வளர்ந்த பிரிவினர் (creamy layer) என்பது பார்ப்பன அதிகார வர்க்கத்தால் இந்திய வெகுமக்களுக்கு எதிராகத் திணிக்கப்பட்ட கருத்து ஆகும். உச்ச நீதிமன்றம் இதைச் செய்வதற்கு முன்பேயே, பார்ப்பன ஆதிக்க வர்க்கம் இதை மறைமுகமாக, இன்னும் நுட்பமாகச் செயல்படுத்திக் கொண்டுதான் இருந்தது.

அரசியல் சட்டம், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கும் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்க விதிமுறைகளை வகுத்து இருக்கிறது. ஆனால் மைய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல் பார்ப்பன ஆதிக்க வர்க்கம் தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தது / இருக்கிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு அளிப்பதாக உறுதி கூறிய 18% இட ஒதுக்கீட்டையும் முழுமையாகச் செயல்படுத்தாமல் தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தது / இருக்கிறது. சமூக நீதிப் போராளிகள் இதைச் சுட்டிக் காட்டி வினாக்களை எழுப்பிய போதெல்லாம் இரு வழிகளில் விடை அளித்து ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது.

முதலாவதாக மொத்தமுள்ள பணிகளின் எண்ணிக்கையைக் கூறி, அதில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் 18%க்கும் மேல் வேலை செய்வதைக் காட்டி, இட ஒதுக்கீடு முழுமைக்கும் மேலாகவே செயல்படுத்தப்பட்டு வருவதாக மாய்மாலம் செய்தது. கீழ் நிலை வேலைகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் வேலை செய்து கொண்டு இருப்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், நிச்சயமாக 18%க்கும் மிக மிக மேலாகவே இருக்கும். ஆனால் உயர்நிலைகளில், அதுவும் நாட்டின் செல்வ வளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று முடிவெடுக்கும் கேந்திரமான இடங்களில் பார்த்தால் அங்கு அவர்களின் எண்ணிக்கை 5% கூட எட்டிப் பிடிப்பது இல்லை.

இவ்வளவு விவரங்களையும் சுட்டிக் காட்டி வினாக்களைத் தொடுக்கும் போது, இரண்டாவது வழியில் விடை கூறினார்கள். அதாவது தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்கள் கிடைப்பது இல்லை என்று.

ஜெகஜீவன்ராம் அவர்கள் தொடர் வண்டித் (Railway) துறை அமைச்சராக இருந்த போது, உயர்நிலைப் பணிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களை 18% இடம் பெற வைத்து விட வேண்டும் என்று கடுமையாக முயன்றார். தனது அதிகாரம் முழுவதையும் பயன்படுத்தத் தயங்கவில்லை. ஆனால் பார்ப்பன ஆதிக்க வர்க்கம் அவருக்கு எதிராக நுட்பமான சதிகளைச் செய்தது. பார்ப்பனர்களைப் பொருத்த மட்டில் வளர்ந்த பிரிவினர், வளராத பிரிவினர் என்பதை விட, நிர்வாகத்தில் தங்கள் சதிச் செயல்களைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் இருந்தால் தான், தங்களுடைய அதிகாரப் பிடிப்பு தளராமல் இருக்கும் என்று நினைத்தனர் / நினைக்கின்றனர். (ஒருவேளை திறமைசாலிகள் தேர்ந்து எடுக்கபபட்டாலும் அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்காமல் காயடிக்க விடுவதிலும் பார்ப்பனர்கள் வல்லவர்கள்.) ஆகவே ஜெகஜீவன்ராமின் சமூக நீதி உணர்வையும் அதைச் செயல்படுத்த முனையும் அவரது நிர்வாகத் திறமையையும் வீணடிக்க, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகளை, வேண்டும் என்றே புறக்கணித்து விட்டு, அவர்களில் உள்ள அப்பாவிகளை (naive) உயர் நிலைகளில் அமர்த்தி, அவர்களுக்குத் திறமை இல்லை என்று ஜெகஜீவன்ராமிடம் பொய் வெளிச்சம் போட்டுக் காண்பித்து, அவரைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினர். ஜெகஜீவன்ராமின் அவ்வளவு கடுமையான முயற்சியாலும், அப்பாவிகளை பணிக்கு எடுத்துக் கொண்ட பார்ப்பனர்களின் 'கருணை' மிகுந்த உள்ளத்தால் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களைப் பணிக்கு எடுத்துக் கொண்ட நிலையிலும் அவர்களது எண்ணிக்கை 10% கூட எட்டவில்லை. அதற்குள் ஜெகஜீவன்ராமைக் களைக்க வைத்து விட்டார்கள். (நிர்வாகத் திறனுக்குப் பெயர் பெற்ற ஜெகஜீவன்ராமையே களைக்க வைத்த பார்ப்பன ஆதிக்க வர்க்கத்தின் எதிர்மறை வலிமையை நாம் கணக்கில் எடுததுக் கொள்ளாமல் இருக்கக் கூடாது)

