தமிழ்நாடு ஆளுநர் தமிழக அரசியலில் தொடங்கி வைத்த ‘அரசியல் நாடகத்தில்’ இப்போது அவர் சிறந்த சிரிப்பு நடிகராக மக்கள் மத்தியில் காட்சியளிக்கிறார். மக்கள் இவர் தோன்றும் காட்சிகளில் ‘விலா’ நோக சிரித்து கைதட்டி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார்கள். பொதுவாக ஆளுநர் என்றால் அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட அரசியல் சட்டத்தின் முதன்மைப் பிரதிநிதி என்று பார்க்கப்பட்டார்கள். அதை கட்டவிழ்த்துள்ளார் ஆளுநர்.

அமித்ஷா தனக்கு கேடயமாக இருந்து நற்சான்று வழங்குவார் என்ற ஆளுநரின் அற்பத்தனமான அரசியல் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் சாட்டையடிக் கொடுத்துள்ளது. “அரசியல் சட்டத்தை திருப்பிப் பாருங்கள்; அமித்ஷாவுக்கு வால் பிடிக்காதீர்கள்” என்ற செய்தியை ஆளுநருக்கு எச்சரிக்கையாக விடப்பட்டிருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் வலிமையை தமிழ்நாடு முதல்வர் ஆளுநருக்கு உணர்த்திவிட்டார். உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு – இந்திய அரசியலையே தமிழக முதல்வரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. வழக்குத் தொடர்ந்த பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்குப் பிறகு நடுங்கிப் போன ஆளுநர் மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பத்து மசோதாக்களின் ஒப்புதலை நிறுத்தி திருப்பி அனுப்பியிருக்கிறார். “கிடப்பிலே நீண்டகாலம் போட்டு வைப்பேன்; கிடப்பில் என்னால் போடப்பட்ட மசோதாக்கள் இறந்து போய் விட்டதாகவே அர்த்தம்” என்று ஆணவமாகப் பேசினார் தமிழக ஆளுநர். இப்போது மசோதாக்கள் செத்துப் போகவில்லை, உயிர் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டு திருப்பி அனுப்பியிருப்பது தமிழக அரசுக்குக் கிடைத்த முதல் வெற்றி.

“கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்ற கிராமத்து பழமொழி போல, மசோதாவை திருப்பி அனுப்பினாலும், அதற்கு ஒப்புதல் கிடையாது என்றார். இரண்டே நாட்களில் சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி பதிலடி தந்தது தமிழ்நாடு அரசு. திருப்பி அனுப்பிய மசோதாவை கிடப்பில் போடலாம், இல்லாவிட்டால் குடியரசு தலைவருக்கு அனுப்பலாம் என்று கனவு கண்டார் ஆளுநர். அதற்கும் உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி போட்டுவிட்டது.

“2020ஆம் ஆண்டிலிருந்து இந்த மசோதாக்கள் ஆளுநரிடம் 3 ஆண்டுகளாக கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது. (தமிழ்நாடு அரசு வழக்கில்) நாங்கள் ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்பிய பிறகுதான், மாசோதாவுக்கு ஒப்புதல் தரமால் திருப்பி அனுப்பியிருக்கிறார். சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்களை மீண்டும் நிறுத்தி வைக்க முடியாது” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா அகியோர் மீதான குட்கா ஊழல் விசாரணைக்கு ஆளுநர் அனுமதித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது தமிழக சட்டமன்றத்தை ஏன் கூட்ட வேண்டும் என்று ஆளுநருக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இப்போது சட்டமன்றக் கூட்டத்தின் தாக்கத்தை உணர்ந்திருப்பார் என்றே நம்புகிறோம். தனது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தோர் மீதே ஆளுநர் ஊழல் விசாரணைக்கு ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி மவுனமாகி விட்டார்.

ஒன்றிய ஆட்சியின் அத்துமீறல்கள் மற்றும் சமுகநீதி துரோகங்களை எதிர்த்து மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் போராட்டங்களை நடத்திவரும் தமிழக முதல்வர் ஒவ்வொன்றிலும் வெற்றிப்படிகளில் முன்னேறி வருகிறார்.

மருத்துவ உயர் பட்டப்படிப்பில் அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுத்த ஒன்றிய ஆட்சியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தந்தவர் தமிழக முதல்வர்.

ஒவ்வொரு மாநிலத்திலும் மருத்துவக் கல்லூரிகள் திறப்பதற்கு இலக்கு நிர்ணயித்து மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. இந்த எதிர்ப்புகளுக்குப் பிறகு அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த மற்றொரு வெற்றி.

ஒன்றிய மதவெறி ஆட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் திரட்டி தமிழக முதல்வர் எடுத்த முயற்சியால் தான் ‘இந்தியா’ கூட்டணி இப்போது வலிமையுடன் உருவாகியுள்ளது.

தமிழக முதல்வரின் பெண்ணுரிமைக்கான திட்டங்களை இப்போது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொண்டு தேர்தல் அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘இலவசங்கள்’ என்று கொச்சைப்படுத்தி எதிர்த்துவந்த பாஜகவும் இப்போது தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்துள்ளன.

சமூகநீதி, மாநில உரிமை, மதவெறி எதிர்ப்பு என்ற ‘திராவிட மாடல்’ இந்தியாவில் இந்தி பேசும் மாநிலங்களின் மாடலாகவும் இப்போது மாறி நிற்கிறது. ஆளுநர்களின் அத்துமீறல்களுக்கு கடிவாளம் போடும் இந்த முயற்சியும், ‘நீட்’க்கு எதிரான மக்கள் இயக்கங்களும் தமிழ்நாட்டை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்பது உறுதி!

விடுதலை இராசேந்திரன்

Pin It