தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு நூற்றாண்டு விழா எடுத்துள்ளது மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி. தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் தலைமையேற்க, ஆளுநரும் இந்தியக் குடியரசுத் தலைவரும் விழாவைச் சிறப்பித்துள்ளனர். நீண்ட காலம் தமிழ்நாட்டுச் சட்டமன்ற உறுப்பினராகவும் மாநில முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்த கலைஞர் மு. கருணாநிதியின் படம் பேரவைக் கூடத்தில் திறந்து வைக்கப்பட்டது. அரசியல் தலைவர்களும் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களும் உயர் நீதிமன்ற நீதியரும் அவையடக்கத்துடன் அமர்ந்திருக்க, முதலமைச்சர் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் உரையாற்ற, சீரும் சிறப்புமாக விழா நடந்தேறியது.

stalin and ramnath govindhஇந்தச் சட்ட மன்றம் தோன்றக் காரணமாக இருந்த மாண்டேகு, செம்ஸ்போர்டு ஆகிய ஆங்கிலேயருக்கும் அவர்களுக்கு முன்னோடிகளான மிண்டோ, மார்லி ஆகிய ஆங்கிலேயருக்கும் படத்திறப்பு ஏதும் நடக்கா விட்டாலும் யாரும் அவர்களை நினைவுகூர்ந்து நன்றி சொல்லக் கூட இல்லை. அந்தப் பிரபுமார்களை விடுங்கள், எல்லாவற்றுக்கும் ஆசி வழங்கிய விக்டோரியா மகாராணியைக் கூட மறந்து விட்டார்களே! இப்படியா நன்றி மறப்பது?

கிழக்கிந்தியக் கும்பினியார் சென்னைக்கு வந்து ஆட்சியைக் கைப்பற்றிய காலத்தைக் கணக்கிட்டு அதன் இருநூற்றைம்பதாவது ஆண்டைக் கொண்டாடலாம், அதற்கு எலிசபெத் மகாராணியை அழைத்து வந்து, சர் பட்டம் பெற்று சரிகைக் குல்லாய் அணிந்த அரண்மனை அரசியல்வாதி ஒருவரின் படத்தைத் திறக்கச் செய்யலாம். இராபர்ட் கிளைவின் போர்க்கள வெற்றிக்கும் கூட விழாவெடுக்கலாம். இன்னும் எதற்கெல்லாம் விழாவெடுக்கலாம் என்பதைக் கண்டறிய உலகப் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் குழு ஒன்றையும் அமைக்கலாம்.

நூறாண்டு காணும் இந்தச் சட்டமன்றத்தின் வரலாறு தெரியுமா?

1600 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கும்பினி நிறுவப்படுகிறது.

1707 – ஔரங்கசீப் மறைவுடன் முகலாயப் பேரரசு நலிவுறுகிறது. பிரித்தானியக் கிழக்கிந்தியக் கும்பினி கல்கத்தா, மும்பை, சென்ன நகரங்களில் வணிக நிறுவனங்கள் தொடங்குகிறது. மூன்று கிளைகளும் தனித்தனியாக இயங்கி அரசாட்சி கொண்ட இராணுவ ஆற்றல்களாக வளர்கின்றன.

1773 – பிரித்தானியப் பாராளுமன்றம் தலையிட்டு ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றி, வங்காள மாகாணத்துக்குப் பிற மாகாணங்களை மேற்பார்வையிடும் அதிகாரம் கொடுக்கிறது. வங்காள ஆளுநர் தலைமை ஆளுநர் (கவர்னர்-ஜெனரல்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். அவருக்கென்று ஓர் ஆட்சிமன்றம் (Council) அமைக்கப்படுகிறது. கல்கத்தா இந்தியாவின் தலைநகரமாகிறது. பிரித்தானிய இந்தியாவின் முதல் நடுவணரசு இப்படித்தான் தோற்றமெடுக்கிறது. சென்னைக்கும் மும்பைக்குமான ஆளுநர்கள் வங்காள ஆளுநருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றாலும் அவர்களுக்கென்று சில அதிகாரங்கள் விட்டு வைக்கப்படுகின்றன.

