முத்தலாக் தடை மசோதா எனப்படும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் [Muslim Women (Protection of Rights in marriage) Act, 2019] நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து சட்டமாகியுள்ளது.

muslim women 600முத்தலாக் என்றால் என்ன?

இஸ்லாமிய ஆண்கள், தங்கள் மனைவியை விவாகரத்து செய்து திருமண பந்தத்தில் இருந்து வெளியே வர வேண்டுமானால், தலாக் என்ற சொல்லை, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று முறை சொல்ல வேண்டும். ஆனால், இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களில் ஆண் தனது மனைவியிடம் ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் சொன்னாலும் அவர்களுடைய விவாகம் ரத்தாகி விட்டதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

முஸ்லிம் ஆண்கள் உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு  தீர்ப்பளித்தது. மேலும் முத்தலாக்குக்குத் தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, மத்திய அரசு தற்போது இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

முத்தலாக் தடைச் சட்டத்தின்படி முஸ்லிம் கணவர்கள், தங்களின் மனைவிக்கு உடனடியாக முத்தலாக் கூறியதாக மனைவி புகார் அளித்தால், அது குற்றமாகும், அதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும்.

 பெண்களின் உரிமையை மறுப்பதில் எந்த மதமும் விதிவிலக்கல்ல. திருமண உறவில் பெண்களின் உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பது சரியான வாதம்தான். ஆனால், உரிமையியல் சார்ந்த இந்த விவகாரத்தைக் குற்றவியல் விவகாரமாக மாற்றியதே இச்சட்டத்தை ஐயத்திற்கு உள்ளாக்குகிறது.

சாயிரா பானு வழக்கில் ஏற்கெனவே முத்தலாக் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, முத்தலாக் சொன்னாலும் அது திருமண முறிவுக்கு வழிவகுக்காது என்ற நிலையில், இது உரிமையியல் பிரச்சனையாக இருந்து குற்றவியல் பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது

இச்சட்டத்தின்படி, முத்தலாக் சொல்லும் கணவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். வழக்குத் தொடுக்கும் மனைவிக்கு, சிறையில் இருக்கும் காலகட்டத்தில் பராமரிப்பும் வழங்க வேண்டும்.

"அப்படிச் சிறையில் இருக்கிற கணவன் எப்படி அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க முடியும்?”

கணவனைச் சிறையில் அடைத்தால், திருமண வாழ்வு நீடிக்காது. சிறையில் இருக்கும்போது அவரால் பராமரிப்புச் செலவுக்குப் பணம் தர முடியாது என்பதால் மனைவியும் குழந்தைகளும் இன்னலுக்கு ஆளாகவே நேரிடும்.

வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இவ்வாறு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பது இல்லாத நிலையில் இஸ்லாமியர்களுக்காகவென்று இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள காரணத்தாலேயே,    இந்தச் சட்டம் முஸ்லிம் பெண்களின் மீதான இரக்கத்தினால் அல்ல, முஸ்லிம் ஆண்களைச் சிறையில் தள்ளும் நோக்கத்துடனேயே நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

ஏற்கெனவே சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் பாஜக அரசு, இச்சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதன் மூலம் இசுலாமிய மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது.

இது ஒரு புறமிருக்க, மக்களவையில் ஆதரித்தும், மாநிலங்களவையில் எதிர்த்தும் இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அதிமுக அரசின் தெளிவற்ற போக்கினை வெளிப்படுத்தியுள்ளது.

Pin It