அப்படி ஜெகஜீவன்ராமைக் களைக்க வைக்க அவர்கள் கையாண்ட உத்தி தான் வளர்ந்த பிரிவினர் (அதாவது பார்ப்பனர்களின் தந்திர உத்திகளைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களை விலக்கி வைப்பது) என்ற கருத்து. தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் அவர்களுக்கு உரிய அளவில் வேலைகளைப் பெறுவது இல்லை என்று தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஒவ்வொரு ஆய்வில் எடுத்துக் கூறிய போதும் பார்ப்பன ஆதிக்க அரசு அதைக் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை.

பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற ஆணை வந்த உடன், இந்த உத்தியை மறைமுகமாக இனி மேலும் கையாள்வது கடினம் என்று புரிந்து கொண்ட பார்ப்பன ஆதிக்க வர்க்கம், அதை நேரடியான விதியாகவே கொண்டு வந்து விட்டது.

வளர்ந்த பிரிவினர் என்ற கருத்து பார்ப்பனர்களின் தந்திர உத்தியாகக் கையாளப்படுவதால் மட்டுமே அது கூடாது என்பதல்ல; கருத்தியல் ரீதியிலும் அது கூடாது.

இந்திய சமூகத்தில் ஒடுக்கு முறையின் மையம் (epicentre) சாதி / வருணத்தில் தான் இருக்கிறதே ஒழிய, ஏழை பணக்காரன் என்ற அடிப்படையிலோ, திறமை உள்ளவர்கள் திறமை இல்லாதவர்கள் என்ற அடிப்படையிலோ இல்லை. பணம் படைத்தவர்களுக்குத் தான் கல்வி கற்கும் வசதி என்றும், ஏழைகளுக்கு அது இல்லை என்றும் இந்திய சமூகத்தில் இருந்தது இல்லை. அரசர்களும், வணிகர்களும் செல்வ வளம் மிக்கவர்களாக இருந்தாலும், அவர்கள் முறையே போர்க் கலையையும், வணிக உத்திகளையும் தான் கற்க அனுமதிக்கப் பட்டார்களே ஒழிய, ஆட்சி அதிகாரக் கல்வி பார்ப்பனர்களின் வசமே இருந்தது.

மேலும், ஒவ்வொருவரும் அவரவரின் குலத் தொழிலைத் தான் செய்ய வேண்டும் என்பதில் வருணாசிரம முறை மிக உறுதியாக இருந்தது. ஒருவனுக்குத் தன் குலத் தொழிலில் திறமை இல்லாவிட்டாலும் அதைத் தான் செய்ய வேண்டும். வேறு தொழிலில் திறமை இருந்தாலும் அதைச் செய்யக் கூடாது. இவ்வாறு ஒருவனைத் திறமை உள்ள தொழிலைச் செய்வதைத் தடுப்பதினால் மனித வளம் வீணாகும் என்பதைப் பற்றியும், திறமை இல்லாத தொழிலைச் செய்வதினால் கேடுகள் விளையுமே என்பதைப் பற்றியும் சிறிதும் கவலைப் படவில்லை. எது எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என்று தயவு தாட்சண்யம் இன்றி வருணாசிரம அதர்மம் வரையறுத்து வைத்து இருக்கிறது (பார்க்க பகவத் கீதை 18:46,47,48)

இவ்வாறு செல்வ வளம் மற்றும் அறிவுத் திறனின் அடிப்படையில் இல்லாமல் சாதி அடிப்படையிலேயே ஒடுக்கப்பட்ட / ஒடுக்கப்படுகின்ற நிலை இருக்கும் போது அந்த ஒடுக்கலுக்கு எதிரான தீர்வும் சாதி அடிப்படையில் தானே இருக்க முடியும்? தீர்வு காணும் போது மட்டும் பணம் படைத்தவர்கள், படித்தவர்கள் என்ற அடிப்படையில் வளர்ந்த பிரிவினர் என்ற கருத்தைத் திணிப்பது நியாயம் அல்லவே. மேலும் இட ஒதுக்கீட்டின் மூலம் ஏழைகளும், கல்லாத பெற்றோர்களின் பிள்ளைகளும் பயன் பெறுவது இல்லை என்று பார்ப்பனர்கள் கதை கட்டி விடுவது நம்பும்படியும் இல்லை.

