தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் மார்ச் 20ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

நடப்பது திராவிட மாடல் ஆட்சி என்பதற்கு மேலும் ஒரு சிறப்பாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. இதில் குறை காணுவதற்கு ஏதும் இல்லாமல் ‘பூத’க் கண்ணாடியை வைத்து தேடிக் கொண்டிருக்கின்றன எதிர்கட்சிகள்.

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குகின்ற திட்டத்தை அறிவித்தீர்களே செய்தீர்களா என்ற ஒரு கேள்வியைத்தான் திமுக ஆட்சியைப் பார்த்து இதுவரை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டே வந்தன. அவர்களை வாயடைத்து பதில் கூற முடியாத அளவிற்கு அந்தத் திட்டத்தை இப்போது அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. மகளிருக்கு உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தத் தொகை உண்மையில் விளிம்பு நிலை மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். வசதி படைத்த மாத வருவாய் வரக்கூடிய பெண்களுக்கு தேவையில்லை என்பதே நமது கருத்து. அந்த அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அரசு எடுத்திருப்பது சரியான முடிவு. இத்திட்டத்துக்கு ‘உரிமைத் தொகை’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பது சுயமரியாதையின் அடையாளமாகும்.

இல்லப் பராமரிப்பு, சமையல், குழந்தை வளர்த்தல் உள்ளிட்ட அனைத்து உழைப்புகளையும் சுமக்கும் பெண்களுக்கு எந்த ஊதியமும் இல்லாததோடு வெறும் ‘குடும்ப வேலைக்காரர்’ சும்மாதான் இருக்கிறார் என்ற இழிபட்டங்களைச் சமூகம் சுமத்துகிறது. இதைத் தகர்க்கும் சுயமரியாதைச் சொற்றொடர்தான் உரிமைத் தொகை.

காலை சிற்றுண்டி திட்டம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டப் பிறகு பல்வேறு பள்ளிகளில் துவக்கப் பள்ளிகளில் பள்ளிக்கு வருகை தருகின்ற மாணவ மாணவிகளுடைய எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது என்பதை அண்மையில் திட்டக்குழு ஆய்வுகள் வெளிப்படுத்தின. இப்போது அந்த திட்டம் மேலும் 18 லட்சம் பேர் பயனடையக் கூடிய வகையில் 30122 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு ஐநூறு கோடி ரூபாய் அதற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

மற்றொரு முக்கிய அம்சத்தையும் இதில் குறிப்பிட்டாக வேண்டும். அண்மைக் காலமாக தமிழ் நாட்டின் அய்ஏ.எஸ். பிரதிநிதித்துவம் மிகவும் குறைந்து வருகிறது. வடநாட்டில் இதற்கென்று ஒரு மிகப் பெரிய சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அய்ஏ.எஸ். தேர்வர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதை கவலையோடு கவனத்தில் கொண்ட தமிழக அரசு அதை சரி செய்வதற்கான திட்டம் ஒன்றை அறிவித்து இருக்கிறது. முதல் நிலை பயிற்சி பெறுகின்ற அய்ஏ.எஸ். தேர்வாளர்களுக்கு மாதம் 7500 ரூபாயும் அதில் தேர்ச்சி பெற்று முதன்மை நிலை தேர்வுக்கு போகின்றவர்களுக்கு மாதம் 25,000 ரூபாயும் வழங்கி தமிழகத்தினுடைய அய்ஏ.எஸ். பிரதிநிதிகளுடைய எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான ஒரு திட்டத்தை சமூக நீதிப் பார்வையில் அரசு கொண்டு வந்திருக்கிறது.

அம்பேத்கர் நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்கு 5 கோடி ரூபாய். அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் என்று அறிவிப்புகள் ஆட்சியின் சமூகநீதிப் பார்வையை உறுதிப்படுத்துகிறது. அனைத்து துறைகளிலும் இயங்கும் பள்ளிகளையும் அரசுப் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டு வருகின்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து பல்வேறு குழப்பங்களுக்கு, முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. வரும் ஜுன் மாதத்தோடு ஒன்றிய ஆட்சி ரேஷன் கடையில் வழங்குகின்ற உணவு மானியத்தை நிறுத்தப் போகிறது என்ற ஒரு செய்தி வந்திருக்கிற ஒரு சூழ்நிலையில் அந்த ஆபத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்திற்கான மானியத்தை 10500 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மக்களைக் காப்பாற்றுவதற்கான முன் முயற்சியில் தமிழக அரசு இப்போது இறங்கியிருக்கிறது.

மகளிர் தொழில் முனைவோருக்கான ஒரு திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்துவது; அதற்கு சுயநிதி குழுவினை பயன்படுத்துவது என்ற ஒரு திட்டமும் மிகச் சிறப்பான ஒரு திட்டமாக பட்ஜெட்டில் இடம்பெற்று இருக்கிறது. மதுரை, கோவை போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டங்கள், பின்தங்கி இருக்கின்ற வடசென்னையை முன்னேற்றுவதற்கு ஆயிரம் கோடி ரூபாயில் திட்டங்கள். தமிழ்நாடெங்கும் புத்தகத் திருவிழாக்கள், இந்தி எதிர்ப்பில் வீரமரணமடைந்த தாளமுத்து நடராசனுக்கு நினைவிடம், மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் என்று அடுக்கடுக்கான சாதனைகளோடு பட்ஜெட்டை அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

அனைத்துக்கும் மேலாக 62,000 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறையை மிகச் சிறந்த நிதி நிர்வாகத்தின் வழியாக 30,000 கோடி ரூபாய் அளவுக்குக் குறைந்திருப்பது மகத்தான சாதனை.

மக்கள் நிச்சயம் இதை வரவேற்பார்கள்; மகிழ்வார்கள்; போற்று வார்கள்.

‘திராவிட மாடலை’ப் பறைசாற்றும் நிதிநிலை அறிக்கை!

- விடுதலை இராசேந்திரன்

Pin It