‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் நாடுமுழுவதிலும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையின் எழுச்சியை, மத்தியஅரசும், பா.ஜ.க.வால் ஆளப்படும் மாநில அரசுகளும் ‘இந்துராஷ்ட்ரா’ என்ற சிந்தனைக்குக் கொடுக்கும் சூழ்ச்சி நிறைந்த உந்துதலின் பின்னணியில் பார்க்கும்போது இதனால் பயங்கரமான தீயவிளைவுகள் ஏற்படக்கூடும் என்று தோன்றுகிறது.

 * ’இந்தவகையான பேச்சுக்களின் அர்த்தம் என்ன? அவர்தான் இந்துஸ்தானின் அரசர். ஒரே இரவில் அவர் ரூபாய் நோட்டுக்களுக்கு தடைவிதித்ததுபோல், அவர் விரும்பினால் இந்தக்கொலைகளை தடுத்து நிறுத்தமுடியும்

   -ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள காந்தவிலி கிராமத்தில் ரயிலில்அடித்துக்கொல்லப்பட்ட 16 வயது ஜுனைத்கானின் தந்தை ஜலாலுதீன்

*  இது இனியும் ‘வெறும் சகிப்புத்தனமையின்மை’ என வகைப்படுத்தப்படக்கூடாது. இது ஓர் அடக்குமுறை ஆட்சியின் தோற்றமும், நிலைநிறுத்தலும் ஆகும். அது இந்தியாவின் சிறுபானமையினரை உண்மையிலேயே வெளியேற்றவும், ராஷ்ட்ரிய சுயம்சேவக் (ஆர்.எஸ்.எஸ்)ஐ தோற்றுவித்தவர்களால் உருவாக்கப்பட்ட இந்துராஷ்ட்ரா வை பிரகடனம் செய்ய விரும்புவதும் ஆகும்.

      டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமைநீதிபதி ராஜிந்தர் சச்சார் ஃப்ரண்ட் லைன் இதழுக்கு தெரிவித்தது.

hindutwa riotஇரண்டு நாட்கள் இடைவெளியில் செய்யப்பட்ட இந்த இரண்டு அறிவிப்புக் களும் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநிலஅரசுகளும் அளித்த இரகசிய ஆதரவுகளால் பல்வேறு மாநிலங்களிலும் முஸ்லீம் சமுதாயம் பெருமளவில் கூட்டுக்கொலை களுக்கு உள்ளாகியிருக்கும் சூழலில் இன்றைய இந்தியாவின் சமூக, அரசியலின் உள்ளடக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஜலாலுதீனின் குமுறல் ஜூன் 29 அன்று குஜராத்திலுள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி  ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை நரேந்திரமோடி பயன்படுத்திக்கொண்டு குறுகிய மதவெறி உணர்வு கொண்டவர்களால் ஏற்பட்டுவரும் – குறிப்பாக ‘பசு பக்தி’ என்ற பெயரால் நடத்தப்படும் கொலைகள் பற்றிய தனது ‘’வலியையும், கோபத்தையும்’ தெரிவித்த அடுத்தநாள் வெளிப்பட்டது. ஜலாலுதீனின் பதின்வயது மகன் ஜுனைத்கானை மதவெறிகொண்ட ஒரு கும்பல் ‘மாட்டிறைச்சி உண்பவன்’ என்று பழித்துக் கத்தியால் குத்தி சாகடிப்பதற்குமுன் அவனது தாடியை இழுத்தும், தலையில் அணிந்திருந்த குல்லாயைக் கால்களால் மிதித்தும் கூட்டுக்கொலை செய்தது. இதைப்பற்றி மோடி தெரிவித்த அந்த ‘வலியும், கோபமும்’ என்ற வார்த்தைகளை ஜலாலுதீன் உண்மைத்தன்மையற்றவைகளாகவே கண்டார். அதை அவர் நேரடியாகவே முன்வைத்தார்: ‘ஒரேஅடியில் பணமதிப்பு நீக்கத்தைப் புகுத்தியதுபோல, மோடி விரும்பியிருந்தால் ‘பசு பக்தி’ என்ற பெயரால் கூட்டுக் கொலைகளை நடத்துவதை ஒருமுடிவுக்குக் கொண்டுவந்திருக்க முடியும். ஜலாலுதீனின் குமுறலில் குறிப்பிடப்படாத ஓர்அம்சம் – எவ்வாறு பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியும் (பா.ஜ.க) ஆர்.எஸ்.எஸ்-ன் தலைமையிலான சங்பரிவாரங்களும் உள்ளிட்ட அவரது அரசியல் அமைப்பும் மட்டுமீறிய கூட்டுகொலையாளிகளோடு கூட்டுச்சதி செய்தார்கள் என்பதுதான். 

