தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது, பெண்களின் வாக்கு அதிக அளவில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு விழுந்ததாகச் சொல்லப்பட்டது. அதற்கு ஜெயலலிதா அவர்கள் ஒரு பெண் என்ற காரணம் மட்டுமே. ஆனால் அதே அதிமுக ஆட்சியில்தான் பெண்களுக்கு எதிரான வாச்சாத்தி கொடுமையும், அதற்கு ஜெயலலிதா அரசே காவல்துறைக்குத் துணைநின்ற அவலமும் நேர்ந்தது.
பெண்களுக்கு உரிமையும், அதிகாரமும் அளிக்கும் பல்வேறு திட்டங்களும், சட்டங்களும் திராவிட முன்னேற்றக் கழக அரசால்தான் கொண்டு வரப்பட்டன. பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டமாகட்டும், அன்னை சத்தியவாணிமுத்து அவர்களின் பெயரால் தொடங்கப்பட்ட இலவசத் தையல் இயந்திரம் அளிக்கும் திட்டமாகட்டும், இவை அனைத்தும் திமுக ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்டவை.
பாலினச் சமத்துவத்திற்கான இதுபோன்ற திட்டங்களை உள்ளடக்கியதே திராவிட மாதிரி (Dravidian model) எனப்படுகிறது. இத்தகைய நலத் திட்டங்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் இன்னும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளன. இனி திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான் பெண்களின் வாக்குகள் விழும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது கடந்த மூன்று ஆண்டு கழத ஆட்சி.தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களின் விழுக்காடு இருமடங்கு அதிகம். அவ்வாறு வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், அவர்களது பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்தும் வகையிலும், கட்டணமில்லாப் பேருந்துப் பயணத்தை திமுக அரசு 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. தமிழ்நாடு திட்டக் குழுவின் ஆய்வறிக்கையின்படி, இத்திட்டமானது பெண்களின் மாதாந்திர வருவாயில் 8 முதல் 12 விழுக்காடு செலவினத்தைக் குறைக்கிறது.
2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம், நலிவுற்றக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கியது. இது உயர்கல்வி கற்கும் பெண்களின் விழுக்காட்டினை அதிகரிக்க வழிவகுக்கிறது. கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டமோ பெண்களின் பொருளாதாரத் தற்சார்பையும், சுதந்திரத்தையும் உறுதி செய்கிறது.
பாலினச் சமத்துவத்தை உறுதி செய்வதற்கு ஓர் அரசு கொண்டுவர வேண்டிய திட்டங்களே இவை. வெறுமனே குடியரசுத் தலைவர் பதவியோ, அமைச்சர் பதவியோ அளித்து விட்டு, இல்லத்தரசிகளை நேரடியாக பாதிக்கும்படி எரிவாயு உருளையின் விலையை பன்மடங்கு உயர்த்தியுள்ளது பாஜக. ”பெண்களுக்கு நாங்கள் அதிகாரம் அளிக்கிறோம்” என்ற பாஜகவின் வெற்றுக் கூச்சலால் மக்களை ஏமாற்ற முடியாது.
உலக அளவிலான பாலினச் சமத்துவக் குறியீட்டில் (Gender parity index 2023) இந்தியா 127வது இடத்தைப் பெற்றுள்ளது. 2014ஆம் ஆண்டில் 114வது இடத்தைப் பெற்ற இந்தியா, இப்போது 127வது இடத்திற்கு வந்துள்ளது. இது பிரதமர் மோடி தலைமையிலான பத்தாண்டில் பாலினச் சமத்துவம் அடைந்துள்ள வீழ்ச்சியைக் காட்டுகிறது. இனிமேலும் பாஜக ஆட்சி தொடர்வது பெண்களின் முன்னேற்றத்தைத் தடுத்து அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி விடும். எனவே ஒன்றியத்தில் பாஜக அரசு அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
- வெற்றிச்செல்வன்