ஒரு நண்பர் துக்ளக் 28.5.2014 இதழில் வெளி வந்திருக்கும் 'அதிலென்ன தவறு?' என்ற கட்டுரையை அனுப்பி இருந்தார். அதில் ஆர்.எஸ்.எஸ்.இன் யோசனைகளைக் கேட்பதில் தவறு இல்லை என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சில அரசியல் விமர்சகர்களும், அந்நிய நிதியைப் பெற்று இயங்கும் அமைப்புகளும் திராவிடர் கழகத்தின் யோசனைகளைப் பெறுவதை விமர்சிப்பதில்லை என்றும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.இன் யோசனையைக் கேட்பதை விமர்சிப்பதாகவும் கட்டுரையாளர் கூறி இருக்கிறார். நடைமுறை உண்மை என்னவோ அதற்கு நேர் மாறாக இருக்கிறது. தமிழ்நாட்டின் தலைசிறந்த மகப்பேறு மருத்துவராக இருந்த பழனியப்பனின் தந்தை பூவராகன் அவர்கள் தாசில்தாராக இருந்த பொழுது பெரியாரைச் சந்தித்தார் என்பதற்காக அவர் மேல் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் சங்கராச்சாரியாரைச் சந்தித்ததற்காகவோ ஆர்.எஸ்.எஸ்.இல் இருந்ததற்காகவோ யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆர்.எஸ்.எஸ். முழுமையான சுதேசி அமைப்பு என்று கூறுவதைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. உலகில் பொதுவுடைமைத் தத்துவம் வளர்ச்சி அடைவதைக் கண்டு கிலி பிடித்துப் போயிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் தாங்கள் கம்யூனிச விரோதிகள் என்று சத்தியம் செய்து, அவர்களுடைய ஆதரவில் இந்தியாவில் கம்யூனிச இயக்கங்கள் வளராமல் தடுப்பதற்காக வளர அனுமதிக்கப்பட்டது தான் ஆர்.எஸ்.எஸ். ஹிட்லரை ஆதரித்தவர்களும் இவர்களே.
ஆர்.எஸ்.எஸ். தேச பக்த இயக்கம் என்றால் சிரிப்பு தான் வருகிறது. இந்திய நாட்டில் பெரும்பான்மையாக ஒடுக்கப்பட்ட மக்களிளின் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளைப் பற்றி எள்ளளவும் அக்கறை கொள்ளாதது தான் இவ்வியக்கம். அவர்களை எவ்வகையிலாவது அடக்கி ஒடுக்கி வைப்பதில் தான் இவ்வியக்கத்திற்கு ஆர்வம் இருக்கிறது. அதற்காக அவர்கள் துயர் துடைப்பு, இரத்த தானம் என்ற எந்த வேஷத்தை வேண்டுமானாலும் (அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களை களத்தில் இறக்கிவிட்டு) போடுவார்கள். ஆனால் அவர்கள் தங்கள் உரிமைகளை அடையும் போராட்டத்தை ஒடுக்காமல் இருக்க மாட்டார்கள். இதை மேலோட்டமாகப் பார்த்து ஜீரணிப்பதற்கு, சிலருக்குச் சிரமமாக இருக்கலாம். அவர்கள் தயவு செய்து (மாதம் இரு முறை பத்திரிக்கையான மக்கள் நெஞ்சம் 28.10.2012 இதழில் வெளிவந்த) கீழ் கண்ட கட்டுரையைப் படிக்கவும்.
இட ஒதுக்கீட்டை ஆதரிக்காதவர்கள் (மெளனம் சாதிப்பவர்கள் உட்பட) தேசத் துரோகிகளே
இட ஒதுக்கீடு என்பது திறமையான நிர்வாகத்திற்கு எதிரி என்றும், இட ஒதுக்கீட்டினால் திறமையற்றவர்கள் உயர்நிலைகளுக்கு வந்து விடுவார்கள் என்றும், இது நாட்டின் நிர்வாகத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெருந்தடை என்றும், உயர்சாதிக் கும்பல் சளைக்காமல் கூறி வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களிலும் பலர் இக்கருத்தை உண்மை என நம்புகிறார்கள்.
இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களும், உயர்சாதிக் கும்பலினரின் கருத்துக்களுக்கு நேர் எதிரான வாதங்களை வைக்கத் தவறுகின்றனர். இட ஒதுக்கீடு காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய சலுகை என்று வாதிடுகின்றனர். இன்னும் சற்றுப் போனால் இது சலுகை அல்ல, உரிமை என்று குரல் கொடுக்கின்றனர். சென்னை, இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தில் (I.I.T) 21.12.2008 அன்று உரையாற்றிய நோபல் பரிசு வெற்றியாளரும் பொருளாதார மேதையுமான அமர்த்தியா சென் இக்கருத்தை இன்னும் சற்றுத் தெளிவாகக் கூறி இருக்கிறார். அவர் அங்கு உரையாற்றுகையில் பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு உள்ளனர் என்றும் இந்திய தொழில் தொழில் நுட்ப நிறுவனத்தினர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நிற்பது சமூக நலனுக்கும் நாட்டு முன்னேற்றத்திற்கும் நல்லது அல்ல என்றும் இடித்துக் கூறி இருக்கிறார்.
