அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவின்படி அதற்கான பயிற்சியை முடித்தவர்களுக்கு பணி வழங்காதது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை திருவெற்றியூரை சேர்ந்த சபரி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

அனைத்து ஜாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டது. இதன்படி அனைத்து பிரிவினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க 6 மையங்கள் அமைக்கப்பட்டன. அதில் நான்கு மையங்கள் சைவத்திற்கும், இரண்டு வைணவத்திற்கும் ஒதுக்கப்பட்டன.

இந்த மையங்களில் 2007- 2008 ஆம் ஆண்டில் 207 பேர் பயிற்சி முடித்தனர். அதில் நானும் ஒருவன். அதன் பிறகு 2008ஆம் ஆண்டு எனக்கு ஜூனியர் சைவ அர்ச்சகருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. எனவே 2006ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின் படி அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை கோவில்களில் பணியமர்த்தியிருக்க வேண்டும். ஆனால் 208 பேரில் ஒருவருக்குக் கூட இதுவரை பணி வழங்கப் படவில்லை.

தமிழக அரசு கோவில்கள் அர்ச்சகர் பணிக்கு காலியாக உள்ள இடங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அங்கு தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு கோவில் கூட இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை. கடந்த மார்ச் 13 ஆம் தேதி இது தொடர்பாக ஒரு மனுவை தமிழக அரசுக்கு நான் அளித்து இருந்தேன். அந்த மனு மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழகத்தில் ஒற்றை சன்னதி கொண்ட ஆகமக் கோவில்களின் பட்டியலை இரண்டு தமிழ் நாளிதழ்களில் வெளியிட உத்தரவிட வேண்டும். மேலும் அர்ச்சகர் பயிற்சி முடித்த நான் உட்பட 207 பேருக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன் இது தொடர்பாக இரண்டு வாரத்தில் தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Pin It