இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கண்டறிந்து பட்டியல் தயாரிக்க மாநில அரசுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் 127ஆவது சட்ட திருத்த மசோதா மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேறியிருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்குக் கிடைத்த வெற்றி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளதைப் போல தமிழ்நாடு, மகாரஷ்ட்ரா போன்ற மாநிலங்களின் தொடர் அழுத்தத்தால்தான் மாநிலங்களுக்கு மீண்டும் இந்த அதிகாரம் கிடைத்திருக்கிறது. அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசே எடுத்துக்கொண்டு போகும் சூழலில், ஒன்றிய அரசிடமிருந்து அதிகாரம் மாநிலங்களுக்கு வருவது என்பதற்கு, கூட்டாட்சி மலர்வதற்கு திமுக போன்ற கட்சிகள் மேற்கொள்ளும் தொடர் போராட்டங்களே அடிப்படையானவை ஆகும்.
பல்வேறு தேசிய இனங்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டில், அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைத் தயாரிக்க ஒன்றிய அரசு நினைப்பது, பிற்படுத்தப்பட்டோர் சமூக முன்னேற்றம் அடைய பெரும் தடைக்கல்லாக இருக்கும். இன்று அந்தத் தடைக்கற்கள் தகர்க்கப்பட்டு மாநிலங்கள் அவ்வுரிமையை பெரும் வகையில் இச்சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அண்மையில் மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அறிவித்ததும், இன்று செய்யப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்திருத்தம் என்பதிலும் திமுகவின் பங்கு என்பது முதன்மையானது ஆகும்.
இச்சட்டத் திருத்த மசோதாவைத் தொடர்ந்து, மண்டல் வழக்கு அதாவது இந்திரா-சஹானி வழக்கில், இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் விதித்த 50 சதவீத உச்சவரம்பு என்பது நீக்கப்பட வேண்டும் என்று இன்று அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் திராவிட இயக்கம் முன்னெடுக்கும் சமூக நீதி என்பது நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவாகப் பார்ப்பனர் அல்லாதார் அறிக்கையாகச் (Non Brahmin Manifesto) சொல்லப்பட்டது. தொடர்ந்து நீதிக்கட்சி ஆட்சியில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்(Communal G.O) நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று, சமூக நீதியை நிலைநாட்ட, அனைத்துச் சாதியினருக்குமானப் பிரதிநிதித்துவத்தின் இன்றியமையாமையை ஓரளவுக்கு மற்ற மாநிலங்களும் கட்சிகளும் உணர்ந்திருக்கின்றன.
ஆனால் இந்திய அரசியலமைப்பின் சட்டம் 16, உட்பிரிவு4 இன் படி ‘adequate representation’ அதாவது போதிய அளவிற்கானப் பிரதிநிதித்துவம் என்கிற அளவுகோலே இடம்பெற்றிருக்கிறது. இது ‘proportional representation’ அதாவது விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவம் என்று மாற்றப்படும்போதுதான் அனைத்துச் சாதிகளிலும் உரிமை மறுக்கப்பட்டு காலங்காலமாக சமூகஅநீதிக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் அவர்கள் உரிமைகளைப் பெற முடியும். அந்த சட்டத்திருத்தம் செய்யப்படும் வரலாற்றையும் திராவிட இயக்கமே நிகழ்த்தும்!
- மா.உதயகுமார்