இனி விகிதாச்சாரப் பங்கீடு முறைக்கு வருவோம். அறிவுத் திறன் என்பது அனைத்து வகுப்பு மக்களுக்கும் பொதுவானதே. மிகுந்த அறிவுத் திறன் கொண்டவர்கள் முதல் குறைந்த அறிவுத் திறன் கொண்டவர்கள் வரை அனைத்து வகுப்பு மக்களிலும் உள்ளனர். இது மாற்ற முடியாத இயற்கை நியதி. அப்படி இருக்க எந்த ஒரு போட்டித் தேர்விலும் அனைத்து வகுப்பு மக்களும் அல்லவா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? அப்படி இல்லாமல் உயர் நிலைப் பணிகளுக்குப் பார்ப்பனர்களும், கீழ் நிலைப் பணிகளுக்கு ஒடுக்கப்பட்ட மக்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றால், அம்முறையில் பயங்கரமான சூது பின்னிப் பிணைந்து உள்ளது என்று தெளிவாகிறது அல்லவா?

இந்தச் சூதைப் புறங்காண வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இட ஒதுக்கீடு எனும் கருத்தியல் தோன்றியது; செயல் படுத்தப்பட்டது. இது செயல் படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள், அறிவுத் திறனில் பார்ப்பனர்களை விடத் திறமைசாலிகள் என மெய்ப்பிக்கப்பட்டது. அதுவும் எங்கெங்கு மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப் பட்டதோ அங்கெல்லாம் இது மேலும் தெளிவாகத் தெரிந்தது. இட ஒதுக்கீடு முறையாகச் செயல்பட்டு, ஒடுக்கப்பட்ட வகுப்பு மருத்துவர்கள் மிகுதியாக உருவாகி உள்ள தமிழ் நாட்டில் சிகிச்சை பெற உலகெங்கிலும் இருந்து மக்கள் வருகின்றனர். ஆனால் இட ஒதுக்கீடு செயல்படாமல் உயர் சாதி மருத்துவர்களே நிரம்பி உள்ள புது டெல்லியிலும், வட மாநிலங்களிலும் இந்நிகழ்வு நடைபெறவில்லை.

இதிலிருந்து திறமைசாலிகள் வேண்டும் என்றால் அது இட ஒதுக்கீடு முறையில் தான் பெற முடியும் என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இவ்வளவு தெளிவாக மெய்ப்பிக்கப்பட்ட பிறகும், உள்ளறுப்பு வேலைகள் மூலம் இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்துவதில் பார்ப்பன ஆதிக்க வர்க்கம் தடங்கலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதிகார மையங்களில் பார்ப்பனர்களே அறுதிப் பெரும்பான்மையாக ஆக்கிரமித்து இருப்பதால் தான் இப்படி எல்லாம் செய்ய முடிகிறது.

இட ஒதுக்கீட்டினால் திறமைசாலிகள் வாய்ப்பு பெறுவதையும், அதனால் நாடு நன்மை பெறுவதையும் கணக்கில் கொண்டு, சமூக நீதிப் போராளிகள் அதன் பயன்களை மேலும் விரிவு படுத்த, விகிதாச்சாரப் பங்கீடு முறையைக் கோரிக்கையாக வைக்கின்றனர். இதன்படி, அரசுத் துறை, தனியார்த் துறைகளில் அனைத்து நிலைப் பணிகளிலும், பெட்ரோல் எரிவாயு விநியோகத்திற்கான முகமை (agency), இன்னும் இது போன்ற சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் அனைத்து நிலைகளிலும் விகிதாச்சாரப் பங்கீட்டு முறையைச் செயல்படுத்த வேண்டும். அதாவது தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மதசிறுபான்மையினர், உயர் சாதிக் கும்பலினர் ஆகியோருக்கு மக்கள் தொகையில் அவரவர் விகிதத்தில் பங்கிட்டுத் தர வேண்டும். இப்படிச் செய்வதால், அந்தந்த வகுப்பில் உள்ள திறமைசாலிகள் உயர் நிலை வேலைகளையும், அந்தந்த வகுப்பில் உள்ள திறமைக் குறைவானவர்கள் கீழ் நிலை வேலைகளையும் பெற வழி வகுக்கும். இப்பொழுது நடப்பது போன்ற, திறமையைக் கணக்கில் கொள்ளாமல், பார்ப்பனர்கள் உயர் நிலைகளிலும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கீழ் நிலைகளிலும், வேலை செய்ய வேண்டியுள்ள அவலம் மறைந்து விடும்.

