வாட்ஸ்அப் என்ற இந்த செயலி இல்லாமல் போனால் இன்றைக்கு பல கோடி இந்தியர்களுக்கு தகவல் பரிமாற்றம் என்பதே சாத்தியமில்லை என்று தோன்றக்கூடிய அளவிற்கு அது தவிர்க்க முடியாததாய் மாறியுள்ளது. இந்த நிலையில், இச்செயலியை குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்ட சமயத்தில் மதவாதத்தை தூண்டும் பிரச்சாரத்திற்கு எப்படி பாஜக உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றி 'தி வயர்' செய்தி இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியானது. அக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதி, அதன் சுருக்கமான தமிழ் மொழியாக்கம் கீழே:
இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் வலைப்பின்னல்களில் பெரும்பாலானவை பாரதிய ஜனதா கட்சியாலும் அவர்களது ஆதரவாளர்களாலும் இயக்கப்படுபவை. இவற்றின் மூலமாக பரப்பப்படும் செய்திகள் இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் புனையப்பட்டு திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, குடியுரிமைச் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்ட போது, இச்சட்டம் ‘இந்து ராஷ்டிரம்’ நோக்கிய மிக முக்கியமான நகர்வு என்றும், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை துரத்துவதற்கான ஆயுதம் என்றும், இந்திய மக்கள் தொகையை எளிதாக குறைப்பதற்குமான கருவி என்றும், பிரச்சாரம் திட்டமிடப்பட்ட முறையில் பலநூறு குறுஞ்செய்திகள் மூலமாக பரப்பப்படுகிறது.
குழுவின் அமைப்பு :
பாஜக ஆதரவாளர்கள் மற்றும் அதன் தலைவர்களின் நெருங்கிய தொடர்புடையவர்களால் நடத்தப்படும் அரசியல் வாட்ஸ்அப் குழுக்களை ஆராய்ந்தபோது, அனைத்து குழுக்களும் பிரதமர் மோடியின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ கொண்டிருப்பதோடு, பிஜேபி மற்றும் சங் - பரிவார் உறுப்பினர்களின் பெயர் மற்றும் அவர் சார்ந்த பகுதி ஆகியவை குழுவின் பெயருடன் சேர்க்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதில் ஒரு குழு, இதன்மூலமாக பிரதமரை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறியிருந்தது. அல்லது குழுவில் இருக்கும் பிரதமரின் பிரதிநிதிகள் மூலம் இங்கு பகிரப்படும் செய்திகள் அவரிடம் கொண்டு சேர்க்கப்படும் என்றும் கூறியிருந்தது.
இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை, பகிரப்படும் செய்திகள் படங்கள் மற்றும் காணொளிகளை அதன் உறுப்பினர்கள் பிறருக்கு பகிருங்கள் என்று மட்டுமே கோருகிறது, அது தவிர, மிக முக்கியமான சம்பவங்கள் நடைபெற்றால் மட்டுமே அங்கு உரையாடல்கள் நடைபெறுகின்றன. உதாரணமாக குடியுரிமைச் சட்டம் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட செய்தி வெளியானதும் இந்தக் குழுக்களில் ஜெய் ஸ்ரீராம் என்று சிலர் வாழ்த்துசெய்தி அனுப்பினர்.
இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான நான்கு படிகள்:
இக்குழுக்கள் பகிரும் செய்திகள் இந்தியா ஹிந்து நாடாக மாறுவதற்கான 4 படிநிலைகளை பட்டியலிடுகின்றன - குடி உரிமைச் சட்டம் அதன் தொடக்கம், அதைத்தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு, அதற்கடுத்து மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான சட்டம், இறுதியாக பொது சிவில் சட்டம்.
இக்கருத்தை பரப்பும் செய்திகளில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் இஸ்லாமியர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தக் கூடியதாக, வெறுப்பை கக்குவதாக அமைந்துள்ளது. உதாரணமாக, தேசிய குடிமக்கள் பதிவேடு என்பதை ‘சோதனை செய் , தூக்கி ஏறி’ என்றும், மக்கள் தொகை கட்டுப்படுத்தும் சட்டத்தை ‘பன்றிகளின் இனப்பெருக்கம் இனி இல்லை” என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த வெறுப்பு பிரச்சாரங்களை நியாயப் படுத்துவதற்கு பல போலியான புள்ளிவிவரங்களை இச்செய்திகள் பரப்புகின்றன. அவை - ஒரு குறுஞ்செய்தி இஸ்லாமியர்களை நாட்டிற்கு சுமை என்கிறது; நாட்டில் உள்ள நோயாளிகளில் 45 விழுக்காடு இஸ்லாமியர்கள் என்ற பொய்த் தகவலை முன்வைக்கிறது மற்றொன்று.