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நிற்பது சமூக நலனுக்கும் நாட்டு நலனுக்கும் நல்லது அல்ல என்று அமர்த்தியா சென் கூறி இருப்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
அனைத்து வகுப்பு மக்களிலும் அதிகமான திறமை கொண்டவர்கள் முதல் குறைந்த அறிவுத் திறன் கொண்டவர்கள் வரையிலான அனைத்து வகை மக்களும் இருக்கவே செய்கின்றனர். பார்ப்பனர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. அதிகமான அறிவுத் திறன் கொண்டோர் தான் அதிகாரம் கொண்ட, ஊதியம் மிகுந்த, உடல் உழைப்பு இல்லாத வேலைகளில் இருக்க முடியும்; குறைந்த அறிவுத் திறன் உடையோர் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அப்படித் தான் சமூகம் இயங்க முடியும் என்றும் அதிகாரத்தில் உள்ள உயர்சாதிக் கும்பலினர் கூறுகிறார்கள்.
ஆனால் நடைமுறை உண்மை என்ன? பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள், அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி, சொகுசான வேலைகளைச் செய்கிறார்கள். இது திறமைக் குறைவான பார்ப்பனர்கள் செய்ய வேண்டிய கீழ் நிலை வேலைகளை, ஒடுக்கப்பட்ட மக்களில் உள்ள திறமைசாலிகள் செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு திறமைசாலிகள் கீழ்நிலை வேலைகளைச் செய்ய வேண்டி இருப்பதானது, மனித வளத்தைப் பெரிதும் வீணடிக்கும் செயல். இதனால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.
இதைவிடக் கொடுமை என்னவென்றால், திறமைக் குறைவான பார்ப்பனர்கள் நிர்வாக வேலையில் ஈடுபடுவது தான். நிர்வாக வேலைகளில் திறமைக் குறைவானவர்கள் ஈடுபடும்பொழுது நிர்வாகம் சீர்கேடு அடைகிறது. நிர்வாகம் சீர்கேடு அடைந்தால் அனைத்துமே சீர்கேடு அடைகின்றன. இது நாட்டின் முன்னேற்றத்தைக் கொடூரமாகப் பாதிக்கிறது.
இதைவிடக் கொடூரமான கொடுமை என்னவென்றால், அப்படிப்பட்ட திறமைக் குறைவான பார்ப்பனர்களை உயர்நிலைகளில் வைத்து அரவணைக்கும் மற்ற பார்ப்பனர்களின் செயல்களே. அவர்களுக்கு தேசபக்தி இருந்தால் (தேசபக்தி இல்லாவிட்டாலும் பரவாயில்லை; தேசத் துரோகிகளாக இல்லாமல் இருந்தால்) நாட்டு நிர்வாகத்தைச் சீரழிக்கும் திறமைக் குறைவான பார்ப்பனர்களை வெளியேற்றி விட்டு, அவ்விடங்களில் கவனிப்பார் அற்றுக் கிடக்கும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகளை வைத்து நிரப்ப வேண்டும். அவ்வாறு செய்ய மறுக்கும் பார்ப்பனர்கள் தேசத் துரோகிகளே.
பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்கள் உண்டு என்பதற்கும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் திறமைசாலிகள் உண்டு என்பதற்கும் எடுத்துக்காட்டு வேண்டும் என்கிறீர்களா?
இதற்கு எடுத்துக்காட்டு எதுவும் தேவையில்லை. இது விதிவிலக்கு இல்லாத இயற்கை நியதி. அது மட்டும் அல்ல; புனித நூல்களாகக் கருதப்படும் பகவத் கீதை, மனு ஸ்மிருதி, பராஸர ஸ்மிருதி போன்றவற்றிலும் இந்த இயற்கையின் நியதி தெளிவாக ஒப்புக் கொள்ளப்பட்டு உள்ளது. இதிலும் திருப்தி அடைய மனம் இல்லாதவர்கள் கண்கூடான கீழ்கண்ட நிகழ்வுகளை யோசித்துப் பார்க்கலாம்.