   நீதிபதி சச்சாரின் கூர்நோக்குக் கருத்துரைகள் முஸ்லீம்களைக் குறிவைத்துக் கூட்டுக்கொலை செய்வதை எதிர்த்து தேசத்தின் தலைநகர் உட்பட இந்தியாவின் 17 நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ;எனது பெயரால் அல்ல’ என்ற முழக்கத்தோடு போராட்டங்களில் ஈடுபட்ட நாளில் வெளிவந்தன. 93 வயதான அந்த ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி இந்தியாவில் முஸ்லீம்களின்  நிலைபற்றி ஆராய 2005ல் அமைக்கப்பட்ட ஒரு குழுவுக்கு தலைமை வகித்தார். அந்தக்குழு முஸ்லீம்களுடைய சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகள் பற்றிய ஒரு விரிவான அறிக்கையைத் தயார் செய்தது. அந்த அறிக்கை அவர்களை பெருமளவில் முன்னேற்றுவதற்கான உறுதியான பரிந்துரைகளை முன்வைத்தது.

  நீதிபதி சச்சார் ஃப்ரண்ட்லைனிடம், ‘மத்தியில் உள்ளஅரசு அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பெரும்பாலான நல்ல அம்சங்களைக் கண்டுகொள்ளாதது மட்டுமல்ல, சிறுபான்மை சமூகத்தினர் அனுபவித்துவந்த குறைந்தபட்ச உரிமை களைக்கூட காலில்போட்டு மிதிக்கும் சமூக மற்றும் அரசியல் அமைப்புக்களை ஊக்கப்படுத்துவதையும்கூட செய்தது’ என்று கூறினார்.

  அது உண்மையாகவே, ‘எனது பெயரில் அல்ல’ என்ற எதிர்ப்புப் போராட்டங்களுக்கும், மோடியின் முகாம்களால் இந்தியாவில் நடைபெற்றுவரும் வன்முறைக்கொலைகளின் வளர்ச்சிப்போக்குகள் பற்றிய மோடியின் ‘வலியும், கோபமும்’ என்ற கருத்து வெளிவந்ததற்குமிடையேயான அந்த நாளில்தான் ஜலாலுதீனின் வேதனை நிறைந்த கருத்தும் வெளிவந்தது. பிரதமரின் அறிக்கைகளில், அவர் தனது சொந்த அறிவிப்புகளுக்கேற்ப நடந்துகொள்ளும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் உள்ளார்ந்த நேர்மையும், கருத்தூன்றிய கவனமும் இல்லாதது ஏதோ ஒருதனிப்பட்ட நிகழ்வு அல்ல. ஏராளமான சமூக மற்றும் அரசியல் உற்றுநோக்கர்கள், கடந்த காலத்தில் மோடியால் வெளியிடப்பட்ட இதேபோன்ற அறிவிப்புக்களை ஆய்வுசெய்தபோது இதேபோன்ற முடிவுகளுக்கு வந்திருந்தார்கள். கிழக்கு மாநிலமான ஜார்கண்ட்டில் மேலும் ஒரு கால்நடை வியாபாரி கூட்டுக்கொலை செய்யப்பட்ட அதேநாளில் மேற்கு மாநிலமான குஜராத்தில் மோடி நடத்திய நிகழ்வு மோடியும் பா.ஜ.க.விலுள்ள அவரது கூட்டாளிகளும் தங்களுடைய வார்த்தைகளின்படி ‘பசுவின் மீதான பாசம்’ என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் போடுபவர்களிடமிருந்து சிறுபான்மையினரைக் காப்பாற்ற அவர்கள் தயாராக இல்லை என்பதைக் காட்டின.