சிறையிலடைக்கப்பட்டவர்களுள் 32 விழுக்காடு இஸ்லாமியர்கள் எனவும், அந்தச் சமூகத்தை சேர்ந்தவர்களே இந்தியாவில் நடைபெறும் குற்றங்களில் 44 சதவீத குற்றங்களை இழக்கிறார்கள் எனவும் பொய்த் தகவல்கள் பகிரப்படுகின்றன.
மேலும் இக்குழுக்களால் பரப்பப்படும் நம்பமுடியாத செய்திகளில் சில:
இந்தியாவில் வெறும் ஒரு விழுக்காடு இஸ்லாமியர்கள் மட்டுமே இந்தியாவுக்கு சாதகமான கோஷங்களை சொல்லத் தயராக உள்ளனர், ஆனால் 95 விழுக்காடு இஸ்லாமியர்கள் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்புகின்றனர்; 67 சதவீத இஸ்லாமியர்கள் பஞ்செர் பார்க்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர் போன்றவை.
இந்தத் தகவல்களைக் கொண்டு உருவாக்கப்படும் குறுஞ்செய்திகள் மற்றும் மீம்கள் இஸ்லாமியர்கள் அல்லாத இந்தியா என்பது நன்மையையே விளைவிக்கும் என்ற வாதத்தை முன்வைக்கின்றன. ஒரு மீம் படத்தில் இஸ்லாமியர்களின் கல்லறை நிலங்கள் கைப்பற்றப்பட்டால் அதில் எத்தனை மரங்களை நடலாம் என்ற கணக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
மற்றும் பல குறுஞ்செய்திகள் "இஸ்லாமியர்கள் இந்தியா மீது போர் தொடுத்து அதனைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளனர்" என்பதைப் போன்று அவர்கள் மீது ஆத்திரத்தை ஏற்படுத்துவதோடு, வன்முறையைக் கையாள தூண்டும் அளவிற்கு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்து மக்கள்தொகை 96.8 கோடி இஸ்லாமியர்கள் 17.2 கோடி. உண்மை இப்படி இருக்க குறுஞ்செய்திகளோ இந்தியாவில் இந்துக்களின் மக்கள் தொகை 72 கோடியாக குறைந்துள்ளது முஸ்லிம்கள் 23 கோடி இருக்கின்றனர் என போலியான தகவல்களை பரப்புகின்றன.
இந்த பரப்புரைகளில் பயன்படுத்தப்படும் மற்றொரு யுக்தி குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் அனைத்து கட்சிகளையும் ஜிகாதிகள் மற்றும் ரோஹினியாக்களின் ஆதரவாளர்கள் என்றும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும் கருத்தை உருவாக்குவது.
சபாஷ் பாஜக
இந்த வாட்ஸ்அப் குழுக்களில் பொதுவாகப் பரப்பப்படும் மற்றொரு செய்தி - இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்து ரோஹினியாக்களுக்குக் குடியுரிமை கேட்கும் காங்கிரசை ஹிந்துக்கள் என்றைக்கும் மன்னிக்கக் கூடாது என்பதாகும். இதன்மூலம் பிஜேபி மட்டுமே இந்துக்களுக்காக உண்மையாக போராடுகிறது என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.
இந்த குறுஞ்செய்திகள் பாஜகவிற்கு வாக்களிக்காதவர்களை "உங்களுடைய வாக்குகளால் தான் இந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜிகாதிகளை ஆதரிக்கிறார்கள்" என குற்றவாளிகள் போல சித்தரிக்கின்றன.
பல குறுஞ்செய்திகள் வேலைவாய்ப்பின்மை பொருளாதார சரிவு என எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். கண்மூடித்தனமாக பாஜகவை ஆதரியுங்கள் என்று கூறுகின்றன.