1833 – பிரித்தானியப் பாராளுமன்றம் இயற்றிய சட்டப்படி சென்னை, மும்பை அதிகாரங்கள் பறிக்கப்பட்டு கல்கத்தா நடுவணரசுக்கு – தலைமை ஆளுநருக்கு – மாற்றப்படுகின்றன. சென்னை, மும்பை மாகாணங்கள் இலண்டனுக்கு மேல்முறையீடு செய்து கொள்ளலாம். தலைமை ஆளுநர், ஆளுநர்கள் எல்லாருமே பிரித்தானிய அதிகார வகுப்பினரே, வேறு எவருமில்லை.

1852-53 – நடுவணரசுக்கும் மாகாண அரசுகளுக்குமான உறவுகளை ஆராய பாராளுமன்ற விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது.

1857 – சிப்பாய்க் கலகம் எனப்பட்ட முதல் இந்திய விடுதலைப் போர் அடக்கி ஒடுக்கப்படுகிறது.

1858 – விக்டோரியா மகாராணியின் சாற்றுரை கும்பினி ஆட்சியை நீக்கி இந்தியாவை பிரித்தானிய அரசின் நேர் ஆட்சிக்கு உட்படுத்துகிறது.

1861 – இந்திய மன்றங்கள் சட்டம் (Indian Councils Act) இயற்றப்பட்டு, மாகாண சட்ட மன்றங்கள் அமைக்கப்படுகின்றன. ஆளுநரின் ஆட்சிக் குழு உறுப்பினர்களோடு நான்கு முதல் எட்டுப் பேர் வரை இந்தச் சட்ட மன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்களில் பாதிப்பேர் அதிகாரியல்லாதவர்கள் என்றாலும் ஆளுநரால் அமர்த்தப்படுகிறவர்கள். இவர்களைத் தவிர அரசத் தலைமை வழக்குரைஞரும் (அட்வகேட் ஜெனரல்) சட்டமன்ற உறுப்பினராக இருப்பார். இதுதான் சென்னை மாகாணத்தின் முதல் சட்ட மன்றம் என்று 160ஆம் ஆண்டு விழா எடுக்கலாம்.

1871 – தலைமை ஆளுநரும் வைசிராயுமான மேயோ பிரபு நிதி தொடர்பான நடுவணரசின் பிடியைக் கொஞ்சம் தளர்த்துகிறார். காவல், சிறை, கல்வி, பதிவு, நல்வாழ்வு, சாலைகள், குடியியல் கட்டங்கள் ஆகிய துறைகளில் மாகாணங்களுக்கு நிபந்தனைகளுடன் அதிகாரமளிக்கப்படுகிறது.

1877 – வைசிராய் லிட்டன் பிரபு காலத்தில் நில வரி, சரக்குத் தீர்வை, முத்திரைகள், பொது நிர்வாகம், சட்ட-நீதித் துறை ஆகிய பொறுப்புகள் மாகாணங்ளுக்கு மாற்றப்படுகின்றன.

1882 - வைசிராய் ரிப்பன் பிரபு வருவாய் இனங்களை நடுவண், மாகாணம், இரண்டுக்கும் பங்கு என்று மூன்றாகப் பிரிக்கிறார். மாகாண அரசுகள் அப்போதும் நடுவணரசின் நிர்வாக முகவர்களாகவே இருந்தன. மாகாண நிதிநிலை அறிக்கைகள் நடுவண் நிதிநிலை அறிக்கையின் பகுதிகளாகவே கருதப்பட்டன. மாகாண சட்ட மன்றங்களில் ஒரு சட்டமுன்வடிவை அறிமுகம் செய்வதற்கு முன்பே நடுவணரசின் அனுமதி பெற வேண்டும். சட்டம் இயற்றிய பிறகும் நடுவணரசின் இசைவு பெற வேண்டும்.

1905 – வங்கம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. வங்கப் பிரிவினையை எதிர்த்துத் தேசிய இயக்கம் வீறுகொண்டெழுகிறது. கர்சான் பிரபு வைசிராய் பதவியிலிருந்து விலகி ஊர் திரும்புகிறார். மிண்டோ பிரபு வைசிராய் பொறுப்பேற்கிறார். மார்லி பிரபு இந்தியாவுக்கான பிரித்தானிய அமைச்சர் (இந்தியா மந்திரி) ஆகிறார்.

1906 – சுயராஜ்யம் எமது பிறப்புரிமை என்று காங்கிரஸ் முழங்குகிறது. திலகரின் இந்த முழக்கம் விடுதலைக்கானதன்று, பிரித்தானிய மேலாட்சியில் இந்தியருக்கு அதிகாரம் கோருவதே.

