கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இன்று நாடு எதிர்கொள்ளும் நிலையானது, ‘ஒரு சாதாரண பொருளாதார மந்தநிலை அல்ல’ என்று மத்திய அரசின்முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் எச்சரிக்கை செய்துள்ளார். அரவிந்த் சுப்பிரமணியன், பன்னாட்டு நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) இந்திய அலுவலக முன்னாள் தலைவர் ஜோஷ் பெல்மனுடன் இணைந்து கட்டுரை ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். அதில், “வங்கிசாரா நிதி நிறுவனங்களில் காணப்படும் பிரச்சனைகள் உள்ளிட்டவை காரணமாக, இந்தியப் பொருளாதாரம் தீவிர சிகிச்சைப் பிரிவை நோக்கிச் செல்கிறது” என்று கூறியிருந்தார். இந்நிலையிலேயே, ‘இந்தியாவில் நிலவுவது சாதாரணமான பொருளாதார மந்த நிலை அல்ல!’ என்று மீண்டும் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அரவிந்த் சுப்பிரமணியன், பேட்டி அளித்துள்ளார். அதில், மேலும் அவர் கூறியிருப்பதாவது: 2011 மற்றும் 2016-க்கு இடையிலான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2.5 சதவிகித புள்ளிகள் மிகையாக கணக்கிடப்பட்டுள்ளன. ஏற்றுமதி புள்ளி விவரங்கள், நுகர்வோர் பொருட்களின் புள்ளி விவரங்கள், வரி வருவாய் புள்ளி விவரங்கள் - ஆகிய நாட்டு வளர்ச்சியின் வெளிப்பாட்டை குறிப்பிடும் இந்த மதிப்பீடுகள் யாவும் மிகையாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளன.

2000 மற்றும் 2002-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4.5 சதவிகிதமாக இருந்த போதிலும் இந்த குறியீடுகள் அனைத்தும் நேர்மாறானவை அல்ல. அரசாங்க தரவுகளின் படியே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளில் கீழ்நோக்கி சென்றுள்ளது. 2019-20 முதல் காலாண்டில் 2 சதவிகிதம் குறைந்து 4.5 சதவிகிதம் ஆகியுள்ளது. இது 2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 8 சதவிகிதமாக இருந்தது.

எண்ணெய் அல்லாத ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விகிதங்கள் முறையே 6 சதவிகிதம் மற்றும் 1 சதவிதமாக குறைந்துள்ளது. மூலதனப் பொருட்கள் தொழில் வளர்ச்சி 10 சதவிகிதம் குறைந்துள்ளது. நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 1 சதவிகிதமாக குறைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இது 5 சதவிகிதம் வரை இருந்தது நினைவு கொள்ளத்தக்கது. உண்மையில் பொருளாதாரம் மந்தமாகிறது... வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. மக்களின் வருமானம், அவர்கள் பெறும் ஊதியங்கள் குறைந்துள்ளன. அரசு பெறும் வருவாயும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி, மே மாதத்தில் நடத்திய கணக்கெடுப்பின்போதே, 48 சதவிகிதம் பேர் முந்தைய 12 மாதங்களில் பொது பொருளாதார நிலைமை மோசமடைந்திருப்பதாக தெரிவித்திருந்தனர். எனவே, இது ஒரு சாதாரண மந்தநிலை அல்ல... இது இந்தியாவின் பெரும் மந்தநிலை என்று அரவிந்த் சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.