அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகம்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது முதல் மனைவி கனிமொழிக்குப் பிறந்தவர் தான் மாணவி லாவண்யா (17). இவரது அம்மா கனிமொழி இறந்து போனதால் அப்பாவிற்கு இரண்டாவது மனைவியாக வந்தவர் சரண்யா. சித்தி சரண்யா பெற்றெடுத்தது நான்கு குழந்தைகள். அதனால் லாவண்யா தனிமைப்படுத்தப்பட்டார்.

ariyalur schoolதஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மைக்கேல்பட்டியில் 1884 ஆம் ஆண்டு அப்பகுதியில் வாழும் ஏழை மக்கள் கல்வி பெற தொடங்கப்பட்ட பள்ளி தூய இருதய மேரி பள்ளி. இப்பள்ளியானது கிறித்துவ பெண் துறவிகளால் நடத்தப்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் மாணவிகள் தங்குவதற்காக தூய மைக்கேல் பெண்கள் விடுதி உள்ளது. கல்வி கிடைக்கும் வாய்ப்பில்லாத மாணவி லாவண்யாவுக்கு, கடந்த சில வருடங்களாக உணவுடன், தங்கும் விடுதி கல்வியும் இலவசமாக கிடைக்கப் பெற்றது இப்பள்ளியில் தான்.

தூய மைக்கேல் பெண்கள் விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி கடந்த ஜனவரி 9.1.2022 அன்று திடீரென வாந்தி எடுத்துள்ளார். அப்போது உடன் படித்த மாணவிகள் அவரிடம் அதுகுறித்து விசாரித்துள்ளனர். அதற்கு மாணவி தனக்கு வயிற்று வலி என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவனையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மறுநாள் அவரின் தந்தை முருகானந்தத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மைக்கேல்பட்டிக்கு சென்ற அவர், அங்கிருந்து தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பெற்றோரிடம் உண்மையைச் சொல்லாது மறைத்த மாணவி வீட்டிற்குச் சென்ற நிலையில் வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனால் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் அருகாமையில் இருந்த அரசு மருத்துவமனையில் வெளிநோயாளியாகச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 15 ஆம் தேதி ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காட்டிய நிலையில், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்களிடமும், விஷம் சாப்பிட்ட உண்மையை மறைக்க, வயிற்று வலிக்காகவே சிகிச்சை தரப்பட்டுள்ளது. தொடர் சிகிச்சைக்குப் பின் மருத்துவ அறிக்கைகளின் தரவுகள் மூலமே செடிகளுக்கு அடிக்கக் கூடிய "களைக் கொல்லி" மருந்தை சாப்பிட்ட உண்மையை மாணவியிடம் பெற்றுள்ளார்கள்.

16.1.2022 அன்று காலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வந்த தகவளின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி மகளிர் காவல் நிலைய துணை ஆய்வாளர் மாணவியிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். அதில் விடுதி காப்பாளர் சகோ.சகாயமேரி வேலை வாங்கி கொடுமைப் படுத்தியதாகத்தான் மாணவியின் வாக்குமூலம் பதிவாகியுள்ளது. அதனால் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளான 307, 511, 75, 82 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்து, சகோ. சகாயமேரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பள்ளியில் படிக்கும் சக மாணவிகளிடம் விசாரிக்கும் போது, சகோ. சகாயமேரி சிஸ்டர் வேலை வாங்குவதில் கடுமையாக நடந்து கொள்வார். அதே போல் உதவும் குணமும் உண்டு. கடந்த ஆண்டு விடுதியில் உள்ள மாணவிகளுக்கு ஒரு கிருஸ்துமஸ் புத்தாடை வழங்கினார். ஆனால் இறந்து போன மாணவிக்கு மட்டும் அவளுக்கு பிடித்த கலரில் இரண்டு புத்தாடைகள் பரிசாகத் தந்துள்ளார். மேலும் இந்தாண்டு கல்விக் கட்டணமும் கட்டியுள்ளார்.

16.1.2022 ஆம் தேதி, நீதிபதி மருத்துவர்கள் முன்னிலையில் வாக்குமூலம் மாணவியிடம் பெற்றார். வாக்குமூலத்தில் விடுதி வார்டன் கணக்கு எழுதச் சொல்லி கட்டாயப் படுத்தியதாலே மாணவி விஷம் அருந்தியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர் சிகிச்சைக்கு பின் 19.1.2022 அன்று சிகிச்சை பயனளிக்காமல் மாணவி இறந்து போனார். 