இட ஒதுக்கீட்டிற்குத் தமிழ் நாடு முன்னோடியாக இருப்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 50 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டின் காரணமாகத் தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பலர் மருத்துவர்களாக உருவாகி உள்ளனர். நாட்டின் பிற மாநிலங்களில் இப்படிப்பட்ட நிகழ்வு நடைபெறவில்லை. முக்கியமாக வட மாநிலங்கள் இதில் மிகவும் பின் தங்கி உள்ளன. இது எப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்கி உள்ளது தெரியுமா? இட ஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்பு பெற்றவர்கள் திறமைசாலிகள் என்றும், பொதுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் திறமைக் குறைவானவர்கள் என்றும் தெளிவாகத் தெரியும்படியான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
இன்று உலகெங்கிலும் இருந்து சிகிச்சை பெற மக்கள், இட ஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்பு பெற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மருத்துவர்கள் நிறைந்துள்ள சென்னை மாநகருக்குத் தான் வருகிறார்கள். இட ஒதுக்கீடு செயல்படாத, பொதுப் போட்டியில் வென்ற, உயர்சாதிக் கும்பலினரைச் சேர்ந்த மருத்துவர்கள் நிறைந்து உள்ள டெல்லியிலும், பிற இடங்களிலும் இப்படி ஒரு நிகழ்வு நடைபெறக் காணோம். ஆசியாவிலேயே சிறந்த கண் மருத்துவமனை மதுரையில் உள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மருத்துவர்கள் அதிகம் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை தான். இதிலிருந்து என்ன தெரிகிறது? திறமைசாலிகள் வேண்டும் என்றால் அவர்களை ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடம் தான் தேட வேண்டும் என்று புரியவில்லையா?
இது மட்டுமா? அமெரிக்கப் பொருளாதாரச் சரிவு பற்றிய செய்தி வந்த உடன், தன் குடும்பத்தாரைக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட கார்த்திக் ராஜாராம் திறமையற்றவர் என்று அவருடைய மேலதிகாரியும், அவர் படித்த சென்னை ஐ.ஐ.டி பேராசிரியரும் கூறினார்களே? அப்படிப்பட்ட திறமையற்றவர் ஐ.ஐ.டி.யில் எப்படிச் சேர முடிந்தது? இதிலிருந்தே உயர்சாதிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் திறமைக் குறைவானவர்களாக இருந்தாலும் பொதுப் போட்டியில் வெல்ல முடிகிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகவில்லையா? ஆகவே பொதுப் போட்டி முறை திறமையற்றவர்களை உயர்நிலைகளுக்குக் கொண்டு செல்கிறது என்றும், இட ஒதுக்கீடு தான் உண்மையான திறமைசாலிகளைத் தெரிந்தெடுக்கிறது என்றும் புலனாகிறது அல்லவா? ஆகவே இட ஒதுக்கீட்டை ஒரு சலுகை என்று கூறுவது அயோக்கியத்தனம்; உரிமை என்று கூறுவது ஓரளவு சரி; திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரே வழி என்பதே முழு உண்மையும் சரியான அணுகுமுறையும் ஆகும்.
ஆகவே தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மத சிறுபான்மையினர், உயர்சாதியினர் ஆகியோருக்கு அவரவர்களின் மக்கட்தொகை விகிதத்தில் அரசுத் துறை, தனியார் துறை, மற்றும் சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் அனைத்து நிலைகளிலும் விகிதாச்சாரப் பங்கீடு அளிப்பது தான் நாட்டின் நிர்வாகத்திற்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் நன்மை பயக்கும் என்று தெளிவாக விளங்குகிறது.
ஆனால் பொதுப் போட்டி என்ற பெயரில், திறமையற்ற பார்ப்பனர்களை உயர்நிலைகளுக்கு அனுப்பி வைப்பது நாட்டு நிர்வாகத்திற்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் கேடு பயப்பதாகும்.
ஆகவே இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகச் செயல்படாமல் இருப்பது கொடூரமான தேசத் துரோகம் ஆகும். பார்ப்பனர்களைக் கண்டு அஞ்சியோ, அவர்களின் மயக்கு மொழிப் பேச்சுகளுக்கு இரையாகியோ, இட ஒதுக்கீட்டைப் பற்றி மெளனம் சாதிப்பவர்களும் தேசத் துரோகிகளே.
மேற்கண்ட புரிதலின்படி ஆராயும் பொழுது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒரு நாளும் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்நிலைகளுக்குச் செல்லும் வழிகளில் உள்ள தடைகளை நீக்க முயன்றதே இல்லை; முயல்வது என்ன? எண்ணியதே இல்லை. அதே போல் திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பிவிடக் கூடாது என்றும் அவர்கள் கீழ்நிலை வேலைகளைச் செய்தே தீர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முயன்றதே இல்லை; எண்ணியதும் இல்லை.
அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.இன் யோசனைகளைக் கேட்பது தவறு இல்லையா?
- இராமியா
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
ஆர்.எஸ்.எஸ்.இன் யோசனைகளைக் கேட்பது தவறு இல்லையா?
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: கட்டுரைகள்