1909 – அதிகாரப் பரவலாக்கத்துக்கான மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் எனும் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு மத்திய சட்ட மன்றத்திலும் மாகாண சட்ட மன்றங்களிலும் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தொகை கூடுதலாக்கப்படுகிறது. ஆனால் வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் தேர்தல் நடைபெறாது. நகராட்சிகள், மாவட்டக் கழகங்கள் சார்பாகச் சிலர், நிலவுரிமை கொண்டவர்கள், பல்கலைக்கழகப் பகராளர்கள்… இப்படிச் சிலருக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு. இறுதியாகப் பார்த்தால் மாகாணங்களின் குடுமி மத்திய அரசின் கையில்! மத்திய அரசின் குடுமி பிரித்தானிய வல்லரசின் கையில்!

 1914 – 1918 – முதல் உலகப் போர்! படையியல் நோக்கிலும் பொருளியல் நோக்கிலும் பிரிட்டனுக்கு இந்தியாவின் தயவு பெரிதும் தேவைப்படுகிறது. இந்திய முதலாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புகள் பெருகுகின்றன. காங்கிரசின் ஆண்டுப் பேரவைகளில் பிரித்தானியரின் போர் வெற்றிக்கு ஆதரவாகத் தீர்மானங்கள் இயற்றப்படுகின்றன.

1919 - போர் முடிந்த பின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகிப் போராட்டங்கள் வெடிக்கின்றன. இப்போது காந்தியார் தலைமை ஏற்கிறார். போராட்டங்களை அடக்க ரௌலத் சட்டம் இயற்றப்படுகிறது. ரௌலத் சட்டத்தை எதிர்க்கத் திரண்ட மக்களை டயர் சுட்டுக் குவித்த ஜாலியன் வாலாபாக் கொடுமை நிகழ்கிறது. இந்தப் பகைப்புலத்தில் ’இந்தியா மந்திரி’யாக இருந்த மாண்டேகு பிரபுவும், வைசிராயாக இருந்த செம்ஸ்போர்டும் சேர்ந்து பிரித்தானிய அரசுக்கு அறிக்கை கொடுக்கின்றனர். இதுதான் மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கை எனப்படுகிறது.

1920 – மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம் இயற்றப்படுகிறது. தேர்தெடுக்கப்பட்ட பேராளர்களிடம் மாகாண அரசின் ஒருசில அதிகாரங்களை ஒப்படைப்பதுதான் இதில் புதிய செய்தி. ஆனால் நிதி, காவல் போன்ற முகன்மையான துறைகள் ஆளுநரால் அமர்த்தப்பட்டவர்கள் கையில் இருக்கும். இதற்குத்தான் இரட்டையாட்சி (Diarchy) என்று பெயர்!

1921 – மாகாணச் சட்ட மன்றத்தில் சற்றொப்ப 70 விழுக்காடு தேர்தல் வழி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 20 விழுக்காடு அதிகாரிகள். 10 விழுக்காடு ஆளுநரால் அமர்த்தம் செய்யப்படுவார்கள். தேர்தலில் வாக்குரிமை சொத்துள்ளவர்களுக்கு மட்டுமே! குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமான வரி அல்லது நகராட்சி வரி செலுத்துகிறவர்கள், சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள், வீடு வாடகைக்கு விடுகிறவர்கள் ஆகியோர் மட்டுமே வாக்களிக்கலாம். இந்தியா முழுக்க வயது வந்தோரில் 8.8 விழுக்காடு மட்டுமே வாக்காளர்கள்.

மாகாணத் தன்னாட்சியையும் குடியாட்சியத்தையும் கேலிக்கூத்தாக்கும் மாண்டேகு-செம்ஸ்போர்டு திட்டப்படி நடைபெற்ற தேர்தலை காந்தியார் தலைமையிலான காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு போன்ற சில தலைவர்கள் தேர்தலில் பங்கேற்க விரும்பினார்கள். ஆனால் காங்கிரஸ் பெயரில் போட்டியிட காந்தியார் அனுமதிக்கவில்லை. அவர்கள் சுயராஜ்யக் கட்சி என்ற பெயரில் போட்டியிட நேரிட்டது. காந்தியாரின் தேர்தல் புறக்கணிப்பு சட்ட மன்றப் புறக்கணிப்பு அழைப்பை அன்றைய சென்னை மாகாணத்தில் பெரியார், இராஜாஜி உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் ஆதரித்தார்கள். காங்கிரஸ் புறக்கணித்த அந்தத் தேர்தலில்தான் சொத்துக்காரர்களின் வாக்குகளைப் பெற்று நீதிக் கட்சி வெற்றி கண்டது.