இறந்து போன மாணவியின் உ றவினர்கள் மூலம் விஷ்வ ஹிந்து பரிசத் அரியலூர் மாவட்டச் செயலாளர் ஜி.முத்துவேலுக்கு தகவல் கிடைத்துள்ளது. இவர் தஞ்சை மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று மாணவியிடம் தனது கைபேசியில், நடந்த விபரத்தைப் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து விடுதி காப்பாளர் சகாயமேரியும் உன்னை கிருஸ்தவ மதம் மாறச் சொன்னாரா? என்று கேட்டுள்ளார். அதற்கு மாணவி இரண்டாண்டுகளுக்கு முன்பு கேட்டார் என்று கூறியுள்ளார்.

பதிவில் தேவையான எடிட்டிங் வேலை நடத்தப்பட்ட நிலையில் மாணவியின் இறப்பிற்குக் காத்திருந்த விஸ்வ ஹிந்து பரிசத் முத்துவேலு, தன்னிடம் கட்டாய மதமாற்றம் குறித்து இறந்து போன மாணவி பேசிய வீடியோ இருப்பதாக, பா.ஜ.க மாவட்ட செயலாளர் கருப்பு முருகானந்தத்திடம் பேச கூட்டு சதி தயாரானது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு தகவல் கொண்டு செல்ல தனது டிவிட்டரில் 19.1.2022 அன்று மாணவி பேசிய வீடியோ இணைக்கப்பட்டு சமூக ஊடகத்தில் மூலம் மதவெறி தீ மூட்டப்பட்டது.

பா.ஜ.க வைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் கட்டுப்பாட்டில் இறந்து போன மாணவியின் அப்பாவும் சித்தியும் உள்ளனர். உண்மையை அறிய யாரும் பெற்றோரைச் சந்திக்க விடாமல் தடுத்து வருகிறது இந்தக் கும்பல். இந்நிலையில் தஞ்சை மருத்துவமனையில் மாணவியை பார்க்கச் சென்றஇந்திய மாணவர் சங்கத் தோழர்களைத் தடுத்துள்ளார்கள்.

இறந்து போன மாணவி கொடுத்த வாக்குமூலத்தில் விடுதியின் வார்டன் சகோ.சகாயமேரி அதிகமாக வேலை வாங்கி கொடுமை படுத்தியதிலே மாணவி தற்கொலை செய்து கொண்டதாக முதல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின் கொடுக்கப்பட்ட இரண்டாவது புகாரில் எங்கள் வீட்டிற்கு இரண்டு வருடத்திற்கு முன்பாக வந்த பள்ளி நிர்வாகம் எங்களையும், மகளையும் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள் என்று கொடுத்துள்ளார்கள். மதுரை உயர் நீதிமன்ற அமர்வும் தனது பங்கிற்கு மற்ற வழக்குகளில் காட்டாத வேகத்தை, இந்த வழக்கில் மிக, மிக, அதீத தீவீரத்தைக் காட்டியது.

கல்வித் துறையை சேர்ந்த அரசு அலுவர்கள், சுமார் 30 மாணவிகளை விசாரித்ததில் இறந்து போன மாணவியோ அல்லது மற்ற மாணவிகள் எவரும் மதமாற்றத்திற்கு நிர்பந்திக்கப்படவில்லை என்பதே தெரிய வந்துள்ளது. இதேபோல் தான் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது. மேலும் கல்வி அமைச்சரும் தனது பேட்டியில் உறுதிப்படுத்துகிறார். சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் 15 லட்சம் பெண்களுக்கு கல்வி வழங்கி வரும் பெண்கள் பள்ளியை 'மதமாற்றம்' என்ற போலிக் குற்றச்சாட்டின் மூலம் பாஜகவினர் மூட முயற்சிப்பதோடு, பல மதங்களைச் சார்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டவும் முயற்சிக்கிறார்கள். தமிழக காவல்துறை இதில் உடனே தலையிட்டு பொய்ச் செய்தியைப் பரப்பி, கலவரத்தைத் தூண்ட முயன்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும். அதுவே இத்தகைய மதவெறி சக்திகளுக்கு தக்க பாடமாக அமையும்.

- இ.ஆசீர்

Pin It