இந்து மதம் அஹிம்சையை வலியுறுத்துகிறது என்கிறார்கள் அதன் பிரச்சார செயலாளர்கள். அதற்காக ‘இம்சையை’ அதாவது கொலையை நியாயப்படுத்துகிறார்கள். அதற்கு ‘சம்ஹாரம்’ என்று ‘திரு நாமம்’ சூட்டியிருக்கிறார்கள்.

மாவோயிஸ்ட்கள் ஒரு காலத்தில் சோசலிசப் புரட்சிக்காக வர்க்க எதிரிகளை அழித்தொழித்தல் – அதாவது ‘சம்ஹாரம்’ செய்வதை கொள்கையாகக் கொண்டிருந்தனர். பிறகு அந்தக் கொள்கையை கைவிட்டாலும், இன்றுவரை ஆட்சியாளர்கள் அவர்களை பயங்கரவாதிகள் என்றே கூறுகிறார்கள். முருகன் சூரனை அழித்தால் அது பக்தி; மாவோயிஸ்டுகள் சம்ஹாரம் செய்தால் அது பயங்கரவாதமா என்று கேட்கிறார். ஒரு பெரியாரிஸ்ட்! கேள்வி நியாயமானது தான், ஆனால் வேத மதத்தில் அவாள் எது செய்தாலும் அது தர்மம், தேசத் தந்தை காந்தியை ‘சம்ஹாரம்’ செய்தான் கோட்சே. இது ’காந்தி சம்ஹாரம்’ தான் சம்ஹாரத்தை நியாயப்படுத்தும் கூட்டத்துக்கு ‘தேசபக்தர்கள்’ என்ற பெயரும் இந்துத்துவ அகராதியில் உண்டு!

புராண காலத்திலேயே தேவர்களான பார்ப்பனர்கள் ‘தீவிரவாத தடுப்புக் குழு’ ஒன்றை உருவாக்கியிருப்பார்கள் போல.! அதில் சிவன், விஷ்ணு போன்றவர்கள் நிரந்தர தலைமை இயக்குனர்கள். மாறுவேடம் அணிந்து தங்களின் பிராமண வேத ஆதிக்க எதிரிகளை அடையாளம் காண்பார்கள். கடலுக்குள் மூழ்குவார்கள்,நெருப்பிலிருந்து எழுவார்கள், வன விலங்குகளாக அவதரித்து சம்ஹாரம் செய்து விடுவார்கள், அப்போதெல்லாம் சம்ஹாரத்துக்கு தடை சட்டமோ, விசாரணையோ இல்லை. ‘சம்பூகனை சம்ஹாரம்’ செய்த ராமன் மீது எந்த குற்றவியல் சட்டமும் பாயவில்லை. மாறாக அவனுக்கு அயோத்தியில் கோயில் கட்டி விரைவில் தேர்தல் விழா நடக்கப் போகிறது.

சத்திரியர்களுக்கு இடையே பிளவையும் குடும்பப் பகையையும் உருவாக்கிய கிருஷ்ண பகவான் ‘அழித் தொழிப்பே’ தர்மம் என்றான்; அந்த; ‘தர்மம்’ தான் இப்போது பாரதத்தின் தர்மம். கிருஷ்ணனும், ராமனும் இப்போது பாரதத்தின் தேசிய தலைவர்கள். ‘பாரத ரத்னா’ விருது கூட கிடைக்கலாம்.

தபோல்கர், பன்சாரே, கவுரி லங்கேஷ், கல்புர்கி போன்ற பகுத்தறிவாளர்கள் ‘இந்துத்துவா அரசியலை எதிர்த்தவர்கள்’ என்பதற்காக ‘சம்ஹாரம்’ செய்யப்பட்டார்கள். ஆண்டுகள் பல ஓடியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. வழக்கும் அநேகமாக மூடுவிழா செய்யப்பட்டது. சம்ஹாரம் செய்த இந்த தேச பக்தர்களுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களாக நிறுத்தப்பட நல்ல வாய்ப்பு இருக்கிறது.

புராண காலங்களில் மட்டுமல்ல, இந்த மோடி காலத்திலும் ‘சூர சம்ஹாரம்’ புனிதம் தான். பசுவுக்காக மனிதனை ‘சம்ஹாரம்’ செய்வார்கள். சென்னையில் இப்போது வீதிகளில் திரியும் பசுக்கள் மனிதர்களை வதம் செய்யத் தொடங்கி விட்டதே என்று கேட்கிறார் ஒரு தோழர். திருவல்லிக்கேனியில் வைதீக பிராமணர் ஒருவரே பசுவின் சம்ஹாரத்துக்கு உள்ளகிவிட்டார். உடனே பசுக் காவலர்கள் பசு மாட்டின் உரிமையாளர்கள் மீது பாய்கிறார்கள். ‘பசுவை’ கைகழுவி விட்டனர். ‘சம்ஹாரங்களில் கூட எது நியாயம், எது தவறு என்பதற்கு அவாள் பாதுகாப்புத்தான் முதன்மையாகிறது.

நரகாசூரனை விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து கொலை செய்த தீபாவளிக்கு முதல்வர் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்று கேட்கிறார்கள். கொலை செய்யப்பட்ட நாளை விழா எடுத்துக் கொண்டாடலாமா என்று கேட்டால், அதுதான் கலாச்சாரம் என்கிறார்கள்.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் சட்டங்களோ, சம்ஹாரங்களை குற்றம் என்கிறது. வேத மதச் சட்டங்கள் சம்ஹாரத்தை புனிதம் என்று கூறி மக்களையும் கொண்டாட கட்டாயப்படுத்துகிறது. தட்டிக் கேட்டால் நீ இந்து விரோதி அமுலாக்கத்துறையை அனுப்பி அரசியல் சம்ஹாரம் செய்து விடுவார்கள். டெல்லியில் ராமலீலா நடத்தி ராவணனை சம்ஹாரம் செய்கிறவர்களும் இவர்கள் தான். பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் சம்ஹாரத்தை நியாயப்படுத்துபவர்களும் இவர்கள் தான்.

இந்த சம்ஹார கொடுமையையே சம்ஹாரம் செய்தாக வேண்டும் என்று சொன்ன தலைவர்கள் தான் பெரியார், அம்பேத்கர். ஆமாம் இன அழிப்பு தத்துவத்தைத்தான் சம்ஹாரம் செய்ய வேண்டும்.

- கோடங்குடி மாரிமுத்து

Pin It