1921ஆம் ஆண்டில் பிரித்தானியக் காலனி ஆட்சியாளர்கள் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கவும் தங்கள் சமூக அடித்தளத்தை விரிவாக்கவும் அமைத்த மோசடியான மாகாணச் சட்ட மன்றத்துக்கும் இழிந்த இரட்டையாட்சிக்கும்தான் மு.க. ஸ்டாலின் நூற்றாண்டு கொண்டாடுகிறார். அன்றைய ஆண்டைகளின் சாதனையைக் கொண்டாட இன்றைய ஆண்டைகளை அழைத்து வந்துள்ளார்.

 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அது மாகாண சுயாட்சிக்கான சட்டம் என்று காலனியாதிக்க ஆட்சியாளர்கள் சொல்லிக் கொண்டார்கள். “இல்லை, இது மாண்புமிகு நகராட்சிகளையே உருவாக்கியுள்ளது” என்று காந்தியார் சாடினார். ஆனால் 1937 தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வென்றது, நீதிக் கட்சி தோற்றுப் போனது. இராஜாஜி சென்னை மாகாணத் தலைமை அமைச்சர் ஆனார். 1939ஆம் ஆண்டு தங்களைக் கேட்காமல் இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தியதைக் கண்டித்து அந்த அமைச்சரவை பதவி விலகியது.

அந்த 1935 சட்டத்தை ஒட்டியே 1950ஆம் ஆண்டின் இந்திய அரசமைப்புச் சட்டமும் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் மாநிலங்களின் உரிமைகளை மெய்யாகவே உறுதி செய்கிறதா? இல்லையா? என்ற விவாதம் ஒருபுறமிருக்க, மாநிலத் தன்னாட்சி என்ற ஒரு வகையில் அது குறித்தான நம் பட்டறிவு என்ன? என்று பார்த்தாலே போதும்.

காலனியாதிக்க அரசு நுழைத்த இரட்டையாட்சி முறைதான் சாறத்தில் இன்றளவும் தொடர்கிறது என்று நாம் சொன்னால் திமுக தலைமையால் ஏற்க முடியாதுதான். ஆனால் இதையே அறிஞர் அண்ணா சொன்னால்?

1967 பொதுத்தேர்தலில் வென்று அண்ணா தலைமையிலான திமுக தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தது. சற்றொப்ப ஈராண்டு காலம் அண்ணா முதலமைச்சராக இருந்தார். மறைவதற்கு சற்றுமுன் 1969 சனவரியில் கடைசியாகத் தம்பிக்கு எழுதிய மடலில் “இன்றைய அரசமைப்புச் சட்டம் கொல்லைப் புறமாகக் கொண்டுவரப்பட்ட ஒர் இரட்டை ஆட்சிதான்” என்று தெளிவாகச் சுட்டிக்காட்டினார்.

1969 ஹோம்ரூல் (Homerule) ஏட்டின் பொங்கல் சிறப்பிதழில் வெளிவந்த அண்ணாவின் அந்த இறுதி மடலை திமுக தலைமையில் இருப்பவர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.

[”If by being in office, the DMK is able to bring to the notice of the thinking public, that the present Constitution is a sort of dyarchy by the back door, that would be a definite contribution indeed to the political world”

Dr. Anna, in his last essay “HAIL THE DAWN!” published in HOME RULE, Pongal Number 1969, pp.11-12.]

சட்ட மன்றத்துக்கு நூற்றாண்டு, சமூக நீதிக்கு நூற்றாண்டு என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடாமல், வெள்ளைக்காரன் கொண்டுவந்து தில்லிக்காரன் காத்து வரும் இரட்டையாட்சிக்கு நூற்றாண்டு என்று உண்மையைச் சொல்லிக் கொண்டாடியிருக்கலாம்! தில்லி வல்லரசியத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளவாவது பயன்பட்டிருக்கும்.

அடிமை மன்றத்துக்கு ஆண்டு நூறு கொண்டாட முடியுமா?

- தியாகு

Pin It