்தைகளை இவர்தான் நடத்துகிறார். சுஷ்மா சுவராஜ் வெளி விவகாரத்துறை அமைச்சர். அவருக்கோ, அவரது அமைச்சக அதிகாரிகளுக்கோ, வெளியுறவுக் கொள்கையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய முடிவுகளும் தெரியாது.

ஏற்கெனவே பிரதமர்களாக இருந்த நேரு, லால்பகதூர் சாஸ்திரி போன்றவர்கள், வெளியுறவுக் கொள்கைகளைத் தாங்களே தீர்மானிப்பவர்களாக இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அதற்கும் மோடியின் அணுகுமுறைக்கும் வேறுபாடு உண்டு. மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைமை நியமித்துள்ள அதிகாரிகளின் பிடிக்குள் செயல்பட்டு வருகிறார்.

தற்போது மோடியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித்டோவல், பிரதமர் முதன்மைச் செயலாளராக இருக்கும் நிர்பேந்திர மிஸ்ரா, பிரதமர் அலுவலகத்தில் அதிகாரமிக்கவராக திகழும் டேட்ராய் ஆகியோர், ‘விவேகானந்தா சர்வதேச மய்யம்’ என்ற அமைப்பிலிருந்து வந்தவர்கள். இது தவிர 3 பார்ப்பன காபினட் அமைச்சர்களும் இந்த அமைப்பிலிருந்து வந்தவர்கள்.

பார்ப்பன உயர் அதிகாரிகள், செல்வாக்கு மிக்க உயர் பதவியில் இருப்பவர்களைக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். 1972இல் இந்த அமைப்பை உருவாக்கியது. அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் செயலாளராக இருந்த ஏக்னாத் ராணடே என்ற வங்காளப் பார்ப்பனர் இந்த அமைப்பைத் தொடங்கினார். இந்த அதிகாரிகள் வழியாக ஆர்.எஸ்.எஸ். தனது கட்டுப்பாட்டில் வெளியுறவுத் துறையைக் கொண்டு வந்துவிட்டது.

மே 13ஆம் தேதி ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் ‘நிழலில் சவுத் பிளாக்’ ((South block in the Shade) என்ற தலைப்பில் சுஷார் அரிதார் என்ற பெண் பத்திரிகை யாளர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரும், அமைச்சக அதிகாரிகளும் முழுமை யாக ஓரங்கட்டப்பட்டு விட்டதை பல்வேறு சான்று களுடன் விவரிக்கிறது அக்கட்டுரை.

வெளிநாடுகளில் வாழும் இந்துத்துவா ஆதரவுப் பார்ப்பனர்கள் - அதிகாரமிக்கவர்களின் ஆலோசனைகள் பெற்று அவர்களோடு இணைந்து செயல்படும் விவேகானந்தா ஆய்வு மய்யம் மற்றும் ‘இந்தியன் பவுன்டேஷன்’ என்ற இரண்டு தனியார் அமைப்புகள் தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை வழி நடத்துகின்றன என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் இலங்கை பிரதமர் இரணில் விக்ரம் சிங்கே இந்தியாவுக்கு அழைக்கப்பட்டார். ‘இந்தியன் பவுன்டேஷன்’ அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தான் முதலில் அவர் பேசினார். அப்போது அவர் தெரிவித்த கருத்து மிகவும் முக்கியமானது.

“இரண்டு சந்திப்புகளுக்காக மட்டும் நான் வந்திருக்கிறேன்; ஒன்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு; இரண்டாவது இந்தியன் பவுன்டேஷன் அமைப்பு பிரதிநிதிகளுடன் சந்திப்பு.” இதிலிருந்து இந்த அமைப்பின் முக்கியத்துவத்தை புரிந்த கொள்ள முடியும். பாகிஸ்தான் நாட்டுடன் அரசு பின்பற்றி வரும் அணுகுமுறைகளையும் ஆர்.எஸ்.எஸ். தான் தீர்மானிக்கிறது என்று ‘இந்து’ கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.