இம்முறை செயல் படுத்தப்பட்டால் தங்கள் தந்திர முறைகளைச் செயல் படுத்த முடியாமல் போய்விடும் என்று அஞ்சும் பார்ப்பனர்கள் இதைக் கடுமையாகப் பல வழிகளில் எதிர்க்கின்றனர்.

முதலாவது வழி, வழக்கம் போல, இருட்டடிப்பு செய்வது தான். இதைப் பற்றிய செய்திகள் எங்கும் பரவி விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.

இரண்டாவதாக, இது நடைமுறைக்கு ஒவ்வாது என்று பிரச்சாரம் செய்வது. நாட்டில் சாதிகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும், ஒவ்வொரு சாதியினருக்கும் மக்கள் தொகை விகிதத்தில் பணிகளைப் பிரிப்பது நடைமுறையில் முடியாது என்றும் வாதிடுகின்றனர். ஒவ்வொரு சாதியாகக் பிரித்துப் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. வகுப்பு வாரியாகப் பிரித்து அந்தந்த வகுப்பில் உளளவர்களுக்கு அவர்களின் மக்கள் தொகையின் விகிதத்தில் கொடுப்பது நடைமுறை சாத்தியமானதே.

இத்தீர்வைக் கேட்ட உடன் மூன்றாவதாக ஒரு பிரச்சினையைப் பார்ப்பனர்கள் முன் வைக்கிறார்கள். அதாவது ஒரு வகுப்புக்கு உள்ளேயே சில சாதியினர் மற்ற சாதியினரை விட அதிக வாய்ப்புகளைப் பெற்று விடுவார்கள் என்றும், வாய்ப்புச் சுரண்டல் முடிவு பெறாது என்றும் ஆகவே இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வாதிடுகிறார்கள். இது நடப்பதற்கு வாய்ப்பு இருக்கத் தான் செய்கிறது. ஆனால் இதைப் புறங்காணும் எளிதான வழி முறையும் இருக்கவே செய்கிறது. ஆகவே இம்முறையை வேண்டாம் எனச் சொல்ல வேண்டியது இல்லை. ஒரு வகுப்பில் உள்ள சாதிகளுள் பயன் பெறுபவர்களில் ஏற்றத் தாழ்வு ஏற்படுமானால், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட சாதியினருக்கு உள் ஒதுக்கீடு செய்து தருவது தான் இதற்குத் தீர்வாக இருக்க முடியுமே அல்லாது, இம்முறையே வேண்டாம் என்று சொல்வது நிச்சயமாகத் தீர்வாக இருக்க முடியாது. இமுறையின் முதல் பயனாக உயர் நிலைகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு ஒரு முடிவு ஏற்படும்.

நான்காவதாக சில குறிப்பிட்ட வகுப்பினர் அதிக குழந்தைகளைப் பெற்று, தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு, அதன் மூலம் அதிகமான பங்கை அடைந்து விடுவார்கள். நாட்டின் நன்மையை முன்னிட்டு, மக்கட் தொகையைக் குறைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளும் வகுப்பினர் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது, இது பார்ப்பனர்களின் பொய்ப் பிரச்சாரமே. இந்து மதத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களைப் பிற மதத்தினருக்கு எதிராக, முக்கியமாக இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தூண்டி விடும் உத்தியே ஆகும். இஸ்லாமியர்கள் அளவின்றிப் பிள்ளைகள் பெற்றுத் தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கி இருக்கிறார்கள் என்று தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. இந்தியாவில் மக்கள் தொகை வெகுவாகவே உயர்ந்து உள்ளது. ஆனால் 1951இல் இருந்து இன்று வரைக்கும் உள்ள மக்கள் தொகையில், ஒவ்வொரு மதத்தினரின் விகிதத்திலும் பொருட்படுத்தக் கூடிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. இஸ்லாமியர்களின் மக்கள் தொகை உயர்ந்து உள்ளது என்றால், இந்துக்களின் மக்கள் தொகையும் உயரவே செய்துள்ளது. அப்படியே ஒரு சிறிதளவு மாற்றம் ஏற்பட்டாலும் அதற்கான தீர்வையும் எளிதாகக் காணலாம். குறிப்பிட்ட ஆண்டை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆண்டின் மக்கள் தொகை விகிதத்தில் பங்கிட வேண்டும் என்று முடிவு செய்யலாமே?

அதை விட்டு, இன்று நடக்கும் பார்ப்பனச் சுரண்டலைத் தொடர விட வேண்டாமே?

- இராமியா

Pin It