பசுபக்தி’ வன்முறை

   கடந்த மூன்று ஆண்டுகளில் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரால் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடைபெற்றுவருவதைப்பற்றி மோடி மூன்றேமூன்று முறைதான் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொருமுறையும் இந்த வன்கொடுமைகள் பற்றிய பொதுமக்களின் உணர்வுகள் மிகஉயர்ந்த அளவுக்கு எழுந்த பின்னரே, அரசின் விளம்பர மேலாளர்களும், பா.ஜ.க.தலைமையும் இனியும் மௌனமாகஇருப்பது மோடியின் தனிப்பட்ட பிம்பத்தையும், அவரது ஆட்சியையும் பாதித்துவிடும் என்று உணர்ந்தபோதுதான் அந்த அறிவிப்புக்கள் வெளிவந்தன. மிகவும் குறிப்பாக, இந்த ஒவ்வொரு அறிவிப்பிலும் தாக்குதல்களை நடத்தியவர்கள்மீது எந்தஒரு குறிப்பிட்ட கண்டனமோ அல்லது இதில் பாதிக்கப்பட்டவர்களைக் குறிப்பிட்டு தனித்தனி அனுதாபமோ தெரிவிக்கப் படவில்லை. இந்த எல்லா அறிவிப்புக்களும் முக்கியமாக வார்த்தைஜாலங் களாகவே இருந்தன. முதல் அறிவிப்பு 2015 அக்டோபரில் பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வந்தது. இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு எட்டு நாட்களுக்கு முன்புதான் 2015 செப்டம்பர் 28ல் உத்தரப் பிரதேசத்தின் தாத்ரியில் மொஹம்மது அக்லக் ஒருகும்பலால் கூட்டுக்கொலை செய்யப்பட்டார். அந்தக்கும்பல் அக்லக் ஒருபசுவைக்கொன்று அதன்இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தார் எனப்பழிசுமத்தி அவரதுவீட்டுக்குள் வெறித்தனமாக நுழைந்தது. மோடியின் அந்த அறிக்கைகூட அக்லக் கொலை செய்யப்பட்டதை நேரடியாகக் குறிப்பிடாமல், சுற்றி வளைத்து ‘இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றிணைந்து ஏழ்மைக்கு எதிராகப் போராடவேண்டும்’ என்ற வெறும் அறிவுரையை மட்டுமே கொண்டிருந்தது. அந்த நேரத்தின் முன்னுணர்வுகள் தாத்ரி படுகொலை மற்றும் அத்தகைய பிற நிகழ்வுகள் காரணமாக உருவான மக்களின் ஆத்திரம் பீகாரின் அரசியல் நிலவரங்களை இந்துத்வா சக்திகளுக்கு எதிராக திருப்பியுள்ளதைக் காட்டியது. எனவே மோடி, தேர்தலில் ஏற்பட்டுவரும் செல்வாக்கு வீழ்ச்சியை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவே அந்த அறிக்கையைப் பயன்படுத்தினார்.

   ‘பசுபக்தி’ தொடர்பான இரண்டாவது அறிவிப்பும்கூட, பா.ஜ.க.வும் அதன் அரசுகளும், அதேபோல அவர்களது அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் அவர்களது அரசியல் பிம்பத்தின் சேதத்தால் பாதிக்கப்பட்டபோது வெளிவந்தது. இது, குஜராத்தில் உனாவில் 2016 ஜூலையில் நான்கு தலித்துகள் ஒருபசுவைக் கொன்றதாக சவுக்கால் அடிக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்குப்பிறகு நடந்தது. அந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் மக்களின் கொதிப்பைக் கிளரும்வகையில் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பலபகுதிகளிலும் பரவியது. அந்த நேரத்தில் மோடியின் அறிவிப்பு அந்த உனா நிகழ்ச்சி பற்றியதாக ஓரளவு நேரடியாகவும், உறுதியாகவும் காணப்பட்டது. அவர் கூறினார்:’ சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருசிலர் அதில் ஓர் இரவுமுழுவதும் ஈடுபட்டிருந்ததை நான் பார்த்தேன். ஆனால் அந்தநாளில் அவர்கள் ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற ஆடைகளைப் போர்த்திருந்தார்கள்.’ பசுபாதுகாவலர்கள் என்று கூறப்பட்டவர் களில் 70 முதல் 80 சதவீதத்தினர் கிரிமினல் குற்றவாளிகள் என்பதை அவர் அறிந்திருந்ததாகவும், அந்த சமூகவிரோத சக்திகள்மீது குற்றவழக்குகளைப் பதிவுசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

