அய்.அய்.டி., அய்.அய்.அய்.எம். பார்ப்பன கூடாரங்களாகி விட்டன. அங்கே சமஸ்கிருதம் வேதம் கற்பிக்கப்படுகிறது. அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்படுகிறது. பார்ப்பன வேத பிரச்சாரங்கள், உபதேசம் செய்கிறார்கள்.
மாட்டிறைச்சி சாப்பிட்டால் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். சைவம், அசைவம் என்று உணவுக் கூடத்தில் பாகுபாடு. தலித் மாணவர்கள், பேராசிரியர்களாக இருக்கும் பார்ப்பனர்கள் தரும் இடையூறுகள் அவமதிப்புகளால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
* மும்பை அய்.அய்.டி.யைச் சார்ந்த தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி விடுதியின் 7ஆவது மாடியிலிருந்து குதித்து அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.
2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு என்ன நிலை?
* 2014 முதல் 2021 வரை அய்.அய்.டி., அய்.அய்.எம். மத்திய பல்கலைக் கழகங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மக்களவையில் இது அரசு தாக்கல் செய்த அறிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்ட தகவல். 122 பேரில் 24 மாணவர்கள் பட்டியல் இனப் பிரிவினர். 41 பேர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர். பழங்குடி மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள் 3 பேர். இவை அனைத்தும் நிறுவனக் கொலைகளே!
தடைக் கற்களைத் தாண்டி உயர் கல்வியை எட்டிப் பிடிக்கும் விளிம்பு நிலை மாணவர்களை சனாதனம், பார்ப்பனியம் தடுக்கிறது; தற்கொலைக்குத் தூண்டுகிறது.
நீதித் துறையில் சனாதனம்
* 112 ஆண்டுகால சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பட்டியல் இனத்தவர்கூட நீதிபதியாக வர முடியவில்லையே என்று கேட்டார் பெரியார். கலைஞர் ஆட்சி நடந்தது; வரதராசன் என்ற தலித் - தலைமை நீதிபதி யானார். பிறகு உச்சநீதிமன்றம் வரை சென்றார்.
இப்போது நீதித்துறையில் நிலை என்ன?
* நீதித் துறையில் இடஒதுக்கீடுகள் இல்லை; கே.ஆர். நாராயணன், குடியரசுத் தலைவராக இருக்கும்போது மட்டும் இதற்காகக் குரல் கொடுத்தார். அது வெற்றி பெறவில்லை. தற்போது உச்சநீதி மன்றத்தில் தலித் நீதிபதிகள் 2 பேர் மட்டுமே.
* மோடி ஆட்சி பரிந்துரைக்கும் நீதிபதிகளில் ஆர்.எஸ்.எஸ். உணர் வுள்ளவர்களே தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க. மகளிர் அணி பொறுப்பில் இருந்த ஒருவர் நீதிபதியாக்கப் பட்டுள்ளார். அவர் இந்தியாவில் வாழும் கிறிஸ்தவர்களை தேசவிரோதிகளாக்கி தனது முகநூலில் பதிவிட்டவர்.
* உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி, 1989இல் தேர்வு செய்யப்பட்டார். இது வரை உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளாக இருந்தவர்கள் 11 பேர் மட்டுமே (4.2. சதவீதம்). 77 ஆண்டு சுதந்திர இந்தியாவில் முதல் பெண் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு தற்போது நீதிபதியாக இருக்கும் பி.வி. நாகரத்தினாவுக்கு 2027இல் தான் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இதிலும் இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் உயர்நீதிமன்றத்தில் 14 பெண்கள் நீதிபதிகளாக உள்ளனர். அதே வேளையில் பாட்னா, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 உயர்நீதிமன்றங் களில் பெண் நீதிபதிகளே கிடையாது.
* இங்கிலாந்தில் நீதிமன்றங்களில் 32 சதவீதம் பெண்கள். அமெரிக்காவில் 34 சதவீதம். ஆனால் இந்திய உயர்நீதிமன்றங்களில் 11.5 சதவீதம் மட்டுமே.
* சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதி இல்லை. சனாதனம் மிரட்டுகிறது. இந்துத்துவ ஆட்சி எதிர்க்கிறது. ஆர்.எஸ்.எஸ்.சில் சுயம்சேவக்காக பெண்கள் வரமுடியாது.
* முன்னணி அமைப்புகளை உருவாக்கி அதில் தான் பெண்களை சேர்க்கிறார்கள்; இதுதான் சனாதனம்; இது தான் மனுதர்மம்.
- விடுதலை இராசேந்திரன்