“தேசத்தின் முன்னேற்றத்தை உத்தேசித்தும், தேசீய ஒற்றுமையை உத்தேசித்தும் அரசியல் சம்மந்தமான சகல பதவிகளிலும் இந்து சமூகத்தில் பிராமணர் - பிராமணரல்லாதார், தீண்டாதார் என்போர் ஆகிய இந்த மூன்று சமூகத்தாருக்கும் அவரவர் ஜனத்தொகையை அனுசரித்து பிரதிநிதி ஸ்தானம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யவேண்டுமாய் மாகாண மகாநாட்டை கேட்டுக் கொள்வதோடு இத்தீர்மானத்தை மாகாண மகாநாடு மூலமாய் காங்கிரசையும் வலியுருத்தும்படி தீர்மானிக்கிறது” என்னும் தீர்மானத்தை பிரேரேபித்துப் பேசியதாவது:-

நாம் ஒவ்வொருவரும், சுயராஜ்யம் அடைய பாடுபடுவதாய் சொல்லுகிறோம், அதற்காக எவ்வளவோ கஷ்டத்தையும் அனுபவிக்கிறோம். சுயராஜ்யம் கிடைத்தால் அது பொதுமக்கள் ராஜ்யமாயிருக்க வேண்டாமா? நாட்டின் தற்கால நிலைமையைப் பார்த்தால், சுயராஜ்யமென்பது பிராமண ராஜ்யம்தான் என்னும் பயம், இப்போது மக்களிடை உண்டாகி வருகிறது. பிரிட்டிஷ்ஆட்சி புரிகிற இக்காலத்திலேயே, மனிதர்களைத் தெருவில் நடக்கவிடக்கூடாது குளம் குட்டைகளில் தண்ணீர் எடுக்கவிடக்கூடாது என்னும் பல கொடுமைகள் நடைபெறுகிறபோது ராஜ்ய அதிகாரம் ஒருவகுப்பார் கைக்கே வந்து விடுமானால் இனி என்ன கொடுமைகள் செய்ய அஞ்சுவார்களென்று, ஜனங்கள் பயப்படுகிறார்கள்.

தேச விடுதலைக்கு தியாகம் தேவையாயிருந்த காலத்தில் புறமுதுகு காண்பித்து ஓடிப்போன ஆசாமிகளெல்லாம் ஏதோ சிலர் செய்த தியாகத்தினால் ஏற்பட்ட பலனை அனுபவிக்க வெட்கமில்லாமல் முன்வந்து சூழ்ச்சிகள் செய்து பலனடைவதை பார்க்கிறபோது இவர்களை எப்படி நம்ப முடியும்? வெட்கங்கெட்டவன் சொந்தக்காரன் என்பது போல விவஸ்தையற்ற ஒரு கூட்டத்தார் தேசத்திலிருந்துகொண்டு, தேசத்தைப் பாழ்பண்ணிக் கொண்டுவருவதை நாம் பார்த்துக்கொண்டே வருகிறோம். சாதுக்களான ஏழுகோடி ஜனத்தொகை கொண்ட ஒரு பெரிய கூட்டம், மிருகங்களிலும் கேவலமாய் நடத்தப்படுவதையும் பார்த்து வருகிறோம்.

இப்படி ஏனிருக்க வேண்டும்? அந்தந்த கூட்டத்திற்கு தகுந்த அளவு, அவரவர்களுக்கு அரசியல் முதலிய உரிமைகளை ஒதுக்கிவைத்து விடுவோமேயானால் சாதுக்களெல்லாம் மிருகங்களாகவும், அயோக்கியர்களெல்லாம் சுவாமிகளாகவும் ஆகிவிட முடியுமா? கட்டுதிட்ட அளவில்லாததனால், கையில் பலத்தவன் காரியமென்பதுபோல், ஏமாற்ற சக்தியுள்ளவனும்; செல்வாக்குள்ளவனும் மேலேவந்து விடுகிறான். இதனால் ஒருவருக்கொ ருவர், பரஸ்பர நம்பிக்கையில்லாமலும், ஒற்றுமையில்லாமலும் இவர்களை எப்படி ஏமாற்றலாமென்பதே ஒரு கூட்டத்தாருடைய ஜென்மக்கூறாகவும், இவர்கள் தந்திரத்திலிருந்து எப்படி தப்புவதென்பது மற்றக் கூட்டத்தாருடைய கவலையாகவும் போய்விடுகிறது.

இந்தநிலைமை, அரசாட்சி புரிபவர்களுக்கு வெகு அனுகூலமாய் ஏற்பட்டுப் போய்விடுகிறது. அதோடு மாத்திரமல்லாமல், அரசாங்கத்தை நடத்துவிக்க வகுப்புக்கு வகுப்பு போட்டி போட்டுக்கொண்டு ஒற்றர்களாகவும், அடிமைகளாகவும் அரசாங்கத்தையே நாடுவதாய் விடுகிறது. இக்குணங்கள் நமது நாட்டை விட்டு அகல வேண்டுமானால், ஒருவகுப்புக்கு மற்றொரு வகுப்பு நம்பிக்கை ஏற்படும்படி ஒருவர் பாத்தியத்தில் மற்றொருவர் பிரவேசிக்காதபடி பந்தோபஸ்த்து ஏற்பட்டுப் போக வேண்டும். அவ்வித பந்தோபஸ்துதான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ மென்பது நான் பிரேரேபித்திருக்கிற தீர்மானத்தில் இந்த தத்துவம் தான் அடங்கியிருக்கிறது. இது இப்பொழுது மாத்திரம் ஏற்பட்டதல்ல. நீண்ட நாளாகவே இக்கிளர்ச்சி நமது நாட்டில் ஏற்பட்டிருந்தாலும் எப்படியெப்படியோ அதை ஒரு வகுப்பார் கட்டுப்பாடாய் சூழ்ச்சிகள் செய்து சமயத்திற் கேற்றவாறு நடந்து பாமர ஜனங்களை சுவாதீனப் படுத்திக்கொண்டு, வெளிக்கு தெரியாமல் அடக்கிக்கொண்டு வருகிறார்கள். ஆகையால் நீங்களெல்லோரும் நன்றாய் யோசித்து பார்க்கவேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

- 29.11.1925 குடி அரசு  தொடர்ச்சி

குறிப்பு: 22.11.1925 இல் காஞ்சீபுரத்தில் நடைபெற்ற பிராமணரல்லாதார் மகாநாட்டில் சொற்பொழிவு

(குடி அரசு - சொற்பொழிவு - 06.12.1925)

Pin It