   மூன்றாவது அறிவிப்பில் ஜூன் 29 அன்று மோடி தனது நாடகத்தன்மைக்கு மேலும் மெருகூட்டினார். அவரது உச்சரிப்புக்கள் கீழ்க்கண்டவாறு இருந்தன: ’இந்தியாவில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிப்போக்குகள் பற்றிய எனது வலியையும், கண்டனத்தையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தநாடு ஒரு எறும்பைக் கூடக்கொன்றதில்லை. இந்தநாடு சுற்றித்திரியும் தெருநாய்களுக்குக்கூட உணவளித்த நாடு .கடலில் உள்ள மீன்களுக்கும் உணவளித்த நாடு .இந்த நாட்டில்தான் பாபு போன்ற மனிதர் நமக்கு அஹிம்சையைப் போதித்தார். நமக்கு என்ன நேர்ந்துவிட்டது? இந்த நாடு பாபுவின் நாடுதானா? நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

  பொறுமை இழந்ததுபோல தோன்றுகின்ற இந்த அறிவிப்புக்குப் பதிலளிக்கும் வகையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஃப்ரண்ட்லைனிடம் இந்த அறிவிப்புக்களில் உள்ள நாடகத்தன்மை மிகவும் மேலோங்கியிருந்தபோதிலும், அவை மோடியின் நிர்வாகத்தைப்பற்றிய பரிதாபகரமான சித்திரத்தையே காட்டுகின்றன என்றார். “அவர்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டுகொண்டு ‘ நல்ல நாட்கள்’ வந்துவிட்டன என முழங்கிவருகிறார். ஆனால், இப்போது அவர்தான் சுற்றுமுற்றிலும் திரும்பிக்கொண்டு, ’இன்று நமக்கு என்ன நேர்ந்துவிட்டது?’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இங்கு அவர் குறிப்பிட்டுள்ளவை உண்மை யிலேயே இதயத்தை நொறுக்குகின்ற சோகங்களாகவும், இந்த நாட்டை சிறுமைப்படுத்துவதாகவும் இல்லாவிட்டால், இதை ஒரு முட்டாள்தனமான வேடிக்கைப்பேச்சு என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்’ 

  modi at gandhi statue அகிலேஷ் யாதவ் ஓராண்டுக்குமுன் மோடியால் உத்தரவிடப்பட்ட பசு பாதுகாவலர்கள் மீதான குற்றவழக்குகள் பதிவு என்று கூறப்பட்டவைகள் என்னவாயின என்று அறிந்துகொள்ள விரும்பினார். வெளிப்படையாக ஒன்றும் செய்யப்படவில்லை. இது உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ள பசு பாதுகாவலர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கும் பிற தொங்குசதைகளுக்கும் மிக அதிகபட்சமாக உதவுகின்ற கொடூரமான உத்தி என்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. பா.ஜ.க.வின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பா.ஜ.க. தலைமையும் இந்த இந்துத்வா தொங்குசதைகளை உபசரிப்பதில் ஒருபகுதியினராக இருந்தார்கள் என்று கருதுவதில் தவறே இல்லை. 