வாட்ஸ்அப்பும் இந்தியாவும்:
திட்டமிடப்பட்டு முறையாக பரப்பப்படும் இந்த குறுஞ்செய்திகள் ஏன் ஆபத்தானவை என்றால் இந்தியாவில் வாட்ஸ்அப்புக்கு உள்ள மிகப் பரவலான பயன்பாடு அத்தகையது. ஏனெனில் இந்தியா வாட்ஸ்அப் செயலியின் மிகப்பெரிய சந்தை. இங்கு 400 மில்லியன் மக்கள் அதனை பயன்படுத்துகிறார்கள். 2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் 468 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் இருந்தன அவற்றில் 85 விழுக்காடு ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயலி பயன்படுத்தப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலி மூலம் பகிரப்படும் தவறான செய்திகள் உயிர்களைக் காவு வாங்கக் கூடிய அளவிற்கு அபாயகரமானவை, உதாரணமாக வாட்ஸ்அப் மூலமாக குழந்தை கடத்தல்காரர்கள் பற்றிய புரளி பரப்பப்பட்ட காரணத்தினால் 25 பேர் இதுவரை அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த செயலி பயன்படுத்தப்பட்ட தொடக்க காலத்திலேயே அதன் பயன்பாட்டாளர்களை தங்களுக்கு சாதகமானவர்களாக மாற்றிக்கொள்வதில் பாஜக மிகவும் திறம்பட செயல்பட்டது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே 9.2 லட்சம் வாக்குச்சாவடிகளுக்கு 9 லட்சம் ‘ செல்போன் பரமுக்களை’ நியமித்துள்ளனர். அவர்களின் பணி அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை இணைத்து வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குவது.
லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் நடத்திய ஆய்வு, பாஜக ஏன் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டது என்பதற்கான காரணங்களை விவரிக்கிறது.
ஆய்வு வெளியிட்டுள்ள தகவலின்படி மக்கள் கல்வியறிவின்மை காரணமாகவும் டிஜிட்டல் கல்வி குறைபாட்டின் காரணமாக அல்லாமல் தங்களுடைய சித்தாந்தம் மற்றும் முன்முடிவுகளின் காரணமாக, தங்களுக்கு அனுப்பப்படும் தவறான தகவல்களை பெரும்பாலும் பகிர்கிறார்கள் என்கிறது.
இதே ஆய்வு அதுபோன்ற வெறுப்புப் பிரச்சாரம் சரியான நேரத்தில் திட்டமிடப்பட்டு பரப்பப்படுவதாக தெரிவிக்கிறது. தேர்தல் சமயங்களில் அல்லது எல்லைப் புறங்களில் தாக்குதல்கள் நடைபெறும் சமயங்களில். மக்கள் கொதி நிலையில் இருக்கும் பொழுது, இது போன்ற தவறான பிரச்சாரங்கள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது என்கிறது .
உதாரணமாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துணை ராணுவப் படையினர் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றபோது, இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை கக்கும் பிரச்சாரம் வாட்ஸ்அப் மூலம் மிக அதிகமான அளவில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த செய்திகள் இஸ்லாமியர்கள் மீது குறிப்பாக காஷ்மீர் இஸ்லாமியர்கள் மீது கடுமையான கோபத்தை உருவாக்குவதோடு, போர் முழக்கங்களை எழுப்பக் கூடிய அளவிற்கு தூண்டியது. அதன் பின்னர் காஷ்மீர் மாணவர்கள் நாடு முழுவதும் தாக்கப்பட்டு, அவர்கள் குடியிருந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
உலகம் எத்தகைய பாய்ச்சலுடன் புதிய புதிய நவீன கண்டுபிடிப்புகளை கொண்டுவந்தாலும், அதனை வெறுப்பைப் பரப்பவும் அதன் மூலம் தங்களது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் மட்டுமே இந்துத்துவ சக்திகள் பயன்படுத்துகின்றன என்பதற்கு வாட்ஸ்அப் விதிவிலக்கல்ல என்பதையே இக்கட்டுரை நமக்கு உணர்த்துகிறது.
நன்றி : THE WIRE
கட்டுரை இணைப்பு: https://thewire.in/media/cab-bjp-whatsapp-groups-muslims
- குண சந்திரசேகர்