இந்தியாவில் சமூக ஊடகங்களான முகநூல், வாட்ஸ்அப், யூடியூப் ஆகியவை ஒரு சார்பாக செயல்பட்டு வருகின்றன, ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக அவைகள் இருப்பதோடு, நாட்டில் வகுப்புவாதத்தையும், வெறுப்புணர்ச்சியையும் தூண்டி விடுகின்ற செயல்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றன என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தி வாசிங்டன் போஸ்ட் (The Washington Post) பத்திரிகை விரிவான தரவுகளுடன் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

இதனடிப்படையில் இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களான கார்கே, வேணுகோபால் உட்பட 12 கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இந்த இணைய ஊடகங்களுக்கு கூட்டாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் இந்த ஒரு சார்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும், தேர்தல் வருகின்ற நேரத்தில் வகுப்புணர்ச்சியையும், வெறுப்புணர்வையும் தூண்டி விடக்கூடிய, ஆளுங்கட்சிக்கு முக்கியத்துவமளித்து நாட்டில் பதட்டத்தை உருவாக்கிவிடக் கூடாது என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக யூடியூப் நிறுவனம் சில்வர் கிரியேட்டர் விருதை மனேஷா என்பவருக்கு வழங்கியுள்ளது. அவர் பசு கண்காணிப்பு குழுவின் தலைவராக இருந்தவர், பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டவர், இதன் காரணமாக செப்டம்பர் 11ஆம் தேதி கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். அவருக்கு யூடியூப் நிறுவனம் விருதை வழங்குகிறது என்றால் அதில் என்ன நியாயம் இருக்கிறது என்ற கேள்வியை அந்த கடிதம் மூலமாக எழுப்பியுள்ளனர். இந்த ஊடகங்கள் எப்படி முறைகேடாக செயல்படுகிறது என்பதை பற்றி அவ்வப்போது விமர்சனங்கள் வந்தாலும் வாசிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க பத்திரிகையிலே குற்றம்சாட்டுகிற அளவுக்கு இவர்களது செயல்பாடுகள் இருக்கின்றன, ஆளும் பாரதிய ஜனதா கட்சி அவர்களை அப்படி வளைத்துப் போட்டுள்ளனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியார் பற்றி அவதூறு: கொளத்தூர் கழகத்தினரிடம் மன்னிப்பு கேட்ட ‘சங்கி’

செப்டம்பர் 17 அன்று ஜெகதீஸ்வரன் என்பவர் தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை ஒட்டி தனது முகநூல் பக்கத்தில் பெரியாருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

அப்பதிவின் பின்னூட்டத்தில் பெரியார் குறித்து உண்மைக்கு புறம்பான அவதூறு செய்தியையும், ஒருமையில் பேசியும் பதிவிட்டிருந்த பாஜகவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கொளத்தூர் காவல் நிலையத்தில் கழக கொளத்தூர் நகரத் தலைவர் சி.இராமமூர்த்தி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், உக்கம்பருத்திக்காடு SMT சுரேஷ், விஜி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொளத்தூர் ஒன்றிய செயலாளர் சேட்டுகுமார், தீனரட்சகன் ஆகியோர் 18.09.2023 அன்று புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து மணிகண்டன் தோழர்களிடமும், காவல்துறை அதிகாரியிடமும் 21.09.2023 அன்று நேரில் வந்து தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற இழிச் செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று உறுதியளித்ததன் காரணமாக மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது.

விடுதலை இராசேந்திரன்