   சபர்மதியில் மோடியின் உரை நிகழ்த்தப்பட்ட அந்தநாளில், ஜார்கண்ட்டின் மாநிலத்தலைநகருக்கு அருகில் உள்ள ராம்கர்-ன் ஜித்தி பகுதியில் அலிமுதீன் அன்சாரி என்ற கால்நடைவியாபாரியைக் கூட்டுக்கொலை செய்தது உள்ளிட்ட நிகழ்வுகள் ஜார்கண்ட்டில் நடைபெற்றுவந்தன. அதுபோலவே இந்த நிகழ்வுகள் தொடர்பாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளும் அகிலேஷ் யாதவ் சுட்டிக்காட்டியபடி அழுத்தம் குறைந்தன. ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபர்தாஸ் அந்தக்கொலை நடந்ததை முறைப்படி கண்டனம் செய்தாட். ஆனால், இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் வினோதமான திருப்பங்களும், திசைதிருப்பல்களும் இடம்பெற்றன. முதன்மை வழக்கு ராஞ்சி அருகே அன்சாரியின் வாகனத்தைத் தடுத்து அவரைத் தாக்கிய குறைந்தபட்சம் 10பேர்மீது பதிவு செய்யப்பட்டது. ஆனால் அங்கு அதற்கு இணையான இன்னொரு வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. அதில் ’தடை செய்யப்பட்ட மாட்டிறைச்சியை’ இடம்விட்டு இடம் கொண்டு சென்றதிலும், விற்பனை செய்ததிலும் அன்சாரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உள்ள பங்கு பற்றி விசாரிக்கும் வரையறைகள் இருந்தன. அந்த இரண்டாம் வழக்கு அன்சார்யின்மீதான தாக்குதல் அன்சாரிக்கும், அவரைத் தாக்கியதாக சந்தேகப்படுபவர்களுக்கும் இடையே நிகழ்ந்த தனிப்பட்ட அல்லது வியாபாரத் தகராறுகள் காரணமாக நடந்திருக்கலாம் என்ற வாதத்தையும்கூட முன்வைத்தது .தற்போதைய பா.ஜ.க.அரசின் பழைய கதையைப் பார்க்கும்போது இந்த இருவழக்குகளில் எந்த வழக்கு  புலனாய்வில் மிகப்பெருமளவுக்கு முக்கியத்துவம் பெறும் என்பதை யாரும் எளிதில் புரிந்துகொள்ளமுடியும்’ என்றார் மாநிலத்தின் முதன்மை எதிர்க்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் பொதுச்செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா.

   ராம்கர் கிராம மசூதிக்குழுவின் செயலாளர் முஸ்தாஃபா அன்சாரி ஃப்ரண்ட்லைனுடன் தொலைபேசியில் பேசியபோது, ’கால்நடைகளின் பெயரால் கொடுமைப்படுத்துவது இந்தப்பகுதிகளில் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன: இந்தச் சித்ரவதைகளில் அரசியல் அமைப்புக்களும் வெவ்வேறுவழிகளில் உறுதியாகப் பங்கேற்றுவருகின்றன’என்று கூறினார்.

  ஹர்யானா முதலமைச்சர் மனோகர்லால் கத்தார் மற்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் ஆகியோர் உள்ளிட்ட பா.ஜ.க.தலைவர்கள் விடுத்த அறிக்கைகள் ‘பசுபாதுகாவலர்களின் வன்முறைகளை நியாயப்படுத்தியதோடு, அந்த மக்கள் இந்தியாவில் தங்கவிரும்பினால் அவர்கள் மாட்டிறைச்சி உண்பதை விட்டுவிட வேண்டும்’ என்றுவலியுறுத்தியதை இந்தச்சூழலில் பொருத்திப்பார்க்க வேண்டும். தற்போதையசூழலில் மூடிமறைக்க முடியாத இன்னொரு தகவலாக, ’நாட்டிலுள்ள மிகப்பெரிய முஸ்லீம் அமைப்புக்களில் ஒன்றான ஜமியத்-உலாமா-இ-ஹிந்த் இந்த நாட்டின் மதச்சூழலைப் பதட்டப்படுத்துகிறது : சிறுபான்மை சமூகத்தினரின் அன்றாட வாழ்வை சிரமத்துக்குள்ளாக்குகிறது’ என்று கூறி, அந்த அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவந்த’ ‘ஈத் மிலானுக்குத் தடை என்ற வடிவத்தில் வந்துள்ளது. இவையெல்லம், நீதிபதி சச்சார் சுட்டிக்காட்டியதுபோல மதரீதியாக ஒடுக்கும் இந்து ராஷ்ட்ரா ஆட்சியை நிலைநாட்டுவதற்காகச் செய்யப்படுகின்றன

