தமிழகப் பெரியார் மண்ணில் தாமரை மலராது, தன்னால் வரமுடியாது என்பதனால் பள்ளிக்கூடங்களின் மூலம் இந்துத்துவச் சிந்தனையை திணித்து உள்ளே நுழைகிறது பாஜக. இச்செய்தியைச் சமூக வலைத்தளங்கள் பலவற்றில் பார்க்கமுடிகிறது
அ- அம்மா, ஆ- ஆடு, இ-இலை என்ற மதம் சாராத பழைய பாடத்திட்டத்தை மாற்றி, அ-அகத்தியர், ஆ-ஆஞ்சநேயர், இ-இமயம், ஈ-ஈசன் என்ற இந்துத்துவ அடிப்படை வாதத்தை மழலையர்களின் மூளையில் திணிக்கும் புதிய பாடத்திட்டத்தை இவ்வாண்டு கொண்டுவந்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.
அதுபோல 7ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என அச்சிடப்பட்டிருந்தது.
8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டுச் சென்றபின் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவ முஸ்லீம் தலைவர்கள் முயன்றார்கள் என்றும்- காமராஜர், முத்துராமலிங்கம்(தேவர்), சாமி வைகுண்டர் ஆகியோர் பற்றியும் தவறான தகவல்கள் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றிருந்தன.
கல்வியாளர்கள், தமிழறிஞர்களின் கடுமையான எதிர்ப்பால் 7, 8, 10 ஆகிய வகுப்புகளில் மேற்சொன்னவைகளைத் திரும்பப் பெற்றிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.
இதுமட்டுமில்லாமல் திருப்பூரில் ஒரு பள்ளிக்கூடத்திற்குத் துரோணரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
துரோணருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு? வடநாட்டுத் துரோணரைத் தமிழ்நாட்டில் நுழைத்து இந்துதுவாவைத் தூக்கி நிறுத்தப் பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ்.- பாஜக.
இப்படி நேரடியாக முகம் கொடுக்க முடியாமல், புறக்கடை வழியாகத் தமிழ்நாட்டிற்குள்ளும் நுழையும் மதவாத சக்திகளின் கோழைத்தனத்தைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்- பாஜக, பதுங்கி நுழையும் கோழைகள். ஆனாலும் தமிழகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.