மாட்டிறைச்சி உண்பவர்களைப் பொது இடத்தில் தூக்கிலிடுதல்

 கோவாவில் ஜூன் 14முதல் 18 வரை நடைபெற்ற ‘இந்துராஷ்ட்ரா சிந்தனைக் கலந்தாய்வு நிகழ்வில் அண்மையில் செய்யப்பட்ட அறிவிப்புக்கள் முறையான இந்துரஷ்ட்ரா 2023ல் அமைவதை எதிர்பார்க்கிறது .என்றும், மாட்டிறைச்சி உண்பவர்களையும் ,அவர்களை ஆதரிக்கும் மதசார்பற்றவர்களையும் பொது இடத்தில் தூக்கிலிடவேண்டும் என்றும் கோரின. இவற்றையும், இந்தச்சூழலில் இணைத்துப்பார்ப்பது பொருத்தமானது. இந்து ஜனஜாக்ரிதி சமிதி (HJS)மற்றும் சனாதன்சன்ஸ்தா ஏற்பாடுசெய்த அந்தச்சிந்தனைக் கலந்தாய்வில் சிலநூறு இந்துத்வா அமைப்புக்கள் கலந்துகொண்டன என்றும் கூறப்பட்டது. சனாதன் சன்ஸ்தாவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள்தான் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எஸ்.கல்புர்கி ஆகிய பகுத்தறிவாளர்களைக் கொன்றதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த சிந்தனைக்கலந்தாய்வு கால்நடைவதை தடை, பசுவை தேசிய விலங்காக அறிவித்தல், எல்லாவகையான மதமாற்றங்களுக்கும் தடை, அயோத்தியில் மாபெரும் ராமர்கோவில் கட்டுவது ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்துத்வா இயக்கத்தில் வளர்ந்துவரும் நட்சத்திரம் என்று கருதப்பட்ட சாத்வி சரஸ்வதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாட்களின் தீப்பொறிப் பேச்சாளர் சாத்வி ரிதம்பரா ஆகியோர் மாட்டிறைச்சி உண்பவர்களை பொதுஇடத்தில் தூக்கிலிட வேண்டும் என்று அரசுக்கு அறிவுரை வழங்கியவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 “யாரெல்லாம் பசுவைத் துன்புறுத்துகிறார்களோ அவர்கள் இந்த நாட்டைப் பழிப்பவர்கள். அவர்களை நமது எதிரிகள் என்று கூறவேண்டும்.  இந்த நாட்டில் மாட்டிறைச்சி உண்பதை ஆதரித்து அதை தங்கள் அந்தஸ்தின் அடையாளம் என்று யாரெல்லாம் கூறுகிறார்களோ அந்த அரசியல்வாதிகள் பொதுஇடத்தில் அரசால் தூக்கிலிடப்பட வேண்டும். பசுவைக் காப்பது நமது கடமை. மனிதக் கொலைகளில் பயன்படுத்தக்கூடிய அதேசட்டங்களை நாம் கால்நடைகளை கசாப்பு செய்பவர்களுக்கு எதிராகவும் பிரயோகிக்க வேண்டும்” என்றார் அந்த சாத்வி.

  ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. உள்ளிட்ட அதிகாரபூர்வ சங்பரிவாரங்கள் அந்த சிந்தனைக் கலந்தாய்விலிருந்தும், அதன் பொதுஅறிவிப்புக்களிலிருந்தும் விலகி நின்றபோதும்கூட, அதன் செய்திகள் விஸ்வஹிந்து பரிஷத்தின் சில பிரிவுகள் உள்ளிட்ட இந்துத்வா குழுக்களிடையே சில அதிர்வலைகளை ஏற்படுத்தின. அயோத்தியில் ராமர்கோவிலைக் கட்டுவதை தனது நோக்கமாக அறிவித்துள்ள வி.ஹெச்.பி. தலைமையிலான ராம்ஜென்ம பூமி நியாஸ் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிர்த்ய கோபால் அயோத்தியில் ஃப்ரண்ட்லைனுடன் பேசியபோது,” இந்தநாடு மஹாபுருஷர்கள் மோடி மற்றும் ஆதித்யநாத் தலைமை யின்கீழ் அறிவிக்கப்படாமலேயே இந்துராஷ்ட்ராவை நோக்கியதிசையில் சென்று கொண்டிருக்கிறது. இப்போது, இந்துராஷ்ட்ரா பற்றிய ஒருமுறையான பிரகடனத்தைச் செய்வது நல்லயோசனைதான்” என்று தெரிவித்தார். வழிகாட்டும் மஹாபுருஷர்களான விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் எம்.எஸ்.கோல்வாக்கர் ஆகியோர் கனவுகண்ட இந்துராஷ்ட்ரா புவியியல் மற்றும் சமூக, கலாச்சாரத் தனித்தன்மை கொண்டது. அங்கு மக்களின் வாழ்க்கை இனம், மதம், கலாச்சாரம், மொழி மற்றும் உணவுப்பழக்கம் உள்ளிட்ட வாழ்க்கை முறைகளால் விளக்கப்படுகின்றன. யாரெல்லாம் இந்த இந்துராஷ்ட்ராவின் பெரும்பான்மை உணர்வுகளை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களெல்லாம்-அவர்கள் எந்த மதத்தைப்பின்பற்றினாலும், எந்தக் கடவுளை வணங்கினாலும்- இந்த நாட்டில் தங்கலாம். யாரெல்லாம் இந்த பெரும்பான்மை உணர்வுகளை ஏற்க மறுக்கிறார்களோ அவர்களெல்லாம் இந்த உண்மையான தேசிய வாழ்வி லிருந்து வெளியேறி மறைந்துபோய்விடுவார்கள். இந்த நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நீங்கள் எதைக் காண்கிறீர்களோ அவை இந்த சமூக கலாச்சாரத்தை நோக்கிய வடிகட்டல்கள்தான். இந்தவழிமுறையின் வெற்றிக்கு தேசிய சக்திகளின் அரசியல் ஆதிக்கம்தான் முக்கியமான அம்சமாகும்” என்பதையும் நிர்த்ய கோபால்தாஸ் உடன்சேர்த்தே கூறினார்! 

  அயோத்தியிலும், லக்னோவிலும் உள்ள ஏராளமானசங் பரிவாரங்களின் செயல்பாட்டாளர்களின் கருத்துக்களின்படி, கோவாவில் நடைபெற்ற இந்து சிந்தனைக் கலந்தாய்வுக் கூட்டத்தின் தீர்மானமான ‘இந்து ராஷ்ட்ராவை நிறுவுவதற்கான ஆண்டாக2013 ஐ பிரகடனம் செய்ததும், ‘புதிய இந்தியா’வை உருவாக்குவதற்கான ஆண்டாக 2022 ஐ மோடி திரும்பத்திரும்பதனது சொந்த வார்த்தைகளில் குறிப்பிட்டதும் தற்செயலான செயலல்ல என்பதை இத்தோடு இணைத்துப் பார்க்கவேண்டும்.

  2022ஆம் ஆண்டு என்பது சாவர்க்கரால் கண்டிபிடிக்கப்பட்ட ‘இந்துத்வா-இந்து-இந்துராஷ்ட்ரா’ என்ற கொள்கை வெளியிடப்பட்ட நூறாவது ஆண்டைக் குறிக்கிறது. 2022 மற்றும் 2023 என்ற இரண்டு ஆண்டுகளும், கடந்த பிப்ரவரி/மார்ச்-ல் உ.பி.யில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதற்குப் பிறகுதான் பேசப்படும் ஆண்டுகளாக ஆயின என்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

  கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குமுன் 1994 ல் - அதற்கு முந்தைய ஆண்டில் உ.பி.சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க. அதிர்ச்சியளிக்கும் தோல்வியைச் சந்தித்த பிறகு - நித்ய கோபால் தாஸின் முன்னாள் சகாவான ராமச்சந்திர பரம்ஹன்ஸ் இந்தக்கட்டுரையாளரிடம், ‘இந்துத்வா மேலாதிக்கத்துக்கான செயல்திட்டம் என்பது இரண்டு ஆண்டுகளில் மட்டுமல்ல, அதற்குமேலும் நீடித்துத்தொடரும் சங் பரிவாரங்களின் பணியாகும். அது வெற்றி தோல்விகளைப்பற்றிக் கவலைப் படாமல் தொடர்ந்து நடைபெறும்’ என்றும், ‘ நாங்கள் இறுதி இலக்கை நோக்கி எங்கள் பார்வையை வகுத்துக்கொண்டுள்ளோம். அந்த இலக்கை அடைவதற்கான முக்கியமான பாதையாக அனைத்து இந்துக்களின் அரசியல் அடையாளத்தை உருவாக்குவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம். ராம்ஜென்ம பூமி மற்றும் ராமர் கோவில் உள்ளிட்டபல குறியீடுகள் இந்தப்போராட்டத்தில் வந்துள்ளன. குறிப்பாக தலித்துகள் மற்றும் பிற பிற்பட்ட வகுப்பு (OBC) சமுதாயங்களின் சாதி அடையாளங்களை உறுதிப்படுத்துவதில் நாங்கள் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்தோம். இந்த எல்லாப் பின்னடைவுகளிலும், முன்னேற்றங்களிலும்கூட எங்கள் இறுதி இலக்கை மனதில்கொண்டு எங்களது ஒவ்வொரு அடியையும் உறுதியாக  எடுத்துவைத்துள்ளோம்’.

  இந்துத்வா முகாமின் பிரிவுகள் , தாங்கள் தங்கள் இலக்கை நெருஙிவிட்டதாக -குறிப்பாக அரசியல்ரீதியாகவும், சமூகரீதியாகவும் ஆதிக்கம் நிறைந்த பல OBC சமுதாயங்களை இந்துத்வா செயல்திட்டத்தின் பின்னணியில் குறிப்பிடத் தக்கவகையில் அணிவகுக்கச் செய்வதில் நெருங்கிவிட்டதாக தெளிவாக உணர்ந்தார்கள். 

  கூட்டுக்கொலைகள் செய்தல் உள்ளிட்ட பசுபாதுகாப்பு தொடர்பாக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நிகழ்வுகளில் தாக்குதல்களைத் தொடுக்கும் தலைவர்களாக சில OBC சமுதாயத்தின் உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளார்கள்.

  திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்தப்பின்னணிக்கு எதிராக, சபர்மதியிலிருந்து பாபுவின் பெயரையும், கொள்கைகளையும் மோடி உச்சரிப்பதில் என்ன மதிப்பு இருக்கிறது? பிரதமரானபின் மோடி பலமுறை பயணம் சென்றுவந்துள்ள நாடான அமெரிக்காவில் அரசை நிர்வகிப்பதற்கு அடிப்படையான வழிகாட்டும் நெறிமுறைகள் மக்களுக்கான உரிமைகள் சாசனத்தில் உள்ளன.. ஆளப்படுவதற்கும், மக்களின்வாழ்வில் எல்லாவிதத்திலும் ஒட்டுமொத்த மகிழ்ச்சியை அளிக்கும்வகையில் ஆள்வதற்கும் மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான இயல்பான ஒப்பந்தம் தேர்தல்மூலம் அமைகிறது. 

  இந்துராஷ்ட்ராவை முன்னெடுப்பவர்களும், அதை நிறுவுவதில் தங்கள் இலக்கை மிகவும் நெருங்கிவிட்டதாக நம்புபவர்களும், மக்கள் வாழ்வில் அனைத்து மக்களுக்குமான ஒட்டுமொத்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதில் நம்பிக்கையற்றவர்களாக இருக்கிறார்கள். சிறுபான்மையினர் மீது ஏவிவிடப்பட்ட கூட்டுக்கொலைகளின் தொடர்நிகழ்வுகளும், சமூக ஒடுக்குமுறை சூழல்களும், கலவரமூட்டும் விதிமீறல்களும் ஜனநாயகத்தின் மாண்புகளையே சிதைத்து வருகின்றன .இவைதான் அவர்களது இந்துராஷ்ட்ராவுக்கான பயணத்தின் அடி நாதமாக உள்ளன

(நன்றி: ‘ஃப்ரண்ட்லைன் ஜூலை 21, 2017)

Pin It